Tuesday, September 1, 2015

உபதேசம்

அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்

9 comments:

தனிமரம் said...

சில நேரத்தில். கோபம் எல்லைமீறுகின்றது எனக்கும். அருமையான கவிதை ஐயா.

ப.கந்தசாமி said...

ஒரே வழி. சாப்பாட்டில் உப்பு, காரம், புளி இந்த மூன்றையும் விலக்கினால் போதும்.

இராஜராஜேஸ்வரி said...

தீயைத்தீயால் கட்டுப்படுத்த முடியுமா?

balaamagi said...

அடிக்க முடியாதவர்கள்,,,,,
தங்கள் கவி அருமை,

Anonymous said...

மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது //
ஏன்???????? முதலில்
தங்கள் கோபம் அடங்கட்டுமே

”தளிர் சுரேஷ்” said...

கோபம் தான் நமது முதல் எதிரியாகி விடுகிறது! அருமை!

Thulasidharan V Thillaiakathu said...

கோபம் என்பது பின் விளைவுகளுக்குப் பின் நம்மைக் குற்ற உணர்விற்குத் தள்ளும் ஒன்று. அதை அடக்கிவிட்டால் நாம் இந்த உலகை வென்றவர் ஆகிடுவோம்...நமது பெர்சனாலிட்டி வளர்வதற்கு எதிரி...

Yaathoramani.blogspot.com said...

Ithu upathesam kuriththa kavithai-kopam kuriththalla enach sollavum vendumo?

Yaathoramani.blogspot.com said...

இது ஊருக்கு உபதேசம் குறித்த கவிதை
கோபம் குறித்தல்ல என்பதைச்
சொல்லவும் வேண்டுமோ ?

Post a Comment