Thursday, December 29, 2011

கர்ப்பக் காலக் கோளாறுகள்

எங்கோ ஒளிந்துகொண்டு  
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

Tuesday, December 27, 2011

அழகு


பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

Sunday, December 25, 2011

நாமும் கவிமன்னர்கள்தான்...

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள் 
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே


Friday, December 23, 2011

நெடும் பயணம்

நாடு விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் பாஸ் போர்ட் தேவையில்லை

ஊரை விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் ஆடை அணிகலங்களோ
பெட்டி படுக்கைகளோ தேவையில்லை

போகாத ஊர்தான்
ஆயினும் ஊர் பற்றிய தகவல்களோ
வரை படங்களோ தேவையில்லை

பார்க்காத ஊர்தான்
ஆயினும் யாரும் உடன் வந்து
வழிகாட்டத் தேவையில்லை

உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
என்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லை

சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
பஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை

Tuesday, December 20, 2011

உயிரேணி

சிறு புன்னகைதானே
என்னசெய்துவிடப் போகிறது என
அலட்சியமாய் எப்போதும் இருப்பதில்லை

என்று எங்கு எப்போது கிழியும் எனத் தெரியாது
நைந்துபோன சட்டையாய்
பிரச்சனைகளில் அசுரப் பிடியில்
மனம் துடிக்க அலைபவனுக்கு அது ஒரு
சால்வையாகக் கூட ஆகலாம்

சிறு ஆறுதல் வார்த்தைதானே
அதனால் என்ன பயன் என எண்ணி
அசட்டையாய் இதுவரை இருந்ததில்லை

நிலைத்தலுக்கான  அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்

சிறு பாராட்டு மொழியில்
என்ன விளைந்துவிடப் போகிறது என எண்ணி
சோம்பி இருக்க முயன்றதில்லை

உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
அசந்து தூங்கிக் கிடப்பவனை
எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
தாரக மந்திரமாகக்  கூட அது இருக்கலாம்

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
என்றேனும்  கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக  மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்

Sunday, December 18, 2011

எதிர் திசையில் ஓரடி .....

புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Thursday, December 15, 2011

விழிப்புணர்வின் உச்சம்


புதிய பாணியில் ரேசர்கருவி
 ஒரு கடையில் இருந்தது
விலையும் குறைவாய் இருந்தது
அதற்கு பின்னாளில்
பிளேடு வாங்குகையில்தான்
அதன்  விலை தெரிந்து அதிர்ந்து போனேன்
வேறு பிளேடு பொருந்தாததால்
ரேசரை மாற்றவும் முடியவில்லை
மாட்டிக் கொண்டது புரிந்தது
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
பிளேடு விலை கேட்டுத்தான் ரேசர் வாங்குவேன்

கொஞ்சம் சுமாரான
ஓட்டல் ஒன்றுக்குப் போனேன்
சப்பாத்தியின் விலையும் நானின் விலையும்
பூனை விலையில் இருந்தது
அவசரப்பட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு
சைடு டிஷ் ஆர்டர் கொடுக்கையில்தான்
அவர்கள் தந்திரம் புரிந்தது
அது யானை விலையில் இருந்தது
ஏமாந்தது புரிந்தது
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
சைடு டிஷ் விலையைக் கேட்டுத்தான்
மெயின் டிஷ்ஸே ஆர்டர் செய்வேன்

இலவச மிக்ஸியும் கிரைண்டரும்
கொடுப்பதாகச் சொன்னதும் மகிழ்ந்து போய்
பட்டனை அழுத்தமாய் அழுத்தினேன்
பின்னாளில் பஸ் கட்டண உயர்வையும்
மின்சாரக் கட்டண உயர்வையும்
அரசு அறிவித்தவுடன்தான் அதிர்ந்து போனேன்
அவர்களது அரசியலும் புரிந்தது
ஏமாந்ததும் புரிந்தது
அடுத்த தேர்தலில் அவசியம் ஏமாறமாட்டேன்

கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்


Wednesday, December 14, 2011

புதுப் பொங்கலில் பழைய உப்பு

மனவெளிக்காட்டினில்
மண் மேடாய் எண்ணங்கள்
சிந்தனை ஏர் நடத்தி
விதைத்து வைத்த கவி விதைகள்
கால வெள்ளத்தில் கரைந்து போமோ ?
எண்ணங்கள் கேள்வியாய்
உருமாறி என்னை
உலுக்கி எடுத்துப் போக
ஆழ உழுகிறேன்
தேவுடா நுவ்வே கதி

இதய கட்டுத்தறியில் எண்ணப் பாவுகள்
பொருட்சுவை இழையோட
நெய்துவைத்த கவியாடைகள்
கால நகம் பட்டுக்
கிழிந்தழிந்து போமோ ?
மனக் குளத்தில்
சிறுகல் எழுப்பிய சிற்றலயையாய்
எண்ணங்கள் விரிந்து பரவ
அழுந்த நெய்கிறேன்
ஈஸ்வரோ ரஷது

மனப் பட்டறையில்
வார்ப்புகளாய் எண்ணங்கள்
அனுபவ உலையிலிட்டு
சீர் செய்த கவிதாயுதங்கள்
காலக் காற்றினில் துருவேறி
மண்ணாகி மக்கிப் போமோ ?
கேள்விகள் பயமாகி
வெறியேற்றிப் போக
இன்னும் கூராக்குகிறேன்
தெய்வமே நீயே துணை

Sunday, December 11, 2011

சிரிப்பின் பலமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Thursday, December 8, 2011

அனுபவமே விலை


ஒரு மலை வாசகஸ்தலத்திற்கு ஒரு செல்வந்தர்
தன் மனைவி மக்களுடன் சென்று கொண்டிருந்தார்
இருள் சூழத் தொடங்குகிற பொழுது திடுமென்று
பாதி வழியில் கார் பழுதாகி நின்று போனது
கார் டிரைவர் என்ன முயன்றும் என்ன காரணம் எனக்
கண்டுபிடிக்க முடியவில்லை

அந்த இடம் வனாந்திரம் போல் இருந்ததாலும்
காட்டு விலங்குகள் அதிகம் திரியும் பகுதி எனவும்
திருடர்கள் பயம் அதிகம் உண்டு எனக்
கேள்விப் பட்டிருந்ததாலும் செல்வந்தர்
மிகவும் கலங்கிப் போனார்

வயதுக்கு வந்த இரண்டு பெண்களும் மனைவியும்
அணிந்திருந்த அதிகப் படியான நகைகளும்
அவர் அடி வயிற்றைக் கலக்கத் தொடங்கியது

அந்த வழியில் தெய்வாதீனமாக ஒருகார் வர
அதை நிறுத்தி ஏதும் உதவ முடியுமா எனக் கேட்க
அந்தக் கார் டிரைவரும் சிறிது நேரம் எஞ்சினை
செக் செய்துவிட்டு தான் சரிசெய்து தருவதாகவும்
ஆனால் அதற்கு கூலி ஆயிரம் ரூபாய் ஆகும்
 எனத் தெரிவித்தார்

செல்வந்தர் இருந்த நிலைக்கு அது மிக
அதிகமாகப் படவில்லைஉடன் சரி செய்யச்
 சொல்லி ஆயிரம் ரூபாயைக் கொடுக்க
கார் டிரைவரை காரில் ஏறி அமரச் சொல்லி காரை
ஸ்டார்ட் செய்யச் சொல்லிவிட்டு எஞ்சினில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறு கல்லைவைத்துத் தட்ட
கார் ஸ்டார்ட் ஆகிப் போனது

செல்வந்தர் மிகவும் சங்கடப்பட்டுப் போனார்
வெறுமனே ஒரு கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் கூலி என்றால் அது மிகவும்
அநியாயமாகப் பட்டது பொறுக்காமல் கேட்டும் விட்டார்
"ஏனப்பா வெறும் கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் என்றால் அநியாயம் இல்லையா ?"

வந்தவன் அமைதியாகச் சொன்னான்
"சார் நான் கல்லை வைத்து தட்டியதற்கு
உங்களிடம் பணம் வாங்கவே இல்லை அது ஓ.சி
ஆனால் இங்கு தட்டினால் கார் ஸ்டார்ட்
ஆகும் என்பதைத்தெரிந்து கொள்ள பதினைந்து
ஆண்டுகள் செலவிட்டு இருக்கிறேன்
அந்த அனுபவத்திற்குத்தான் இந்தக் காசு "என்றான்

செல்வந்தரால் பதில் ஏதும் பேச முடியவில்லை


Wednesday, December 7, 2011

தாய்மை ( 2 )


ஒவ்வொரு கணமும் அவன் செய்யும்
அளவிடமுடியா முயற்சியும்
அதனைத் தொடர்ந்து
அவனை வாரி அணைக்கும்
அளவிடமுடியா வளர்ச்சியும்
என்னை திக்கு முக்காடச் செய்து போகிறது

அதே சமயம்
அவனது அல்ட்சியமான ஒரு பார்வையும்
முகம் பாராது பேசிப் போகும்
ஒவ்வொரு சிறுச் சிறு பேச்சும்
பெறுகையில் பேருவகை கொண்ட என்னை
பரிதவிக்க வைத்துப் போகிறது

ஆயினும் என்ன
சின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்

இன்று
ப்தவி தரும் சுக போகங்களில்
செல்வம் தரும் மதமதப்பில்
தட்டுத் தடுமாறும் அவன்
இன்றில்லையெனினும் நாளை
அல்லது அடுத்து ஒரு நாள்
அல்லது என்றேனும் ஒரு நாள்
அல்லது விழிமூடும் முன்னரேனும் ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?

Thursday, December 1, 2011

போதைக்காரனின் புலம்பல் (நிச்சயமாக நானில்லை )


மாலை நேரம் ஆனாப் போதும்
மனசு குளிருதே-இந்த
பாழாய்ப் போன உடம்பு மட்டும்
அனலாய் காந்துதே
கால்கள் இரண்டும் கடையைப் பார்த்து
தானாய் நடக்குதே-இந்த
பாழாய்ப் போன போதைப் பழக்கம்
பாடாய்ப் படுத்துதே

வேட்டி துண்டு விலகி கிடக்க
விழுந்து கிடந்ததும்-நடு
ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
நாறிக் கிடந்ததும்
வீடு போகும் வழியை  மறந்து
தெருவில் திரிந்ததும்-நினைவில்
கூடி வந்தும் என்ன செய்ய
உடம்பு கொதிக்குதே

வ்லியைப் போக்க நல்ல மருந்து
என்று சொல்லியே -ஒரு நாள்
வலிய எனக்கு ஓசி தந்து
உசுப்பு ஏத்தியே
குழியில் என்னைத் தள்ளிப் போனான்
சகுனி நண்பனே-இன்று
குழிக்குள் கிடக்கேன் குப்பை போல
நாறி அழுகியே

காசு கொடுத்து யாரும் முதலில்
குடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்
             

Saturday, November 26, 2011

எல்லோரும் கவிஞர்களே (2)


சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்


( மரபுக் கவிதை புனைய அனைவருக்கும்
வழிகாட்டியாக விளங்கும்
புலவர் சா.  இராமானுசம் அவர்களுக்கு
இப்படைப்பை சமர்ப்பிப்பதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் )

Friday, November 25, 2011

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Tuesday, November 22, 2011

அதிருப்தி


ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

Saturday, November 19, 2011

கவித்துவம்

"ஒவ்வொரு முறையும்
இலக்கணப்படி எல்லாம் சரி
செய்யுள் செய்யத் தெரிந்திருக்கிறாய்
கவிதை படைக்கப் பழகு என்கிறாரே
கவிதைக்கும் செய்யுளுக்கும்
அப்படியென்ன வித்தியாசம் "
ஆசிரியர் மேலிருந்த கோபம்
முகத்தில் கொப்பளிக்ககக் கேட்டான் நண்பன்

"கட்டிடம் என்பதற்கும்
வீடு என்பதற்கும் உள்ள
சிறு வித்தியாசம் போலிருக்குமோ ? "என்றேன்

"சமாளிக்காதே சரியாகச் சொல் "என்றான்

வீட்டினுள்ளே நண்பனின் அப்பா
"கன்னுக்குட்டி சின்னக் குட்டி தாத்தா பார்
அழகான பொம்மை பார் " என
என்ன என்னவோ சொலலிப்
பேரனைக் கொஞ்சிப் பார்த்தார்
அது அழுகையை நிறுத்தவே இ ல்லை
சப்தத்தை கூட்டிக் கொண்டே போனது

சிரித்துக் கொண்டே வந்த நண்பனின் தாயார்
குழந்தையை மடியில் கிடத்தி
"சுச்சு சுச்சு கிச்சு கிச்சு "என என்னன்னவோ
வினோதமான சப்தங்களை எழுப்பிக் கொஞ்ச
குழந்தை அழுகையை நிறுத்தி சிரிக்கத் துவங்கியது

நானும் பரவசமாகிப் போனேன்

அர்த்தம் பொதிந்த தாத்தாவின் வார்த்தைகளில்
இல்லாத ஏதோ ஒன்று
பாட்டியின் சப்தத்தில் இருந்தது
குழந்தைக்கும் புரிந்தது எனக்கும் புரிந்தது
நண்பன் முகத்தைப் பார்த்தேன்
அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை

Thursday, November 17, 2011

ஜென் சித்தப்பு


"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Tuesday, November 15, 2011

நேரு மாமாவும் காந்தித் தாத்தாவும்......


குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிற
நமது முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால்
நேரு அவர்களின் பிறந்த தின நாளை முன்னிட்டு
நமது பதிவர் சைலஜா அவர்கள் துவக்கி வைத்த
தொடர் பதிவைத் தொடர்ந்து எழுதும் தொடர் பதிவிது

எந்தத் தலைவர் தனது பிறந்த நாளை தன்னுடைய
பிறந்த நாளாகக் கொள்ளாமல் பிறருக்கு
அர்ப்பணிக்கிறார்களோ அவர்களது பிறந்த நாளே
கோலாகலத்துடன் மக்கள் விரும்பும்
பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது
அந்த வகையில் ஆசிரியர் தினமும் குழந்தைகள்
தினத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்

குறிப்பாக நான் பல ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களைக்கவனித்திருக்கிறேன்.
அவர்கள் எவ்வளவு வயதானாலும்   அதிக
வயதானவர்கள் போல்
காட்சி அளிக்காமல் இளமையுடனே
காட்சி அளிப்பார்கள்அதற்கான உண்மையான
காரணம் அவர்கள் அதிக நேரம்
குழந்தைகளுடன் இருப்பதே என் நினைக்கிறேன்
மகாத்மா காந்தி அவர்கள் கூட மாமா வயதிலேயே
தாத்தா வாக அழைக்கப் பட்டதும் பண்டிட்நேரு
அவர்கள்தாத்தாவான வயதிலே கூட
ஏன் இன்றுவரையில் கூடமாமா வாக
அழைக்கப் படக் காரணம் அவர்கள்
அதிகமாக குழந்தைகளை விரும்பியதும்
குழந்தைகளுடன் மனதளவில் அதிகநெருக்கமாக
இருப்பதை விரும்பியதும் கூட
காரணமாயிருக்கலாம் என நினைக்கிறேன்

ஏனெனில் குழந்தைகள் உலகம் ஒரு அற்புத உலகம்
அதனுள் கற்கள் மாணிக்கக் கற்களாகவும்
 கல்லும் மண்ணும்கல்யாண சமையல்
சாதமாகவும்  இயல்பாக மாறிப்போகும்
பூவுலகு வரும் தெய்வங்கள் பெருவாரியான
சமயங்களில்அவர்களுடனேயே அமர்ந்து
விளையாடத் துவங்கிவிடுகிறார்கள்
அங்கு எல்லாமே நம்பிக்கையே
நம்பிக்கையின்மை என்பது இல்லாத
ஒரே பிரதேசம் இது ஒன்றுதான்
ஒரே ஒரு குறை அந்தச் சமவெளிக்குச்
செல்லும் பாதைமிகக் குறுகியது.
உங்கள் கிரீடங்களையும்முகமூடிகளையும்
அவிழ்த்து வைத்து குழந்தைகளாக
 தவழ்ந்து போகத் தெரிந்தால்மட்டுமே நீங்கள்
அந்த சொர்க்கபுரியின் வஸந்தத்தை
அனுபவிக்க இயலும்.இல்லையெனில் உங்களுக்கு
அதுவும் ஒரு வெறும் பிதற்றல் உலகு போலவே படும்

பதிவின் நீளம் கூடிப் போனதால் கவிதை குறித்து
யோசிக்கவே இயலவில்லை

புதிர்:தகுதியடையத் தேவையான மூன்று
 முக்கிய குணங்கள்
தகுதி அடைந்தபின் நிச்சயம் உயரிய பதவி கிடைக்கும்
அப்போது இருக்க மூன்று முக்கிய குணங்கள்

குறிப்பிட்டு யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லை
என் பதிவைத் தொடர்பவர்கள் யாரேனும் இஷ்டப்பட்டு
தொடர்வீர்கள் ஆயின் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்

Sunday, November 13, 2011

இவர்கள் அவர்கள் தலைவர்கள்

அவர்கள் மீது இவர்கள் எப்போதும்
முழுக் கவனமாய் இருக்கும்படி
தலைவர்கள் இவர்களை
தூண்டியபடி இருக்கிறார்கள்

எப்போது தினமும் எழுகிறார்கள் ?
அவர்களது உணவுப் பட்டியல் என்ன?
எவரிடம் பயிற்சி பெறுகிறார்கள் ?
எந்த மைதானத்தில் பயிற்சி பெறுகிறார்கள் ?
அவர்களை ஊக்குவிப்போர் யார் யார் ?

இப்படி அவர்களது பலங்களை மட்டுமல்ல
பலவீனங்களைக் கூட
மிக நீளமாய் பட்டியலிட்டு வைக்கவும்
நாள்தோறும் பயிற்சி அளிக்கிறார்கள்

காலம் நேரம் மறந்து
தனது கடமைகளையும் மறந்து
இப்படி அவர்களுக்காக இவர்கள்
செலவழிக்கிற நேரங்களில்
ஆறில் ஒரு பங்கை மட்டும்
இவர்கள் இவர்களுக்காக மட்டுமே
செலவழிக்கத் துவங்கினால்
இவர்கள்தான் நிச்சயம் வெற்றியாளர்கள்

அந்த ஒரு விஷயம் மட்டும்
 இவர்கள் புரிந்து கொள்ளாதபடி
 தலைவர்கள் மிகக் கவனமாய் செயல்படுகிறார்கள்

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே

Friday, November 11, 2011

நம்பிக்கை


சிறுவயதில் ஏதோ ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை
கேட்ட இடம் வயது சொன்னவர் என எதுவுமே
சுத்தமாகஎன் நினைவினில் இல்லை.
ஆயினும் கதை மட்டும் எப்படியோ
என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது
அதுவும் என்னை விடவில்லை
எனக்கும் அதை விட இஷ்டமில்லை
இன்றும் கடலுக்கடியில் பழைய இலங்கை
இருப்பதாகவும்அதை விபீஷணன்
ஆண்டு கொண்டிருப்பதாகவும் வருஷத்தில்
ஒரு குறிப்பிட்ட நாளில் ந்ள்ளிரவில் அரக்கர்கள்
 புடை சூழஇராமேஸ்வரம் வந்து ராமர் பாதம்
 தரிசித்துப்போவதாகவும்அந்த உபன்யாஸ்கர் மிக
அழகாக விளக்கினார்

அப்படி ஒரு சமயம் அவர்கள் ராமேஸ்வரம் வந்து
திரும்பிக் கொண்டிருக்கையில்அதை பார்த்துக்
கொண்டிருந்தகிராமவாசி ஒருவன் எங்குதான்
போகிறார்கள்எனப் பார்த்துவிடுவோம் என்கிற
ஆர்வ மிகுதியால்அரக்கர்கள் சுமந்து வந்த பெரிய
பூக் குடைக்குள்ஏறி ஒளிந்து கொள்கிறான்
என்ன நடக்கிறது எங்கு போகிறார்கள்
எப்படிப் போகிறார்கள் என்பது எதுவும்
அவனுக்குத் தெரியவில்லை.இரவெல்லாம்
கடலோசை மட்டும்கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படியே அசந்து தூங்கியும் போகிறான்

விடிந்து கூடைக்குள் இருந்து வெளியேறிப்
பார்த்தால் மிகப் பெரியதங்கத்தாலேயான ஆன
அரண்மனைக்குள் அவன் இருப்பது தெரிகிறது
அதன் பிரமாண்டம் அதன் வசீகரம் இவற்றில் மயங்கி
 வாய்பிளந்து
நின்று கொண்டிருந்தவனை காவல் புரிந்து
கொண்டிருந்த அரக்கர்கள்பார்த்துவிடுகிறார்கள்.
நரன் இங்கு வர சந்தர்ப்பம் இல்லையே
எப்படி வந்தான் எனத் தீவீரமாக விசாரிக்க
அவன் நடந்ததையெல்லாம்விரிவாகச் சொல்லி
அழ அவனை நேராக விபீஷன
மகாராஜாவிடம்கொண்டுபோய் சேர்க்கிறார்கள்

அவன் வந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த
விபீஷண மகராஜா"சரி ஏதோ ஆர்வ மிகுதியால்
இந்த மனிதன் எப்படியோ நம் நகருக்கு
வந்து விட்டான்.நம் நாடு வந்தவன் நமக்கு
விருந்தாளி போலத்தான்அவனுக்கு நம் நாடு
முழுவதையும் சுற்றிக் காண்பியுங்கள்
ஒருவாரம் முடிந்து அவனை நாமே
அனுப்பிவைக்கலாம் "என்றார்

ஒருவாரம் அவனுக்கு ராஜாங்க விருந்து
 உபச்சாரம் தடபுடலாக நடந்தது
அரண்மனை ,அசோக வனம் என என்ன என்ன
 பார்க்க முடியுமோஅதையெல்லாம்அவன் ஆசை
 தீரும் மட்டும் சுற்றிக் காட்டினார்கள்.
தொட்டிக்குள் மீனை நாம்வெளியில் இருந்து
பார்ப்பதுபோல் இவர்கள் வெட்டவெளியில் இருக்க
இவர்களைச் சுற்றி கடலிருப்பதைப் பார்க்க
மலைத்துப் போனான்என்ன புண்ணியம் செய்தோம்
எனத் தெரியவில்லையே எனஎண்ணி எண்ணி
மிகவும் குதூகலம் கொண்டான்அந்த கிராமவாசி.
இப்படியே ஒருவாரம் மிக மகிழ்ச்சியுடம் முடிந்ததும்
அரக்கர்கள் மீண்டும் அடுத்த உத்தரவுக்காக
மகராஜாவிடம் கொண்டு நிறுத்தினார்கள்

"மகிழ்சியா " என விசாரித்த விபீஷண மகாராஜா
முதுகில்சுமக்கும் அளவுபொன்னும்
பொருளும் கொடுத்துஅரண்மனை வாயில் வரை
வந்து "சென்று வா " எனஅனுப்பிவைத்தான்.
அதுவரை மகிழ்சியில்திக்கு முக்காடிக்கொண்டிருந்த
கிராமத்தானுக்கு மேலேகடல் இருப்பதும்
தான் கடலுக்கு அடியில் இருப்பதுவும்
அப்போதுதான் லேசாகப் புரியத் துவங்கியது

" மகாராஜா மன்னிக்க வேண்டும் தங்களுக்கு
தெரியாது இல்லைநான் சாதாரண மானிடன்.
இந்தப் பெரும் கடலை எப்படிக் கடந்து
கரை சேர இயலும் யாரையாவது துணைக்கு
அனுப்பினால்புண்ணியமாய்ப் போகும் "என்றான்

" ஓ அதை மறந்து போனேனோ " எனச் சொல்லி
அருகில்இருந்த அமைச்சரை அழைத்து
ஏதோ காதில் கிசு கிசுக்க
அவர் உள்ளே சென்று எதையோ எடுத்துவந்து
விபீஷணன் கையில் விபீஷண மகாராஜா அதை
அந்தக் கிராமத்தானின்கையில் மறைத்து மடக்கி
 "இதற்குள் ஒரு உயரிய பொருள் இருக்கிறது
அதை கரை சேரும் வரை திறக்காமல் போனால்
கடல் உனக்குவழிவிட்டுக் கொண்டே போகும்
எக்காரணம் கொண்டும் இடையினில்
திறக்கவேண்டாம் " என அறிவுறுத்தி
அனுப்பி வைத்தார்

கிராமத்தானுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
அவன் நடக்க கடல்அவனுக்கு மிக அழகாக
அகலமான பாதை அமைத்துக் கொடுத்தது
இருபுறமும் கடலும் நடுவில் பாதையுமாக
நடக்க நடக்க அவனுக்கு
பெருமிதம் பிடிபடவில்லை.

