Monday, February 10, 2014

எதிர்மறையே எப்போதும் முன்னே வா.

..பசியே வா
ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி
எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா
இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான் அருகாமையின் சுகத்தை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா
உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்
இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா
நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.
அசுர வெறியோடு தோண்டித் தேடி
நானாக அதை அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா
பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே வா
நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர  வேண்டும்

30 comments:

ஆத்மா said...

புரட்சி வரிகள்...
வாழ்க்கையில் மேற்சொன்னவைகள் அனைத்தும் இருப்பதால் மட்டுமே மனிதன் மனிதனாக இருக்கிறான்..

கரந்தை ஜெயக்குமார் said...

நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
என்பார்கள்,
தாங்களோ
நேர்மறையைக் காண
எதிர்மறையை
அழைக்கிறீர்கள்
அருமை ஐயா
நன்றி
த.ம.2

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாதவைகளை அறிந்து கொண்டால் பக்குவம் விரைவில் வந்துவிடும் என்பதை நன்றாக சொல்லி உள்ளீர்கள் ஐயா...

வாழ்த்துக்கள்...

மகிழ்நிறை said...

வெயிலின் அருமை நிழலில்!
அதனால் தான் வெயில் கேட்டிரோ?!
அருமையான சிந்தனை!

Anonymous said...

''...நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர வேண்டும்...''' good.. முழுமையாக உணர்ந்து முழுஞானியாகுங்கள்!
இறையருள் கிடைக்கட்டும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

சோதனைகள் யாவும் சாதனைக்கே வித்திட்டுச் செல்லும் அருமையான வேண்டுதல்கள் தான் வாழ்த்துக்கள் ரமணி ஐயா எல்லா வகையிலும் இன்புற்று வாழ

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மிக அருமை ஐயா! த.ம.6

Unknown said...

இன்றைய திரைப் படங்கள் காட்டுவதுபோல்தான் உள்ளது கவிதையின் கடைசி ஆறு வரிகள் !
த ம 7

கே. பி. ஜனா... said...

உணர வேண்டியதை உணர உணர வேண்டாததை உதவிக்கு அழைக்கும் உன்னதக் கவிதை! அழகு!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

kingraj said...

அனுபவங்கள் (புதுமையாய்) எதிர்மறையுடன் அமைந்துவிட்டால் பசி என்ன...பிரிவு என்ன ...பகை என்ன...??? எல்லாமே வெற்றி தான். ஆழ்ந்த ஆக்கம். வாழ்த்துக்கள் ஐயா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

தத்துவக்கருத்து நிறைந்த வரிகள் ஐயா. சொல்லவேண்டிய கருத்தை மிகச்சரியாக சொல்லியுள்ளிர்கள் ....வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
ஐயா.

த.ம 10வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

நேர்மறையும், எதிர்மறையும்
கலந்ததுதான் வாழ்க்கை எனினும்
எதிர்மறையின் மூலம் நேர்மறையை
எதிர்கொள்ள அழைக்கும் வரிகள்! ஆம்!
எதிர்மறை அறிந்தால்தானே நேர்மறையின்
மகத்துவம் அறிவோம்!

அற்புதம்! மிகச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்!

வாழ்த்துக்கள்!
த.ம.



Seeni said...

மிக சிறப்பு அய்யா

ஸ்ரீராம். said...

அருமை. இருக்கும்போது அறியா பெருமையை அதே இல்லாதிருக்கும்போதுதான் உணர முடிகிறது.

சசிகலா said...

சபாஷ் போட வைத்த சிந்தனை அருமை அருமை ஐயா..

Marc said...

அனுபவக்கவிதை அருமை.

Unknown said...

எல்லாவற்றையும் வாவென்று அழைத்து அதில் சிறப்பு தேடும் கவிதை மனதை கவர்ந்தது சார்.....

”தளிர் சுரேஷ்” said...

எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்! அருமை ஐயா! வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களது எதிர்மறைக் கவிதையை நேர்மறையில் எண்ணினேன். முற்றிலும் பொருத்தமாக உள்ளது.

இராய செல்லப்பா said...

இன்பம்- துன்பம், சூடு-குளிர், விருப்பு-வெறுப்பு ...என்ற "இரட்டை"களைப் பற்றிய அழகான கருத்துரை!

தி.தமிழ் இளங்கோ said...

நமது எதிர்மறையாளர்கள்தான் ந்ம்மை கூர்மைப் படுத்துகிறார்கள் என்பதனை அழகாகச் சொன்னீர்கள்

MANO நாஞ்சில் மனோ said...

வெறியேற்றும் ஏற்றும் வார்த்தைகள் நன்று !

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

Unknown said...

மனம் விட்டு மீளாத பதிவு!

ராமலக்ஷ்மி said...

/நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர வேண்டும்/ இதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!

Yarlpavanan said...

"எதிர்மறையே வா
நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர வேண்டும்" என்ற
அழைப்பை வரவேற்கிறேன்!

கோமதி அரசு said...

நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர வேண்டும்//
உண்மை. நன்றாக சொன்னீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை......

த.ம. +1

Post a Comment