Monday, September 28, 2015

மண் சட்டியில் ஃப்ளுடா

" குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
உன் படைப்புகளில் ஏதும் இல்லை

ஆனாலும் ஏதோ இருப்பது போல
பாவனை காட்டி மயக்குகிறது

அது எப்படி ?  "என்றேன்
எனைக் கவர்ந்த கவிஞனிடம்

"அது பெரிய விஷயமே இல்லை
யாரிடமும் சொல்லாவிட்டால்
உனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்"என்றான்
சத்தியம் வாங்காத குறையாய்

எதற்கும் ஆகட்டும் என
தலையாட்டி வைக்க அவனே தொடர்ந்தான்

"எதனை எழுதத் துவங்கும் முன்பும்
அறிஞர் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
கரு தேடி மெனக் கெடுகிறேன்

கரு கிடைத்ததும்
பாமரன் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
எளிய சொற்களால் பகிர்கிறேன்
அவ்வளவே" என்றான்

நான் குழம்பி நின்றேன்
அவனே தொடர்ந்தான்

"சில சமயம்
எதை எழுதத் துவங்கும் முன்பும்
பாமரர் முன் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கரு தேடி மெனக்கெடுகிறேன்

அது கிடைத்ததும்
அறிஞர் சபையில் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி
படைப்பாக்கிக் கொடுக்கிறேன்

மொத்தத்தில்
மண் சட்டியில் ஃபளூடாவையும்
வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்.."
எனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்

கண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை
குழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது

அவன் படைப்புகளை மீண்டும் படித்துத்தான்
தெளிவு கொள்ள வேண்டும்

7 comments:

Nagendra Bharathi said...

அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

மண் சட்டியில் ஃபளூடாவையும்
வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்.."

அருமை
அருமை ஐயா
தம +1

மணவை said...

அன்புள்ள அய்யா,

‘அவன் படைப்புகளை மீண்டும் படித்துத்தான்
தெளிவு கொள்ள வேண்டும்’

அருமை...!
த.ம. 3.

G.M Balasubramaniam said...

படைப்பின் சூட்சுமம் தெரிகிறது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை .உங்கள் உதாரணங்களை எல்லாம் எடுத்து தனி நூலாகவே போடலாம். இந்த உவமை எம்.எஸ். வி. இளையராஜா ,ரகுமான் போன்றவர்களுக்கு மிகவும் பொருந்தும். எளிமையான சங்கீதத்தை வித்வான்களுக்கும், வித்வான்களின் கடினமானதை எளிதாக்கி மாற்றவர்க்கும் அறிமுகப் படுத்துகிறார்கள்

வெங்கட் நாகராஜ் said...

மண் சட்டியில் ஃபலூடா! ஆஹா... இங்கே ஒரு சில கடைகளில் கிடைக்கிறது ரமணி ஜி!

நல்ல கவிதை. பாராட்டுகள்.

விச்சு said...

வெளிக்கிண்ணத்தில் கூழ்.. பாமரருக்கும் புரியும்படியான கவிதை எழுதுவது. நன்று.

Post a Comment