Thursday, December 10, 2015

மனித நேயத்தின் அருமையும் பெருமையும்...

உயிர் பெரிதெனத்
தெரிகையில்தான்
விலை கூடிய உடமைகளின்
மலிவுத் தன்மை
புரியத் துவங்கியது

உணவே உயிரென
ஆனபின் தான்
கட்டிக் காத்து வந்த
வரட்டு கௌரவங்கள்
உடையத் துவங்கியது

ஒரு மடக்கு குடி நீருக்கு
அல்லாடுகையில்தான்
அவசியம் அத்தியாவசியங்களுக்குமான
இணைவில்லா  வித்தியாசம்
விளங்கத் துவங்கியது

மாற்றுத் துணியின்றி
மாட்டிக் கிடைக்கையில்தான்
தேவைக்கும் நாகரீகத்திற்குமான
மிக நீண்ட இடைவெளி
கண்ணுக்குத் தெரிந்தது

ஆம்...

எங்கிருந்தோ எவரோ
முகமறியா இனமறியா பலர்
எங்களை நாடி வந்து
அரவணைக்கையில்தான்
ஆறுதல் அளிக்கையில்தான்....

ஜாதி மத அரசியல் ஆர்ப்பாட்டங்கள்
வெற்றுப்  பிணச் சுமையெனவும்
மனித நேயத்தின்
அருமையும்  பெருமையும்
மெல்ல மெல்ல
விளங்கத் துவங்குகிறது

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுவே மனித நேயம்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
மனித நேயத்தின் முன்
அனைத்துமே வெற்று ஆர்ப்பாட்டங்கள்தான்
நன்றி ஐயா
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

RAMJI said...

இதுதான்
உலகமடா

தி.தமிழ் இளங்கோ said...

வாழ்வியல் சிந்தனையைத் தந்த கவிஞருக்கு நன்றி. இதுதான் வாழ்வின் உண்மை. உடலும் உயிரும் ஒன்றாய் இருக்கும் மட்டுமே இரண்டுக்குமே மரியாதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்வியலின் யதார்த்தமான விஷயங்களை மிகவும் அழகாக விரிவாக விளக்கமாக தங்களின் பாணியில் அனைவருக்குமே புரியும்படி நன்கு சொல்லியுள்ளீர்கள்.

சமீபத்திய இயற்கைச் சீற்றங்களால், மிகப்பெரிய பாதிப்புகள் இருப்பினும், மனித நேயம் இன்னும் மரித்துப்போய்விடவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்ததில் சற்றே மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

இந்த வரிகளை படிப்பவர்கள் நிச்சயம் திருந்தி நடக்க வாய்ப்பாக உள்ளது ஐயா நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம 5

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மீரா செல்வக்குமார் said...

மழை கிழித்த திரை....காட்டிய மனிதநேயம்...
உங்கள் கவியின் ஆழம் அருமை...

Post a Comment