Friday, December 5, 2014

"ஜான் அப்துல் நாராயணன் ( டிசம்பர் ஆறுக்காகவும் )

கடந்த வருட மழைக்காலத்தில்
சுகாதாரக் கேடும் அடைமழையும்
கைகோர்த்துக் கொள்ள
எங்கள் காலனியில்
கொள்ளை நோய்
பேயாட்டம் போடத் துவங்கியது

பழகிப் போன சோம்பல் நோயிலும்
அதிகார போதையிலும்
நெளிந்து கொண்டிருந்த அரசை
நாங்கள் கூச்சல் போட்டு உசுப்ப
கொஞ்சம் அரைக்கண் திறந்து பார்த்தது
நாங்களும் திரு நீறுஅடித்து
பேயாட்டத்தை கொஞ்சம் அடக்கி வைத்தோம்
ஆயினும்
மூன்று வயதானவர்கள் மட்டும்
வசமாக மாட்டிக் கொண்டனர்

பெற வேண்டியதை எல்லாம்
சரியாகப் பெற்றுக்கொண்டபின்
"செய்ய வேண்டியதை எல்லாம்
முறையாகச் செய்துவிட்டோம்
இனி எங்கள் கையில் ஏதும் இல்லை
எல்லாம் அவன் கையில் " என
ஆகாசத்தைக் காட்டிவிட்டனர் மருத்துவர்கள்

நாங்கள் குழம்பிப் போனோம்
சங்கக் கூட்டத்தை முறையாகக் கூட்டி
மூவருக்குமாக வேண்டிக் கொள்வதென
ஏகமனதாய் தீர்மானித்தோம்

அப்போதுதான் பிரச்சனை
பூதாகாரமாய் கிளம்பியது
காரணம்
ஒருவர்  பெயர் ரஸாக்
அடுத்தவர் பெயர் ப்ரான்ஸிஸ்
மற்றொருவர் பெயர் விஸ்வனாதன்
எந்த முறையில் பிரார்த்திப்பது என
எழுந்த பிரச்சனை சங்கத்தை
மூன்றாக்கும்போல் வெடித்தது

திடுமென எழுந்த இளைஞன் ஒருவன்
"பிரார்த்தனைக்கு நாளைக்கு
ஏற்பாடு செய்ய்யுங்கள்
நான் சரிசெய்கிறேன்"என்றான்
எங்களுக்கும் வேறு வழி இல்லையாதலாலும்
நம்பிக்கைஊட்டும்படியாக அவன்
பார்வைக்குத் தெரிந்ததாலும்
சரியெனச் சொல்லிவைத்தோம்

மறு நாள்
பிரார்த்தனைக்கு அனைவரும்
ஆவலாகக் காத்திருக்க
அதிர்ச்சி தரும்படியாக வந்தான் அவன்

இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்
கைகளில் குரான் என
குழம்பும்படி வந்தான் அவன்

மேடையில் மண்டியிட்டவன்
குரானைப் பிரித்து
வேதம்போல் படிக்கத் துவங்கினான்
அதிர்ச்சியில் எல்லோரும்
அவனையே பார்த்திருக்க
"ஆண்டவன் பரிபூரணன்
எல்லையில்லா அருளாளன்
அவனுக்கு எல்லாம் தெரியும்
நிச்சயம் அவர்களைக் காப்பான் " என்றான்

எல்லோரும் ஏதோ ஒருவகையில்
சமாதானமடைந்து போனார்கள்
எனக்கு மட்டும் ஒரு உறுத்தல்
"மூன்றுக்குள் இவன்
யாராக இருப்பான்
எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும்"  
என்றேன் என் நண்பனிடம்
"அது எப்படி முடியும் ? " என்றான் அவன்

"பெயர் அறிந்தால் போதுமே
எல்லாம் தெரிந்து போகுமே " என்றேன்
நண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து
அகமகிழ்ந்து போனான்

"தம்பி நல்லது செய்தாய்
உன்பெயரென்னப்பா " என்றேன் பரிவுடன்
என்னை இகல்பமாகப் பார்த்தவன்
"ஜான் அப்துல் நாராயணன் " என்றான்
நான் குழம்பிப் போனேன்
"கைக்குட்டை சரி வராது
வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"
என்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்

21 comments:

Avargal Unmaigal said...

