Sunday, February 19, 2012

முடிவு தெரியாக் கதைகள்

எல்லோருமே கால்கேட்டிலும் குலோஸ்-அப்பிலும்
முதலில் துவங்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் இல்லை
என்னைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய
பெரும்பாலோர் அனேகமாக கோபால் பல்பொடியில்
துவங்கியவர்களாகத் தான் இருப்பார்கள்

அது போல இலக்கிய பரிச்சியம் கூட எடுத்தவுடன்
கணையாழியிலோ கசட தபறவிலோ
இருக்க சந்தர்ப்பமில்லை.எல்லோரும் அம்புலி மாமா
கண்ணன் கல்கண்டு குமுதம் ஆனந்தவிகடன்
எனத் தான்துவங்கி இருக்க அதிக வாய்ப்புண்டு
என்னைப் போலவே

அம்புலிமாமா வந்தவுடன் முதலில் நூலகத்தில்
அதைப் படிக்கவேண்டும் என்பதற்காக நான்
ஒரு வாரத்திற்கு முன்பே கொள்ளும் பரிதவிப்பும்
முயற்சியும் இப்போது நினைத்தாலும்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

நூலகத்தில் நூலகரின் பழக்கம் வேண்டும் என்பதற்காக
அதிகாலை எட்டு மணிக்கே நூலகம் சென்று
அந்த வருவோர் பட்டியல் பதிவேட்டுக்கு
கோடு போட்டு வைப்பது,பென்சிலை சீவிவைப்பது
கலைந்து கிடைக்கும் மாத வார இதழ்களை
சரியாக அடுக்கிவைப்பது ,அவர் எத்தனை முறை
சொன்னாலும் பியூன் சும்மா உட்கார்ந்திருக்க
பத்து தடவைக்கு மேல்  கடைக்குப்
போய் டீ வாங்கி வரச்சொன்னாலும்
வாங்கி வருவது ஆகிய எல்லாம்
மிகச் சரியாகச் செய்வேன்
அதையெல்லாம்இப்போதுநினைத்துப் பார்த்தாலும்
சிரிப்புத்தான் வருகிறது
.
இத்தனையும் செய்து முடித்தாலும்
நூலகர்  தபாலில் வந்தவுடன் அந்த தபாலைப்
பிரிக்க மாட்டார்.ஒரு நாள் இரண்டு நாள்
அதுஅவர் டேபிளிலேயே அப்படியே கிடக்கும்
நான் கேட்டாலும் " கொஞ்சம் பொறு என்ட்ரி
போடாவிட்டால் விட்டுப் போகும்  " என
வெறுப்பேற்றுவார்.இத்தனை இடர்கள் இருந்தாலும்
அந்தப் புதுப் புத்தக வாசனையோடு முதலில்
படிப்பதுவும்  அடுத்தவர்கள்  படிக்கும் முன்பாக
படித்த கௌரவத்தில் என்னொத்தவர்களிடம்
கதை சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுவும்
இப்போது  நினைத்துப் பார்த்தாலும் ,
அது ஒரு  இனி பெறவே முடியாத
அரிய சுகமாகத்தான் படுகிறது

இந்தச் சுழலில் ஒரு மாத அம்புலிமாமாவை
இப்படி புதுவாசனைச் சுகத்தோடு படித்துக்
படித்துக் கொண்டிருந்தேன்.கதை இப்படிப் போனது

ஒரு கிராமத்தில் விவசாய வேலை செய்யும்
தன் கணவனுக்கு அவள் மனைவி தினமும்
மதிய சாப்பாட்டிற்கு பழைய சோறு கொண்டு போவாள்
அவர்கள் வயல் சுடுகாட்டை ஒட்டி இருந்ததால்
பேய் பிசாசு அதிகம் என்பதால் அவைகள்
சாப்பாட்டை  மட்டும் தனியாக வைத்துக்
கொண்டு போனால் எடுத்துச் சாப்பிட்டுவிடும்
என்பதால் தினமும் சாப்பாட்டுத் தூக்கில்
சாப்பாட்டின் மேல் அடுப்புக்கரியோ அல்லது
தேய்ந்த லாடமோ அல்லது இரும்பு ஆணியோ
வைத்துக் கொண்டு போவாள்
அப்படிக் கொண்டு போனால் பேய் சாப்பாட்டைத்
தொடாது என அவள் மாமியார்  அவளுக்கு
சொல்லிக் கொடுத்திருந்தாள்
இவளும் தவறாது  அப்படியே செய்து வந்தாள்

ஒரு நாள் ஏதோ அவசரத்தில்  எல்லாம் சரியாக
வைத்திருக்கிறோம் என நினைத்து பழைய சோற்றை
மட்டும் தூக்குப் போணியில் வைத்துவிட்டு
ஆணியோ கரியோ தேய்ந்த லாடமோ
வைக்காமல்  வந்து வயலில் பக்கம் உள்ள
மரத்தடியில்  வைத்துவிட்டு அவளும்
 வயலில் இறங்கி வேலைபார்க்கத்
துவங்கிவிடுகிறாள்.

