Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Thursday, July 28, 2016

பதிவர் சந்திப்புப் பல்லவி

 சுவையான கனிகளை
இரசித்து உண்ட பின்
அது உண்டான மரம் பார்க்கும் ஆசை

வெக்கைப் போக
அந்த இதமான சூழலைத் தந்த
கருமேகங்களைக்  காண ஆசை

நல்ல விருந்தினை
இரசித்துப் புசித்தப்  பின்
அதைச் சமைத்தவனைப் பார்க்கும் ஆசை

மணக்கும் மல்லிகையைப்
நுகர்ந்ததும்
மதுரையைப் பார்க்கும் ஆசை

மொறுமொறு முறுக்கினை
கடித்து முடித்ததும்
மணப்பாறைப் பார்க்கும் ஆசை

நாவைக் குளமாக்கும் அல்வாவை
உண்டு முடித்ததும்
நெல்லையைக் காணும் ஆசை

விடாது தொடருதல் போல

சிறந்தப் பதிவுகளைப் படித்ததும்
அதைப் படைத்தவனைப்
பார்க்கும் ஆசை

விடாது தொடருதல் என்னுள்

நடந்து முடிந்த சந்திப்புக்கள்
தொடர்ந்து ஓடுது கண்ணுள்

என்று ?
எங்கு ?
எப்போது ?
என்னும் கேள்விகளோடு

வழக்கம்போல்
ஊதுகிற சங்கை ஊதிவைக்கிறேன்

விதைக்கிற விதையை விதைத்து வைக்கிறேன்

சரணங்களும்
அனுசரணங்களும்
பல்லவியைத் தொடரும்
என்கிற அதீத நம்பிக்கையுடன்  

Tuesday, July 5, 2016

அடுத்தப் பதிவர் சந்திப்பு

ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டி
முடிவுறும்போதும் , அடுத்துப் போட்டி
 நடக்க இருக்கிற நாட்டை முடிவு செய்து
அறிவித்து விடுகிற மாதிரியே....

சென்னையில் பதிவர் சந்திப்பு முடிந்த
நாளில்  அடுத்த சந்திப்பு நடத்த விரும்புகிற
மாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட
சென்னை மாவட்டப் பதிவர்கள் அனைத்து
மாவட்டப் பதிவர்களையும் அணுகி முடிவெடுக்க
முயன்றார்கள்

அப்போது ஈரோடு மாவட்டப் பதிவர்களும்
மதுரை மாவட்டப் பதிவர்களும் தங்கள்
மாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற
முனைப்புடன் இருந்தார்கள்

முடிவாக அடுத்த பதிவர் சந்திப்பு ஈரோட்டில்
நடத்த முடிவெடுத்து அது குறித்து மேடையிலும்
அறிவிப்பு வெளியிடப்பட்டது

சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக ஈரோட்டில்
நடத்த முடியாமல் போனதால் அந்த வாய்ப்பைப்
பயன்படுத்தி மதுரை மாவட்டப் பதிவர்கள்
அடுத்த பதிவர் சந்திப்பினை மிகச் சிறப்பாக
நடத்தி முடித்தார்கள்

மதுரை மாவட்டப் பதிவர்கள் சந்திப்பில்
பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட
புதுகைப்  பதிவர்கள் அடுத்த சந்திப்பு தங்கள்
மாவட்டத்தில்தான் நடத்த வேண்டும் என்கிற
கோரிக்கையை முன்வைத்து அந்த சந்திப்பில்
ஒப்புதல் பெற்று மிகச் சிறப்பான ஒரு பதிவர்
சந்திப்பை புதுகையில் நடத்தினார்கள்

சந்திப்பின் சுவாரஸ்யம்,கூடுதல்
 தொடர் நிகழ்வுகள் மற்றும் சந்திப்பு ஏற்படுத்திய
மலைப்பின் காரணமாகவோ என்னவோ
புதுகைச் சந்திப்பில் எந்த மாவட்டத்தைச்
சார்ந்தவர்களும் அடுத்த சந்திப்புக் குறித்து
விருப்பம் தெரிவிக்கவில்லை

அடுத்த பதிவர் சந்திப்பு நடக்கும் மாவட்டம்
குறித்து முடிவெடுக்கவும் முடியவில்லை

இந்த நிலையில் புதுகைச் சந்திப்பின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து தன் பங்கினை
 மிகச் சிறப்பாகச் செய்த முத்து நிலவன் ஐயா அவர்கள்
பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் அடுத்த
சந்திப்பிற்கான ஆலோசனைகள் வ்ழங்குமாறுக்
கோரி இருந்தார்

அந்த வகையில் பதிவர் சந்திப்புக்கான கால
அவகாசம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது
ஆறுமாத காலம் இருக்கும்படியாக தேதியையும்

ஈரோடு  பதிவர்களுக்கு முன்னுரிமை அளித்து
அவர்களால் இயலவில்லை எனில் விருப்பமுள்ள
பிற மாவட்டத்துப் பதிவர்களை
அணுகலாம் என்பதை எனது தனிப்பட்ட
ஆலோசனையாகப் பதிவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்...