பாதிக்கடல் கடக்கையில் அவனுக்கு கையில்
அப்படி என்னதான்உயரிய பொருள் இருக்கக் கூடும்
 என்கிற ஆவல்பெருத்துக் கொண்டே போனது.
உள்ளங்கையில் நடுவில்மிகச் சிறிதாக்
இருந்து கொண்டு இந்தக் கடலையே நகர்த்தி
வழி விடச் செய்யும் அந்த அதியப் பொருளை
அவசியம்பார்த்துதான ஆகவேண்டும் என்கிற
ஆசை வெறியாகக் கிளம்ப ஒரு வெறிபிடித்தவன்
 போல் அவன் உள்ளங்கையை விரிக்கிறான்

உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை

அவன் ஏமாற்றமடைந்தவன் போலாகி
 "சே.இவ்வளவுதானா .." எனச்
சொல்லி முடிக்கவும் கடல் அவனை அப்படியே
அள்ளிக் கொண்டு உள்ளே கொண்டு போகவும்
சரியாக இருந்தது

இதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து  கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்

மிகச் சிறுவயதில் இந்தக் கதையை கேட்டபோது
பெரியவர்கள் சொல்கிற எதையும் நம்பிச் செய்தால்
 நிச்சயம் நல்லது என்கிற நம்பிக்கைஎன்னுள்
 ஊறிப் போனதால் தைரியமாக எதையும் செய்யும்
துணிச்சல் எனக்கு இருந்தது

அறிவா அல்லது ஆணவமா என மிகச் சரியாகச்
சொல்லத் தெரியவில்லைகல்லூரி நாட்களில்
இக்கதையில் லாஜிக்கே இல்லாதது போலப் பட்டது
அந்த கிராமத்தான்தான் கடலோடு போய்விட்டானே
 பின்னே இந்தக் கதையை யார் அந்த உபன்யாசகருக்கு
 சொல்லி இருப்பார்கள்என நினைத்து
கேலியாகச் சிரித்திருக்கிறேன்

இப்போது யோசித்துப் பார்க்கையில்  இந்தக் கதை
தரும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை
சிறுவர்களுக்கு அறிவும் லாஜிக்கும்தருமா
என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது

நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் ?



Thursday, November 10, 2011

அந்த அந்த நொடி..


வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
 உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
கையில் கதாயுதமும் கொண்டு
மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
 உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
இவர் "எமதர்மன்தான் " என்று

ஆமை புகுந்த வீடு அமீனா புகுந்த வீடு
எமன் புகுந்தவீடும்உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
.இருந்தாலும் மரியாதை நிமித்தமாக
"வாருங்கள் வாருங்கள்
நான் ரெடி போவோமா ?"என்றேன்

எமர் (ன் )என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை யுகங்களோ எவர் எவர் உயிரையோ
எடுத்திருக்கிறேன்இதுவரை யாரும் உன்போல
 நான் ரெடி போவோமா எனச் சொன்னதில்லை
உனக்கு சாவென்றால் பிடித்தமா இல்லை
வாழ்வு வெறுத்துப் போயிற்றா "

"இல்லை இல்லை நீங்களும் மூன்று தபால்
 போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை.
ஆனாலும் மனத்தளவில் ரெடியாகிவிட்டேன்
அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை "என்றேன்

"நீர் எழுத்தாளர் எனத் தெரியும் அதுதான்
பொடிவைத்துப் பேசுகிறீர்நான் கோடிவீட்டுக்
 குப்புசாமியைத்தான் கொண்டுபோக வந்திருக்கிறேன்
உம்மைக் கொண்டுபோக இல்லை
என்வே பதற்றப் படாமல் அமரும்
உன்னிடம் எமக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்
ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லும் " என்றார்

நான் சாகப் போவதில்லை எனத் தெரிந்ததும்
எப்படித்தான்தைரியம் வந்தது எனத் தெரியவில்லை
சோஃபாவில் நன்றாக
சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
 எதற்குப் பயப் படவேணும்

பின் எமரே தொடர்ந்தார் "இந்திரலோகத்தில்
எல்லோரும்என்னைஏகமாகப் பேசுகிறார்கள்.
சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும்பேசவிடாது
 அவர்களைக் கொன்றுவிடுகிறேனாம்
.இதனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வில்
அறிந்து கொண்டதைபுரிந்து கொண்டதை
சொல்ல முடியாமலே போகிறதாம்
அதனால்தான் பூமியில்பஞ்சமா பாதகங்கள்
பெருத்துப் போனதாகச் சொல்லுகிறார்கள்
எனக்கு அது உடன் பாடில்லை
நீ என்ன சொல்கிறாய் "என்றார்

"அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம்
பரீட்சித்துப் பார்க்கலாமே " என்றேன்

"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா.
ஒருவனிடம் கனவில் தோன்றிஅடுத்தவாரம்
 உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன்
அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான்
முப்பது வருடம் செய்யாத பாவங்களை
ஒரு வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன்.
அவன் அந்த ஒரு வாரமும்
செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என
கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி
அரை மணி நேரம்கெடு கொடுத்தும் பார்த்தேன்
முழு நேரத்தையும் 'பினாத்தியே "தீர்த்துவிட்டான்
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில்
 புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச்
சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம்
 சுத்தமாக இல்லை " என்றான்

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக
 உன்னிடம் வந்துள்ளேன்உன்னை இப்போது
 கொண்டு போகப் போவதில்லை
உன்னை கொண்டுபோகப் போகும் நாளையும்
 சொல்லப் போவதில்லை
என்வே பயப்படாமல் சொல்லு . நீ இப்போது
சாகப் போகிற நொடியாக இருந்தால்
வாழ்வை அர்த்தப் படுத்துவதாக ஒரு செய்தி
சொல்லும்படியாகச் சொல்
எனச் சொன்னால் என்ன சொல்லுவாய் " என்றான்

இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே
கடினமான கேள்வியாகவும்
புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த அனைத்து
 நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக
அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க
பள்ளியில் மெனக்கெட்டது
வேலைக்கான தயாரிப்புக் கூடமாக
கல்லூரியை க் கருதியது
நல்ல இல்லறம் அமையவே
வே லை எனக் கொண்டது
குழந்தைகளின் எதிர்காலம் கருதியே
பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
இருந்திருக்கிறேனே ஒழிய
அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை
என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்

" ஞாழிகை ஆகிறது ஏதும் உன்னால்
 சொல்ல முடியுமா ' என்றான்

" முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா
 விவரித்துச் சொல்லவா " என்றேன்

"விவரித்தல் வேண்டியதில்லை
 நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல் "

"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
அந்த அந்த நொடியில்
வாழுதலே வாழ்க்கை " என்றேன்

எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது

"சபாஷ் சபாஷ் "எனக் கூச்சலிட்டபடி என் முதுகில்
 ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு
மறைந்து போனான் நான் நடு நடுங்கிப் போனேன்

வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க
 உடல் பாரமாகத் தெரிந்தது
கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி
ஒரு பெரும் கூட்டமே நின்று கொண்டிருந்தது

"அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்
இனி பயமில்லை ..  இன்னும் என்ன என்னவோ
சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்


Tuesday, November 8, 2011

விசித்திர பூமி


பஞ்சுப் பொதிபோல் பிய்ந்து கிடந்த
மேகத்தைக் கிழித்துக் கொண்டு
விமானம் தரை இறங்கத் துவங்கியது

பச்சைப் பசேலெனத் தெரிந்த பூமியைப் பார்த்ததும்
என்னையும் அறியாது ஆனந்தத்தில்
"வாவ்" எனக் கூச்சலிட்டுவிட்டேன்

அருகில் இருந்தவர் என்னை
ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"கழுகுப் பார்வையில் இப்போதுதான்
கேரளத்தின் அழகைப் பார்க்கிறீர்களா " என்றார்

ஒப்புக்கொண்டு தலையாட்டி வைத்தேன்
அவரே தொடர்ந்தார்
"எங்கள் தேசத்திற்கு மற்றுமொரு
காரணப் பெயர் உண்டு தெரியுமா ?"என்றார்

என் மௌனத்தைத் தொடர்ந்து அவரே தொடர்ந்தார்
"தெய்வத்தின் சொந்த தேசம்
அதுதான் இத்தனை அழகு " என்றவர்
"உங்கள் தேசத்திற்கு இப்படி ஏதும்
 காரணப் பெயர் உண்டா ?
இடத்தைப் பொருத்து ,மனிதர்கள் பொருத்து
புராணங்கள் குறித்து ..."
அவர் அடுக்கிக் கொண்டே போனார்

எதைச் சொல்வது ? எப்படிச் சொல்வது ?

எல்லா நகரங்களுக்கு வெளியில்
தந்தை பெரியாரின் சிலைகளும்
ஊருக்குள் நூறு கோவில்களும்

கலாசாரம் பண்பாடு குறித்து
அழகாகப் பேசும் தலைவர்களுக்கு
குறைந்த பட்சம் மூன்று மனைவிகளும்

ஊருக்கு மூன்று பள்ளிகளும்
முப்பது "பார் "களும்

இனமே அடியோடு அழிந்துகொண்டிருக்க
மானாட மயிலாட பார்க்கும் அவலமும்

பகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே
குடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்

எண்ண எண்ண எண்ணிக்கை
கூடிக்கொண்டே போனது

அதற்குள் விமானம ஓடு தளத்தில்
ஓடத் துவங்கியதால்
விமானத்துள் பரபரப்பு படரத் துவங்கியது

அவர் விடாது "என்ன பதிலைக்காணோம் " என்றார்

அவசரமாக இறங்கத் தயாராகிற
 பாவனை செய்து கொண்டு
"விசித்திர பூமி " என்றேன்

நல்லவேளை அவர் விளக்கம் கேட்கவில்லை

Saturday, November 5, 2011

தொடர் ஓட்டம்

எப்போது  பள்ளி ஆண்டு விழா
போட்டிகளைக் காண வந்தாலும்
தொடர் ஓட்டம் நடக்கும் போட்டியையே
காணவிழைவார் அப்பா
குறிப்பாக குச்சியைக் கைமாற்றி ஓடும்
அந்த " ரிலே " ஓட்டம்

அவரது அதீத ஆர்வத்தில்
ஏதோ காரணம் இருப்பதைப் புரிந்து
ஒருமுறை விளக்கம் கேட்டேன்

"இது எல்லா போட்டியையும் போல அல்ல
இந்த நால்வரும் சரியாக ஓட வேண்டும்
ஒருவர் பின் தங்கினாலும்   தோல்விதான்
குறிப்பாக அந்தக் குச்சி வீழாது ஓட வேண்டும்" என்றார்

'இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது
எல்லா போட்டிகளையும் போல
இதற்கும் சில விதிகள் " என்றேன்

 "நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்
உன் தாத்தாதான்  எனக்கு விளக்கினார்
அந்தக் குச்சி என்பது
பாரம்பரிய குடும்பப் பெருமைக்கும்
செல்வச் சிறப்பிற்குமான ஒரு குறியீடு
நான் விரைவாக ஓடி
உன்னிடன் சேர்ப்பது போலவே
உன் வாரிசுகளிடமும் நீ சேர்க்கவேண்டும்
ஒருவன் தடுமாறினாலும் அதனைச் சீராக்க
நான்கு தலை முறை ஆகிவிடும் " என்றார்

நான் புரியாது விழித்தேன்
அவரே தொடர்ந்தார்

"இப்படியும் சொல்லலாம்
செல்வச் செழிப்பில்  வாழ்ந்தாலும்
முறையாக வளர்க்காத  உழைப்பாளியின்  மகன்
சோம்பேறி ஆகிப் போவான்
சோம்பேறிக்குப் பிறந்த பையன்
கடனாளி ஆகிப்போவான்
கடனாளிக்குப் பிறந்த மகன்
கடுமையான உழைப்பால்தான்
சராசரி நிலைக்கு வருவான்
சராசரியின் மகன்
கடினமான உழைப்பினால்தான்
மீண்டும் பழைய நிலையை  அடையக் கூடும்
அதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் " என்றார்

அப்போது சரியாகப் புரியவில்லை ஆயினும்
கால ஓட்டத்தில் புரியத் துவங்கியது

 நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்

Friday, November 4, 2011

பார்க்கத் தெரிந்தால்....

