Tuesday, February 18, 2014

இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்


நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

30 comments:

ரூபன் said...

வணக்கம்
ஐயா.

ஒவ்வொரு வரியிலும் நல்ல கருத்துக்கள் இளையோடியுள்ளது...
விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது
உண்மைதான் ஐயா... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


2008rupan said...

வணக்கம்
ஐயா.

த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உண்மைதான்..இயற்கை நமக்காக..நம்மிடம் பேசுகிறது என்று நினைத்தால் மகிழ்ச்சிதான்...என் மகனிடம் குருவி உனக்கு குட் மார்னிங் சொல்லுது என்று ஒரு நாள் சொன்னேன்...அதன் பின் ஒவ்வொரு நாளும் காலை குருவி கீச்சிடும்போழுது அவன் மகிழ்ச்சியுடன், குட் மார்னிங்" என்று குருவியிடம் சொல்லுவான் :)
த,ம.3

இராஜராஜேஸ்வரி said...

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

ரசிக்கவும் செய்கிறது...பாராட்டுக்கள்..!

ஸாதிகா said...

காலை[ப்பொழுதின் அதீத ரம்யத்தை தங்கள் கவிதை வரிகளில் படிக்கவும் ரம்யமாக உள்ளது.

s suresh said...

இயற்கையோடு இணையும்போது இருக்கும் சுகமே தனிதான்! அருமையாக கவிதையாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய ரசனை மேலும் ரசிக்க வைத்தது ஐயா... வாழ்த்துக்கள்...

krishna ravi said...

Super!

உஷா அன்பரசு said...

அருமை!

kovaikkavi said...

ஆம் இணைந்து ஒட்டுவதில் தானே பிணைப்பு.
மனசும், செயலும் இணையாததாற்தானே பல பிரச்சனைகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ADHI VENKAT said...

மிகவும் ரசித்தேன். அருமையான வரிகள்.

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

இயற்கையை மீறி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. அப்படி இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட்டால் நாம் அழிவது உறுதி! இயற்கையோடு ஒன்றி வாழ்தல்தான் மனிதனுக்கு சுகம் மட்டுமல்ல ஆரோக்கியமும் கூட

நல்ல அழகான பகிர்வு

ஸ்ரவாணி said...

வாவ் .... உங்களின் அர்த்தமான அருமையான ரசனை எங்களையும்
ரசிக்க வைக்கிறது. ஆம் .. நம்மோடு இணைத்துக் கொண்டால்
அனைத்தும் சுகமே .

Manjubashini Sampathkumar said...

இயற்கையை ரசிக்க பிறந்தவன் மனிதன்.. இறைவனின் கருணை இது. மனிதனாக பிறந்தவனுக்காக இறைவன் ஒளிக்கொடுக்க சூரியனையும் சுறுசுறுப்பை பாடமாக தர எறும்புகளையும் தேனிகளையும், அழகை உணர்ந்துக்கொள்ள பூக்களையும், பசியை ஆற்றிக்கொள்ள கனி காய்களையும், நறுமணத்தை நுகர்ந்து அனுபவிக்க வாசத்தையும் வாழ்க்கையை அனுபவிக்க உறவுகளையும், நல்லதை கெட்டதை சீர்ப்படுத்தி அறிய நல்லவை கெட்டவைகளையும் இப்படி இறைவன் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அழகாக படைக்கிறான்.

