Saturday, February 8, 2014

முக்கா முக்கா மூணுன்னும் சொல்லலாம்

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய்
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதை விமர்சனப்
போட்டியில் மூன்றாவது கதைக்கானப் போட்டியிலும்
எனக்கே முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதைப்
பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html

விமர்சனம் எழுதியது யார் என நடுவருக்குத்
தெரியாதபடி பெயரை எடுத்துவிட்டுதான்
விமர்சனங்களை அனுப்பிவைப்பதாக
ஏற்கெனவே தனது அறிவிப்பில்
திரு வை, கோ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்

நமக்கும் இதுவரை நடுவர் யார் எனத் தெரியாது

அந்த வகையில் மிக நேர்மையாக நடத்தப்படுகிற
இந்த சிறுகதை விமர்சனப் போட்டியில்
மூன்றாம் முறையாகக் கிடைத்த முதல் பரிசு
எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதோடு தொடர்ந்து
விமர்சனமும் எழுதலாம் என்கிற தைரியத்தையும்
தருகிறது

பதிவுலகில் அதிகமாய் இருக்கிற
சிறந்த  எழுத்தாளர்கள் இனியும் ஒதுங்கி இறாமல்
 இப்போட்டியில்பங்கு கொண்டு போட்டியை  மேலும்
சிறப்படையச் செய்யவேணுமாயும்
அதன் மூலம் பதிவர்கள் அனைவரும்
விமர்சனக் கலையிலும் சிறந்து விளங்க
நல்வழிகாட்டுமாறும்அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் போட்டிச் சிறுகதைக்கான இணைப்பையும்
எனது விமர்சனத்தையும் கீழே தங்கள்
உடனடிப் பார்வைக்காக இணைத்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

எனது விமர்சனம்

சுடிதார் வாங்கப் போறேன்

சுடிதார் வாங்கப் போன இந்தக் கதை
எனக்கு மிக அசாதாரணமான ஒரு விஷயத்தை
வேண்டுமென்றே மிகச் சாதாரணமாகச் சொல்லிப்
போனதைப் போலப்பட்டது

ஒருவேளை எனக்குத்தான் இப்படிப்படுகிறதோ
என எனக்குச் சந்தேகம் வந்ததால் என் நண்பனை
ஒருமுறைப்படிக்கச் சொல்லி அவன் கருத்தைச்
சொல்லுமாறு கேட்டேன்

அவனும் எனக்காகப் படித்து" சுடிதார் வாங்கிய
விஷயத்தை விரிவாக எழுதியுள்ளார்.
எழுத்துத் திறமை மிக்க படைப்பாளியாய்
இருப்பதால் நாமும் அவருடன்
இருந்து சுடிதார் வாங்குவதைப் போன்று
உணரவைக்கிறார் "என்றான்

"வேறு எதுவும் தோன்றவில்லையா ?"என்றேன்

"இல்லை " என்றான்

அவன் பதில் எனக்கு ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது

இந்தக் கதை படிப்பதற்கு முன்னால் இப்படி ஒரு
சூழல் நேர்ந்திருக்குமெனில் "சட்டென உனக்கு
இலக்கிய ரசனை கம்மி என்றோ அல்லது
இன்னும் ஆழமாகப் படித்து பொருள் கொள்ளும்
பக்குவத்தை நீ வளர்த்துக் கொள்ளவேண்டும் "என்றோ
உரிமை கொடுத்த தைரியத்தில் அசட்டுத்தனமாகப்
பேசி இருப்பேன்

இந்தக் கதைப் படித்து நேர்ந்த பாதிப்பில் அப்படிப்
பேசத் தோன்றவில்லை

"மிகச் சரியாகத்தான் சொல்கிறாய் .ஆயினும் இன்னும்
சற்று ஊன்றிப் படித்திருந்தால் இன்றைய வாழ்வில்
நாம் உறவு முறையிலும் நட்பு வகையிலும்
நெருக்கத்தையும் இறுக்கத்தையும் இழந்து வருவதற்கான
உண்மையான காரணம் புரியும் "என்றேன்

அவன் புரிந்து கொள்ள முயல்பவன் போல
ஆர்வத்துடன் என்னைக் கவனிக்கத் துவங்கினான்

நான் தொடர்ந்தேன்
 "ஒரு மூன்று மாமாங்க காலமாக
மிகச் சரியாகச் சொன்னால் திருமணம் ஆனதிலிருந்து
 இன்றுபேரன் பேத்தி எடுக்கிற காலம் வரை
 தன் மனைவியிடம் ஒரு சிறு அங்கீகாரத்தைப்
 பெறுவதற்காக கதை நாயகனிடம்
இருக்கும் பெரும் ஏக்கமும் அதைத் தீர்ப்பத்தற்காக
அவர் செய்து தோற்கும் முயற்சிகளையும்
சேலையை ஒரு குறியீடாகக் கொண்டு மிக மிக
அருமையாக விவரிக்கிறார்.