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ அல்லது
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"என்றான்

எல்லோரும் அமைதியாக என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில் நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே
ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
அவருக்கும்  நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை

 போக்குவரத்து சீராகி இருந்தது


Wednesday, November 2, 2011

முட்டைத் தியரி


"கம்யூனிஸ்டுகளுக்கு
ஜன நாயகத்தில் நம்பிக்கை இல்லை
அவர்கள் நம்புவது
தொழிலாளி வர்க்க யதேச்சதிகாரம்தான்
பின் அடிக்கடி அவர்கள் ஏன்
ஜன நாயகம் காப்போம் என
முஷ்டியைத் தூக்குகிறார்கள் "

எனக்கு வெகு நாட்களாக இருந்த குழப்பத்தை
என் நண்பனிடம் விரித்து வைத்தேன்

"உனக்கு விளங்கும்படியாகவே சொல்கிறேன்"
பீடிகையோடு துவங்கினான்

"முட்டையின் மஞ்சள் கரு அவர்கள்
வெள்ளைக் கரு பிற கட்சிகள்
முட்டையின் ஓடுதான் ஜன நாயகம்
அவர்கள் வெள்ளைக்கருவை உண்டு
வளர்கிற வரையில்
அவர்களுக்கு ஓடு வேண்டும்
அதைக் காப்பதில் கவனமாய் இருப்பார்கள்
வளர்ந்தபின் அவ்ர்களே அதை
உடைத்து நொறுக்கிவிடுவார்கள் " என்றான்

கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது
"அப்படியானால் முட்டைக்கும் முதலாளிகளுக்கும்
சம்பந்தமே இல்லையா" என்றேன்

 "நிச்சயம்உள்ளது நிறையவும் உள்ளது
முட்டை உற்பத்தியாளர்களும்
வினியோகஸ்தர்களும்
நுகர்வோரும் அவர்கள்தான் "என்றான்

"சத்தியமாகப் புரியவில்லை "என்றேன்

"அதுதான் நல்லது
உனக்கு எனக்கு மட்டும் இல்லை பலபேருக்கும்
அதனால்தான் ஜனநாயகமுட்டையை
ஊழலில் அவித்து சிலர் மட்டும்
சுகமாய் தின்று கொழுக்க முடிகிறது
புரிந்துபோனால் தான்
முட்டையை கவனிப்பதை விடுத்து
கோழிகளை கவனிக்கத் துவங்கிவிடுவோமே " என்றான்

நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை


Monday, October 31, 2011

இருப்பதற்கு ஏனில்லை பெயர் ?

" முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர் "

"பழமொழி"யின் ஈற்றடி என்னை
மிகவும் கவர்ந்து போனது
இல்லாததற்கு எப்படி பெயர் இருக்க முடியும் ?

எத்தனை அழகான  சிந்தனை
கவிதையின் சிறப்பில் நான் வியந்து கிடக்க
 நண்பன் என்னை  ஏளனமாய்ப் பார்த்தான்

"இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு ஏன் பெயரில்லை " என்றான்

எனக்கேதும் விளங்கவில்லை
அவனே தொடர்ந்தான்

"வரனுக்கு தட்சணை உண்டு
அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
வதூக்களுக்கு தட்சணை இல்லை
அதனால் வதூதட்சணை இல்லை சரி
இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
விபச்சாரன் ஏன் இல்லை ?
கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "

அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?

Friday, October 28, 2011

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்
கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்
வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே நினைவூட்டிப்போகின்றன
மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தான் "என்றாள் துணைவி

"குழம்பு எப்படி கவிதையாகும் ? " என்றேன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்

Wednesday, October 26, 2011

பயணம்

நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த
புகைவண்டிப் பெட்டிக்குள்
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி
எப்படி வந்தது எனத் தெரியவில்லை

தன் வண்ணங்களில்
தானே கௌரவம் கொண்டபடி
தான் பயணிக்கும் திசையையும் வேகத்தையும்
முடிவெடுக்கும் அதிகாரம்
தன்னிடம் இருப்பதான மமதையில்
மிக மிக சந்தோஷமாய்
பெட்டிக்குள் வலைய வந்து கொண்டிருந்தது
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி

பெட்டிக்குள் பயணிக்கும் எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று
வடக்கு திசை நோக்கி
அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது 
அந்த அதிசயப் புகைவண்டி

Sunday, October 23, 2011

உணவு உடை இருப்பிடம் மற்றும் கவிதை

என்ன செய்வது முன்புபோல
நான்கு வகை காய்கறிகளோடும்
ரசம் சாம்பார்  மோர் அப்பளம் என
வகை வகையாக சமைத்துண்ண
வசதி வாய்ப்புகள் பெரும்பாலோருக்கு இல்லை
அப்படி ஒருவேளை சமைத்தாலும்
பொறுமையாக ரசித்து உண்ண நேரமோ
செரிக்கிற உடல் நலமோ இல்லை

என்ன செய்வது முன்புபோல
உயர்கல்வி பயிலுகிற கன்னியராலோ
வேலைக்குச் செல்லும் பெண்களாலோ
தாவணி சேலை கட்டி
இயல்பாக வெளிச்செல்ல முடிவதில்லை
அப்படி ஒருவேளை போக முயன்றாலும்
இயல்பாக இருக்கவோ
சௌகரியமாய் உணரவோ இயலவில்லை

எப்படிச் சொல்வது முன்புபோல
ஆறு ஏழு பத்தி வீடுகளில்
தாய் தந்தை தாத்த பாட்டியென
உற்றார் உறவினரோடு
ஒன்று சேர்ந்து வாழ முடிவதில்லை
அப்படி ஒருவேளை இருக்க ஆசைப்பட்டாலும்
பணிச் சூழலோ வசதி வாய்ப்புகளோ
அப்படி இருக்க அனுமதிப்பதில்லை

எப்படிச் சொல்வது முன்பு போல
எதுகை மோனை அணிகளென
யாப்பிலக்கணத்திற்கு  ஏற்ப
கவிதைகள் இயற்ற இயலுவதில்லை
அப்படி ஒருவேளை முயன்று
கவிதைகள் படைத்துக் கொடுத்தாலும்
படித்து ரசிக்கவோ சிறப்பை உணரவோ
நேரமோ மனமோ இடம் கொடுப்பதில்லை

என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது
இல்லையெனில் அன்னம்போல் யாளிபோல்
எத்தனை உயர்வுடையதாயினும்
கற்பனை போலாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது

Thursday, October 20, 2011

முரண்-

மையிருட்டு மனம் படைத்த அரசியல் வாதிகள்எல்லாம் ஏன்
தூய வெண்மை ஆடைகளையே அதிகம் அணிகிறார்கள் ?
நேர்மைக்கு சமாதிகட்டும் அவர்களேஅது குறித்து ஏன்
அதிகம் அங்கலாய்க்கிறார்கள் ?

வெகு நாட்கள் என்னைக் குடைந்தெடுக்கும் கேள்வி
யார் யாரிடமோ கேட்டும் தெளிவு பிறக்கவில்லை
கேட்டுத்தான் வைப்போமே என என் துணைவியிடம் கேட்டு வைத்தேன்

"விளக்கமாகச் சொன்னால் அலுப்பு தட்டும்.மறந்தும் போகும்
கதையாகச் சொல்லட்டுமா " என்றாள்

"இதற்கும் கதை இருக்காஅப்படியே சொல் அனைவருக்கும் ஆகும் "என்றேன்

அவள் தொடர்ந்தாள்

ஒரு காட்டுக்குள்  நான்கு பேர் போய்க்கொண்டிருந்தார்கள்
ஒருவருக்கு பார்வை கிடையாது
ஒருவருக்கு காது முற்றாகக் கேட்காது
ஒருவருக்கு இரு கால்களும் இல்லை
ஒருவருக்கு இரு கைகளும் இல்லை

காது கேளாதவர் வழி பார்த்துக் கூட்டிச் செல்ல
கண் தெரியாதவ்ர் அவரைப் பற்றித் தொடர
கால்கள் இல்லாதவர் கைகள் இல்லாதவர் மேல் அமர்ந்து கொள்ள....
இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்

அப்போது திடுமென்று காது கேளாதவர்
"தூரத்தில் குதிரைகள் வரும் ஒலி கேட்கிறதே "என்றார்

உடனே கண்கள் இரண்டும் தெரியாதவர்
" ஆமாம் ஆமாம் புழுதி பறப்பது கூடத் தெரிகிறதே
குறைந்தபட்சம்   இருபது குதிரைகளாவது இருக்கும் "என்றார்

அப்போது கால்கள் இரண்டும் இல்லாதவர்
"திருடர்களாய் இருக்கக் கூடும் நமக்கேன் வம்பு
வேகமாக ஓடிவிடலாம்" என்றார்

கைகள் இல்லாதவர் அலட்சியமாக
"அதெல்லாம் தேவையில்லை அவர்கள் அருகில்  வரட்டும்
நாமா அவர்களா ஒரு கை பார்த்துவிடுவோம் " என்றார்

நான் ஆர்வ மிகுதியால் "அப்புறம் " என்றேன்

"அப்புறமென்ன அப்புறம் எல்லாம் அவ்வளவுதான் "
எனச் சொல்லி எழுந்து போய்விட்டாள்

வழக்கம் போல  என்னுள் குழப்பமே கூடிக்கொண்டு போனது
கதைக்கு பதில் விளக்கமே கேட்டிருக்கலாமோ ?

 

Monday, October 17, 2011

படித்தவன் எப்போதும் புத்திசாலி

ஊர் இரண்டுபட்டுக்கொண்டிருந்தது

கையில் கிடைத்த
ஆயுதங்களைத் தூக்கியபடி
யார் யாரோ
எதிர் எதிர் திசையில்
வெறியோடு ஓடிக் கொண்டிருந்தார்கள்

தனித்து வந்த ஒருவரை நிறுத்தி
காரணம் கேட்டேன்
"விஷயம் தெரியாதா
நம்ம ஆளை அவங்கஆளு
வெட்டிப்போட்டாங்களாம் " என்றார்

இப்போது நான் என்ன செய்யனும் என
குழம்பிக் கிடைக்கையில்
மாமா ஓடி வந்தார்

"கிளம்பு கிளம்பு
கருப்புவை சின்னான் வெட்டிபுட்டான் " என்றார்

"அவர்களுக்குள்தான்
இடத் தகராறு இருந்ததே
அதனால் அடித்துக் கொண்டிருப்பார்கள் " என்றேன்

"அது எனக்குத் தெரியாதா
நமக்கும் இதே மாதிரி
வயல் பிரச்சனை இருக்கு
நமக்கும் நாலு பேரு வேணும்
நாம வெட்டப் போறோமா ?
வெட்ட வாங்கப் போறோமா ?
எவனோ நாலு முட்டப் பயக வெட்டப் போறான்
நாலு முட்டப்பயக வாங்கப் போறான்
போலீசெல்லாம் வந்தாச்சு
கிளம்பு கிளம்பு
கூட்டத்தோட நின்னுட்டு வருவோம்  " என்றார்

 மாமா அனுபவஸ்தர்
எது சொன்னாலும் அதில்ஆயிரம் காரணமிருக்கும்
நானும்  சட்டையைப் போட்டு கிளம்பினேன்

தூரத்தே  கலவர ஒலி
யுத்த பூமியை நினைவுறுத்தியது
வெட்டுப் பட்டு ரத்தம் கொப்பளிக்க
ஆஸ்பத்திரியை நோக்கி
நாலைந்து பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்

வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்

Saturday, October 15, 2011

தேர்தல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(அடுத்த தேர்தல்  வந்துவிட்டது  ஆயினும்
நிலைமைகள் எப்போதும்போல்தான்  உள்ளது 
எனவே புதிதாக  ஒரு பதிவு  போடாமல் 
பழைய பதிவையே  மிண்டும்  பதிவாகத
தந்துள்ளேன்  )

Thursday, October 13, 2011

எளிமையின் விலை

அரிதான விஷயங்களையெல்லாம் மிக இனியதாக
மட்டுமின்றிமிக மிக எளிமையாகவும் சொல்லிப்போன
ஔவைப் பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

