Tuesday, September 10, 2013

காக்கை உறவு

கடிகார முட்கள் கூட
தவறான நேரத்தைக் காட்டி விடக்கூடும்
அந்தக் காக்கைகள் மட்டும்
நேரம் தவறி  வந்ததே இல்லை

"அந்தச் சனியன்கள் மிகச் சரியாக வந்துவிடும்
உலை வைக்கணும் " என
கோபப்படுவது போல் பேசினாலும்
காக்கைகளின் மேல் பாட்டிக்கு
வாஞ்சை அதிகம்

முதல் நாள் சாப்பாடு மிஞ்சிய நாட்களில்
எங்களுக்காக சமைக்காவிட்டாலும் கூட
"பிடிச்சபிடி " என காக்கைக்கென
தனியாக உலைவைப்பாள் பாட்டி

பாட்டி மரித்துப்போன அந்த நாளில்
வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை
அவைகளும்  செய்தியறிந்து வந்ததுபோல
எப்போதும் போலக் கூச்சலிடாது
வெகு நேரம் மரத்தின் மேல்
அமர்ந்திருந்து போயின

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து
பாட்டியின் நினைவாக
நாங்களும் காக்கைக்கு உணவு கொடுக்க
எத்தனை முறை முயன்றபோதும்
அந்தக் காக்கைகள் மட்டும் ஏனோ
வீட்டுப் பக்கம் வரவே இல்லை
அன்று அதற்கான காரணமும் புரியவில்லை

சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாடு எனக்குப் புரிகிற இந்த நாளில்
கடனெனச் செய்தலுக்கும் படைப்பதற்குமுள்ள
பெரும் வேறுபாடு பறவைகளுக்கும் புரியும் எனப்
புரிந்து கொள்கிற இந்த வேளையில்

கான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்
கையாளாகாதவர்களுள் ஒருவனாய்  நான்...
மனிதன் மீது நம்பிக்கை முற்றாக இழந்து
கண்காணாது நிம்மதியாய் எங்கோ அவைகள்.

27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// கடனெனச் செய்தலுக்கும் படைப்பதற்குமுள்ள பெரும் வேறுபாடு பறவைகளுக்கும் புரியும்... ///

அருமை ஐயா...

ஸ்ரீராம். said...

அருமை. நாய்கள் இப்படிப் பழகுவது பலமுறை பார்த்திருக்கிறேன். காக்கைகள் ஆச்சர்யமாயிருக்கிறது. நம் வீட்டில் சாப்பிடும் காக்கைகளேயானாலும் கூட அது கூடு கட்டியுள்ள மரத்தைத் தாண்டிச் செல்கையில் மண்டையில் இடிதான் வாங்கியிருக்கிறேன்!

சாய்ரோஸ் said...

மிக அருமையான உணர்வுப்படைப்பு சார் இது... மனதைத்தொட்டதுடன் கனக்கவும் செய்தது...
அதிலும் கடைசி இரு பத்திகள் இடியாய் இறங்கியது உணர்வில்... மிக மிக ரசித்தேன்...

Anonymous said...

காக்கைகளும் நுண் உணர்வு படைத்தது தான்.
அதை உணர்த்திய பதிவு அருமை.

கோமதி அரசு said...

பாட்டி மரித்துப்போன அந்த நாளில்
வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை
அவைகளும் செய்தியறிந்து வந்ததுபோல
எப்போதும் போலக் கூச்சலிடாது
வெகு நேரம் மரத்தின் மேல்
அமர்ந்திருந்து போயின//

பாட்டியின் மரணத்திற்கு அமைதியாக அஞ்சலி செலுத்தி சென்றது போலும்.
நல்ல உணர்வுபூர்வமான கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையோ அருமை.

மிகவும் ரஸித்தேன்.

அந்தக் காக்கைகளுக்காக இல்லாவிட்டாலும் கூட, எங்களுக்கு இது மிகவும் அருமையான படையல்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ராஜி said...

சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாடு
>>
நாம செய்வதெல்லாம் வெறும் சம்பிரதாயம்தான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒன்றுக்கு மற்றொன்றுக்குமான தொடர்பில் இருக்கும் சில உறவுபாலங்களை கண்டுக்கொள்ள முடிவதில்லை...

