நிலையான உறவுக்கும்
நெருக்கமான நட்புக்கும்
பின்னிப்பிணைந்த நெருக்கமும்
மூச்சுவிடாத பேச்சும்
நிச்சயம் தேவையில்லை என்பதும்
இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது
உறுதியான உறுப்புக்கும்
பலமான உடலுக்கும்
அண்டாச் சோறும்
அடுக்குக் குழம்பும்
அவசியம் தேவையில்லை என்பதும்
சரிவிகித சிற்றுண்டியும்
சத்துள்ள பழவகையும்
போதுமென்பது கூட
குடலும் உடலும்
கெட்டுத் தொலைந்த பின்புதான்
புத்திக்குப் புரிகிறது
ஆனந்த வாழ்வுக்கும்
அமைதியான மனதிற்கும்
வங்கிக் கணக்கில் இருப்பும்
வகைதொகையில்லாச் சொத்தும்
என்றேன்றும் தேவையில்லை என்பதும்
போதுமென்ற மனமும்
ஆரோக்கிய உடலும்
போதுமென்பது கூட
ஏழை எளியவர்களின்
முகம் பார்த்தபின்புதான்
மூளைக்கு உறைக்கிறது
கவிதை சிறக்கவும்
காலம் வெல்லவும்
வார்த்தை ஜாலங்களோ
பாண்டித்திய மாயங்களோ
அவசியத் தேவையில்லை என்பதும்
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது
28 comments:
கவிதைக்கு இல்லை ஒரு எல்லை!
வணக்கம்
ஐயா
கருத்து மிக்க வரிகள் வாழ்த்துக்கள் ஐயா
சரி தான்... சிலது பட்டால் தான் புரிகிறது இன்றைய நிலைமைக்கு... அது தான் அனுபவமோ...?
ஏனோ இந்த பாடல் மனதில் ஓடியது...
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
எளிமையாக நடக்கக் கூடியவற்றைக் கூட நாம்தான் சிக்கலாக யோசிக்கிறோமோ...!
எளிமையான சொற்களும் வலுவான நோக்கமுமே
பிரதானம் .. என்று ஒளவையும் பாரதியும் சொன்னதுகூட தங்கள் வாயிலாகத்தான் எங்களுக்கும் தெரிய வருகிறது ;)
கவிதை சிறந்தது .... காலம் வென்றது ...
இந்தத் தங்களின் பதிவின் மூலம். பாராட்டுக்கள்.
கவிதை சிறக்க கச்சிதமான யோசனை சார் !!
உங்கள் கவிதைகள் காலம் வெல்லட்டும் !!
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது
>>
உங்களுக்கு புரிந்து விட்டதா!? எனக்குப் புரியலியேப்பா!!
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது....
ஒவ்வொருவர் சிந்தனை ஒவ்வோரு மாதிரி...
முகநூலில் பாருங்கோ
கிழித்துத் தள்ளுகினம்.
பழம்தமிழாம் என்று....
பணி தொடர வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இந்த நோக்கிலேயே உங்கள் கவிதையும் சிறக்க வாழ்த்துக்கள் !
த ம 6
ஆமாம்/
உண்மை சார். சில விடயங்கள் காலம் சென்ற பின் தானே புரிந்து தொலைக்கிறது. எளிய வரிகளில் விளங்கச் சொல் வதுதானே எழுதுவதன் நோக்கமே . அதைத்தான் அவர்களும் செய்தார் கள்
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...
இயல்பாக வருவதாயின் பாதகமில்லை..
வற்புறுத்தி பாண்டித்தியத்தை வரவழைப்பது
அவசியமில்லை..
நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள்..
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது நினைவுக்கு வந்தது என்றாலும் அது கவிதைப் படைப்பிற்கு இல்லை என்பதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்!
த.ம. +
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது
ஆஹா! போட வைத்தது!
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது//
சத்தியமான உண்மை குரு...!
கவிதைகள் வரவர மென்மேலும் ஷார்ப் ஆகிட்டு இருக்கு குரு, வாழ்த்துக்கள்...!
போதுமென்ற மனமும்
ஆரோக்கிய உடலும்
போதுமென்பது கூட
ஏழை எளியவர்களின்
முகம் பார்த்தபின்புதான்
மூளைக்கு உறைக்கிறது//
உண்மையான வரிகள்.
கவிதை எளிமை, அருமை.
வாழ்த்துக்கள்.
உண்மைதான்.
இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் நட்பும் உறவும் வலுப் பெற!
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது
எவ்வளவு உண்மையை எளிமையாகவும் அழகாகவும் கூறிவிட்டீர்கள்.
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்...!
கவிதை காலத்தை வென்று இருக்க அதன் எளிமையான வார்த்தைகள் மிகவும் அவசியம் என்பது உங்களது கவிதைகளில் நன்கு புரிகிறது சார்.... பாரதி உபயோகித்த ஒவ்வொரு வார்த்தையும் இன்றும் படிக்கும்போது மனதை தொடுகிறதே !!
//எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே//
உங்களது கவிதைகளில் மேலே உள்ளதை எப்போதும் காண்கிறேன் !
என்ன செய்து தொலைக்க. எல்லாமே காலங்கடந்த பின் தானே தெரிகிறது. புரிந்து கொண்டதைச் செயல் படுத்த இன்னும் ஒரு கவிதை தேவைப்படும் போல் இருக்கிறது. பாராட்டுக்கள்.
கவிதை அருமை... என் முகநூல் வாலில் பதிந்திருக்கிறேன். நன்றி.
ஒவ்வொன்றும் நச்! அருமை ஐயா!
த.ம.10
இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது...
அழகான சொன்னீங்க ஐயா. முடித்த விதம் சூப்பர்.
அழகாக என்றிருக்க வேண்டும்.
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது
உண்மைதான்!
எளிமையான சொற்கள் போதும். ஆனால் அவற்றைச் சொல்லும் முறையில்தானே வித்தியாசப்படுகிறீர்கள். அருமை.
"பட்டால் தானே தெரிகிறது
சுட்டது நெருப்பு என்று" என அழகாக
தொட்டுக்காட்டிய உண்மைகளை
வரவேற்கிறேன்
ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. அனைத்தையும் சேர்த்த விதம் நன்று.
த.ம. +1
Post a Comment