Monday, March 7, 2016

பரிணாமம் அல்லது யதார்த்தம்

நீங்களாக எதையும் கொடுத்ததில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப்  பலனின்றி
நாங்கள் தான் எடுத்துக் கொள்கிறோம்

எடை குறைந்தும்
கூடுதல் விலைகொடுத்தும்
காய்ந்த சொத்தை காய்கறிகளைச்
சந்தையிலிருந்து வாங்கி வந்து
எங்களை அவஸ்தைக்குள்ளாக்கினீர்கள்

வேறு வழியின்றி இப்போது
நாங்களே சந்தை செல்ல
ஆரம்பித்து விட்டோம்

நாலு முறை அலையச்  சங்கடப்பட்டு
வரிசையில் நிற்பது
சுயகௌரவக் கேடென்று
ரேசன் கடையைத் தவிர்த்தீர்கள்

நாங்கள்தான் இப்போது போய்க்கொண்டுள்ளோம்

அதிகக் கூட்டம் எனச் சொல்லியே
மின் கட்டணம் செலுத்தாது நாள் கடத்தி கடத்தி
கடைசி தேதி வர
"ஆபீஸில் அதிக வேலை நீயே கட்டிவிடு "என்றீர்கள்

இந்தக் கடைசி நேர அவஸ்தை எதற்கென்று
இப்பொது நாங்களே  கட்டிவருகிறோம்

விற்கிற விலைவாசியில் ஒரு வரவு
அரைக்கிணறு தாண்டத்தான் சரியாகிறது என
நீங்கள் புலம்பத் துவங்கினீர்கள்

நாங்களும் பணிக்குச் செல்லத் துவங்கிவிட்டோம்

இப்பொது நாட்டுப் பிரச்சனையைத்  தீர்க்க
சட்ட மன்றம் அனுப்பினால்
 நாக்கைத் துருத்தி சண்டையிடுவதிலும்
ஆபாசப் படம் பார்ப்பதிலும்
அதிக அக்கறை கொள்கிறீர்கள்

எங்களுக்குரிய பங்கை நீங்களாகக் கொடுத்து
எங்களை அனுமதிப்பீர்கள் என எதிர்பார்த்து
 ஒவ்வொரு  கூட்டத் தொடரையும்
ஆவலாகப் பார்த்திருந்தோம்
 இதிலும் அதிகம் ஏமாந்து போனோம்

இதையும் நாங்களாக
எடுத்துக்கொண்டாதால் உண்டு
நீங்களாக நிச்சயம் தரப் போவதில்லை என்பதில்
இப்போது நாங்கள் உறுதியாயிருக்கிறோம்

உங்களுக்கு ஒரு பெருமையெனில்
முன் நிற்பதும்
வசதியெனில் மட்டுமே
விட்டுக் கொடுப்பதுவும்
(சாலை மறியலில் முன்  வரிசை  )
சிறுமையெனில் விலகி நிற்பதுவும்
உங்கள் பரம்பரைக் குணம்தானே

பிரசவம் எனச் சொன்னால்
நெஞ்சு நிமிர்த்தி மருத்துவமனை வரும்
எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே
போய் வருகிறோம் என்பதுவும்
உலகறிந்த விஷயம் தானே ?

5 comments:

KILLERGEE Devakottai said...

நடைமுறை உண்மைகள் கவிதை வரிகளில்.....

கரந்தை ஜெயக்குமார் said...

மகளிர் தினத்தில்
அருமையான கவிதை
நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பரிணாமம் என்றும் கொள்ளலாம். யதார்த்தம் என்றும் கொள்ளலாம்.

G.M Balasubramaniam said...

பெண் சுதந்திரம் என்பதில் பல அபிப்பிராயங்கள் இருக்கிறது சுதந்திரம் கேட்டுப் பெறுவதல்ல கிடைக்கப் படுவது பார்வைக்குப் பெண்கள் இளைத்தவர்கள் போல் தோன்றினாலும் உண்மையில் பலம் மிகுந்தவர்களே

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

Post a Comment