வாழ்க்கை என்பது யதார்த்தங்களை மீறி இந்த உலகில் அதிசயங்கள் செய்வது...

இந்த வாழ்க்கையின் அதிசஙக்ளை கண்டுபிடிப்துதான் வாழ் முழுவதும் நாம் செய்கிற முயசிகள்...


அழகிய கவிதை

Avargal Unmaigal said...

மிக நல்லதொரு படைப்பு
///கான்கிரீட் காடுகளில் //

காடுகளில் விலங்கினங்கள் இருப்பது போல இந்த
கான்கிரீட் காடுகளிலும் மனித மிருகங்கள் வசித்து வருகின்றன

Anonymous said...

வணக்கம்
ஐயா
கடிகார முட்கள் கூட
தவறான நேரத்தைக் காட்டி விடக்கூடும்
அந்தக் காக்கைகள் மட்டும்
நேரம் தவறி வந்ததே இல்லை

என்ன வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி said...

மனதை ஊருருவிச் செல்கிறது உங்கள் கவிதை வரிகள்!...

காக்காயின் பரிவும் அதற்கான பரிதவிப்பும்...
வார்த்தைக்குள் அடங்காத உனர்வுகள்!

//கான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்
கையாளாகாதவர்களுள் ஒருவனாய் நான்..//

மனதில் பதிந்த வரிகள் ஐயா!..
வாழ்த்துக்கள்!

குட்டன்ஜி said...

ஆம் ஐயா!சாதம் வைத்தால் கொஞ்சம் சந்தேகத்துடனே வருகின்றன காக்கைகள் இக்காலத்தில்!

”தளிர் சுரேஷ்” said...

பறவைகளானும் அவையும் மனிதர்களுடன் ஓர் நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுகின்றன! அருமையான படைப்பு நன்றி ஐயா!

முனைவர் இரா.குணசீலன் said...

சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாட்டை மிக அழகாக எடுத்துரைத்தீர்கள் அன்பரே.

கவியாழி said...

பாட்டி மரித்துப்போன அந்த நாளில்
வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை//ஆனாலும் செய்தியறிந்து வந்தனவே

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

abdul said...

//சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாடு எனக்குப் புரிகிற இந்த நாளில்
கடனெனச் செய்தலுக்கும் படைப்பதற்குமுள்ள
பெரும் வேறுபாடு/
unmai

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான சிந்தனை.
காக்கை பாடினியார் ஆகி விட்டீர்கள். சிறப்பான ஆக்கம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 19

வெற்றிவேல் said...

அருமை...

சிகரம் பாரதி said...

அருமை. மனித வாழ்வியலை அழகாகப் படம் பிடித்துக் காட்டியது கவிதை. ரசித்தேன் - புரிந்தேன்.

கே. பி. ஜனா... said...

மிக அருமை!

Seeni said...

nenjai pizhinthathu ayyaa...!

தி.தமிழ் இளங்கோ said...

// பாட்டி மரித்துப்போன அந்த நாளில் வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை அவைகளும் செய்தியறிந்து வந்ததுபோல எப்போதும் போலக் கூச்சலிடாது வெகு நேரம் மரத்தின் மேல் அமர்ந்திருந்து போயின //

இயற்கையின் அதிசயக் கோட்பாடு நமக்கு என்றுமே புரிவதில்லை. காக்கைகளின் செயலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

சசிகலா said...

அற்புதமான சிந்தனை வெளிபாடு ஐயா.

Unknown said...

நான் எழுதிய "நகரத்து பறவையின் எச்சம்..." என்னும் பதிவின் கவிதை வடிவை பார்ப்பது போல உள்ளது. பறவை தானியம் உண்ணும் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம், காக்கை தலையை சாய்த்து சாய்த்து நடக்கும் அழகே தனி........மனதை பிசைகிறது கவிதை !

அப்பாதுரை said...

எங்கேயெல்லாம் பாடம் தேட வேண்டியிருக்கிறது பாருங்களேன்..

Post a Comment