Thursday, July 19, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (4)


பெருந்தலைவர் பெருந்தலைவர்தான்

அப்போது நான் ஆரம்பப் பள்ளியில்
படித்துக் கொண்டிருந்த சமயம்
எங்கள் ஊர் மதுரை விமான நிலையத்தை
ஒட்டிய கிராமமாக இருந்ததால் முக்கியப் பிரமுகர்கள்
மதுரை வருகையின் போதெல்லாம் வரவேற்பதற்காக
பள்ளியில்ஒரு சிறுவர் குழுவை எப்போதும் தயாராக
வைத்திருப்பார்கள்.அந்தக் குழுவில் எப்போதும்
எனக்கு நிரந்தர இடம் உண்டு.

ஒரு சமயம் கர்ம வீரர் அவர்கள் ரஷ்ய நாட்டுக்கு
அரசு முறைப் பயணமாக சென்று வந்த பின்
முதன் முறையாக மதுரை வருவதால் ஒரு
சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்
அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்
தலைவராக இருந்தார் என்பதையும் அவர் ரஷ்ய
பயணம் குறித்து அந்நிய நாடுகளில்
சோஷலீஸத் தலைவர் என்றேல்லாம்
ஆனந்த விகடனில் கட்டுரையெல்லாம்
வந்துகொண்டிருந்தது என்பதையும் பின் நாட்களில்
தெரிந்து கொண்டேன்

வழக்கம்போல எங்களையெல்லாம் விமான நிலையம்
வரவழைத்து ஓடுதளத்தின் வெளிப்பகுதியில்
ஒடுக்கமாக இருந்த  நடைபாதையில் இருபுறமும்
வரிசையாக நிற்கவைத்துஎங்கள் எல்லோருடைய
கையிலும் ஒரு ரோஜாப் பூவைக் கொடுத்து
அவர் எங்கள் அருகில் வரும் சமயம்
அவர் காலடியில்விழுகிறார்ப்போல போடவேண்டும்
எனச் சொல்லியிருந்தார்கள்.
பூவைஎப்படிப் போடவேண்டும் என எங்களுக்கு
ஒத்திகையெல்லாம் நடந்தது.
நாங்கள் ரொம்ப சந்தோஷமாக பூவை கையில்
வைத்துக்கொண்டு அவர் வருகைக்காக காத்திருந்தோம்

அந்த சமயம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்
பார்வையிட்டுக் கொண்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி
(பின் நாளில் அவர் ஐ,ஜி அருள் அவர்கள் என
அறிந்தேன் ) எங்கள் அருகில் வந்து நின்று
"இந்தச் சிறுவர்கள்  பூவை என்ன செய்யப்-
போகிறார்கள்.கைகளில் தரப் போகிறார்களா ?"
எனக் கேட்க எங்கள் அருகில் இருந்த ஒருவர்
 "இல்லையில்லை தலைவர் வருகையில்
அவர் பாதத்தில் படும்படியாக போடச் சொல்லி
பயிற்சி கொடுத்திருக்கிறோம்" எனச் சொல்ல-
அவர் டென்ஷன் ஆகிவிட்டார்

"இரண்டுகெட்டான் பிள்ளைகளிடம் பூவைக்கொடுத்து
போடச் சொல்கிறீர்களே அவர்கள் விளையாட்டுத்தனமாக
அவர் மேல் போட  கண்களில் எதுவும் பட்டுவிட்டால்
என்ன செய்வது இல்லை இல்லை
இதை அனுமதிக்க முடியாது "
எனச் சொல்லிவிட்டார்.அதற்குப் பதிலாக
கைகளில் வைத்துக் கொண்டே நிற்கட்டும்
போதும் எனச் சொல்லிவிட்டார்

எங்களுக்கெல்லாம் திடுமென அவர் அப்படி
மாற்றியது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது
நாங்கள் எல்லாம் அழாத குறையாக
முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தோம்

பெருந்தலைவர் எங்களைக் கடந்து போகும் போது
கூட எங்களுக்கு பெரிய உற்சாகமில்லை
பொம்மை போல் பூவை கையில் வைத்தபடி
நின்றிருந்தோம்.பெருந்தலைவர் எங்களைப்
பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தபடிக்
கடந்து போய்விட்டார்..