//ஜான் அப்துல் நாராயணன் " என்றான்/
என் பெயரை என் அனுமதி இல்லாமல் வெளியிட்டதற்கு கண்டணம். இந்த பெயர் யாருக்கும் தெரியக் கூடாது என்பதால்தான் மதுரைத்தமிழன் பெயரில் உலாவி வந்தேன் நீங்கள் இப்படி பண்ணிட்டீங்களே சார்

Avargal Unmaigal said...

//இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்
கைகளில் குரான் என
குழம்பும்படி வந்தான் அவன்//

என்னை இப்படியா வர்ணிப்பது

Anonymous said...

"கைக்குட்டை சரி வராது
வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"....Aaha!........
Vetha.Langathilakam.

KILLERGEE Devakottai said...

அருமையான வாழ்வியல் உண்மையை விளக்கியுள்ளீர்கள் ஐயா.. இதையே முன்னிருத்திதான் எனது பதிவுகளில் ஒருவர் வந்து கொண்டு இருக்கிறார் அவரின் பெயர் சிவாதாமஸ்அலி.
த.ம.2

G.M Balasubramaniam said...

தனிப்பட்ட முறையில் வேண்டினால் ஆண்டவனுக்குக் கேட்காதோ. எல்லாவற்றிலும் சமரசம். பாராட்டுக்கள்.

புலவர் இராமாநுசம் said...

மும்மதம் மட்டுமல்ல எம்மதமும் சம்மதமே! என அனைவரும் அறிய வைத்தீர்!

வெங்கட் நாகராஜ் said...

எம்மதமும் சம்மதம்.....

நல்ல கவிதை.

தி.தமிழ் இளங்கோ said...

மத நல்லிணக்கத்தோடு ஒரு தகவல் சொல்லும் கருத்துரைக்கு நன்றி.
த.ம.5

கரந்தை ஜெயக்குமார் said...

மனிதனை இணைக்கத் தோன்றிய மதங்களின் பெயரால், இன்று பிரிவினைவாதம்
அனைத்து மதங்களும் போதிப்பது
அன்பை மட்டும்தான்,
நாம் மறந்ததும் அதனை மட்டும்தான்
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 6

Sethuraman Anandakrishnan said...

அவனியை அமைதிப் படுத்த ,மிருக மனிதனை மனிதனாக்கத் தோன்றிய மதம் ,அறிவு வளர்ச்சியால் ஆயுதம் ஏந்தி அமைதி இழக்கச்செய்கிறது.

rajalakshmi paramasivam said...

இந்தியாவில் உங்கள் ஜான்அப்துல்நாராயணன் போல் நிறைய பேர் உருவாகப் பிரார்திக்கிறேன்/

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த எண்ணம் வந்தால் போதும்...

ezhil said...

மூன்றில்லை முப்பதிருக்கிறது.... எதுவுமே மனதில் மட்டுமல்ல பெயரிலும் இருக்க வேண்டாமே...

கோமதி அரசு said...

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Vimalan Perali said...

முதலில் அப்படி பெயர் சொல்ல வாய்த்ததே பெரிய விஷயம்தானே?

Dr B Jambulingam said...

இவனைப் போல் உள்ளவர்களைத்தான் எத்தனுக்கு எத்தன் என்பார்களோ?

Bagawanjee KA said...
This comment has been removed by the author.
Bagawanjee KA said...

மேம்போக்காக மும்மதமும் சம்மதம் என்று சொன்னாலும் ,மத நல்லிணக்கம் என்றாலும் கூட நடைமுறைக்கு ஒத்துவராது .முரண்பாடான தத்துவங்களைக் கொண்ட மூன்று மதங்களை இணைத்துப் பார்க்கவே முடியவில்லை !
த ம 10

சிவகுமாரன் said...

ஆகா அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

இறுதியில் இது போன்று முகம் துடைக்கும் பெயராகத்தான் இருக்கும் என்று எண்ணியது சரியாகிவிட்டதே! அருமை! மிகவும் ரசித்தோம் பதிவை...

Post a Comment