Monday, December 27, 2021

காணும் காட்சி யாவும்.....

 வானக் கடலில் பறவை ஒன்று

சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

4 comments:

Jayakumar Chandrasekaran said...

//உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை 
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே//

அந்த உணர்வு எல்லோர்க்கும் வருவதில்லை. அது போன்று தான்  ஓவியமும். ஓவியன் மட்டுமே காணும் காட்சிகளில் ஓவியத்தை காண்பான்.

Jayakumar

Thulasidharan V Thillaiakathu said...

உலகை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே காட்சிகள் நேர்மறைக் கவிதைகளாகவும் ஓவியமாகவும் தெரியும். ரசனை மிக மிக முக்கியம். ரசித்தாலும் கவிதைகள் வார்த்தைகள் அருவி போல வர வேண்டுமே!!

பாடல் எழுதிய விதம் அருமை.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை அருமை, ரசித்தேன்.

துளசிதரன்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Post a Comment