நாங்கள் பின் வரிசையாக அரை கிலோ மீட்டர்
தள்ளியுள்ள பஸ் ஸ்டாப்பை நோக்கி
நடக்கத் துவங்க்கினோம்.சிறிது நேரத்தில்
விமான நிலையத்தில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டர்
வேகமாக எங்களை நோக்கி ஓடிவந்து
எங்கள் ஆசிரியரிடம் "எல்லா மாணவர்களையும்
கூட்டிக் கொண்டு வாருங்கள்.பெருந்தலைவர்
அனைவரையும் பார்க்க விரும்புகிறார் "
எனச் சொன்னார்

பின் அவரே தொடர்ந்து சொன்னார்
ஓய்வு அறைக்குப் போனதும் தலைவர்
குழந்தைகள் எல்லாம் ஏன் சோர்வாக இருக்கிறார்கள்
வெகு நேரம் நிற்க வைத்துவிட்டீர்களா
எனக் கேட்டதாகவும் அதற்கு அங்கு உள்ளோர்
இல்லையில்லை முதலில் பூவை தலைவர்
வருகையில் பாதத்தில் போடும்படியாக
ஏற்பாடு செய்திருந்ததையும் பின் பாதுகாப்பு கருதி
கையில் பிடித்துக் கொண்டு வெறுமனே
நிற்கச்சொன்னதில் அவர்கள் உற்சாகம்
குறைந்து போய்விட்டதாகவும் சொல்ல
தலைவர் அவர்களை மிகவும் கடிந்து கொண்டு
உடனே அந்தக் குழந்தைகளைக் கூட்டி
வாருங்கள்.என உத்திரவிட்டதாகவும் சொல்லி
எங்களை திரும்ப அழைத்துப் போனார்

நாங்கள் அனைவரும் திரும்ப
விமான நிலையம் போய் வரவேற்பு அறைவாசலில்
வரிசையாக நின்றோம்.ஒவ்வொருவராக உள்ளே
வரச் சொல்லி எங்கள் கைகளில் இருந்த பூவை
வாங்கிக் கொண்டு பெயர் விவரங்களைக் கேட்டு
நன்றாகப் படிக்கவேண்டும் என அறிவுரையும்
சொன்னார.அப்போது அருகில் முன்னாள்
ஜனாதிபதி வெங்கராமன் அவர்கள்
பூவராகவன் அவர்கள் சி.சுப்ரமணியம் அவர்கள்
எல்லாம் இருந்ததை பின்னாளில் எங்கள்
ஆசிரியர் சொல்லத் தெரிந்து கொண்டேன்

இது மிக மிக சிறிய நிகழ்வுதான்
ஆயினும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக.,அடுத்த பிரதமர் யார் என
தீர்மானிக்கக் கூடிய அந்தஸ்தில் இருந்த
பெருந்தலைவர் எங்களது சிறு முகவாட்டத்தைக்
கண்டு எங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டதும்
எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்து
சந்தோஷப் படுத்தி அனுப்பியதையும்
 நினைக்க நினைக்க
இன்றுள்ள தலைவர்களுடன்
ஒப்பிட ஓப்பிட 
அது ஒரு கனவுபோலத்தான் படுகிறது

பெருந்தலைவர் என்றால் அவர் மட்டும்தான்
பெருந்தலைவர்


32 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தைகளின் முக மாற்றத்தை வைத்து, எல்லாரையும் அழைத்து வாழ்த்தி, அறிவுரை கூறிய பெருந்தலைவர்... பெருந்தலைவர் தான்... பகிர்வுக்கு நன்றி சார் ! (த.ம. 2)

கீதமஞ்சரி said...

