Tuesday, February 25, 2014

தாய்மை

அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.
அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்
அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது ஒருகவிதை
அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை
சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

16 comments:

Yarlpavanan said...

தாய்மை
உலகில் கிடைத்தற்கரிய பேறு
அதைக் கண்டதும்
ஆனந்தம் வந்திடுமே!
சிறந்த பகிர்வு!

ராஜி said...

அதான் தாய்மையின் அற்புதக் குணம்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான உவமானங்கள்...தாய்மையின் சிறப்பைச் சொல்லும் சிறப்பான கவிதை ஐயா..
த.ம. +1

திண்டுக்கல் தனபாலன் said...

தாய்மை என்றும் சிறப்பு என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

''..அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை..''
இப்படியான தாய்மை உலகில் நிறைய உள்ளனவே!
பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு தானே!
சிந்தனைக்கு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

RajalakshmiParamasivam said...

தாய்மையின் குணம் தானே அது? பெற்ற மனம் அப்படி இல்லையென்றால் தான் ஆச்சர்யப்பட வைக்கும் . அழகிய உவமானங்கள் . நல்லதொரு கவிதை.

கே. பி. ஜனா... said...

தொடுத்த கதம்பமும் முடித்த விதமும் அழகு!

G.M Balasubramaniam said...

எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக ஒரு புள்ளி இருப்பதை அழகாகக் கவிதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நினைவூட்டல்--போட்டிக் கதை

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா...

தாய்மையின் சிறப்பு சிறப்புத்தான் ஐயா.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்

த.ம 6வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அருணா செல்வம் said...

அருமை... அருமை.
எவ்வளவு அழகான ஆழமான கருத்து!!

வியக்கிறேன் இரமணி ஐயா.

மகிழ்நிறை said...

பனை மரம் போல் வளர்ந்தாலும் நிழல் தராத
பிள்ளையை பெருமையோடு பார்க்கும் அன்னை !
காட்சியை கவிதை!

கரந்தை ஜெயக்குமார் said...

தாய்மைக் கவிதை அருமை

Radha Balu said...

திரு ரமணி அவர்களுக்கு நான் சமீபத்திலேயே தங்களின் பதிவுகளைப் படித்தேன்;ரசித்தேன்.

தாய்மையின் விளக்கம் அருமை.தாய்மையின் மென்மைத் தன்மையே அதன் பெருமை என்பதை மிக செம்மையாக விளக்கியுள்ளீர்கள்.

வறுமையில் இருந்தபோதும் தான் பெற்ற மகனை சிறுமைப் படுத்தாமல் பெருமை பாராட்டும் தாய்மை ஒன்றே உலகின் உன்னதமான உண்மை.

Thulasidharan V Thillaiakathu said...

தாய்மைக்கும் மிகுந்த ஒன்று இந்த உலகில் உண்டோ?!! சத்தியமாகக் கிடையாது!

தாய்மையைச் சிறப்பிக்கும் அருமையான பகிர்வு!

வெங்கட் நாகராஜ் said...

தாய்மை..... வார்த்தையே எவ்வளவு மென்மையாய்.....

சிறப்பான கவிதை.

த.ம. +1

Post a Comment