இதுவிஷயம் தெரிய வர ஒரு சுதாரிப்பான  பேய்
தூக்கைத் திறந்து பழைய சோற்றை
முழுவதுமாக தின்று விடுகிறதுஅந்தக்
கருவாட்டுத் துண்டுக்கும் பழைய சோற்றுக்கும்
இருக்கிற ருசியை சப்புக்கொட்டிசாப்பிட்டுவிட்டு
அப்படியே மதி மயங்கிப் போகிறது.இந்தப் பழைய
சோற்றுக்காகவாவது இவர்கள் வீட்டில்
வேலைக்காரியாகக்  கூட  சேர்ந்து விடலாம்
என்கிற முடிவுக்கு அந்தப் பேய் வந்து விடுகிறது

பாவம்.இதுவிவரம் எதுவும் இந்த இரண்டு பேருக்கும்
சுத்தமாகத் தெரியாது.அவர்கள் வேலை முடித்து
கைகால் கழுவிக் கொண்டு தூக்கைத் திறந்தால்
தூக்கில் ஏதும் இல்லை.மூடி திறந்து கிடக்க
சுற்றி பருக்கைகள் சிதறி இருக்க  "ஏதோ நாய்தான்
தின்றிருக்கும் ,இனிமேல் கீழே சாப்பாட்டை
வைக்காதே மரத்தில் கட்டித் தொங்கவிடு  " என
கணவன் சொல்ல  மனைவியும் " சரி தப்புத்தான்
இனிமேல் மரத்திலேயே  கட்டிவைத்துவிடுகிறேன் "
என மன்னிப்புக் கேட்டுக் கொள்ள இருவரும்
வீட்டுக்குப் புறப்படுகிறார்கள்.
பழைய சோற்று ருசியில்சொக்கிப் போன பேயும்
ஒரு வேலைக்காரி மாதிரிதெரியும் படியாக
ஒரு உருவம் எடுத்துக் கொண்டு அவர்கள்
பின்னாலேயே சென்று வீட்டைத்தெரிந்து கொள்கிறது

பின் சிறிது நேரம் கழித்து அவர்கள் சாப்பிட்டு
முடித்து சற்று ஓய்வாக இருக்கும் நேரத்தில்
வாசலில் இருந்து வேலைக்காரி
உருவில் இருக்கும் பேய் "அம்மா "
என குரல் கொடுக்கிறது

அவர்கள் வெளியே வந்து  யார் என்ன வேணும்
எந்த ஊர் எனக் கேட்க   "தான் அசலூர் எனவும்
பஞ்சம் பிழைக்க வந்திருக்கிறேன் எனவும்
என்னவேலை சொன்னாலும் செய்வேன்
சம்பளம் கூட வேணாம் வயிறார
பழைய சோறு மட்டும் கொடுத்தால் போதும் "
என்கிறது

இவர்களுக்கு இந்த டீல் ரொம்பப் பிடித்துப் போகிறது
அவர்களும் பாவம் பேய் எனத் தெரியாது
வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்
எவ்வளவு வேலைக் கொடுத்தாலும் கொஞ்சமும்
முகம் கோணாது  தீயாக வேலையைச் செய்து முடிக்கிறது
வம்பு தும்பு இல்லை. பழையசோறு மட்டும்
கொஞ்சம் அதிகமாகத் தின்கிறது என்பதைத் தவிர
வேறு குறை இல்லை.எல்லாம் சந்தோஷமாகவே
போகிறது

ஒரு நாள்அந்த கிராமத்தான் மட்டும்  ஒரு
உறவினர்  வீட்டு விஷேசத்திற்காக வெளியூர்
போகவேண்டி வந்தது.இரவு லேட்டாகத்தான்
வருவேன்எனச் சொல்லிப் போனதால்
முன் பத்தியில் கிராமத்தான் மனைவியும்
உள்ளே தூரே  பின்பத்தியில் பேய் வேலைக்காரியும்
படுத்துத்தூங்கிப் போனார்கள்

நடு ராத்திரியில் கிராமத்தான்
வந்து கதவைத் தட்ட,அவர் மனைவிக்கு
கொஞ்சம் வேலை அசதி. என்வே எழுந்திரிக்கச்
சஙகடப்பட்டு விழித்த படியே படுத்தபடி
 வேலைக்காரப் பேயை கதவைத்திறக்கச் சொல்கிறாள்
,வேலைக்காரப் பேய்க்கும்
அன்று கொஞ்சம் தீனீ ஜாஸ்தி.அதற்கும்
எழுந்து போய்கதவைத் திறக்க
சோம்பேறித்தனமாக இருக்கிறது
வீட்டுக்கார அம்மாள்தான் நன்றாகத் தூங்குகிறாளே
தெரியவாபோகிறது என நினைத்து
 அது  படுத்த இடத்தில் இருந்தே கையை நீட்ட
கை கிராமத்தான் மனைவியின்  தலையைத்
தாண்டி போய் கதவைத் திறந்து விட்டு மீண்டும்
வேலக்காரப் பேய் உடலிலேயே 
சாதாரண கைப் போல் சேர்ந்து கொள்கிறது

கை இருபது அடி நீண்டதையும் திரும்பவும் போய்
சாதாரண கை போல் ஒட்டிக்கொண்டதையும்
நேரடியாகப் பார்த்த கிராமத்தான் மனைவிக்கு
அடிவயிறு கலக்குகிறது,ஆஹா நம் வீட்டிற்குள்
பேய் அல்லவா வேலைக்காரி போல் இருக்கிறது
மோசம் போனேமா என்ன செய்வது எனத்
தெரியவில்லையே என அரண்டுபோய்
மறு நாள் தன் கணவனை த்னியாக அழைத்து
நடந்த விவரத்தைச் சொல்ல
இருவருமே என்ன செய்வதேன்று
தெரியாது முழித்துக் கொண்டிருக்கிறார்கள் .....

