மக்கள் மனமறிய
ஒற்றர்படை தேவையில்லைஊடகங்கள் போதுமளவு இருக்கிறது
செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது
தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது
மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது
இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது
அதிகாரம் காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது
யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது
ஆயினும்
மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும் எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?
இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?
காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய் மகிழ்வோடு இருக்கலாமோ ?
இல்லையெனில் நம்நிலை
சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?
7 comments:
ஊடகங்கள் உண்மையை பிரதிபலிப்பதில்லை. தொலைக்காட்சிகள் தொல்லைக் காட்சிகள். மக்களின் இயல்பான அமைதியான வாழவைக் கெடுக்க ஆள்வோரோடு இவை போதுமே.. இவை இல்லா அந்தக் காலம் பொற்காலம்தான்!
மிக அழகிய ஒப்பீடு மிகவும் ரசித்தேன் கவிஞரே...
வணக்கம்
ஐயா
இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?
இன்றைய நிலை இதுதான் மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
அன்புடன்
த.ரூபன்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
என்று அன்றே சொன்னார் கவியரசர்.
வசதிகள் பெருகப்பெருக மனம் சிறிதாகிவிடுகிறது என நினைக்கிறேன்.
அருமை... உண்மை...
சிறப்பான ஒப்பீடு. சிந்தனை அருமை. தொடரட்டும் உங்கள் வலைப்பதிவுகள்....
Post a Comment