Saturday, February 22, 2014

நச்சரிக்கும் படைப்பின் சுகம்

நான் எழுத அமர்கிற வேளையும்
எதிர்வீட்டுப் பாட்டி
பேரனுக்கு சோறுட்டத் துவங்கும் வேளையும்
ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்

பாதித்த கருவினை உணர்வினை
படைப்பாக்க நான் செய்யும் அசுர முயற்சியும்
பேரனுக்கு ஊட்டிவிட பாட்டி செய்யும் பிரயத்தனமும்
உத்தேசமாக ஒன்று போலத்தான் இருக்கும்

உணர்வின் வீரியத்திற்கேற்ற
வார்த்தைகளைத் தேடி நான் தத்தளிக்கையில்
பிடிவிட்டு கீழிறங்கி ஓடும் பேரனைத்
தூக்கத் துரத்திக் களைப்பாள் பாட்டி

முதலடி  மிகச் சரியாக அமைந்தால்
தொடர்வது எளிதென நான் ஆழ்ந்து யோசிக்கையில்
இறுக மூடிய உதட்டினில் ஒரு கவளம் போனால் கூட
ருசி உண்ண வைக்கும் எனத்  தொடர்ந்து
முயல்வாள் பாட்டி

நான் கிறுக்கிக் கிழிக்கும் பேப்பரைக் கண்டு
"பழுக்காத காயோடு ஏனிந்தப் பாடு
கருவைக் கனிய விடுங்கள்
 கவிதைத் தானாய் வருமென"நக்கலடித்துப் போவாள்
 இல்லக் கிழத்தி

பேரன் படுத்தும் பாட்டைக் கண்டு
"வயித்தைக் கொஞ்சம் காயவிடு
பசித்தால் தானாய் வருவான்" என
புத்தி சொல்லிப் போவான்
அவசர வேலை அப்பன்

விளைச்ச்சல் தரும் மகிழ்வை விட
விளைவிக்க படும் பெரும்பாடே
பெரும் மகிழ்ச்சி என்பது விவசாயிக்குத் தெரியும்
வியாபாரிக்குத் தெரிய வாய்ப்பில்லை
 என்பதுவும்

பரிமாறிப் பார்க்கும் மகிழ்வை விட
ஊட்டப் படும் பெரும் பாடே
அதிக சுகம் என்பது படுகிறவர்களுக்குத் தெரியும்
பார்க்கிறவர்களுத் தெரிய வாய்ப்பில்லை
என்பதுவும்

உயிர்க்கருவை பத்து மாதம்உள்ளுக்குள் தாங்குதல்
 வலியெனினும் அலுப்பெனினும் அதிலுள்ள சுகம் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்
தத்தெடுத்தவர்களுக்கத் தெரிய வாய்ப்பில்லை
என்பதுவும்

சட்டெனப் பிறக்கிற படைப்பினும்
பாடாய்ப்படுத்திப் பிறக்கும் படைப்பும்
உள்ளிருந்து  நச்சரிக்கும் படைப்பும் தரும்
 சுகத்தின் அருமைஎத்தகையது என்பதுவும்
படைப்பாளிக்குத்தானே முழுமையாத் தெரியும் !

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான அருமையான ஒப்பீடுகள்... சிரமங்கள், வலிகள் இருந்தாலும் நினைத்தது நிறைவேறி விட்டால், அந்த திருப்தியான சந்தோசமே தனி தான்... எளிதாக எது நிறைவேறி விட்டாலும், நாமே அதற்கு மதிப்பும் அளிப்பதில்லை... மறந்தும் விடுவோம்...

அனுபவ வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

அம்பாளடியாள் வலைத்தளம் said...

அருமையான உவமைகள் சொல்லி சிறப்பாக முடித்த கவிதைக்கு வாழ்த்துக்கள் ரமணி ஐயா .

சென்னை பித்தன் said...

அருமையாச் சொல்லிட்டீங்க!தம4

விமலன் said...

படைப்பைப்பொறுத்தது/

விமலன் said...

tha,ma 5

ramalingam said...

அருமை

நா.முத்துநிலவன் said...

“விளைச்ச்சல் தரும் மகிழ்வை விட
விளைவிக்க படும் பெரும்பாடே
பெரும் மகிழ்ச்சி “
படைப்பின் வலியைப் பிரசவ வலி என்பதாகத்தான் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இது படைப்பின் வலி பற்றிய நடை முறை உவமை அருமை அய்யா

Chellappa Yagyaswamy said...