மனதை நெகிழ்விக்கும் அழகான பதிவு இது. சிறு குழந்தைகளையும் பொருட்டாய் மதித்து, அவர்கள் மனவாட்டம் போக்க முயன்ற தனிப்பெருந்தலைவரின் செயல் வியப்புக்குரியது. திரு.ஏ. கோபண்ணா அவர்கள் எழுதிய காமராஜர் ஒர சகாப்தம் என்னும் நூலை சமீபத்தில்தான் படித்தேன். அதிலிருந்து அவரைப் பற்றிய பல தகவல்களை அறிந்து வியந்தேன். இப்போது இப்பதிவும். சிறுவயது நினைவுகளையும் அழகாய்த் தொகுத்துப் பதிவிடும் தங்கள் திறனை மெச்சுகிறேன். பாராட்டுகள் ரமணி சார்.

சாந்தி மாரியப்பன் said...

//பெருந்தலைவர் எங்களது சிறு முகவாட்டத்தைக்
கண்டு எங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டதும்
எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்து
சந்தோஷப் படுத்தி அனுப்பியதையும்
நினைக்க நினைக்க
இன்றுள்ள தலைவர்களுடன்
ஒப்பிட ஒப்பிட
அது ஒரு கனவுபோலத்தான் படுகிறது//

எங்களுக்கும் அப்படித்தான்.. அந்த நாட்கள் திரும்ப வருமான்னு ஏக்கமா இருக்கு.

பகிர்வுக்கு நன்றி

bandhu said...

கனவு தான் சார்.. அது போன்ற தலைவர்களை எல்லோரும் இனிமேல் எல்லோரும் படித்து பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய நல்ல தலைவர்களை எல்லாம் ஒன்றொன்றாக இழந்து விட்டது. எல்லோருக்கும் அவரவர் நலனே பிரதானமாகிவிட்ட பிறகு இப்போது இருப்பது போன்ற தலைவர்களே வருவார்கள். இப்போதிருக்கும் தலைவர்கள் செய்ததிலேயே பெரிய அநியாயம், நல்லவர்கள் இனி பெரிய பதவிகளுக்கு வராத மாதிரி சிஸ்டத்தை கெடுத்து வைத்திருப்பது தான்!

தி.தமிழ் இளங்கோ said...

தலைவர் காமராஜ் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமையோடு, அவரை நேரில் சந்தித்து ரோஜாப் பூவையும் கொடுத்து அவரோடு பேசினோம் என்ற ஒரு ஆத்ம திருப்தியும் உங்களுக்கு. பாராட்டுக்கள்!

ஆத்மா said...

ஒரு தலைவர் எப்படியிருக்க வேண்டும் என்பதிற்கு உதாரணம் காட்டிவிட்டார்........
நிறைய பதிவுகள் இட்டுவிட்டீர்கள் போல நான் ரசிக்கத் தவறிவிட்டேன் எல்லாவற்றையும் இன்னைக்கே படித்து முடிக்கிறேன்

ஆத்மா said...

த.ம.ஓ...5

CS. Mohan Kumar said...

அருமை. எனக்கு பிடித்த பெருந்தலைவருடனான சம்பவம் பகிர்ந்தமைக்கு நன்றி

பால கணேஷ் said...

ரமணி ஸார்... மனித நேயத்திலும் பண்பிலும் ஈடு இணை சொல்ல இயலாதவர் காமராஜர். அவருடனான உங்கள் அனுபவம் நெகிழ வைத்தது. நேரில் அவரைப் பார்க்கக் கொடுத்து வைத்த பாக்கியசாலி நீங்கள். இதைப் படித்ததும் ராஜேஷ்குமார் காமராஜருடனான அவர் அனுபவம் ஒன்றைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அதை அனேகர் அறிந்திருக்க இயலாது என்பதால் திங்களன்று வெளியிடுகிறேன். நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

சசிகலா said...

