Wednesday, September 23, 2015

புதுகை பதிவர் சந்திப்பு, ( 6 )

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்தச்  சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திடச்  சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத்தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

பதிவர்களின்  பரந்துபட்ட திறத்தினை
பொது நல நோக்கப்    பண்பினை
எழுத்தில்  காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

14 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பதிவர் சந்திப்பில் தங்களை முதன்முத்லாய் சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி பதிவின் நிறைவு வரிகளை உண்மையாக்கியதை மறக்க முடியாது .
நீங்கள் தரும் உதாரணங்களில் இலக்கிய நயம் மிளிர்கிறது

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

கரந்தை ஜெயக்குமார் said...

புதுகையில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
தம +1

கவிப்ரியன் வேலூர் said...

கலந்து கொள்ள இயலாமை குறித்து வருந்துகிறேன்.

G.M Balasubramaniam said...

அருமையான எண்ண ஓட்டங்கள். மிகவும் ரசித்தேன்

கீத மஞ்சரி said...

ஹூம்.. இப்படியொரு அற்புதமான பதிவை எழுதி என்னைப் போன்றவர்களையெல்லாம் ஏங்கவைத்துவிட்டீர்கள் ரமணி சார். பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அவ்வினிய அனுபவம் வாய்த்திட மனமார்ந்த வாழ்த்துகள்.

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

இளமதி said...

ஐயா..! சகோதரி கீதமஞ்சரி கூறியதே எனது மன எண்ணமும்..!

ஏக்கம் கட்டுக்கடங்காமல் அழுகையாக வருகிறது.
எப்போ நாமெல்லாம் அங்கு வந்து உங்களையெல்லாம் காண்போம் எனக் காத்திருப்புகள் தொடர்கிறது ஐயா!

அருமையான கவிதை! நிகழ்வுகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்!

த ம+1

Mythily kasthuri rengan said...

மிக அருமையான வரவேற்பு அய்யா!! மிக்க மகிழ்ச்சி!! புதுகை விழாக்குழுவின் சார்பாக நன்றிகள் பல!

அம்பாளடியாள் said...

ஒருவரை ஒருவர் சந்திக்காமலே உறவு முறைகளை வளர்த்துக் கொண்டோம்
இந்த இடத்தில் நாங்கள் விடுபடும் போது தான் மனம் வலிக்கின்றது ஐயா எப்போது நாங்கள் எல்லாம் சந்தித்துப் பேசுவோம் இந்தக் கேள்விக் குறிக்கும் விரைவில் விடை கிட்ட வேண்டும் என வேண்டுகின்றேன் ஐயா ! இது எங்கள் குடும்ப விழா இவ்விழாவில் அனைவரது எதிர் பார்புகழும் பூரணமாக நிறைவேற வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன் ஐயா .அருமையான கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

mageswari balachandran said...

சந்திப்பின் சத்தியம் உரைத்தீர்,,,
விழா சிறக்க தாங்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்,,,, அம்மம்மா,,,
பகிர்வுக்கு நன்றிகள்.

‘தளிர்’ சுரேஷ் said...

சென்னையில் உங்களோடு கழித்த நிமிடங்கள் நிழலாடுகின்றது! இந்த முறையும் வர இயலாத சூழல் வந்துவிட்டது! வருத்தமுடன் இருக்கிறேன்!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

எங்கேயும் பதிவர் சந்திப்பு நிகழலாம்
ஆனால்,
புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்புப் போல வருமா
என்றவாறு
விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிடுவதை
பார்க்க முடிகிறதே!

வெங்கட் நாகராஜ் said...

இம்முறை சந்திக்க இயலாது என்பதில் வருத்தம்....

விழா சிறக்க எனது வாழ்த்துகள்.

Post a Comment