வலியில்லாமலே (சில நேரம்) தாங்கள் பிரசவிக்கும் படைப்புகளும் சுவையாகத்தானே இருக்கின்றன!

Anonymous said...

''..பாடாய்ப்படுத்திப் பிறக்கும் படைப்பும்
உள்ளிருந்து நச்சரிக்கும் படைப்பும் தரும்
சுகத்தின் அருமைஎத்தகையது என்பதுவும்
படைப்பாளிக்குத்தானே முழுமையாத் தெரியும் !..'' ஆம் இது நானும் அனுபவிக்கும் ஓரு சுகம்.
நல்ல சிந்தனை ஓப்பீடு. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Iniya said...

உயிர்க்கருவை பத்து மாதம்உள்ளுக்குள் தாங்குதல்
வலியெனினும் அலுப்பெனினும் அதிலுள்ள சுகம் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்
தத்தெடுத்தவர்களுக்கத் தெரிய வாய்ப்பில்லை
என்பதுவும்
அருமையான ஒப்பீடும் மதிப்பீடும்! ஒவொரு பதிவும் ஒவ்வொரு விதமாக வியக்க வைக்கிறது.
தங்களுக்கு தாங்களே தான் நிகர் ஐயா!
தொடர வாழ்த்துக்கள்...!

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

உண்மைதான்:). அழகாகச் சொல்லியுள்ளீர்கள். என் கவிதை ‘ஒரு சொல்’ நினைவுக்கு வந்தது எனக்கு:)!

கரந்தை ஜெயக்குமார் said...

///விளைச்ச்சல் தரும் மகிழ்வை விட
விளைவிக்க படும் பெரும்பாடே
பெரும் மகிழ்ச்சி என்பது விவசாயிக்குத் தெரியும்
வியாபாரிக்குத் தெரிய வாய்ப்பில்லை///
கலப்படமில்லாத உண்மை ஐயா
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.8

Jeevalingam Kasirajalingam said...

"சட்டெனப் பிறக்கிற படைப்பினும்
பாடாய்ப்படுத்திப் பிறக்கும் படைப்பும்
உள்ளிருந்து நச்சரிக்கும் படைப்பும்
தரும் சுகத்தின் அருமை
எத்தகையது என்பதுவும்
படைப்பாளிக்குத்தானே முழுமையாத் தெரியும்!" என்பதை
மறுப்பதற்கு எவருமில்லை
ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

Mythily kasthuri rengan said...

என்னவொரு உவமானம்!!!!!!!
படைப்பை பிரசவிக்கு உங்கள் கவிதை அருமையோ அருமை சார்!

Dr B Jambulingam said...

சட்டெனப் பிறக்கிற படைப்பாக இருந்தாலும்,
பாடாய்ப்படுத்திப் பிறக்கும் படைப்பாக இருந்தாலும் அதற்கான எண்ணங்களை விதைக்கும் சூழல் எழுதுவோரின் எழுத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
படைப்பாளிக்குத்தானே முழுமையாத் தெரியும் !

rajalakshmi paramasivam said...

உவமைகள் அருமை ரமணி சார். மிகவும் ரசித்தேன் உங்கள் கவிதையை, பாட்டியை பாடாய் படுத்தும் பேரனையும் தான்.

சுந்தரா முத்து said...

//விளைச்ச்சல் தரும் மகிழ்வை விட
விளைவிக்க படும் பெரும்பாடே
பெரும் மகிழ்ச்சி என்பது விவசாயிக்குத் தெரியும்//

அப்பட்டமான நிஜம்.

அழகிய கவிதைக்கும் அதற்கேற்ப எடுத்தாளப்பட்ட உவமைளுக்கும் பாராட்டுக்கள் ரமணி சார்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான ஒப்பீடுகள்.

ரஸித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தங்களுக்கு ‘சிறுகதை விமர்சனச் சக்ரவர்த்தி’ என்று ஓர் பட்டம் அளித்துள்ளேன். பார்க்க வாங்கோ:

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html

அன்புடன் கோபு [VGK]

s suresh said...

படைப்பையும் சோறுட்டதிலையும் ஓப்பீடு செய்தது புதுமை! முத்தாய்ப்பான வரிகள் அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

அழகான ஒப்பீட்டல்! உவமை அருமை!

த.ம.

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
ஒவ்வொரு வரிகளும் புதுமையின் எழுச்சி வடிவம் ....
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான ஒப்பீடு.....

ரசித்தேன்.

த.ம. +1

Post a Comment