உண்மையில் பெருந்தலைவர் பெருந்தலைவர் தான் ஐயா மழலை முகம் கண்டு குறை தீர்த்த அத்தலைவர்கள் எங்கே வேண்டாம் ஒப்பிடுவதே தவறு என நினைக்கிறேன் . ஆமாம் பெருந்தலைவரை நேரில் பார்த்த உங்களை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது.

சீனு said...

ஆம் அய்யா பெருந்தலைவர் பெருந்தலைவர் தான்... என் மனதிற்கினிய தலைவருடன் உங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது எண்ணி பெருமை கொள்கிறேன் ஏன் பொறாமையும் கொள்கிறேன்

sathishsangkavi.blogspot.com said...

காமராஜர் தி கிரேட்...

என்னைப்போல் பல கிராமத்தான்கள் படிக்க இவரின் முயற்சி தான் காரணம்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு. நானும் பெருந்தலைவர் காமராஜ் அவர்களை நேரில் மிக அருகில் சந்தித்துள்ளேன்.

அருணா செல்வம் said...

பெருந் தலைவரைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம்...
கண்முன்னே தெய்வமே வாழ்ந்திருந்தது “ என்று நினைத்துக் கொள்வேன்.

இப்பொழுது உங்கள் பதிவும் சேர்ந்து மேலும் வியக்கிறேன்.
நன்றிங்க ரமணி ஐயா.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காமராஜரின் பல முகங்களில் முக்கியமானது இப்படி முகமறிந்து அகமறிதல். இவரை இந்திரா ஒதுக்க ஆரம்பித்ததிலிருந்துதான் அரசியலின் கேடு ஆரம்பமானது. நாகர்கோயில் ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு விழாவுக்கு அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமராஜருக்கு அழைப்பில்லை. இருந்தாலும் தன் தொகுதி நிகழ்ச்சியைத் தவிர்க்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் மேடையில் அமர்ந்திருந்த காமராஜர் இருந்த திசையைக் கூட இந்திரா திரும்பிப் பார்க்கவில்லை. காமராஜ்தான் காங்கிரஸின் பிரிவினைக்கு முன்பு சாஸ்திரியின் மறைவுக்குப் பின் இந்திரா ப்ரதமராவதற்கு முழுமுதல் காரணி.

குழந்தைகளை விட்டு தலைவர்களை வரவேற்பதும் அவர்கள் காலடியில் பூக்களைத் தூவுவதும் மிகத் தவறான உதாரணங்கள்.இது மட்டும் மாறாது இன்னும் தொடர்வது கொடூரமான வேதனை.

”தளிர் சுரேஷ்” said...

இதுபோன்ற தலைவர்களை இனி கனவில்தான் காணமுடியும்! சிறப்பான நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி!

யுவராணி தமிழரசன் said...

///எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்து
சந்தோஷப் படுத்தி அனுப்பியதையும்
நினைக்க நினைக்க
இன்றுள்ள தலைவர்களுடன்
ஒப்பிட ஓப்பிட
அது ஒரு கனவுபோலத்தான் படுகிறது
///

நிதர்சனம் சார்! அன்றைய காலத்து தலைவர்களுக்கும் இன்றைய தலைவர்களுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது! நீங்கள் சொன்னதுபோல்
"பெருந்தலைவர் என்றால் அவர் மட்டும்தான்
பெருந்தலைவர்"

Ganpat said...

மிகவும் மனதை தொட்ட நிகழ்வு..நன்றி..

1.ராஜாஜி காமராஜரை தோற்கடிக்க தி.மு.க வுடன் கூட்டு சேர்ந்தது.

2.காமராஜர் இந்திராவை பிரதமராக்கியது.

3.அண்ணா மறைவிற்குப்பிறகு எம்.ஜி.ஆர் கருணாநிதியை முதல்வராக்கியது.

4.கருணாநிதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியது.

மேற்கண்ட நான்கு நிகழ்வுகளே தமிழகத்தின் சரித்திரத்தை தலைகீழாக மாற்றிப்போட்டவையாகும்.

