Tuesday, November 18, 2014

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமே

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே
தங்க ரத்தினமே-என்
மொத்த மனசும் சுருட்டிப் போகும்
சொத்துப் பத்திரமே-என்
சித்த மெல்லாம் கலங்கிக் கிடக்கு
கொஞ்சம் கிட்டவா-நாம
செத்த நேரம்  நெருங்கி இருப்போம்
பக்கம் ஒட்டிவா

வித்தை நூறு கத்து வச்சு
ஆசை மச்சானே-என்னை
இச்சைக் கூட்டி மடக்க நினைக்கும்
அன்பு மச்சானே-நான்
பச்சைப் புள்ள இல்ல எந்தன்
அருமை மச்சானே-கொஞ்சம்
எட்டி நின்னே விவரம் சொல்லு
புரியும் மச்சானே

சினிமா நூறு பாத்தும் உனக்கு
விவர மில்லையா-தினமும்
தனியாய்த் தவிக்கும் மாமன் மனசு
புரிய வில்லையா
பனிபோல் லேசா பட்டுப் போனா
மனசு குளிருமே-அந்த
இனிய சுகத்தில் கொஞ்ச காலம்
வண்டி ஓடுமே

பஞ்சு கிட்ட வத்தி வச்சா
பத்திகிடும் மச்சான்-சுகம்
இஞ்சி அளவு கண்டா கூட
புத்திகெடும் மச்சான்-ஒரு
மஞ்சக் கயிறு மட்டும் கழுத்தில்
ஏறட்டும் மச்சான்-பின்னே
எந்தப் பொழுதும் உந்தன் மடிதான்
என்னிருப்பு மச்சான்

14 comments:

Unknown said...

விவரமான புள்ளதான் :)
த ம 1

KILLERGEE Devakottai said...

கிராமத்து வீதியிலே அத்தை மகளை கேலி செய்த நினைவலைகள் வந்து விட்டது.

இராய செல்லப்பா said...

என்னங்க திடீர்னு அத்தை பொண்ணு மேல கவனம் திரும்பிடிச்சு? எதுக்கும் ஜாக்கிரதை யாக இருங்க ! சனிப்பெயர்ச்சி வேற!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

உடல் நலம் நன்றாக இருக்கிறதா?
மேலும் நலம்பெற
இறையைத் தொழுகின்றோம்!

அத்தை பெத்த அழகுப் பொண்ணு
அசத்தும் பாட்டுப்பார்! - மலா்க்
கத்தை கமழும் கருத்தைக் கவரும்
காமன் கூட்டுப்பார்! - காதல்
வித்தை காட்டும் விந்தைச் சொற்கள்
வீரம் மூட்டும்பார்! - பசும்
தத்தை யாகத் தமிழைப் பாடி
அமுதை ஊட்டும்பார்!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் said...

குளிர்காலம் இப்போதே ஆரம்பித்து விட்டதே...! ஹா... ஹா...

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! ரமணி சார்! சூப்பர் ரொம்பவே ரசித்தோம்....

G.M Balasubramaniam said...

உறவுகளில் காதல் திருமணம் என்பதெல்லாம் மாறிவரும் காலமிது. உறவுகளில் திருமணம் என்பது
/சொத்துப் பத்திரமே/ என்பதற்குத்தானோ.? பாடல் அருமை. கருத்தில்தான் மாற்று சிந்தனை. வாழ்த்துக்கள்.

UmayalGayathri said...

ரசித்தேன் ஐயா. தம. 5

சசிகலா said...

அசத்தும் கிராமத்து மண் வாசனை . மிக மிக அருமையாக வந்திருக்கிறது உரை. பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா.

ADHI VENKAT said...

இயல்பான கிராமத்து நடையில் அழகான கவிதை.

த.ம. +1

அம்பாளடியாள் said...

காதல் மழையில் நனையும் உணர்வைக் கவிதை மழையாய்ப் பொழிந்தன கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா !

”தளிர் சுரேஷ்” said...

ரசிக்க வைத்த கிராமிய கவிதை! வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் said...

தங்க ரத்தினம் தான் தங்களின் கவிதை இரமணி ஐயா.

சுந்தரா said...

அழகிய கவிதை ரமணி சார்!

கவிதையை வாசிக்கையில் என்.எஸ். கிருஷ்ணனும் மதுரமும் ஞாபகத்துக்கு வருகிறார்கள் :)

Post a Comment