இத்தனைக்கும் இந்த தம்பதிகள்  இருவரும்
சராசரித் தம்பதிகளைப் போல அல்லாது
ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பினையும்
 பற்றுதலையும்கொண்ட அருமையான தம்பதிகள்தான்
ஆயினும் ஒருவருக்காக ஒருவர் செய்கிற செயல்களை
அங்கீகரித்துப் பாராட்டும் ஒரு சிறு நற்பழக்கம்
இன்மையால்அவர்களுக்கும் இருக்கும்
அன்னியோன்யம் இருந்தும் வெளிப்படாது
 பூமிக்கடிப் புதையல் போல்
இருப்பதை பூடகமாகச் சொல்லிப் போனது
மிக மிக அருமை

உண்மையில் நம் போன்ற பழைய
 தலைமுறை நபர்களின்பெரிய குறைபாடே
இதுதான்

கதாசிரியர் சேலையையும் சுடிதாரையும்
 மிக மி கஅருமையாக தலைமுறைக்கான
 குறியீடாகக் கொள்வதுதான்
இந்தப் படைப்பின் மிகச் சிறப்பு

மிகச் சரியான சுடிதாரைத் தேடுவதற்கான
அதீத முயற்சிக் கூட அடுத்த தலைமுறையின்
ரசனையை, பண்பை, அவர்கள் வாழ்க்கை முறையை
புரிந்து கொள்வதற்கான முயற்சியும்
தன் தலைமுறை புரிந்து கொண்டு அங்கீகரிக்காத
பாராட்டாத நம் முயற்சியை அடுத்த
 தலைமுறையிடமாவதுபெற்று விட வேண்டும்
என்கிற அதிக ஆவலைச் சுட்டிக்காட்டத்தான்
கதாசிரியர்  அந்தப் பகுதியில்
அதிக கவனம் கொண்டிருக்கிறார் என்பதை
கொஞ்சம் கருத்துடன் படித்தால் புரியும்

நம் தலைமுறையைச் சேர்ந்த
கணவன் மனைவி இருவரும் இருபத்தி நான்கு
 மணி நேரமும்தொட்டுக் கொள்ளும் படியான
நெருக்கத்தில் இருந்தும்
மனதளவில் வெகு தூரம் விலகி இருப்பதும்

படிப்பு பணிச் சூழல் காரணமாக இந்தத் தலைமுறையினர்
இடத்தால் வெகு தூரம் விலகி இருந்தாலும்
மனத் தளவில் மிக நெருக்கமாக இருப்பதுவும்

கஞ்சத்தனமின்றி பாராட்ட வேண்டிய விஷயங்களை
காலம் தாழ்த்தாது மிகச் சிறப்பாக எப்படிப்
 பாராட்டவேண்டுமோ அப்படிப் பாராட்டி
 உரியவர்களை மகிழ்விப்பதோடு அல்லாமல்
தானும் மகிழ்ச்சி கொள்வதும்

இப்படி மூன்றாம் பகுதியில் மிக அருமையாகச்
சொல்லிப்போன விஷயங்களையெல்லாம் நான்
ஒவ்வொன்றாக விளக்கினால் அதிக நேரமாகும் "
என நான் சொல்லி முடிப்பதற்குள் என் நண்பனே
சட்டென என் கையைப் பிடித்து இப்படிச் சொன்னான்

"போதும் போதும்.எனக்கு உண்மையில் இதுவரை
குறியீடுகளைப் புரிந்து கொள்ளுகிற
 பக்குவம் மட்டும் அல்ல
புரியச் சொல்லுகிற விஷயத்தைத் தாண்டி
நாமாகவே புரிந்து தெளியட்டும் என விட்டுச் செல்லும்
விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை

இப்போது நீ சொன்ன விஷயங்களை உள்வாங்கி
இன்னொரு தடவை இந்தக் கதையைப் படித்து
மிகச் சரியாக விமர்சனம் செய்கிறேன் "
என்றான் நம்பிக்கையுடன்

எனக்கும் அவன் நிச்சயம் இனி கதைகளை
புரிந்து படிக்கத் துவங்குவான் மிகச் சரியாகவும்
விமர்சிப்பான் என்கிற நம்பிக்கை எனக்குள்ளும்
துளிர்விடத் துவங்கியது

விமர்சனம் என்பது படைப்பை உதறிக்
காயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல

அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான் என்பதை
நிச்சயம் அவன் புரிந்து கொண்டுவிட்டான்
என்றேப் படுகிறது எனக்கு

 உங்களுக்கு ?

31 comments:

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...


திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், முதல் பரிசினை தொடர்ச்சியாக மூன்றுமுறை வென்று HAT TRICK செய்த கவிஞர் ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

அம்பாளடியாள் said...

வணக்கம் ரமணி ஐயா !
மீண்டும் மீண்டும் இவ்வரம் தங்களுக்கே கிட்டிட வாழ்த்துக்கள் .சிறப்பான விமர்சனம் மேமேலும் ஒளிரட்டும் !

Anonymous said...

வணக்கம்
ஐயா..

தொடர் வெற்றிகள் தங்களுக்கு கிடைத்தமை எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

விமர்சனம் என்பது படைப்பை உதறிக்
காயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல

அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான்

சிந்தனை அருமை ..!

மூன்று முறை முதல் பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..!

Yarlpavanan said...


"விமர்சனம் என்பது
படைப்பை உதறிக் காயப்போடுவதும்,
அலசி உலற வைப்பது மட்டும் அல்ல" - அது
வாசகனைப் படிக்கத் தூண்டவும்
படைப்பாளி
மேலும்
சிறந்த படைப்பை ஆக்க உதவவும்
தூண்டியாக இருக்க வேண்டடுமே!

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு சிந்தனை! விமர்சனம் என்பது உக்கப்படுத்துவதுதான் ஒரு படைப்பாளியை! தங்களுக்குத் தொடர்ந்து 3 வது பரிசும் கிடைத்ததற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

த.ம.

Anonymous said...

வாழ்த்துகள்.
Vetha.Elangathilakam.

Iniya said...

முதல் பரிசுகிட்டியதை இட்டு மிக்க மகிழ்ச்சி ....! தொடர்ந்தும் வெற்றி ஈட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

மகேந்திரன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...
உங்களின் கண்ணோட்டம் விமர்சனம் ஆனது...
அருமையாக இருந்தது உங்கள் விமர்சனம்..
பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களை
ஊக்கப்படுத்துபவர் அல்லவா தாங்கள்..
உங்களுக்கு தகுதியான பரிசு தான் இது..
வாழ்த்துக்கள்..

கீதமஞ்சரி said...

மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார். ஒரு தேர்ந்த விமர்சனம் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு உங்கள் விமர்சனங்களே சான்று. உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் இன்றென்னை பரிசுக்குரியவளாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தப் பெருமை உங்களையே சாரும். மிகவும் நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இந்த வருஷம் ஆரம்பமே உங்களுக்கு அசத்தலாக விடிந்து வாழ்த்துகிறது...வாழ்த்துக்கள் குரு..இன்னும் இன்னும் உச்சத்தை நீங்கள் தொடுவீர்கள்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

////ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் பதிவுலகப் பிதாமகரின் சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாவது கதைக்கானப் போட்டியிலும் எனக்கே முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//

இதில் ஆச்சர்யப்படும்படியாக எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

தாங்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல. எப்படி எழுதினால் பரிசு கிடைக்கக்கூடும் என்னும் தேவ ரகசியம் தெரிந்தவராகவும் உள்ளீர்கள். ;)

தங்களின் இந்த சாதனை மற்ற விமர்சனதாரர்களுக்கு, தங்களுக்குப் போட்டியாக இல்லாவிட்டாலும், தங்களுக்கு இணையாகவாவது வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள, ஓர் எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

உழைக்கத்தெரிந்தால் மட்டும் போதாது, பிழைக்கத் தெரிய வேண்டும் என்று சொல்லுவார்கள்.