ஆரம்ப நாட்களில் நானும் அப்படி எழுதிப் பழக எண்ணி
ஒரு கவிதை எழுதிஅந்த பத்திரிக்கை ஆசிரியரை அணுகினேன்

உறவினர் என்றாலும் அவர் முகத்தில் சிரிப்பு இல்லை
"அனைவருக்கும் தெரிந்ததைஅனைவருக்கும் புரியும்படி
எழுதியிருக்கிறாய் இது கவிதையே இல்லை" என
கிழித்து எரிந்து விட்டார்

சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கவிதையுடன் போனேன்
"ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்ததைத்தான் எழுதியிருக்கிறாய்
ஆயினும் அனைவருக்கும் புரியும் படியல்லவா இருக்கிறது
எங்கள் பத்திரிக்கைக்கென தரமான வாசகர் வட்டம் இருக்கிறது
அதற்கு இது சரியாக வராது "என்றார்

அப்புறம் யோசித்துப் பார்த்து வார்த்தைகளை எப்படியெல்லாம்
உடைக்கக் கூடுமோ அப்படியெல்லாம் உடைத்து அடுக்கி
படிமம் ,குறியீடு எனக் குழப்பி எனக்கே என்னவென புரியாதபடி
ஒன்று எழுதிக்கொண்டு அவரைப் பார்த்தேன்

முதன் முதலாக என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார்
" இது கவிதை  இப்படியே எழுது  "என்றார்

நானும் சராசரி நிலையைவிட்டு அதிகம் விலகி
எப்படியெல்லாம புரியாதபடி எழுத முடியுமோ
அப்படியெல்லாம் எழுதிவிஷயங்கள் ஏதுமின்றியே
வார்த்தை விளையாட்டில் விற்பன்னன் ஆகி
கவிஞனாகிப் போனேன் பிரபல்யமாகியும் போனேன்
ஆயினும் மனதின் ஆழத்தில் ஒரு உறுத்தல் மட்டும்
இருந்து கொண்டே இருந்தது

பின்னர் ஒரு நாள் அந்த ஆசிரியரே என்னைத்
 தொடர்பு கொண்டு
" தீபாவளி மலருக்கு கவிதை ஒன்று வேண்டும்" என்றார்
புதிதாக எழுத நேரமின்மையால் முதலில் அவர்
கிழித்துப் போட்டதையே மீண்டும் ஒருமுறை
எழுதிக் கொடுத்தேன்
பெற்றுக் கொண்டு அவர்"அருமை அருமை " என்றார்

"நன்றாகப் பாருங்கள் அதை உங்கள் வாசகர்களுக்கு
சரியாக வராதுகவிதையே அல்ல எனச்
சொல்லிக் கிழித்தெறிந்தது "என்றேன்

"அது  அப்போது  இப்போது உனக்கெனவே ஒரு
வாசக்ர் வட்டம் இருக்கிறதே
நீ எப்படி எழுதினாலும் சரி" என்றார்

முன்பு ஒருமுறை பாராளுமன்றத்தில்
"காந்தியை எளிமையாக வைத்துக்கொள்வதற்கு
நாங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது " என்றார்
ஒரு அரசியல் பெரும் தலைவர்

 எளிமைக்கு எதற்கு அதிகச் செலவு
எனக்கு அப்போது அதன் பொருள் புரியவே இல்லை

நான் எளிமையாக எழுதிய கவிதையை அரங்கேற்ற
ஆன நாட்களையும் அதற்காக  நான் எடுக்க வேண்டி ருந்த
அவதாரங்களையும்   எண்ணிப் பார்க்கையில் தான்
பொய்யர்கள் பூமியில் எளிமைக்கான விலை கூட
மிக மிக அதிகம் எனப் புரிந்து கொண்டேன்

Tuesday, October 11, 2011

தேர்தல் -ஒரு சிந்தனை

நாம் சில சூழ் நிலைகள் ஏற்படவேண்டுமென்பதற்காக
எவ்வளவோமுயன்றிருப்போம் . போராடியிருப்போம்
அது அப்போதெல்லாம் நடக்காது போய் நாம் எதிர்பாராத
நேரத்தில் தானாகவே திடுமென தோன்றினால் எப்படி
இருக்குமோ அப்படி இந்த உள்ளாட்சித்தேர்தல்
நமக்கு வாய்த்திருக்கிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு
கொள்கை விளக்கம் கொடுத்து அணி மாறி மாறி
போட்டி இடும்.அவர்கள் அவ்வப்போது சொல்கின்ற
விளக்கங்களையும் காரணங்களையும் எண்ணிப் பார்த்தால்
மக்களை எவ்வளவு முட்டாள்களாக மதிக்கிறார்கள்
என்பது தெளிவாகத் தெரியும்.நான் அதற்குள் போகவில்லை

அனைத்து கட்சிகளுமே தனக்கென ஒரு ஓட்டு வங்கி
இருப்பதைப் போல ஒரு பெரிய மாயையை உண்டாக்கி
அதை வைத்தே கூட்டணி கணக்கு போடுவதும்
தொகுதி பங்கீடு  செய்வதுமான வேலைகளைச்
செய்து வருகின்றன.உண்மையில் யாருக்கு
எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும்
வெறும் வாய் ஜாலத்தில் எத்தனை கட்சிகள் உதார்
விட்டுக் கொண்டிருக்கின்றன எனபதும்
இந்தத் தேர்தலில் நிச்சயம் தெரிந்து விடும்

எல்லா கட்சிகளிடத்தும் சில சிறப்புகளும்
சில கோளாறுகளும் உண்டு
என்ன காரணத்தினாலோ ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருகட்சியை பிடித்துப் போயிருக்கும்
.இந்தத் தேர்தலை கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிய உதவும் தேர்தலாக நாம் பயன்படுத்த்க் கொள்ளலாம்
கட்சி சின்னமற்ற  உள்ளாட்சிப் பதவிகளுக்கு
நபர்களைப் பொருத்தும்கட்சி சின்னமுள்ள பதவிகளுக்கு
நபர்களைக் கணக்கில் கொள்ளாமல் கட்சிகளை
கணக்கில் கொண்டு அவரவருக்கு பிடித்த கட்சிகளுக்கு
வேறு ஜாதி உணர்வோ இன உணர்வோ இல்லாமல்
வாக்களித்தால்உண்மையான கட்சியின் பலமும் தெரியும்
வெறும் உப்புமா கட்சிகளின் சவுடாலும்  
நிச்சயம்   ஓய்ந்து போகும்

எனவே இந்தத் தேர்தலில் அனைவரும்
ஜாதி மத உணர்வுகளுக்கோ பணத்திற்கோ  ஆட்படாது
நாமனைவரும் தவறாது வாக்களிப்போம்
தமிழக அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிந்து கொள்வோம்
இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினமே என்பதில்
தெளிவாய் இருப்போம்


 

Friday, October 7, 2011

புதிய பரம பதம்

 " வா பரமபதம் விளையாடலாம் "
என்றான் பேரன்

" சகுனிபோல் எனக்கு
சோளி உருட்டும் சாமர்த்தியமில்லை
அதனால் ஏணிகளுக்கும் எனக்கும்
எப்போதும் ஏழாம் பொருத்தமே
என்னை என்றுமே
அவைகள் ஏற்றி விட்டதே இல்லை
சூட்சுமம் சிறிதும் அறியாத
விளையாட்டுக்காரன் என்பதால்
பாம்புகளுக்கோ என்னிடம்
கோபம் மிக மிக அதிகம்
அதனால் என்னை தீண்டாது
விட்டதும் இல்லை
பாதிக்கு மேல் என்னை
ஏறவிட்டதும் இல்லை
என்வே நான் வரவில்லை "என்றேன்

பேரன் தலையிலடித்துக் கொண்டான்

 "தாத்தா நீ பழங்கதைகள் பேசுகிறாய்
விதிகளை மாற்றி வெகு நாட்களாகிவிட்டது
இப்போது பாம்பின் வால் பிடித்து
உயரம் போகலாம்
ஏணிதான் இறக்கி விடும்
வா விளையாடலாம்
வெற்றி நிச்சயம் " என்றான்

நான் விளையாடத் துவங்கினேன்
பாம்பின் வழி உயரம் போவது
மிக மிக எளிதாய் இருந்தது
ஏணியின் இறக்கம்
பாதிக்கும் படியாய் இல்லை

"இந்த விதி வசதியாய் இருக்கிறதே
சிகரத்தை எட்டுதல்
வெகு எளிதாய் இருக்கிறதே
இந்த புதிய விதியை
சொல்லிக் குடுத்தது யார் "என்றேன்

"ரமேசின் தாத்தா " என்றான்

"அவர் என்ன செய்கிறார் " என்றேன்

" அரசியலில் இருக்கிறார் "என்றான்



( சாகம்பரி அவர்களின் கருவை புதிய உருவில்
கொடுத்துள்ளேன் நன்றி சாகம்பரி )


Monday, October 3, 2011

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
என்னைத் தனியே  விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை

வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் ,படிமங்களின் தோல்கள்
கடினமானவையே

என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு


Saturday, October 1, 2011

அஞ்ஞான விளிம்பு ...


எது அவரை தலைகீழாகப் புரட்டிப் போட்டது ?
சொல்லிய கதையா ?சொல்லிய விதமா ?கேட்ட விதமா ?
எல்லோரும்தான் ஹரிச்சந்தரன் கதை கேட்கிறோம்
காந்தியும்தான் கேட்டார்
அவர் மட்டும் எப்படி மகாத்மா ஆகிப் போனார் ?
எது அவரை மாற்றிப் போட்டது ?

எது அவரை ஞானியாக்கிப் போனது ?
நோயா? மூப்பா ? சாவா?
எல்லோரும்தான் மூன்றையும் தினம் பார்க்கிறோம்
கௌதமன் மட்டும் எப்படி மாறிப்போனான் ?
எது அவரை புதியவராக்கிப் போனது ?
அவலமா? அவை தந்த கழிவிரக்கமா ?
அதீத சிந்தனையா?
எது அவரை புத்தனாக்கிப் போனது ?

சூழல் எவரையும் மாற்றிவிடுமா?
மாறுபவருக்கு சூழல் ஒரு பொருட்டில்லையா ?
கேள்விகள் என்னுள் சூறாவளியாய்   சுழன்றடிக்க
நேரம் காலம் மறந்து கோவில் சன்னதியில்
குழம்பிப் போய்க் கிடந்தேன்
அருகில் வந்தமர்ந்த என் சித்தப்பா
ஆறுதலாகத் தலையைத் தடவி
"என்ன குழப்பம் சொல் முடிந்தால் தீர்க்கிறேன் " என்றார்

முழுவதையும் கேட்ட அவர்
"எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
பாட்டி இறந்ததும்
சில மாதம் குழம்பித் திரிந்த தாத்தா
திடுமென ஒரு நாள் காசிக்கு
மரண யாத்திரை கிளம்பிவிட்டார்
நாங்கள் அதிர்ந்து போனோம்
அவரை திடுமென மாற்றிப் போட்டது எது ?
விரக்தியா ?வேதனையா ? ஞானத் தேடலா ?
அவ்ரை வழியனுப்ப போயிருந்த நான்
கடைசியாக இதே கேள்வியை கேட்டேன்
லேசாகச் சிரித்தபடி அவர் இருக்கைக்கு மேலிருந்த
வாசகத்தை காண்பித்தார்
"சுமையைக் குறை சுகமாய் பயணம் செய் " என்றிருந்தது

சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ?
அவருக்கு மட்டும் எப்படிப் புரிந்தது ?
இந்த வாசகம் அவரை முடிவெடுக்கத் தூண்டியதா?
முடிவெடுத்த அவருக்கு வாசகம் கைகொடுத்ததா ?
எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
உனக்குப் புரிந்தால் எனக்கும் சொல் "  எனச் சொல்லிப் போனார்

குழப்பம் கூடியதுதான் மிச்சம்
எனக்கேதும் புரியவில்லை
எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?