இதுவரை படித்துக் கொண்டிருந்தபோது
நூலகர் என்னை அழைத்து கடை வரை
போய் வரச் சொன்னார்.தட்ட முடியவில்லை
நான் படித்த அம்புலிமாம புத்தகத்தை
கூட்டுறவு மஞ்சரி கொல்லிப் பாவை முதலான
யாருமே எடுக்காத புத்தகங்க்களுக்கு அடியில்
ஒழித்துவைத்துவிட்டு கடைக்குப் போய்விட்டேன்
நான கடையில் இருந்துவர மணியும் பதினொன்று
ஆகிவிட நூலகத்தை மூடத் துவங்கிவிட்டார்கள்
அதனாலென்ன மாலையிலே நான்கு மணிக்கு
முதல் ஆளாக வந்து எடுத்துக் கொள்வோம் என
நானும்போய்விட்டேன்

வீட்டுக்குப் போனால் ஒரே அமளி துமளி
என் ஒன்றுவிட்ட்ட பாட்டி ஊரில் இற்ந்துபோய்
விட்டதாகவும் எல்லோரும் இரண்டு மணி டிரெயினுக்கு
கிளம்ப வேண்டும் எனவும் பேரன் என்கிற முறையில்
நானும் தீப்பந்தம் பிடிக்க நானும் வரவேண்டும் எனவும்
என்னையும் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்
எனக்கு பேயை எப்படி விரட்டினார்கள் எனப்து
தெரியாமல் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது
சரி  நான்கு நாள் தானே வந்து பார்த்துக் கொள்வோம்
அம்புலிமாமா  நூலகத்தில் தானே இருக்கும்
என சமாதான செய்து கொண்டு வேண்டா வெறுப்பாக
 அவர்களுடன் கிளம்பிவிட்டேன்

நான்கு நாள் முடிந்து ஊருக்கு  வந்த்தும் வராததுமாக
மாலையில் நூலகத்திற்குத்தான் ஓடினேன் .
அங்கு போய் நான் வைத்த இடம் n
வேறு எங்கெல்லாம் இருக்கச் சாத்தியமோ
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன்.
எங்கும் இல்லைநூலகரிடமும்கேட்டுப் பார்த்தேன்.
அவர் " நீ தானேகடைசியில் எடுத்துப் படித்திருக்கிறாய்
அதற்குப் பின் தான் அதைக் காணோம்
நீ எடுத்துப் போகவில்லையே " என  என்னையே
கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்
பழி போடுவது கூட போய்த்தொலையட்டும்
அந்தப் பேயை எப்படி விரட்டினார்கள் எனத்
தெரிந்து கொள்வதுதான் என முக்கியமாகப் பட்டது
என் வயதுடைய அம்புலிமமா படிக்கும் எல்லோரையும்
கேட்டுப் பார்த்துவிட்டேன்.யாரும் படிக்கவில்லை எனச்
சொல்லிவிட்டார்கள்.
எங்கள் ஊர்  மதுரையை ஒட்டியகிராமம்
அங்கு பேப்பரே அப்போது கடைக்கு வராது
வீட்டில் போடுவதோடு சரி.எங்கள் தாத்தாவிடம்
மதுரைக்குப் போனால் வாங்கிவரச் சொல்ல
"என்ன தைரியம் இருந்தால் பாடப் புத்தகம்
 படிப்பதைவிட்டுஎன்னையே கதை புத்தகம்
வாங்கி வரச் சொல்கிறாய் "
 எனச் சொல்லி முதுகில் நான்கு போடு போட்டார்

அப்புறம் வளர்ந்த பின்பு கூட எனக்கு எப்படி
அதை விரட்டி இருப்பார்கள் என யூகித்துச் சொல்லும்படி
எனது எழுத்தாள நண்பர்களையெல்லாம் கூடகேட்டு
தொந்தரவு செய்து இருக்கிறேன்

சிலர் என்னை ஒரு முட்டாளைப் பார்ப்பது போல
பார்த்துச் சிரித்திருக்கிறார்கள். பலர் சொன்ன கதை
எனக்கு ஏனோ ஒப்புக் கொள்ளும்படியாக இல்லை

முடிவு தெரியாத நான் முடிவு  தேடித் திரிகிற
 கதைகள் இப்படி இரண்டு மூன்று
என்னிடம் இருக்கத்தான் இருக்கிறது

முடிவு தெரியாமல்  இருக்கிற
வாழ்வின் போக்கைப் போலவே
 இப்படி முடிவு தெரியாது போய்விடுகிற
கதைகள் கூட  உண்மையில்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது


73 comments:

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமாக படித்துக்கொண்டிருந்தேன் சார்.இப்படி முடிவு தெரியாமல் ஆகிவிட்டதே.எனக்கே அம்புலிமாமா கதைகள் ரொம்ப பிடிக்கும்.இப்ப என்ன செய்வது??எப்படி தொடர்ந்து முடிவை தெரிந்து கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Sir,
இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
நானும் உங்களைப்போலவே தான்.
சிறுவயதில் அம்புலிமாமா போன்ற புத்தகங்கள் படிக்கப் பேயாக அலைவேன்.
ஆனால் அது கிடைக்காமல் படாத பாடு படுத்தும். நிலக்கடலை சுற்றித்தரும் பேப்பரில் ஏதாவது சுவாரஸ்யமானத் தகவல் இருக்கும்.
அது பாதியில் நின்று விடும்.
முடிவு தெரியாமல் மிகவும் வருத்தமாக இருக்கும். சமயத்தில் அழுகையே வந்து விடும்.

பகிர்வுக்கு நன்றி, சார். vgk

தமிழ் உதயம் said...

அருமை சார்.

உங்களை போலவே நானும் நூலகரை தொந்தரவு செய்து இருக்கிறேன். நூலகத்தில் படிக்கிற புத்தகங்களில் - பெரும்பாலும் தொடர்கதைகளை வாசிக்க மாட்டேன். சில நேரங்களில் தொடர்ச்சியாக நூலகங்களுக்கு செல்ல இயலாமற் போய் - நூலகரிடம் பழைய புத்தகங்களை கேட்டால் எரிந்து விழுவார். இதற்காகவே எங்கள் பகுதியில் இருந்த, இருக்கிற நான்கு நூலகங்களுக்குமே போவேன்.

துரைடேனியல் said...

Sema Suvaasyam Sir. Naanum ungalai polave oru puththaga pulu than. Enneramum Library il than kidappen. m...m...athu oru kaalam. Arumaiyana pathivu.

துரைடேனியல் said...

Tha ma 3.

Admin said...

வாசிக்க சுவையாக இருந்தது.

முடிவு தெரியாமல் இருக்கிற
வாழ்வின் போக்கைப் போலவே
இப்படி முடிவு தெரியாது போய்விடுகிற
கதைகள் கூட உண்மையில்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..

உண்மைதான் சரியாகச்சொன்னீர்கள்..வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

இப்ப என்ன செய்வது??எப்படி தொடர்ந்து முடிவை தெரிந்து கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

Sema Suvaasyam Sir.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

வாசிக்க சுவையாக இருந்தது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

பால கணேஷ் said...

ஹய்யோ... எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டே. பழைய சிரஞ்சீவியின் மர்மநாவல் ஒன்று (எங்கப்பா வாங்கியது) வீட்டில் எங்கோ கிடந்தது கிடைத்ததை எடுத்துப் படிக்கப் போக, அதன் முடிவுப் பக்கம் மட்டும் இல்லாமல், இதை முதலிலேயே பார்த்திருந்தால் படித்திருக்க மாட்டோமே என நொந்து போனேன் நான். நீங்கள் முடித்திருந்த கடைசிப் பாரா முத்தாய்ப்பு வெகு அருமை. ரசித்து, வாக்கிட்டேன். ந்னறி!

Seeni said...

அய்யா ரமணி அவர்களே!

முடிவு இப்படி இருக்கலாம்-
மனைவியோட வாழ்வதை விட-
பேயோட வாழலாம்-என
கிராமத்தான் போயிருக்கலாம்!

பேய ஓட்ட நினைத்தவள்-
புருஷன் ஓடியதுக்கு -
கவலையில் சீரியல் பார்ப்பாள்!

சுவராசியமான விஷயம்!

Avargal Unmaigal said...

//முடிவு தெரியாமல் இருக்கிற
வாழ்வின் போக்கைப் போலவே//

மிக அருமையான வரிகள்.

எங்களையும் இப்போது உங்களைப் போல முடிவை தேட வைத்து விட்டீர்களே. நிறைய பதிவாளார்கள் பைத்தியம் போல அலைந்தால் நீங்கள் தான் அதற்கு பொறுப்பு


நேரமின்மையால் விரிவாக பின்னுட்டம் இட முடியவில்லை. நாளை வருகிறேன்

Anonymous said...

இது ' விக்ரமாதித்தனும் வேதாளமும் '
தொடரில் வரும் கதை என்றால்
விடை சொல்லி ஆகணுமே .... இல்லை என்றால் .....
என்ன , மறு நாள் தூக்கில் பழைய சோருக்குப் பதில் சிறிது
மண்ணை நிரப்பி வயலில் வேலை செய்யும் கிராமத்தானுக்குத்
தந்து விடச் சொல்லி வழி 'அனுப்பி' வைக்க வேண்டியது தான்........
கிராமத்தான் அன்று வயலுக்கு செல்லாமல் .....
ஏதோ ஒரு முடிவு எனக்குத் தெரியாவிட்டால்......
உங்களை மாதிரி நானும் பேயாக அலையணுமே சார் ....ஹஹா..
சார் , மிச்சம் உள்ள அந்த முடிவில்லா கதைகளை
தங்கள் கற்பனா சக்தியால் முடித்து வைத்துப் பின்
வெளியிடவும் தயவு செய்து...
கதைப்பதிவு மீண்டும் ஓர் அம்புலிமாமாவைப்
படித்து போல் இருந்தது.

