சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம் ஏறுவோம்சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து ஏறுவோம்
ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய பொருட்கள் எல்லாம்
அணுவா லானது
வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே
வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே
4 comments:
ஆம் உண்மை... அருமை...
சிறப்பு. சந்த நயம் அருமை
வணக்கம் சகோதரரே
நல்ல அருமையான கருத்துடன் அழகான கவித்துவம் மிகுந்த வார்த்தைகளுடன் கூடிய சிறந்த பதிவு. ரசித்தேன். ஆம். இனி எங்கும் வெற்றி நிச்சயம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆம்!"
Post a Comment