Thursday, September 29, 2011

நவராத்திரிச் சிந்தனை


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை
மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும் பெண்கள்தான்
காரணம் என்பதைஇந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனை
ஆதியிலேயே மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக கலைக்கும்
கல்விக்குமான கலைமகளை துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்
காக்கும் திருமாலுக்கு இணையாக கருணையும்
செல்வத்திற்குமான திருமகளை துணைவியாக்கி
குதூகலித்திருக்கிறான்
அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக ஆக்ரோஷமும்
சக்தி மிக்கவளுமான மலைமகளை இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

அதைப் போன்றே 
குழந்தையாய் முழுமையாக அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக  அன்னையாக
கணவனாக அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாக தாரமாக 
வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக
 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே
மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
 நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்
அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
 சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்
அவர்களோடு இணந்து இந்தச் சீர்கெட்ட சமூகம் சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

Monday, September 26, 2011

மர்ம இடைவெளி



தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் ஒன்று
தொடர்ந்து நடக்கிறது

உரையாடலில்
பேசுபவனே கேட்பவனாகவும்
கேட்பவனே பேசுபவனாகவும்
மாறிக்கொள்ளுதலைப் போலவே

இந்நாடகத்தில்
பார்வையாளர்களே நடிகர்களாகவும்
நடிகர்களே பார்வையாளர்களாகவும்
மாறி மாறி
நாடகத்தை தொடர்ந்து நடத்திப் போகிறார்கள்

ஆயினும்
நாடகம் ஒத்திகையற்றததாய் இருப்பதால்
திடுமெனத் தோன்றும் எதிர்பாராத திருப்பங்கள்
அதிர்ச்சியூட்டிப் போவதால்
பலர் நிலை குலைந்து போகிறார்கள்

இயக்குநர் யாரெனத் தெரிந்தால்
முடிவினை அறியக் கூடுமோ என
புலம்பத் துவங்குகிறார்கள்

புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்

இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

பலர் இதை ஒப்புக்கொண்டு
உடன்பட்டுப் போகிறார்கள்

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

இவர்கள் கேள்விக்கு ப்திலேதும் இல்லை

ஒவ்வொருவரும் தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது
முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்

இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

இந்தக் குழுக்களுக்களுக்கு
சிறிதும் தொடர்பே இல்லாது
ஒரு புதிய குழு உரக்கக் கூச்சலிடுகிறது

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இய்க்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் " என்கிறது

இது குழம்பித் திரிபவர்களை
இன்னும் குழப்பிப் பைத்தியமாகிப் போகிறது

பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்டப்  பட்டப்
புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடி ஓடி  ஓய்கிறது

ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவெளி  மட்டும்
குறையாது இருத்தல் போல

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது
தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து கொண்டே  இருக்கிறது

Monday, September 19, 2011

லெட்சுமணக்கோடு


லெட்சுமணக் கோட்டில் நின்று
இருபுறமும் பார்த்த அனுபவம் உண்டா ?

சிற்றுண்டிச் சாலைகளில்
அன்னியர்கள் பிரவேசித்தல் கூடாது
என்கிற எல்லையின் வலதுபுறம்
இட்டிலியில் கிடந்த ஈயை
எடுத்துப் போடும் அசிங்கத்தையும்
வலதுபுறம் மிகப் பணிவாக
அவனே பறிமாறும் லாவகத்தையும்...

நாடக மேடையில்
திரைச்சீலையில் வலதுபுறம்
அவசர அவசரமாய்
முதுகு சொரியும் கண்ணனையும்
இடதுபுறம் முன் மேடையில்
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க
அருள் கொடுக்கும் அதே  கண்ணனையும்

திருமண மண்டபத்தின் பின்னறையில்
இரண்டு பவுன் குறைவதற்காக
ருத்ர தாண்டவமாடும் சம்பந்தியையும்
அது சரிபடுத்தப் பட்டபின்னே
மணவறை மேடையில்
நாகரீகமாய் நடந்துகொள்ளும்
அதே பச்சோந்தி சம்பந்தியையும்

இலக்கியக் கூட்டங்களில்
கற்பைப் பொதுவென வைப்பது குறித்து
அனல்பறக்க பேசிவிட்டு
கூட்டம் முடிந்தவுடன்
புதிதாகச் சேர்த்த சின்னவீட்டை
சிரித்து அணைத்தபடிச் செல்லும்
சிரு
ங்கார வேலர்களையும்

திருவிழாக் கூட்டங்களில்
மனைவி முன்செல்ல
காமக் கண்களைஅலைய விட்டு
பின் சேர்ந்து நடக்கையில்
கண்களில் காதலும் கனிவும   பொங்க
ராமனாய் காட்சி தரும்
அயோக்கிய சிகாமணிகளையும்...

இப்படி

இருளுக்கும் ஒளிக்கும்
பொய்மைக்கும் உண்மைக்கும்
இடையில் நின்று பார்க்கத் தெரிந்தவர்கள்தான்
தலைவர்களாக,
 கவிஞர்களாக
ஏன் ஞானிகளாகக் கூட மாறிப் போகிறார்கள்

நாம் அப்படியெல்லாம் கூட மாறவேண்டாம்
அவர்களைக் கண்டு மயங்கித் தொலையாதிருக்க
ஏமாந்து தொலையாமல் இருப்பதற்காகவாவது
இந்த மாயக் கோட்டில் நின்று பார்க்கப் பழகுவோமா

Saturday, September 17, 2011

இரண்டும் ஒன்றுதானோ ?


வெகு நாட்களுக்குப் பின் தையற்கடை வைத்திருந்த
என் நண்பரைப் பார்த்தேன்
வழக்கம்போல " தொழில் எப்படிப் போகிறது ?"
எனக் கேட்டும் வைத்தேன்
நண்பன் புலம்ப ஆரம்பித்துவிட்டான்

" முன்பெல்லாம் நம் சீதோஷ்ண நிலைக்கு
ஏற்றார்ப் போல அதிக நாள் உழைக்கும் படியான
துணியெடுத்து தைக்கக் கொடுப்பார்கள்
உடலுக்கு ஏற்றார்ப்போல
வடிவமைக்கச் சொல்வார்கள்
அவயங்கள் அசிங்கமாகத் தெரியாதவாறு
கொஞ்சம் பெரியதாகவும் தைக்கச் சொல்வார்கள்

இப்போது எல்லாம் தலை கீழ்
மினுமினுப்பு பளபளப்பு இருந்தால் போதும்
உழைப்பது குறித்து அக்கறையில்லை
உடலை ஒட்டி இருக்கும்படியாகவும்
அவயவங்கள் கொஞ்சம் தெரியும் படியாகவும்
முடிந்தால் பெரிதாகத் தெரியும் படியாகத்
தைக்கச் சொல்கிறார்கள்
கலாசாரச் சீரழிவுக்கு துணை போகிறோமோ என
அச்சம் என்னுள் இருளாய் பரவுகிறது
எனக்கு மனம் வெறுத்துப் போய்விட்டது
தொழிலை மாற்றலாம் என இருக்கிறேன் " என்றான்

அவனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள்
கூறிவிட்டு நடக்கையில் நேர் எதிரே
என் இலக்கிய நண்பனைப் பார்த்துவிட்டேன்
முன்பெல்லாம் முன்ணனி இலக்கியப் பத்திரிக்கைகளில்
அவன் கவி இடம் பெறாத பத்திரிக்கைகளே இருக்காது
சினிமாவிலும் எழுதிக் கொண்டிருந்தான்
இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை
காரணம் கேட்டுவைக்க
அவனும் புலம்பத் துவங்கிவிட்டான்

" முன்பெல்லாம் கவிதையெனச் சொன்னால்
காலம் வெல்லக் கூடியதாய் தரமானதாய்
இருத்தல் வேண்டும் என வலியுறுத்துவார்கள்
உள்ளதை உள்ளபடி உரைக்கக் கூடியதாய்
உண்மையை அழுந்தச் சொல்வதாய்
அவசியம் இருக்கவேண்டும் என்பார்கள்
அனைவரும் ஏற்கும்படியாகவும்
ஆபாசம் அறவே தவிர்க்க வேண்டும் என்பார்கள்

இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது
வக்கிர உணர்வை உடன் உசுப்பிவிடும்
வல்லமை மிக்க காமக் கவிதைகளாய்
அறிவை மழுங்கடிக்கக் கூடியதாகவும்
மனதின் அரிப்பிற்கு தீனி போடும்படியாகவும்
வார்த்தைகள் அவசியம் என்கிறார்கள்
முடிந்தால் வார்த்தைகள் கூட வேண்டாம்
ஆபாச சப்தங்கள் குறியீடாக இருந்தாலே போதும்
இளைஞ்ர்களையும் காமக் கிழடுகளையும்
வசீகரிப்பதாய் இருக்க வேண்டும் என்கிறார்கள்
சமூகம் கெட நானும் காரணமாகி விடுவேனோ என்
எனக்குள் ஒரு நெருடல் விஷமாய்ப் பரவுகிறது
எனக்கு வெறுத்துப் போய்விட்டது
எழுதுவதையே நிறுத்திவிடலாமென இருக்கிறேன்" என்றான்

இவனுக்கும் ஆறுதலாக நாலு வார்த்தைகள் சொல்லி
வீடு வந்து சேர்வதற்குள்
எனக்குள் குழப்பம் கூடிப்போனது
பரமனின் முதுகில் பட்ட அடி
அனைத்து ஜீவராசிகளின் மீதும் பட்டது போல
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?
கவிஞனும் தையற்காரரும் கூட
ஏன் சட்டையும் கவிதையும் கூட
அதற்கு ஒன்றுதானா ?


Thursday, September 15, 2011

எங்கு தமிழ் எதில் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்

சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர்ப்  பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர்ப்  பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது

விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்

எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  
அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Monday, September 12, 2011

நாமளும் தெனாலிராமன்கள்தான்

பாலை விரும்பிக் குடிப்பதுதான்
பூனையின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கு நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை


முதலில் பாலைக் கொடுக்கையிலேயே
மிக மிக சூடாய் கொடுத்திடவேண்டும்
சூடு பொறுக்காது
பாலைக் குடிக்காது ஒடிவிடும்
திரும்ப பசியெடுத்து வருகையில்
மீண்டும் சூடாகக் கொடுக்கவேண்டும்


இப்படித் தொடர்ந்து செய்ய
சூடாக பாலிருக்கிறது என்பதை மறந்து
வெண்மையாக இருப்பதெல்லாம்
சுடும் என்று நம்பத் துவங்கிவிடும்
இனி வெண்மையாக எதைக் கண்டாலும்
பயந்து ஓடத் துவங்கிவிடும்


இனி நமக்கு கவலை இல்லை
பூனை எப்படி ஆனால் என்ன
நமக்கு பால் செலவு மிச்சம்


இப்படித்தான்
கேள்விகள் கேட்பதுதான்
குழந்தைகளின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கும் நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை


முதல் கேள்வி கேட்கையிலேயே
அதை அடக்கி ஒடுக்க வேண்டும்
நம் கோபம் பொறுக்காது
கேள்வி கேட்காது அடங்கிவிடும்
மீண்டும் ஆர்வம் பொங்க
கேள்வி கேட்கத் துவங்கினால்
அரட்டி மிரட்டி அடக்க வேண்டும்


இப்படித் தொடர்ந்து செய்ய
கேள்வி கேட்பதே தவறு என
அப்பாவுக்கு கோவம் வருமென
அந்தப் பிஞ்சு மனதிற்குத் தெரிந்துபோகும்
இனி மனதில் கேள்வி எழுந்தாலே
அடக்கிக் கொள்ளப் பழகிவிடும்


இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை

       
 ---------------          --------------


டிஸ்கி:குழந்தைகள் மனத்தை புரிந்து கொள்ளாது
சிறுவர்களாகவே இருக்கிற வயதில் பெரியவர்கள்
புரிந்துகொள்வதற்காக சிறுவர் மலர் விஷயம்போல
மிக மிக எளிமையாய் சொல்லப்பட்டுள்ளது
பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்

Thursday, September 8, 2011

சைத்தான் இருப்பது மெய்

                     

"சைத்தான் என்பது பொய் அப்படி எதுவும் இல்லை"
இப்படிச் சொல்பவனை தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

கரிய இருள்போர்த்தியபடி குழிவிழுந்த கண்களோடு
கோரைப் பற்களை கடித்தபடி கர்ஜித்து வரும் சைத்தான்
அழிந்து பல காலமாகிவிட்டது

முன்பு போல அவன் முட்டாள் சைத்தான் இல்லை
அவன் புத்திசாலி ஆகி பலயுகங்களாகிவிட்டது
முன்பு போல கோடாலி கொண்டு மரத்தை வெட்டி அவன்
நொந்து சாவதில்லை
மாறாக வேரை பிடுங்கி வெந்நீர் ஊற்றிவிட்டு விழுவதை
வேடிக்கைப் பார்க்கிறான்