Monday, October 26, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 12 )

நான் சிறுவனாக இருக்கையில்
எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....

























Sunday, October 25, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 11 )

ஓரளவு பழக்கமுள்ளவர்கள் வீட்டு
விஷேசம் என்றால் நிகழ்வு நடக்கிற
வேளையில் செல்வதும் 
மிகவும் நெருங்கிய
உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விஷேசம்
என்றால் முதல் நாளே போய்ச் 
சிறப்புச் செய்வதும் எல்லோரும் செய்வதுதானே

அந்த வகையில் எப்போது எங்கு பதிவர்
சந்திப்பு நடந்தாலும் முதல் நாளே சென்று விடுவது
எனது பழக்கம்.சென்னையில் நடந்த
இரண்டு சந்திப்பு மற்றும் புதுகைச் சந்திப்புத்
திருவிழாவிற்குஅப்படித்தான் முதல் நாளே
 சென்றிருந்தேன்

தூரம் ஒரு காரணம் என்றாலும் கூட
முக்கிய காரணம் முதல் நாள் சென்றால்தான்
சிலரையாவது மிகக் குறிப்பாக நிகழ்வு
நடக்கிற ஊரில் இருக்கிற முக்கியப்
பதிவர்களையாவது சிறிது நேரமாவது
முகம் பார்த்துப் பேச முடியும்

மறு நாள் நிகழ்வுகள் துவங்கிவிட்டால்
நாம் அதில்தான் கவனம் செலுத்த முடியுமே
தவிர இயல்பாய் மனம் விட்டுப் பேச முடியாது

அப்படிப் பேச முயன்றால் நிகழ்வுக்கும்
அதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும்
நிச்சயம் இடைஞ்சலாகத்தான் இருக்கும்

அந்த வகையில் நான் பதிவர் சந்திப்புக்கு
மதுரையில் இருந்து மாலை மூன்று மணியளவில்
புறப்பட்டு மிகச் சரியாக ஆறு மணிக்கெல்லாம்
புதுகை வந்து அடைந்துவிட்டேன்

ஏற்கெனவே பதிவில் வரும் வழியினைக் குறித்து
மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்ததால்
விழா மண்டபத்தை அடைவது மிக எளிதாக இருந்தது

இது போன்ற விழாக்களுக்கெல்லாம்
மேடை அமைப்பை மறு நாள் நிகழ்வு நடக்க
இருக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை
செய்து கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும்
பார்த்திருப்போம்

புதுகைச் சந்திப்பில்தான் மிக
 ஆச்சரியப்படும்படியாக
நான் சென்ற பொழுதிலேயே மேடை அலங்காரம்
முடித்து ஒலி வாங்கியைபொருத்த
முயன்று கொண்டிருந்தது எனக்கு
ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது





வாசலிலேயே அடையாளம் கண்டு மிக மிக
உற்சாகமாக கீதா மேடம் உள்ளிட்ட
புதுகைப் பதிவர்கள் வரவேற்றதும்
அந்த சமயத்தில் வந்திருந்த சக பதிவர்களுடன்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது
ஒரு இனிய அனுபவமாக இருந்தது
அது குறித்த புகைப் படங்களைஇங்கு
பகிர்வு செய்வதில் மிக்க
மகிழ்ச்சி கொள்கிறேன்









அப்போது அந்த மண்டபத்தின் மூலையில்
புதுகைப் பதிவர்கள் டுவல்த் ஹவர் மீட்டிங்
எனச் சொல்லத் தக்க கூட்டத்தைக் கூட்டி
நடந்தது இனி நடக்க இருப்பது என்பது
குறித்து அமைதியாக கலந்துரையாடிக்
கொண்டிருந்தார்கள்.அதுதான்  உச்சக்கட்ட
கலந்துரையாடல் ,இனியெல்லாம்
செயல்பாடுகளே  எனப் புரிந்து கொண்டேன்





