Wednesday, December 3, 2014

மீண்டும் ஜென் சித்தப்பு

"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

///உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்///
அற்புதம் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அறிவுரை! நன்றி!

ஸ்ரீராம். said...

பிரச்னை புரிகிறது. தீர்வு புரியவில்லை!

:)))))

Unknown said...

இது என் தியரி ,ஜென் தியரி அல்ல என்று சொல்லவுமா முடியலே ? அவருக்கு பேய் பசியா இருக்கும் போலிருக்கே:) சவ நிலையை அவரே தொடலையோ ?
த ம 3

அருணா செல்வம் said...

அறிவுரைகள் அடுத்தவர்களுக்குத் தான் என்பதை உணர்த்தினார் சித்தப்பு.

உங்களின் தத்துவ கவிதை அருமை. முடிவு தான் நிறைய கற்பிக்கிறது இரமணி ஐயா.

Yaathoramani.blogspot.com said...



Bagawanjee KA said...
இது என் தியரி ,ஜென் தியரி அல்ல என்று சொல்லவுமா முடியலே ? அவருக்கு பேய் பசியா இருக்கும் போலிருக்கே:) சவ நிலையை அவரே தொடலையோ ?

இறுதி வரியில் தானே
தியரி இருக்கிறது
அழுத்தம் கொடுக்காமல் அவரும் நானும்
சொன்னதால் அர்த்தமற்றுப் போய்விட்டது
என நினைக்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சில அடிகளைப் படித்தபோது திருமூலரின் திருமந்திரம் நினைவிற்கு வந்தது. படித்து முடித்துவிட்டோம். பசிக்குது என்று கூறமாட்டோம். ஏனென்றால் பதிவு மனதிற்கு நிறைவைத் தந்தது.

KILLERGEE Devakottai said...

வினோதமான அறிவுரை அருமை ஐயா.

ananthako said...

மனம் உடல் ---காயம் பொய்.மனம் அலை
இதை ஒரு நிலைப்படுத்தினால் அமைதி.மனம் உடலைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கிய உடல் மனதை.
ஜென் சித்தப்பாவுக்கு ஜே.

சீராளன்.வீ said...

எட்டுவேணாம் இருபதே போதும் ஆமா ...பத்துப் பாத்தா பிரித்தாலும் நல்லா இருக்குமே !

இருபது என்றால் நாலு இருபது ரொம்ப தூரமா இருக்கே !

நல்ல அனுபவம் அறிவுரை வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சித்தப்பா ஜென் தான்...!

காரஞ்சன் சிந்தனைகள் said...

//"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "// யோசிக்க வைத்த வரிகள்! நன்றி!

Unknown said...

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

தத் துவம் தனித்துவம் மிக்கது!




UmayalGayathri said...

நல்ல கருத்து ஐயா..

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி//


உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்//

அவர் உடலையும் மனதையும் ஒரே இடத்தில் இருத்தியதால் உடலுக்கு ஆகாரம் இட அவ்வாறு அழைத்தாரோ...என நினைக்கிறேன். சரியா ஐயா

தம +1

V. Chandra, B.COM,MBA., said...

//உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்// நல்ல கருத்து

G.M Balasubramaniam said...

மனமே உடலாய்.. உடலே மனமாய்.... ?

கே. பி. ஜனா... said...

இருபது இருபதாக வளர்ச்சி... நல்லாவே இருக்கு..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

\\உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையும்
வைக்கப பழகினால் போதும்.//

சிறப்பான வரிகள்.

நல்லதோர் பயிற்சிக்கான உபாயங்களுடன், சிறந்த கருத்து மிக்கப் பதிவு. பகிர்வுக்கு நன்றி!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

இருபது இருபதாய்..... நல்ல அறிவுரை.

த.ம. 7

நிலாமகள் said...

சாமான்யர்களுக்கு ஜென் தத்துவம் புரியாது என்ற தத்துவத்தை உடைக்கிறது தங்கள் கவிதை. சிறு பிள்ளையும் உங்க ஜென் கடலில் கால் நனைக்கலாம்!

//"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி//

'Zen' till man சித்தப்பு.

Post a Comment