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

நீங்கள் முடித்திருந்த கடைசிப் பாரா முத்தாய்ப்பு வெகு அருமை. ரசித்து, வாக்கிட்டேன். ந்னறி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

உங்கள் இரண்டு முடிவுகளும்
ஒரு வகையில் இன்றைய சூழலுக்கு சரியாகத்தான் உள்ளது
அன்றைய சூழலுக்கு.. ?

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

//முடிவு தெரியாமல் இருக்கிற
வாழ்வின் போக்கைப் போலவே//

மிக அருமையான வரிகள். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

சார் , மிச்சம் உள்ள அந்த முடிவில்லா கதைகளை
தங்கள் கற்பனா சக்தியால் முடித்து வைத்துப் பின்
வெளியிடவும் //

கதைப்பதிவு மீண்டும் ஓர் அம்புலிமாமாவைப்
படித்து போல் இருந்தது. //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

மகேந்திரன் said...

இப்படி முடிவில்லாக் கதைகள் ஏராளம் ..
நம் வாழ்க்கையைப் போலத்தான்..
எங்கே எதிலே தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்.....

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..
ராணி காமிக்ஸ், அம்புலிமாமா..
விஜயபாரதம்..ராமகிருஷ்ண விஜயம். ..
சிறுவர்மலர்..
இப்படிப் பட்ட புத்தகங்கள் தான் முதலில் ஈர்த்தன..

Unknown said...

எனக்குத் தெரிந்த எளிய தீர்வு- அந்த தம்பதியினர் வெளியூர் சென்று குடியேறிவிடுவதுதான்!

இன்றைய இலக்கியவாதிகளுக்கு கிராம நூலகங்களே ஆசானாக விளங்கியது தெள்ளத்தெளிவு!

சுதா SJ said...

ரமணி சார்.... ஒரு வரி கூட விடாமல் அவ்ளோ ஆர்வமாக ரசித்து படித்தேன்... இந்த பதிவு எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு.....
உங்கள் பாரத்தை எங்கள் மேலும் சுமத்தி விட்டீர்களே.... எனக்கு அந்த கதையின் முடிவு தெரியாமல் தலையே வெடித்துவிடும் போல் இருக்கு :(

இப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கும் நிறைய உண்டு :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//Ramani said...
வை.கோபாலகிருஷ்ணன் //

அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

சிறுகதை மன்னரால் பாராட்டப் பட்டதை
மிகப் பெரிய விருதாக அங்கீகாரமாக எண்ணி
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
இதற்கு முன்னைய உறவுகள் குறித்த
தங்கள் கருத்தை அதிகம் எதிர்பார்த்தேன்//

அன்புள்ள ஐயா,

“உறவுகள்” என்ற தங்களின் பதிவு இப்போது சற்றுமுன் படித்து பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.
தகவலுக்கு நன்றி. vgk

மனோ சாமிநாதன் said...

உண்மையில் சுவாரஸ்யமான கதை தான்!

எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. கடைசி பக்கம் கிழிந்திருப்பது தெரியாமலேயே வாங்கி விட்டு, படித்து முடிக்கும்போது தான் அதை பார்க்க நேரிட்டு தவித்திருக்கிறேன்.

எழுதி விட்டீர்கள் அல்லவா, அந்தக் கதையின் முடிவை யாராவது சொன்னாலும் சொல்லுவார்கள்!

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.திரு அட்சயாஅவர்களால் எனக்கு அளிக்கப்பட்டversatile blogger award ஐ தங்களுக்கு அளிப்பதி பெருமகிழ்ச்சி அடைகிறேன்,தாங்களும் இன்னும் 5 நபர்களுக்கு பகிரவும்.நன்றி வணக்கம்.

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

இப்படி முடிவில்லாக் கதைகள் ஏராளம் ..
நம் வாழ்க்கையைப் போலத்தான்..
எங்கே எதிலே தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்.....//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த ந்ன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

எனக்குத் தெரிந்த எளிய தீர்வு- அந்த தம்பதியினர் வெளியூர் சென்று குடியேறிவிடுவதுதான்!

நீங்கள் சொல்வதும் சரிதான்
ஆனால் அது பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்
கதைக்கு நல்ல முடிவாகுமா ?

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன் //

உங்கள் பாரத்தை எங்கள் மேலும் சுமத்தி விட்டீர்களே.... எனக்கு அந்த கதையின் முடிவு தெரியாமல் தலையே வெடித்துவிடும் போல் இருக்கு :(

இப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கும் நிறைய உண்டு :)
தங்கள் எழுத்தின் ரசிகன் நான
நீங்கள் ஏற்றிவைத்த அந்த காதல் பாரம்
இன்னமும் எங்களுள் பாரமாகவே உள்ளது
உங்களால் பாராட்டப் படுவதை பெருமையாகக் கொள்கிறேன்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

உண்மையில் சுவாரஸ்யமான கதை தான்!

எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. கடைசி பக்கம் கிழிந்திருப்பது தெரியாமலேயே வாங்கி விட்டு, படித்து முடிக்கும்போது தான் அதை பார்க்க நேரிட்டு தவித்திருக்கிறேன்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

வணக்கம் ரமணி சார்.திரு அட்சயாஅவர்களால் எனக்கு அளிக்கப்பட்டversatile blogger award ஐ தங்களுக்கு அளிப்பதி பெருமகிழ்ச்சி அடைகிறேன் //,

யதார்த்தமான விஷயங்களை மனித நேயத்தோடு
கூடிய பார்வையில் வித்தியாசமான ரசிக்கத் தக்க
பதிவாகத் தரும் தங்கள் உள்ளத்தை நானும் கூட
கவர்ந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது
மிக்க மகிழ்ச்சி.எனக்கு இந்த விருது ஏற்கென்வே
வழங்கப்பட்டுள்ளது என்பதை பணிவுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்
தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டம் கண்டு அகம் குளிர்ந்தேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!. வேதாளம் சொன்ன 23 கதைகளுக்கு விடை கூறிய விக்கிரமாதித்தனால் 24 ஆவது கதைக்கு விடை சொல்லத் தெரியவில்லை. அது முறை தெரியாத கதை. இங்கு நீங்கள் சொன்ன கதையை நீங்களே முடித்து வையுங்கள். கொஞ்ச நாட்களாகவே உங்கள் எழுத்துக்களில் “அமானுஷ்யம்”. என்ன சார், என்ன ஆச்சு?

காட்டான் said...

வணக்கம் ஐயா நலமா?
அருமையான கதைக்கு முடிவை எங்களுக்கு ஏற்றால் போல விட்டு விட்டீர்களா?
வாழ்க்கையில் முடிவு தெரிந்தால் பயனில்லை கதையிலுமா,?

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

கதையை நீங்களே முடித்து வையுங்கள். கொஞ்ச நாட்களாகவே உங்கள் எழுத்துக்களில் “அமானுஷ்யம்”. என்ன சார், என்ன ஆச்சு? //

இந்தப் பதிவின் நோக்கம்
முடிவு தெரியாத கதைகள் குறித்ததே
அது அம்புலிமாமா கதை என்பதால்
அமானுஷ்யக் கதை போலத் தோன்றுகிறது
என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

நிலாமகள் said...

ப‌திவின் முத‌ல் வ‌ரியிலிருந்து இறுதி வ‌ரை வாசிப்ப‌வ‌ர்க்குள்ளும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ப‌திவிற‌க்கி விட்டீர்க‌ள்!

கீதமஞ்சரி said...

முடிவு தெரியாக் கதைகளுக்குள்ள சுவாரசியத்தை வாழ்க்கையுடன் முடியிட்ட விதம் அருமை ரமணி சார். முடிவு தெரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான கதைகளில் முடிவு தெரியாத கதைகள்தாமே வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துநினைவுகூறச் செய்கின்றன. வித்தியாசமானக் கோணத்தில் சொல்லப்பட்ட வாழ்வியல் சிந்தனை சிந்திக்கவைக்கிறது. பாராட்டுகள் சார்.

ஸாதிகா said...

சுவாரஸ்யமான இடுகை ரமணிசார்.

கவி அழகன் said...

Iyo pavam

Marc said...

அருமைப் பதிவு வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

இப்போது நினைத்துப் பார்த்தாலும் ,
அது ஒரு இனி பெறவே முடியாத
அரிய சுகமாகத்தான் படுகிறது

சுவாரஸ்யமான வாசிப்பு அருமை....

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

இப்போது நினைத்துப் பார்த்தாலும் ,
அது ஒரு இனி பெறவே முடியாத
அரிய சுகமாகத்தான் படுகிறது//

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவி அழகன் //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

DhanaSekaran .S //

தங்கள் வரவுக்கும்
அழகானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

முடிவு தெரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான கதைகளில் முடிவு தெரியாத கதைகள்தாமே வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துநினைவுகூறச் செய்கின்றன.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டான் //

அருமையான கதைக்கு முடிவை எங்களுக்கு ஏற்றால் போல விட்டு விட்டீர்களா? //

முடிவு தெரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான கதைகளில் முடிவு தெரியாத கதைகள்தாமே வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துநினைவுகூறச் செய்கின்றன.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

நூலக நினைவுகள் அருமை. எல்லோருக்குமே இந்த அனுபவங்கள் பொது போலும். கதையை விடுங்கள். முடிவு தெரிந்திருந்தால் இதையும் பத்தோடு பதினொன்றாக அன்றே மறந்திருப்பீர்களே....! எனவே எல்லாம் நன்மைக்கே!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

விடுங்கள். முடிவு தெரிந்திருந்தால் இதையும் பத்தோடு பதினொன்றாக அன்றே மறந்திருப்பீர்களே....!
எனவே எல்லாம் நன்மைக்கே!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நூலக நினைவுகள் அருமை... நெய்வேலியில் ஒரு பெரிய நூலகம் இருக்கிறது... வீட்டிலிருந்து வெகு அருகில்... சனிக்கிழமைகளில் செல்வேன்....

அம்புலிமாமா படித்த அனுபவங்கள்.... மிக அருமையான நினைவுகள்... முடிவு தெரியாத கதை... தெரியாத போது கஷ்டம்தான்....

ராஜி said...