நம்மை வீழ்த்தக் கூட இப்போதெல்லாம் அவன்
தன் கோரைப் பற்களையும் கூரிய நகங்களையும் நம்புவதே இல்லை

நம் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
நம்மை பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

பின் வீண் கனவுகளில் கற்பனைகளில் மூழ்கவிட்டு
நோக்கமற்று அலையவிட்டு
நாவுக்கும் மனதிற்கும் குடலை பலியாக்கி
ஆசைக்கும் உணர்வுக்கும் நம் உடலை பலிகொடுத்து
நம் சக்தி முழுவதையும் உறிஞ்சிக் கொள்கிறான்

முடிவாக உல்லாசங்களில் கேளிக்கைகளில்
தேவையற்ற ஆடம்பரங்களில், போலி கௌரவங்களில்
நம்மை முழுமையாக மூழகவிட்டு
நம் வளத்தையெல்லாம் அபகரித்துக் கொள்கிறான்

இப்படி தேரிழந்து ஆயுதமிழந்து சக்தியிழ்ந்து
மண்பார்த்து நிற்கும் மாமன்னனாக ஆனபின்னே
சக்தியற்றவன் உடலில் சட்டெனப் புகும் நோயினைப் போல்
நமக்குள் முழுமையாய் நிறைந்து கொள்கிறான்

நம்மிடம் இப்போது எதுவுமே இல்லை ஆயினும்
தொடர்ந்து வாழ எல்லாமும் வேண்டியதாயும் இருக்கிறது

இப்படியோர் இடியாப்பச் சிக்கலில்
ஆப்பசைத்து மாட்டிய குரங்கு போல் மாட்டி
செய்வதறியாது கைபிசைந்து நிற்கும்வரை
நமக்கு அன்னியன் போலிருந்த சைத்தான்
இப்போது நமக்குள் நாமாகவே மாறி
நமக்கே புதிய வேதம் ஓதுகிறான்

" பணத்தை கொண்டு எதை வேண்டுமானாலும்
செய்ய முடியும்,வாங்க முடியும் என்கிற
இந்த கேடுகெட்ட உலகில்
பணம் சம்பாதிக்க
எந்த கேடு கெட்ட செயலைச் செய்தால்தான் என்ன ?"

சுயநலமாகவும் தர்கரீதியாகவும் யோசித்துப் பார்க்கையிலும்
உலக நடப்பை கூர்ந்து பார்க்கையிலும்
அவன் சொல்வது சரியாக மட்டும் படவில்லை
நிலை தவறிய நமக்கு புதிய கீதை போலவே படுகிறது
வேறு வழியின்றி நம்மை அறியாது
நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்

எனவே
"சைத்தன் என்பது பொய் அப்படி எதுவும் கிடையாது"
இப்படிச் சொல்பவனைத் தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

Sunday, September 4, 2011

இருளும் மௌனமும்



அடர் இருளுக்கும்
உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?

இருளைக் குறைந்த ஒளி என்பான்
பாவேந்தன் பாரதி
அவன்வழியில் யோசிக்கையில்
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது

விழிகளை அகலத் திறந்திருந்தபோதும்
அடர்ந்த இருளில்
பொருட்கள் புலப்படாதது மட்டுமின்றி
அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்
உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள் 
எதிர்மறை எண்ணப் புயலையும்
தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது
அடர்வனத்தில் திசைகள் அறியாது
குழம்பித் திரிகிறேன் நான்

நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு

கதிரவன் எழுமுன் தோன்றும்
அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்

Wednesday, August 31, 2011

கணபதி துதி


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இனிஇல்லை-இனி
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உடன்
வருகிற கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி என்றுமில்லை-இனி
நிறைவுதான் எனத்தெளி

Sunday, August 28, 2011

நினைவுகூறல் கடமை அல்லவா

ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்

குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா

பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா

திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா

இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)

Tuesday, August 23, 2011

வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் ...

சிலைகளுக்கும் பக்தனுக்கும்
இடையில்தான் பூசாரி நிற்கிறான்
ஆதிமூலத்திற்கும் பக்தனுக்கும் இடையில்
நிச்சயமாக அவன் இல்லை
எங்கெங்கோ எதை எதையோ
தேடி அலையும் பாவப்பட்ட பக்தன்
இதை அறிந்து கொண்டால்
பகுத்தறிவும் பெருகிப் போகும்
பூசாரிக்கும் தான் மனிதன் என்று
புரிந்தும் போகும்

சில வித்தைகளுக்கும் சீடனுக்கும்
இடையில்தான் "ஆனந்தாக்கள் "இருக்கிறார்கள்
பரம்பொருளுக்கும் சீடர்களுக்கும் இடையில்
சத்தியமாக இல்லவே இல்லை
அமைதி தேடும் அறிவு ஜீவிகள்
இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்
தேடும் அமைதி இலவசமாய் கிட்டும்
போலி பீடங்கள் தகர்ந்து நொறுங்க
"ஆனந்தர்களின்" வேஷங்களும்
முழுதாய் கலையும்

எவையெல்லாம் இல்லாது
நாமிருக்க முடியாதோ
அதுவாகவே நம்மைச் சுற்றி இருப்பவனை
அடியாள்ம் காட்ட ஒரு வழிகாட்டி தேடி
நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்
போலிகள் காட்டும் வழியில்
நாயாய் அலைந்து சாகிறோம்

நம் நோக்கில் நாடுகளாய்
பூமியைப் பிரித்திருத்தலைப்போல்
அந்த ஆதி மூலம் தன்னை
பத்து பதினைந்தாய் பிரித்துக் கொண்டதில்லை
கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்

இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்
"வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
பக்குவம் நமக்கும் வந்துவிடும்
வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்

Sunday, August 21, 2011

இறுதிப் பா என்றாமோ ?

இணைவதற்கு உதவிடுமோ
இறுதிப்பா என்றாமோ
எனக்குள்ளே உயிர்துடிக்க
உதிரத்தால் எழுதுகிறேன்

பொழுதுபோன வேளையிலே
நெருஞ்சிமுள் காட்டினிலே
வழிதேடி அலைகின்றேன்
வழித்தடமாய் வாராயோ

சுட்டெரிக்கும் பாலையிலே
நீரின்றித் துடிக்கிறேன்
கொட்டுகிற மழையாக
குளிர்விக்க வாராயோ

புயல் சூழ்ந்த கடல் நடுவே
பரிதவிக்கும் படகானேன்
கரம்பிடித்துக்  கரைசேர்க்க
கண்ணாநீ வாராயோ

இனிப்பெல்லாம் கசப்பாக
முழுநிலவு நெருப்பாக
மதியிழந்து வாடுகிறேன்
மகராசா வாராயோ

ஊரெல்லாம் பகையாகி
நம்முறவை மெல்கிறது
ஊரதனின் வாயடைக்க
உடனடியாய் வாராயோ

மறைத்திடவும் தெரியாது
மறந்திடவும் தெரியாது
தரைப்பட்ட மீனாக
துடிதுடித்துச் சாகின்றேன்

ஒருதிங்கள் பொறுத்திருப்பேன்
உனக்காகத் தவமிருப்பேன்
வருகின்ற வழியெல்லாம்
விழிவைத்துக் காத்திருப்பேன்

எல்லையினில் நிற்பதனை
இனியேனும் புரிந்து நீ
துள்ளியோடி வாராயோ
துயரழிக்க வாராயோ

ஆனமட்டும் பொறுத்துவிட்டேன்
அடுத்தவழி நினைத்துவிட்டேன்
காலனவன் தொடும் முன்னே
காத்திடவே வாராயோ

Thursday, August 18, 2011

விட்டு விலகி விடுதலையாகி...

தொட்டு தொடர்ந்து தொடர்கதைகளாகி
வாழ்வென ஆகிப்போனவைகளையெல்லாம்
விட்டு விலகி விடுதலையாகிப் பார்க்கையில்..
சராசரிப் பார்வையில்
நேராகத் தெரிவனவெல்லாம்
சரியாகப் பார்க்கையில்
தலைகீழாகத்தான் தெரிகின்றன

உணவின்றி பல நாளும்
நீரின்றி சில நாளும்
உயிர் வாழக் கூடும் எனினும்
தொடர் சுவாசமின்றி
சில நொடிகள் கூட
உயிர் வாழுதல் இயலாதெனினும்

உணவுக்கெனவும் நீருக்கெனவும்
வாழும் நாளெல்லாம்
உழைத்தே சாகும் மனிதன்
சுவாசம் குறித்து சிறிதும்
கவனம் கொள்ளாது
விலங்கென வாழ்தலே
சரியெனக் கொள்ளுதலை
யோசித்துப் பார்க்கையில்...

அறத்தை மூலதனமாக்கி
பொருளீட்டலும்
அங்ஙனம் ஈட்டிய பொருள்கொண்டு
இன்பம் அனுபவித்தலே
அறவழி என வாழ்தலை விடுத்து

இன்பம் துய்த்தலும்
அதற்கென எங்ஙனமாயினும்
பொருளீட்டத் துடித்தலும்
அறமது குறுக்கிடுமாயின்
அதனை வெட்டிச் சாய்த்து
அரக்கனாய் வாழ்தலே
முறையெனத் தெளிவதைப்
நாளும் பார்க்கையில்..

இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத் தெரிந்திருந்தும்
நேற்றைய கவலைகளில்
நாளைய கனவுகளில்
வாழ் நாளையெல்லாம்
பாழாக்கித் தொலைத்துவிட்டு
"எண்ணங்களால் இமயத்தை
அசைத்து மகிழ்ந்து
செயலால் துரும்பசைக்காது"
வாய்ச் சொல் வீரர்களாய்
வாழ்ந்து வீழ்வோரை
கணந்தோரும் பார்க்கையில்...

காணுகின்ற அனைத்தையும்
பகுத்தறிவுக்கு உட்படுத்தி
பரிசீலித்துப் பார்க்கையில்
மனிதர்களின் பார்வையில்
வௌவால்கள் எல்லாம்
தலைகீழாய் தொங்குதல் போலே
வௌவால்களின் பார்வையில்
மனிதர்கள் எல்லாம்
தலை கீழாய் உலவுதல் போலே

நிலைமாறிப் பார்க்கையில்
நேராகவும் சரியாகவும்
தெரிவன எல்லாம்
தவறாகவும் தலைகீழாகவுமே
தோன்றிச் சிரிக்கிறது

முண்டாசுக் கவி வாக்கின்படி
"சிட்டுக்குருவியைப்போலே
விட்டு விடுதலையாகி .."
விலகி நின்று பார்த்தால்தான்
விளங்காதவை எல்லாம் தெளிவாக
விளங்கத் துவங்குமோ?
புரியாததை எல்லாம் குழப்பமின்றி
புரியத் துவங்குமோ ?

Monday, August 15, 2011

ஒரு சினிநொறுக்ஸ்

பத்மினி பிக்சர்ஸ் என்கிற பெயரில்
திரைபட இயக்குநர் பிஆர்.பந்துலு அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து
மிகப் பிரமாதமான பிரமாண்டமான படங்கள் தயாரித்து இயக்கி உள்ளார்கள்
குறிப்பாக கப்பலோட்டிய தமிழன்.வீரபாண்டிய கட்டபொம்மன்
கர்ணன்முதலான படங்கள்
இவைகள்எல்லாம் காலத்தால்அழியாத மாபெரும் காவியங்கள்.
இவைகள் எல்லாம்பெயரும் புகழும் சேர்த்துக் கொடுத்த அளவு
அவருக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை

அதே சமய்ம் ஏ.பி நாகராஜன் அவர்களும் நடிகர் திலகம்
அவர்களை வைத்து பல படங்கள் இயக்கி உள்ளார்
ஆயினும் அவைகள் எல்லாம் மிகப் பிரமாண்டமான
தயரிப்புகள் எனச் சொல்ல முடியாது என்வே
அவருக்கு பொருளாதர ரீதியில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஏ.பி.என் அவர்களின்
 நவராத்திரி படமும் பி.ஆர்.பந்துலு அவர்களின்
முரடன் முத்து படமும் வெளியாகிறது.அதுவரை நடிகர் திலகம்
அவர்களின் படங்கள் 99 வெளியாகி இருக்கின்றன
இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருப்பதால்
எது 100வது படம் எனச் சொல்லவேண்டிய நிலையில்
நடிகர் திலகம் அவர்கள் இருக்கிறார்கள் .தமிழ் நாடே
நடிகர் திலகம் அவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறது

விமர்சனங்கள் மற்றும் 9 விதமான கதாபாத்திரங்களில்
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு மற்றும் மக்கள் ஆதரவு என
அனைத்திலும் நவராத்திரியே முன்னணியில் இருந்ததால்
நவராத்திரியே 100 வது படம் என அறிவிக்கிறார்.