தாங்கள் எழுத்துலகில் உழைக்கவும் பிழைக்கவும் தெரிந்தவர் என்பது இந்தப்போட்டியினாலும், மும்முறை தொடர்ச்சியாக தங்களுக்குக் கிடைத்துள்ள முதல் பரிசுகளாலும் நிரூபணமாகியுள்ளது.

உதாரணமாக ஒரே மாதிரியான எழுத்துக்களோ, வரிகளின் வடிவமைப்போ, சொல்லாடலோ இருந்தால், நாளடைவில், இதை எழுதியுள்ளது தாங்கள் தான் என்பது நடுவருக்கேகூட எளிதில் புரிந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

அதுபோல இல்லாமல் மூன்றாவது முறை எழுதிய விமர்சனத்தை மாற்றி எழுதி அசத்தினீர்களே !

அதில் தான் தங்களின் சாமர்த்தியமே அடங்கியுள்ளது.

அதுவே தங்களை HAT TRICK போடவும் வைத்துள்ளது என்பது என் கணிப்பு.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விமர்சனம் எழுதியது யார் என நடுவருக்குத் தெரியாதபடி பெயரை எடுத்துவிட்டுதான் விமர்சனங்களை அனுப்பிவைப்பதாக ஏற்கெனவே தனது அறிவிப்பில் திரு வை, கோ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்

நமக்கும் இதுவரை நடுவர் யார் எனத் தெரியாது.//

ஒரு விமர்சனம் யார் எழுதியது என்பது முக்கியமே அல்ல; என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதே மிக முக்கியம் அல்லவா !

அதனால் மட்டுமே நான் இந்தப்போட்டியினை இவ்விதமாக வடிவமைத்துள்ளேன்.

எழுதியவர் பற்றிய விபரங்கள் ஏதும் இல்லாமல் விமர்சனங்கள் மட்டுமே என்னால் நடுவர் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் குறியீட்டு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.

பரிசு கொடுக்கத் தகுதிவாய்ந்த விமர்சனங்கள் மட்டுமே நடுவர் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு, அந்த நான் எழுதியுள்ள குறியீட்டு எண்ணுடன் எனக்குத் தெரிவிக்கப்படும்.

அந்த விமர்சனத்தினை எழுதியவர் யார் என்பது நான் என் பரிசு அறிவிப்புப் பதிவினில் வெளியிட்ட பிறகே நடுவராலும் அறியப்படும்.

இதுதான் உண்மையான நேர்மையான பாரபக்ஷமற்ற ஆரோக்யமான போட்டியாக இருக்க முடியும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

மேலும் நடுவர் குழு என்று ஒன்றை அமைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட நடுவர்களை நியமித்தால், தேவையில்லாத குழப்பங்கள் மட்டுமே ஏற்படும்.

நடுவர் குழுவினருக்குள் ஒத்தக்கருத்துக்கள் ஏற்பட காலதாமதமும் ஆகும். அதிலும் எனக்கு விருப்பம் இல்லை.

[ பலர் சேர்ந்து சமையல் செய்தால் அது சரிப்பட்டு வராது. ஒவ்வொருவரும் அவரவர்கள் வீதத்திற்கு சாம்பாரில் உப்பை அள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். நம்மால் சாப்பிடவே முடியாது. ;) ]

அதனால் நான் நியமித்துள்ளது ஒரே ஒரு நடுவர் மட்டுமே.

அவரும் என்னைப்போலவே மிகச் சாதாரணமானவர் என்று நினைத்து விட வேண்டாம்.

அந்த ஒரு நடுவரே ஒன்பது நடுவர்களுக்குச் சமமான ஒட்டுமொத்தத் திறமையாளர் என்பது என் கணிப்பு.

ஒவ்வொரு விமர்சனங்களையும் அலசி ஆராய்ந்து, தூண்டித்துருவிப் படித்துப்பார்த்து, மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்யக்கூடிய தனித்திறமையாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்த வகையில் மிக நேர்மையாக நடத்தப்படுகிற இந்த சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் முறையாகக் கிடைத்த முதல் பரிசு எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதோடு தொடர்ந்து விமர்சனமும் எழுதலாம் என்கிற தைரியத்தையும் தருகிறது.//

அவசியமாக தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள். ஏனெனில் இது மிகவும் நேர்மையாக நடத்தப்படுகிற போட்டி மட்டுமே. அதில் என் குறுக்கீடுகள் என்று துளியும் கூடக் கிடையாது.