ஹா ஹா இத்தனை வயது வந்துமா அந்த கதையின் முடிவு தெரியலை ஐயா உங்களுக்கு. பேசாம அதை அந்த கதைக்கு பொருத்தமான முடிவை யார் சொல்றாங்கன்னு ஒரு தொடர்பதிவாக்கிவிடுங்களேன்.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

பேசாம அதை அந்த கதைக்கு பொருத்தமான முடிவை யார் சொல்றாங்கன்னு ஒரு தொடர்பதிவாக்கிவிடுங்களேன்.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

சிவரதி said...

முடிவு தெரிந்திருந்தால்
முடித்திருக்கும் அன்றே-கதை
சுவாரஸ்யமாக தொடர்வதற்க்கும்-இன்றுவரை
சுவையை தருவதும்
எங்கோ தொலைந்திருந்து
எல்லோரையும் எதி்ர்பார்க்க வைக்கும் முடிவே
எதிர்பார்ப்பு இருக்கும் வரையே
எண்ணங்களும் விரியும்

Yaathoramani.blogspot.com said...

சிவரதி //

எங்கோ தொலைந்திருந்து
எல்லோரையும் எதி்ர்பார்க்க வைக்கும் முடிவே
எதிர்பார்ப்பு இருக்கும் வரையே
எண்ணங்களும் விரியும்

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

ஹ ர ணி said...

ரமணி சார்...

உங்களின் அனுபவம் எனக்கு நிறைய பொருந்துகிறது. அம்புலிமாமா..அணில்...முத்து காமிக்ஸ்..என்றுதான் நானும் படிக்கத்தொடங்கிப் பின் படைப்பாளனாக. உங்கள் கதையை நானும் படித்திருக்கிறேன். என் நினைவு சரியாக இருந்தால் அக்கதையின் முடிவைத் தருகிறேன்..

எப்படி விரட்டுவது என்று முடிவெடுத்த கணவன் வேலைக்காரி பேய் என்பதைக் காட்டிக்கொள்ளாமல்..மறுநாள் அந்தப் பேயாக இருக்கும் வேலைக்காரியிடம் நீ ரொம்பக் கெட்டிக்காரியாக இருக்கிறாய்.. எந்த வேலையென்றாலும் இவ்வளவு விரைவாக செய்துவிடுகிறாயே..உன்னால் முடியாதவேலை உண்டா? என்று கேட்கிறான். அதற்கு அவள் என்னால் எந்த வேலையும் முடியும் என்கிறாள் . உடனே அந்த வீட்டின் பெண் கணவனுக்கு எதிரே அந்த வேலைக்காரிபேயிடம் எல்லா வேலையும் தெரியும் என்கிறோயே..எங்கே சாமர்த்தியம் இருந்தால் இந்த காலி பாட்டிலுக்குப் புகுந்து வா பார்க்கலாம் என்று சொல்ல.. தான் வேலைக்காரி என்பதை மறந்து உடனே அந்தப் பேய் அந்தப் பாட்டிலுக்குள் புகுந்துகொள்கிறது. உடனே அதன் வாயை நன்றாக அடைத்துக் கடலில் போட்டுவிட்டதாக சொல்வார்கள்.. நினைவில் வந்தது, ஆனால் இதுதான் சரியென்று தெரியவில்லை. எனினும் சற்று மாறுபட்ட சுவையான பதிவு..

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

ஆஹா நீங்களும் அந்தக் கதையைப் படித்திருக்கிறீர்களா
ரொம்ப சந்தோஷம்.நீங்கள் சொல்வது போல
கதை இருந்திருக்கலாம்.ஆனால நானாக ஒரு
முடிவு யோசித்திருந்தேன்
ஒரு நாள் வயலில் வேலைபார்க்கும் கணவனுக்கு
அதே மாதிரி தூக்குப் போணியில்
பழைய சோறு போட்டுக் கொடுத்து
கொண்டு போய் கொடுத்து வரச் சொல்கிறாள்
மறக்காமல் அதில் ஆணியை வைத்துவிடுகிறாள்
அவளால் திறந்து சாப்பிட முடியவில்லை
பசியோடு வீட்டுக்கு வருகிறாள் அதற்குள் வீட்டு வாசலில்
பேய் நுழையாமல் இருக்க என்ன செய்ய முடியுமோ
(எல்லாம் பழைய செருப்பு வேப்ப்பிலை தகடு இப்படி)
அதை செய்து வைத்துவிடுகிறாள்
சில நாட்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு
பசி அதிகம் எடுக்க அடுத்த வழிபார்த்து
பேய் போய்விடுகிறது
இப்போதெல்லாம் சாப்பாடு
கொண்டு போகும்போது மறக்காமல்
மாமியார் சொன்னபடி செய்கிறாள்
(சர்குலர் காம்போசிஷன் வேண்டுமில்லையா )
இப்படி சிறுவர் கதையில் முடிவு தெரியாத கதையில்
மட்டும் அல்ல முடிவு இருக்கிற கதை இருந்தாலும் கூட
அதை மறைத்துக் கொண்டு
நானாக ஒரு முடிவை யோசித்துப் பார்த்துவிட்டு
பின் படிப்பேன் எனக்கு அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
முடிவு எப்படி இருந்த போதும்
தங்கள் வரவுக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமாந்த நன்றி

Anonymous said...