இது நடிகர் திலகம் அவர்களை வைத்து நஷ்டப்பட்டாலும்
பரவாயில்லை என செலவு அதிகம் செய்து சரித்திரப் படங்களாகவும்
புராணப் படங்களாகவும் எடுத்த பி.ஆர் பந்துலு அவர்களை
மிகவும் சங்கடப் படுத்திவிடுகிறது

அந்த வேதனையில் அதுவரை புரட்சித்தலைவரை வைத்து படமே
எடுக்காத பி.ஆர் பந்துலு அவர்கள் முதன் முதலாக
மிகப் பிரமாண்டமான படமாக ஒரு படம் எடுக்கிறார்
ஒரு வேகத்தில் எடுக்கும் படத்தில் எத்தனை சிறப்புகள்
செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அந்தப் படத்தை
தன் வாழ் நாள் சாதனைப் படமாகவே எடுக்கிறார்
அதுதான் ஆயிரத்தில் ஒருவன்.
அந்தப் படம் வசூலில் மிகப் பெரிய சாதனைப் படைத்து
இன்றுவரை எவர் க்ரீன் படமாகவே உள்ளது

பி.ஆர் பந்துலு மட்டும் அல்ல தமிழ் பட சாதனை இயக்கு நர்கள்
ஏ.பி. என் அவர்களும் ஸ்ரீதர் அவர்களும் கூட தங்களது
 சாதனை மற்றும்சோதனைப் படங்களால் வந்த
 பொருளாதரப் பின்னடைவை புரட்சிதலைவரை வைத்து
 படம் எடுத்துதான் சரிசெய்து கொண்டார்கள்
அந்தப் படங்கள் எதுவென தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாமே !


சினி நொறுக்ஸ் தொடரும்

Wednesday, August 10, 2011

மரண பயம்.?

குற்றவாளிபோல் நான் இருக்க
என்னைச் சுற்றி
மகனும் மகளும் மருமகளும்

"நான் என்ன குறை வைக்கிறேன்னு
நீங்களே நேரடியா கேளுங்கோ

காலையில் ஆறு மணிக்கு
ஸ்ராங்கா ஒரு கப் காஃபி
வாக்கிங் போய் வந்ததும்
ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி
பதினொரு மணிக்கு
முளைகட்டிய பயறு ஏதாய்ச்ச்சும்
மதியம் காய்கறியோடு
அளவான சாப்பாடு
சாய்ந்திரம் ஏதாவது ஜூஸ்
ராத்திரி எண்ணையில்லாம
சப்பாத்தி நாண்
 இப்படி ஏதாவது
முடியுதோ முடியலையோ
நான் சரியாகத்தான் செய்து தந்தேன்
இப்போது ஒரு மாதமாய்  அவர் சரியாக
சாப்பிடரதும் இல்லை
முகம் கொடுத்து பேசரதும் இல்லை"
முந்தானையால் கண்ணீரைத்
துடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்

" கோவில் போய்வர ஆட்டோ
ஆன்மீக டூர் போகணுமா
ஆறு மாதத்துக்கு ஒருமுறை
அதுக்கும் ஏற்பாடு பண்ணித்தாரேன்
என்னிடம் பணம் கேட்கச்
சங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு
நானும் யோசிச்சு யோசிச்சு
முடிந்ததையெல்லாம் செய்யரேன்
அப்படியும் ஏன் இப்பவெல்லாம்
சரியா பேசமாட்டேங்கராருன்னு தெரியலை"
பல நாள் அடக்கிவைத்ததை
கொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்

"மனதில் என்ன குறை இருந்தாலும்
சொல்லுப்பா
எதுன்னாலும் செய்யுறொம்
எங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா"
எனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்
பார்த்துப் போக வந்த மகள்

நான் என்னவெனச் சொல்வது ?
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

ஆட்டுக்குத் தேவையான
அனைத்தும் கொடுத்தும்
எதிரில் புலியைக்
கட்டிவைத்த கதையாய்...

வீட்டுக்குள்
கரு நாகம்படமெடுத்து நுழைந்ததைக்
கண்ணாரப் பார்த்தும்
இருப்பிடம் தெரியாது வீட்டுக்குள்
பயந்து திரிபவன் ..நிலையாய் 

நாற்பதாய் இருந்த
நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்...

அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்..

காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?

எப்படி அவர்களை நோக வைப்பது ?

Monday, August 8, 2011

மீண்டும்....

கோ வில்களில் உற்சவ மூர்த்தி நகர்வலம் போயிருக்கிறார்
என்றால் சன்னதியை சாத்தி விடுவார்கள்
பூஜை தீப ஆராதனையெல்லாம் உற்சவ மூர்த்தி
சன்னதி திரும்பியவுடன்தான்

அதைப்போலவே
ஒருவார காலம் வலைச்சர ஆசிரியர் பணியில் இருந்ததால்
என் பதிவின் பக்கம் வரவே இயலவில்லை
எந்தப் பதிவர்களின் பதிவையும் பார்க்க இயலவில்லை
பின்னூட்டம் இடவும் முடியவில்லை.
அது மிகவும் மனச் சங்கடம் அளிப்பதாகத்தான் இருந்தது

ஆயினும்
என்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் பல புதிய
பதிவர்களை அறிமுகம் செய்துவைத்ததும்
அதன் காரணமாக மிக நன்றாக பதிவுகள் இட்டும்
அதிக பின்னூட்டம் பெறாமல் இருந்த பல பதிவர்களின்
பதிவுகளில் அதிக பின்னூட்டங்களைப் பார்த்ததும்,
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடியதைப்பார்த்ததும்
என்னுடைய மன வருத்தம் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது

பல புதிய் பதிவர்களுக்கு வலைச்சரம் குறித்துக் கூட தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் தெரிந்து கொண்டுஅவர்களையும் அதில் இணைத்துக் கொண்டு
 எனக்கும் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தது
மிகவும் மகிழ்வளிப்பதாய் இருந்தது

வெகு காலம் பதிவிடாமல் இருந்த நல்ல பதிவருக்கு
நான் வலைச்ச்ரம் மூலம் வேண்டுகோள் விடுக்க
அவரும் உடன் தொடர்பு கொண்டவிதமும்
அவர் வரவை உற்சாகமாக வரவேற்று பல பதிவர்கள்
உடன் பின்னூட்டமிட்டு வாழ்த்தியதும் எனக்கே
பதிவுலகின் எல்லையற்ற தன்மையை அதன் பலத்தை
மீண்டும் ஒருமுறை உணரவைப்பதாய் இருந்தது

அதிக அளவில் பின்னூட்டமிட்டு கௌரவித்த அனைவருக்கும்
மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வழக்கம்போல் தொடர்ந்து
பதிவிடத் தயாராகிவிட்டேன் என இந்தப் பதிவின் மூலம்
தெரியப்படுத்திக்கொள்கிறேன்

தொடர்ந்து சந்திப்போம்...வாழ்த்துக்களுடன்...

Saturday, July 23, 2011

முத்தான மூன்று முடிச்சு

மாய உலகம் ராஜேஸ் அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க

முத்தான மூன்று முடுச்சு பதிவுத் தொடரினை இங்கே

உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்

மானே தேனே என கமலஹாசன் ஆங்காங்கே

போட்டுக்கொள்ளச் சொல்லுகிற மாதிரி

"எனக்கு" என்பதையும்" மூன்று"

என்பதையும்ஆங்காங்கே சேர்த்துக்கொள்ள வேணுமாய்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பிடித்த உறவுகள்

1.தாயாய் தந்தையாய் இருக்கிற அன்பான மனைவி    
2.ஆண் வாரிசுக்குரிய பொறுப்போடு இருக்கிற பண்புமிக்க  பெண்வாரீசுகள்
3. சுய நலமற்ற நண்பர்கள்

பிடித்த உணர்வுகள்.  
               

1.அன்பு 
2.இரக்கம்
3.சந்தோஷம்

பிடிக்காத உணர்வுகள்.              

1.அச்சம்
2.ஆணவம்  
3.கழிவிரக்கம்

முணுமுணுக்கும் பாடல்கள்

1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா
2.துள்ளாத மனமும் துள்ளும்
3.தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

பிடித்த திரைப்படங்கள்

1.உதிரிப் பூக்கள்  
2.அன்பே சிவம்  
3.புன்னகை

அன்புத் தேவைகள்  

1.குடும்பம்  
2.உறவினர்கள்  
3. நண்பர்கள்

வலிமையை அழிப்பவை

1.அச்சம்
2.சோம்பல்  
3.கவலை

குட்டித் தத்துவம்  

1.அனுபவமே சிறந்த ஆசான்
2.கிட்டாதாயின் சட்டென மற
3.ஊக்கமது கைவிடேல்

பயமுறுத்தும் பயங்கள்  

1.வயதொத்தவர்களின் மரணம்
2.இயற்கையின் சீற்றங்கள்
3.ந்ட்பு வட்டத்தில் கறுப்பு ஆடுகள்

அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.சம நிலை மனது
2.திருப்தி
3.அமைதி

கற்க விரும்புவது  

1.யோகா    
2.வயலின்  
3.சமையல்

வெற்றி பெற வேண்டியவை

1.நேர்மறை எண்ணங்கள்
2.முறையான பயிற்சி
3.விடா முயற்சி

சோர்வு நீக்க தேவையானவை  

1.பிடித்த பாடல் கேட்பது
2.சூடான காபி
3.குழந்தைகளுடன் உறவாடுவது

எப்போதும் தயாராக இருக்க வெண்டியது    

1.உடல் நலம்    
2.செல்வ நிலை
3.உறவுகளின் நெருக்கம்

முன்னேற்றத்திற்கு  தேவை   

 
1.ஆசை  
2.பயிற்சி  
3.தொடர் முயற்சி

எப்போதும் அவசியமானது

1.உடல் நலம்  
2.போதுமான செல்வம்
3.உறவுகளுடன் நெருக்கம்

பிடித்த தத்துவம்  



1.இதுவும் கடந்து போகும்
2.உள்ளத்தனையதே உயர்வு
3.உடையது விளம்பேல்

தெரிந்து தெரியாது குழப்புவது

1.கடவுள் 

2.மனது 
3.இயற்கை

எரிச்சல் படுத்துபவர்கள்

1.பேசத் தெரிந்த முட்டாள்கள்

2.பேசத் தெரியாத புத்திசாலிகள்
3.பேச்சிலேயே சுகம் காண்பவர்கள்

மனங்கவர்ந்த பாடகர்கள் 

1.பி.பி.ஸ்ரீனிவாஸ்  

2.ஏ எம் ராஜா 
3.இளைய ராஜா

இனிமையானவை

1.புத்தகம் படிப்பது 

2.நண்பர்களுடன் உரையாடுவது
3.தனிமையில் உலாவுவது

சாதித்தவர்களின் பிரச்சனைகள்


1.தக்க வைத்துக் கொள்ள போராடுவது

2.உடன் அடுத்து உள்ளவர்களை சந்தேகிப்பது
3.தொடர முயலாது தேங்கி விடுவது

பிடித்த பழமொழிகள் 

1.மீன் பிடித்துக் கொடுத்துப் பழக்காதே மீன் பிடிக்கச் சொல்லிக் கொடு  

2.வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை செய்வதை வித்தியாசமாகச் செய்கிறார்கள்
3.மரம் வெட்டச் சொல்லி மூன்று மணி நேரமும் கோடாரியும் கொடுத்தால் முதல் இரண்டுமணி நேரத்தை  கோடாலியை கூர்படுத்துவதில் செலவிடு

 பதிவிட அழைக்கும் மூவர்  

 
1.மஞ்சுபாஷினி(http://manjusampath.blogspot.com/)
2,சந்திர கௌரி(http://kowsy2010.blogspot.com/)
3.வானதி (http://vanathys.blogspot.com/