Sunday, March 13, 2016

தினம் நன்மை தடையின்றித் தொடர.....

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள் என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாகக்  கற்றுவிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தமதில்  என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் யானையது  அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

மதமென்ற ஓரமைப்பை
முன்னோர்கள்  ஆக்கிவைத்த
மகத்துவத்தை  மனமுணர்ந்தால்  போதும் -முன்னே
சொன்னதெல்லாம் மிக எளிதாய் விளங்கும்  

11 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஆசையை அடக்கி வச்சிட்டுத்தானே வாழுறோம் இங்கே...

நல்ல அறிவுரை குரு !!!

Thulasidharan V Thillaiakathu said...

மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்/

உண்மை அதுவே. அருமையான வரிகள் முழுவதும்..

ஜீவி said...

மனதைக் கவர்ந்த கவிதை. அறிவைச் சீண்டிய கவிதையும் கூட..

//மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்தெடுத்தால்//.

மனமும், அறிவும் சேர்ந்து ஊர்கோலம் போகும் பொழுது பெண்-ஆண் ஜோடி சேர்ந்தாற் போல அழகாகத் தான் இருக்கிறது.

மனம் அறிவை அடக்கும் பொழுதோ, அறிவு மனதை ஆட்டுவிக்கும் பொழுதோ ஒலிப்பது, கலகக்குரலோ கவிஞரே! இரண்டுக்கும் இந்த சக்களத்தி சண்டை ஏன் கவிஞரே!

மனமும், அறிவும் எதிர்--நேர் என்றில்லாமல், நேர் நேராய் இணைந்து சங்கமிக்கும் காலம் எப்போ, கவிஞரே??..

திண்டுக்கல் தனபாலன் said...

அடக்கி வைக்க அவ்வளவு எளிதா என்ன...?

வலிப்போக்கன் said...

ஆசைப் பட்டால் கிடைக்காது என்பதால் ஆசை படுவதே இல்லை அய்யா...

G.M Balasubramaniam said...

/மதமென்ற ஓரமைப்பை
முன்னோர்கள் ஆக்கிவைத்த
மகத்துவத்தை மனமுணர்ந்தால் போதும் -முன்னே
சொன்னதெல்லாம் மிக எளிதாய் விளங்கும்/ பல சங்கடங்களுக்கும் அதுவே காரணம் என்று தோன்றுகிறது

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

சட்டம் எது எது தவறு எனச் சொல்லுகிறது
என்பதை அறிந்து கொள்ளும் முன்னால்
மனச்சாட்சிதான் எனக்கு வழிகாட்டியாய் இருந்தது
அதற்கு நியம நிஷ்டைகள் உதவியாய் இருந்தது
அதற்கு மதம் காரணமாய் இருந்தது.

Yaathoramani.blogspot.com said...


ஜீவி //
மனமும், அறிவும் சேர்ந்து ஊர்கோலம் போகும் பொழுது பெண்-ஆண் ஜோடி சேர்ந்தாற் போல அழகாகத் தான் இருக்கிறது. //

மனம் கவர்ந்தது ..

கரந்தை ஜெயக்குமார் said...

அறிவதனை வளர்தெடுப்போம் ஐயா
தம+1

கோமதி அரசு said...

நல்ல கவிதை.மனதை அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும் என்பார் வேதாத்திரி மகரிஷி.

சிவகுமாரன் said...

அருமையான சந்தம். ஜீவீ சொல்வதைப் போல் மனமும் அறிவும் சேர்ந்து பயணித்தால்,.. எல்லாம் சுகமே

Post a Comment