முடிவு தெரியாது போய்விடுகிற
கதைகள் கூட உண்மையில்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..

உண்மை தான் ரமணி சார்...பல சக பயணிகள் வாழ்வு போல்...

ஹேமா said...

உங்கள் பேயை எங்களோடும் விட்டுவிட்டீர்களே.பேய் ஆவல் எனக்குள்ளும் வந்தாச்சு.கண்டிப்பா ஏதோ ஒரு பதிவில் முடிவைச் சொல்லணும் நீங்க !

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

உண்மை தான் ரமணி சார்...பல சக பயணிகள் வாழ்வு போல்...//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

உங்கள் பேயை எங்களோடும் விட்டுவிட்டீர்களே.பேய் ஆவல் எனக்குள்ளும் வந்தாச்சு.கண்டிப்பா ஏதோ ஒரு பதிவில் முடிவைச் சொல்லணும் நீங்க !

உங்கள் பதிவுக்கு முன்னாலேயே பேயை
காட்டில் விட்டுவிட்டேன் கொஞ்சம்
கவனித்துப் பாருங்கள்

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

தீபிகா(Theepika) said...

வாசிக்கத் தூண்டிச் செல்கிற எழுத்தோட்டம். இறுதியில் வாழ்க்கையோடு கோர்த்திருக்கிற உத்தி. பலரது அனுபவங்களை கிளறிவிட்டிருக்கிற கரு. எல்லாமே..பாராட்டுக்குரியவை.

G.M Balasubramaniam said...

இந்தக் காலக் குழந்தைகளுக்கு சொல்ல ஒரு கதை. முடிவை அவர்கள் சொல்லக் கேட்டால் அவர்கள் கற்பனையும் விரியும். வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

தீபிகா(Theepika) //

இறுதியில் வாழ்க்கையோடு கோர்த்திருக்கிற உத்தி. பலரது அனுபவங்களை கிளறிவிட்டிருக்கிற கரு. எல்லாமே..பாராட்டுக்குரியவை. //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

கதை முடிவை அவர்கள் சொல்லக் கேட்டால் அவர்கள் கற்பனையும் விரியும். வாழ்த்துக்கள்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

அம்புலி மாமா எனக்கும் மிகவும் பிடிக்கும். சுவாரசியமாக படித்துக் கொண்டே வந்தேன். இப்படி முடிவு தெரியாமல் போய் விட்டதே.... பேய் என்னாச்சோ தெரியலையே சார். தெரிந்தால் கண்டிப்பா சொல்லுங்க..

பொட்டலங்களில் வரும் காகிதங்களில் உள்ள பாதிக் கதைகளை படித்து விட்டு இப்படித் தான் மீதிக் கதையை யோசித்துக் கொண்டிருப்பேன்.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

நான்யூகித்த முடிவை மேலே எழுதி இருக்கிறேன்
கதையின் முடிவை ஹரணி சார் எழுதி இருக்கிறார்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

இப்போது தான் ஹரணி சாரின் பின்னூட்டமும், தங்களின் பின்னூட்டமும் படித்து தெரிந்து கொண்டேன் சார். ஹரணி சார் சொல்வது போல் பாட்டிலுக்குள் அடைத்து கடலுக்குள் எறிந்தது தான் முடிவாக இருக்கும்....

மண்டை குடைச்சல் விட்டது.....நன்றி.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

masterpiece!

விட்டதையெல்லாம் படித்து முடித்தேன்.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

masterpiece!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

வேலணை-வலசு said...

இந்தக்கதையினை நானும் படித்திருக்கின்றேன்.
அதன் முடிவு “ஹ ர ணி” கூறியவாறு அமைந்ததாய் ஞாபகமில்லை. அந்த முடிவுடன் வேறொரு கதை வந்திருந்தது. இந்தக் கதையில் அந்தப் பேய் வேலையாளாகச் சேரும்போது தன்னால் செய்யமுடியாத வேலையைச் சொன்னால் தான் வேலையயை விட்டு நின்றுவிடுவதாகச் சொல்லியிருந்தது. எனவே மறுநாள் அவர்கள் தங்கள் வீட்டினைச்சுற்றி ஒரே நாளிற்குள் மதிற்சுவர் எழுப்புமாறு கூறியிருந்தனர். பேயும் அதை செய்துவிட்டிருந்தது. இது ந்னறாக ஞாபகத்தில் இருக்கிறது ஏனெனில் அம்புலிமாமாவில் அந்தப் படம் இருந்தது. அதன் பின் அவர்கள் தங்கள் நாயின் வாலை நிமிர்த்திச் சொன்னதாகவும் பேயினால் அது முடியாது போகவே வேலையைவிட்டு நின்றுவிட்டதாகவும் ஞாபகம். உறுதிப்படுத்த முடியவில்லை.

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி
இப்படித்தான் இருந்திருக்கவேண்டும்
நான் யூகம் செய்ததைவிட இந்த முடிவு
மிக நன்றாகவே உள்ளது
விரிவான அழகான பின்னூட்டம் கொடுத்து என்
நெடுங்கால குறையைத் தீர்த்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Post a Comment