Seeni said...

nalla thakaval ayya!
theriya paduthiyathukku mikka nantri ayya!

G.M Balasubramaniam said...

மேன்மக்கள் மேன்மக்களே. என்பதற்கு சிறந்த உதாரணம் பெருந்தலைவர் காமராஜர்.

மாதேவி said...

நிகழ்வு நெகிழவைக்கின்றது. பெரும்தலைவர்தான்.

vanathy said...

நல்ல பதிவு. நான் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு முறை ஜெயலலிதா அம்மையார் வந்தபோது எங்களை இப்படி நிற்க வைத்தார்கள். அதுவும் வேகாத வெய்யில் வேறு. எனக்கு அவர் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. கண்ணாடிகள் ஏற்றிவிடப்பட்ட காரில் அவர் இருந்ததாக சிலர் சொன்னார்கள். ஒரு கை மட்டும் வெளியே நீட்டி டாட்டா காட்டியதாக தோழி சொன்னார். அது மிகவும் வெள்ளையாக இருந்தமையால் அது மேடம் தான் என்று முடிவு செய்து கொண்டார்கள். ஆனால், இதுக்கு எங்கள் ஆசிரியர்கள் செய்த அலட்டல் இருக்கே... வாழ்க்கை வெறுத்துப் போனது தான் மிச்சம்.

MARI The Great said...

நல்ல பதிவு (TM 9)

Gobinath said...

அதானல்தான் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கு பல தலைவர்கள்(?) கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது.

ராமலக்ஷ்மி said...

/சிறு முகவாட்டத்தைக்
கண்டு எங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டதும்
எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்து
சந்தோஷப் படுத்தி அனுப்பியதையும்/

இப்படியெல்லாமும் இருந்திருக்கிறார்கள் தலைவர்கள். நல்ல பகிர்வு. நன்றி.

கோவி said...

மக்களுக்காகவே எந்நேரமும் பாடுபட்ட தலைவர் இவராகவே இருக்க முடியும்.. இவர்களுக்கு பிறகு வந்த எந்த முதல்வரும் இவர் போல் செயல்படவில்லை எனபது என் ஆதங்கம்..

கோவி said...

tha ma 11

கோமதி அரசு said...

பெருந்தலைவர் எங்களது சிறு முகவாட்டத்தைக்
கண்டு எங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டதும்
எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்து
சந்தோஷப் படுத்தி அனுப்பியதையும்
நினைக்க நினைக்க
இன்றுள்ள தலைவர்களுடன்
ஒப்பிட ஓப்பிட
அது ஒரு கனவுபோலத்தான் படுகிறது//


பெருந்தலைவர் என்றால் அவர் மட்டும்

ஆம் , நீங்கள் சொல்வது உண்மை.
இப்போது உள்ள தலைவர்களை அவரோடு ஒப்பிட முடியாது.
பெருந்தலைவர் என்ற பெயருக்கு ஏற்ற உயர்ந்த மனிதர்.
நல்ல பகிர்வுக்கு நன்றி.

Avargal Unmaigal said...

குழந்தைகளின் முகவாட்டைத்தை கண்டு கவலைப்பட்டவர் கர்ம் வீரர் காமராஜ் அவர்கள் ஆனால் இப்போது உள்ள தலைவர்களுக்கு மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தால் அவர்கள் கவலைப்படுவார்கள்

துளசி கோபால் said...

பெருந்தலைவர் என்ற பெயருக்கு உண்மையில் பொருத்தமானவர் இவரைத்தவிர வேறு யாருமே இல்லை என்பதே என் கருத்து.

நேரம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.
http://thulasidhalam.blogspot.co.nz/2011/01/blog-post_26.html

வெங்கட் நாகராஜ் said...

பெருந்தலைவர் - இவரையன்றி வேறு யார்....

குழந்தைகள் மனச் சோர்வினை கண்டு துயர் துடைத்த நல்லுள்ளம் ....

த.ம. 13

மின் வாசகம் said...

நல்ல பகிர்வு !!!

Post a Comment