Monday, March 7, 2016

நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்

சமை யலறையிலும்
படுக்கையறையிலும்
சுதந்திரம்  கொடுப்பது போல் கொடுத்து
சுகம் அனுபவிக்கத் தெரிந்தவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
அந்தச் சுகத்தை
என்று அறியப்போகிறார்கள் ?

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப் படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

7 comments:

G.M Balasubramaniam said...

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் இது பேராசை இல்லையா. ஆண்களும் கூட இரவில் நடமாடுதல் சிரமம்தான்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்து வருகிறோம். உளப்பூர்வமாக உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை

MANO நாஞ்சில் மனோ said...

மகளுக்கு கொடுக்கும் சுதந்திரம்போல எல்லாப் பெண்களுக்கும் சுதந்திரம் கிடைத்திருந்தால் நாடு என்றைக்கோ முன்னேறி இருக்கும் !

UmayalGayathri said...

சுதந்திரம் என்பதுகொடுப்பதும் அல்ல, எடுப்பதும் அல்ல. அது இருப்பது. ஆனால்....இப்போது அதை புரிவாரில்லை.

// அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப் படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்//

நன்றாய் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா நன்றி

UmayalGayathri said...

த.ம 2

எப்போதும் அதை புரிவாரில்லை...

வெங்கட் நாகராஜ் said...

அருமை ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமைஐயா
தம +1

Post a Comment