மனம் சோர்ந்துப்போகும்போது அரவணைக்க மனைவியையும்…
வயிறு பசிக்கும்போது அமுதூட்ட தாயையும்…
நல்லவை கெட்டவைகளை பிரித்தாயும் திறன் பெற ஆசிரியர்களையும்
பாசத்தை மறக்காதிருக்க சகோதர உறவுகளையும்…
நல்வழிப்படுத்தும் ஆசானாக தந்தையையும்…
தர்மம் என்னும் சிந்தனை வளர்க்க கண் எதிரே ஏழைகளையும்

இந்த எந்த உறவிலும் சேராத ஒரு உன்னதமான நட்பையும் இறைவன் நமக்கு தந்திருக்கிறான்.
வாழ்க்கையை ரசனையாக, காணும் எல்லாவற்றையும் ரசிக்கத் தகுந்ததாக மாற்றிக்கொள்ளும் அற்புதமான திறன் பெற்றவனே ரசிகனாகிறான். அதற்கு கலைஞனாக இருக்க அவசியமில்லை.. ரசிக்கும் உணர்வுகள் நிறைந்த மனதும் இயற்கையோடு இயைந்துப்போகும் குணத்தையும் வளர்த்துக்கொண்டாலே போதுமானது என்பதை

இத்தனை அழகாக எளிய வரிகளில் எப்போதும் போல் என் மனம் நிறைக்கும் வித்தியாச வரிகளை கவிதையாக படைத்தமைக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரமணி சார்.

த.ம.9

ஸ்ரீராம். said...

நல்ல கற்பனை.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

தங்களின் அன்புக்குத் தலை வணங்குகின்றேன் ஐயா .

Iniya said...

கவிஞனின் இயல்பான சொத்து அல்லவா அதில் இணைந்தால் தானே கற்பனை சிறக்கும் இன்பமும் பெருகும்.
அழகான கற்பனை நன்றி ! வாழ்த்துக்கள்....!

Mythily kasthuri rengan said...

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது
இதைவிட வாழ்க்கைக்கு என்ன அறிவுரை தேவைப்படப்போகிறது. அருமை சார்

மனோ சாமிநாதன் said...

உறவுகளும் அன்பும் விலகி நின்று ரசிப்பதை விட இயைந்து போகும்போதும் இனைத்துக்கொள்ளும்போதும் தான் அதன் உண்மையான அர்த்தமும் சுகமும் புரிகிறது. இயற்கையையும் அதே போல வாழ்க்கையின் அர்த்தத்துடன் இணைத்து மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!!

Chellappa Yagyaswamy said...

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் - என்று வள்ளுவர் சொன்னாரே!

Jeevalingam Kasirajalingam said...

இயற்கையோடு ஒன்றித்து விட்டால்
இனியெல்லாம் சுகமே!

கீத மஞ்சரி said...

எதிலும் உள்ள ஈடுபாடே வாழ்க்கையின் மீதான பிடிப்பை வலுப்படுத்துகிறது. மிக அழகாக கவிதையால் கருத்தை உணர்த்தியவிதம் அருமை. பாராட்டுகள் ரமணி சார்.

MANO நாஞ்சில் மனோ said...

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்//

இனி நம் கண்ணோட்டமே மாறிவிடும், என்னை திசை திருப்பிய கவிதை குரு !

கரந்தை ஜெயக்குமார் said...

இயற்கையோடு இணைந்துவிட்டால்
எல்லாம் சுகமே
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.12

அ. பாண்டியன் said...

வணக்கம் ஐயா
இயற்கை நமக்கு கொடுக்கும் படிப்பினைகள் நிறைய என்பதைக் கருவாக கொண்ட உங்கள் பதிவு அருமை. அழகான கோர்வையுடன் கூடிய வரிகள் மிகவும் கவர்கிறது. நன்றி ஐயா..

Dr B Jambulingam said...

இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
சுகத்தைத் தாங்கள் உணர்ந்து எழுதியதுபோல் உள்ளது. இதனைக் கடைபிடிக்க முயன்றால் நம் குணத்திலும் சில நல்ல மாற்றங்களைக் காணமுடியும். அருமையான பகிர்வுக்கு நன்றி.

அப்பாதுரை said...

தனிப்படுவதன் துயரம் வெளிப்படுகிறது உங்கள் வரிகளில்.

அப்பாதுரை said...

எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாடல்.. இப்போது புதிய பார்வையில்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை....

த.ம. +1

Post a Comment