Tuesday, September 8, 2015

மத்யமர்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிப் போக
நாடும் காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டாலும் கூட
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை
ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்
மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது

ஆனாலும் இன்றைய
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

11 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான வரிகள்! அருமை!

Nagendra Bharathi said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

Iniya said...

வார்த்தை ஜாலங்கள் நேர்த்தியாக வந்து விழுகின்றன அருமை அருமை நன்றி !வாழ்த்துக்கள்....!

சென்னை பித்தன் said...

போடணும்னா போட வேண்டியதுதான்!
அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிப் போக
நாடும் காடாகிப் போனதால்

உண்மை உண்மை ஐயா
நன்றி
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புலிவேசமே பொருத்தம். நன்று.

S.Venkatachalapathy said...

ஒரு நாள் மனம் புலி வேஷத்தை ஏற்றுக் கொள்ளும்
அப்பொழுதே ஒப்பனை வேதனை தராது.
மனித மனப் புதர்கள் இன்னும் அடர்த்திதான் ஆகும்,
நாடும் ஏன் வீடும் கூட காடாகித்தான் போகும். காலப் போக்கில் வேஷமே நிஜமாகியும் போகும். ...

இப்படி அடுத்த பத்தி தொடரலாமோ

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! அருமை அருமை நண்பரே! போடத்தான் வேண்டியுள்ளது...நிரந்தரமாகாமல் இருந்தால் நல்லது...

Thulasidharan V Thillaiakathu said...

வெங்கட் எஸ் அவர்களின் வரிகள் கூட அருமையாக...இனி நிகழ்ந்து விடுமோ என்ற ஒரு அச்சத்தையும் தரும் யதார்த்த வரிகளாக இருக்கின்றது...யதார்த்தம் என்றுமே சுடும் தானே..

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் இந்தப் புலி வேஷம் கூட இப்போது அரிதாகிக் கொண்டு வருகிறது. நான் சொல்வது கவிதையில் வரும் புலி வேஷம் இல்லை. நிஜமான புலிவேஷக்காரர்கள்! :) புலி வேஷம் குறித்துப் படிக்கும்போதெல்லாம் "அசோகமித்திரன்" எழுதிய புலிவேஷக்காரரின் கதை நினைவுக்கு வருகிறது.

Post a Comment