Monday, July 3, 2017

விதையும் கருவும்

குனிந்து
மிக எளிதாய்
மண் மீதே
எடுத்துக் கொள்ளும்படியாகவா

உயர்ந்து
வளர்ந்து
முயன்று
பறித்துக் கொள்ளும்படியாகவா

புதையல்போல்
கவனமாய்த்
தோண்டி
அள்ளிக் கொள்ளும்படியாகவா

விளைவித்தப் பலனை
எப்படித் தருவது என்பதை
விதைப்பவன் முடிவு செய்வதில்லை
அதை விதையே முடிவு செய்து கொள்கிறது

விதைப்பவன் பணி
விதைப்பதும்
அதனைப் பாதுகாப்பாய்த்
தொடர்ந்துப் பராமரிப்பது மட்டுமே

ஒருமுறை
வாசித்து
முடித்ததும்
புரிந்து கொள்ளும்படியாகவா

கொஞ்சம்
முயன்று
பின் எளிதாய்
தெரிந்து கொள்ளும்படியாகவா

அதன் போக்கில்
மெனக்கெட்டுப்
பயணித்துப் பின்
உணர்ந்து மகிழும்படியாகவா

உறுத்தும் படைப்பினை
எப்படித் தருவது என்பதனை
படைப்பாளி முடிவு செய்வதில்லை
அதைக் கருவே முடிவு செய்து கொள்கிறது

படைப்பாளியின் பணி
அதனை ஏற்பதுவும்
தாய் போலப் பொறுப்பாய்
ஈன்றுப் புறந்தருதல் மட்டுமே

(இதனை எழுதப் பின்னூட்டம் மூலம்
கரு தந்துக் காரணமான வை.கோ அவர்களுக்கும்
ஜி.எம் .பி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி )

10 comments:

KILLERGEE Devakottai said...

விதையும், கருவும் காட்டாறு போல் பொங்கி ஓடட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்னவிதம் மிகவும் அருமை ஐயா...

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் அழகாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்...

துளசி, கீதா

Unknown said...

உங்களின் கடனை ரசித்தேன் , ஈன்று புறந்தருதலைச் சொன்னேன் :)

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

Rajeevan Ramalingam said...

அருமையான ஒப்பீடு ஐயா... அழகிய கவிதை

Unknown said...

உமக்கே உரியபாணி !அருமை!இரமணி

Yarlpavanan said...

"உறுத்தும் படைப்பினை
எப்படித் தருவது என்பதனை
படைப்பாளி முடிவு செய்வதில்லை
அதைக் கருவே முடிவு செய்து கொள்கிறது!" என்பது
உண்மை தானே! - அதனை
உணர்வோடு கருவை உள்வாங்கி எழுதினால் தெரியுமே!

கோமதி அரசு said...

//தாய் போலப் பொறுப்பாய்
ஈன்றுப் புறந்தருதல் மட்டுமே//

அருமை.

G.M Balasubramaniam said...

ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடன் என்றால் சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே தந்தையுடைய கருவல்லவோ

Post a Comment