போட்டியை அறிவித்ததும், அது சம்பந்தமான பதிவுகள் போடுவதும், ரொக்கப்பரிசுகள் அளிக்கப்போவதும் மட்டுமே என் வேலை.

பரிசுக்கான விமர்சனங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், முழுச்சுதந்திரமும் நடுவர் அவர்களுக்கு நான் அளித்துள்ளேன். எனவே இந்தப்போட்டியில் நடுவர் அவர்களின் தீர்ப்பே இறுதியானது + உறுதியானதும் கூட..

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பதிவுலகில் அதிகமாய் இருக்கிற சிறந்த எழுத்தாளர்கள் இனியும் ஒதுங்கி இறாமல் இப்போட்டியில்பங்கு கொண்டு போட்டியை மேலும் சிறப்படையச் செய்யவேணுமாயும் அதன் மூலம் பதிவர்கள் அனைவரும் விமர்சனக் கலையிலும் சிறந்து விளங்க நல்வழிகாட்டுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//

தங்களின் நியாயமான இந்த வேண்டுகோள் மிகவும் அழகாக உள்ளது.

உண்மையிலேயே நான் நியமித்துள்ள இந்த நடுவர் அவர்களால் ஒருவரின் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகிறது என்றால் அது அவர்களின் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் ஒரு மிகச்சிறந்த I.S.O. தரச்சான்றிதழுக்கு இணையான அங்கீகாரம் என்பதில் சந்தேகமே இல்லை.

அதுபற்றிய மேல் அதிக விபரங்கள் இந்தப்போட்டியின் முடிவில் தான் எல்லோருக்குமே தெரியவரும்.

இருப்பினும் இந்தப்போட்டியில், தாங்கள் சொல்வதுபோல மேலும் பல திறமையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையான திறமையான எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பாக அது அமையும்.

இல்லாவிட்டால் என்ன ஆகும்? திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கும் ஒருசிலரின் விமர்சங்களுக்குள் ஏதாவது சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, பரிசு கொடுக்க வேண்டிய கட்டாயம் மட்டுமே ஏற்படும்.

அதனால் என் அன்புக்குரிய திரு. ரமணி அவர்களே !

தங்களுக்குத் தெரிந்த திறமையான எழுத்தாளர்கள் பலரையும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவும்.

திறமையான எழுத்தாளர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைக்கட்டும். அதற்காகத் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

அன்புடன் VGK

கரந்தை ஜெயக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.8

ராமலக்ஷ்மி said...

விமர்சனம் அருமை. வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

3 முறை முதல் பரிசு பெற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள் ஐயா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விமர்சனம் வித்தியாசமான முறையில் எழுதப் பட்டுள்ளது. அனாயசமான எழுத்தாற்றல் படைத்தவர் தாங்கள் என்பதில் ஐயமில்லை . வாழ்த்துக்கள்.

vimalanperali said...

ஆமாம் அப்படித்தான். விமர்சனம் என்பது எழுத்தை தாழ்த்துவதும் கிழித்துப்போடுவதும் மட்டுமல்ல,சீர்தூக்கவைப்பதும்தான்/

G.M Balasubramaniam said...

கதையையும் ஒரு சிறு கருத்தாடல் மூலம் விமரிசனம் செய்தது பாராட்டுக்குரியது. ஹாட் ட்ரிக் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

மகிழ்நிறை said...

கலக்கிடீங்க ரமணி சார்! hat trick வெற்றி!
வாழ்த்துக்கள். குறியீடுகளை விவரித்த விதம் அருமை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வாழ்த்துகள் ஐயா!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

கவிதையில் மட்டுமல்ல ,கதையிலும் நான் கில்லாடின்னு நிருபீச்சிட்டீங்க ! வாழ்த்துக்கள் !
த ம +11

Unknown said...

கதையின் நாயகனே.... வாழ்த்துக்கள் !
தமிழ் மணம் +1

வெங்கட் நாகராஜ் said...

வை.கோ. ஜி! நடத்தும் போட்டியில் மூன்றாம் முறையாக முதல் பரிசினை வென்றமைக்கு வாழ்த்துகள் ரமணி ஜி!....

அங்கேயும் படித்தேன்.

த.ம. +1

Post a Comment