எதிர்பாராத விதமாகவெளியே
பெய்து கொண்டிருந்த மழை சூழலை
குளிர்வித்து இரம்மியமாக்கி கொண்டிருக்க

வெளியே மழை பெய்த்து கொண்டிருக்கிறது
எனவே  இங்குள்ள பதிவர்கள் அனைவருக்கும்
இரவு சிற்றுண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
என எப்போதும் சிரித்த முகத்துடனிருந்த
உணவுக் குழுத்  தலைவி திருமிகு  ஜெயலெட்சுமி
சகோதரி அவர்கள் சொல்ல
மெல்ல மாடியேறி அந்த அதி ருசியான
கிச்சடியையும் சப்பாத்தி குருமாவையும்
ஒரு பிடிபிடித்தோம்





தொடரும்

Friday, October 23, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 10 ) ( ஆ )

நான் தொடர்ந்து பதிவர் சந்திப்புக் குறித்து  
எழுதுவதற்கு பின்னூட்டமிடுவது சிலராக
இருந்த போதிலும் பார்வையாளர்கள் அதிகம்
வந்து போவது பதிவர் சந்திப்புக் குறித்து
அறிந்து கொள்வதில் அனேகருக்கு
( கலந்து கொண்டவர்களுக்கும்  அதை விட
கலந்து கொள்ளாதவர்க்கும் ) அதிக ஆர்வம்
இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது

கடந்த பதிவைக் கண்ட பிரபலமான பதிவர்கள்
ஐவர் என்  முக நூல் உள் டப்பிக்கு வந்து
அடுத்த பதிவு கடைசிப் பதிவு எனத் தெரிகிறது

பதிவின் படி இன்னும் நீங்கள் புதுக் கோட்டைக்கே
வந்து சேரவில்லை .விழா குறித்தும் மிகச் சரியான
விமர்சனத்தை வைக்கவில்லை.அதற்குள் தொடரை
முடித்தால் எப்படி என பதிவு செய்திருந்தனர்

என்னைப் பொருத்தவரை ,வெப்பம் இல்லாமலோ
அல்லது கழிவு இல்லாமலோ ஒரு புதுப் பொருளை
உண்டாக்குதல் என்பது கடினம்.

 புதுப் பொருள் உருவாக்குகையில் உண்டாகும்
வெப்பம் மற்றும்  கழிவின் சதவீதம் அல்லது
அவைகள் உருவாக்கும் தாக்கத்தின்
அளவு குறித்தேபுதிய பொருள்களைப் பற்றி
அறிஞர்கள் மதிப்பீடுசெய்வர்

புது பொருள்கள் உண்டாக்குதலுக்கு மட்டுமல்ல
ஒரு பெரும் நிகழ்வை நடத்துவதற்கும் இந்த விதிகள்
மிகச் சரியாகப் பொருந்தும்

பாற்கடல் கடைந்து சாகாமையைத் தரும்
அமிர்தம் பெறுவதாயினும்   ஆலகால விஷத்தைப்
புறக்கணித்து அமிர்தம் பெற வாய்ப்பேல்லை.
அதை ஆண்டவர்களே முன்னின்று செய்வதாயினும்...

அதைப் போலவே இத்தனை மாபெரும் சந்திப்பை
நிகழ்த்துகையில்  ஒரு சிறு  குறை குற்றம் ஏற்படாது
நடத்த நிச்சயம் வாய்ப்பே இல்லை.

அந்த வகையில் இந்தச் சந்திப்பிலும் மிகச் சிறிய
குற்றம் குறைகள் இருந்ததென்னவோ உண்மை

காலை நிகழ்வுகள் அனைத்தும் கல்வித் துறை
சம்பத்தப்பட்டவர்களாகவே இருந்ததால்
பதிவர் சந்திப்புஎன்பதை விட
கல்வியாளர்கள் சந்திப்பு
என்பதைப் போலவே இருந்தது.

ஆனால் மதிய நிகழ்வில் எஸ் ரா அவர்களின்
சொற்பொழிவு லேசாக இருந்த அந்த எண்ணத்தை
அடியோடு புரட்டிப் போட்டது

பதிவர் அறிமுகம் செய்ய விடுதல் இல்லாமல் அறிமுகம்
செய்ய இரண்டாம் முறை அழைக்கையில் ஏற்கெனவே
அழைத்தவர்களை அழைத்தது கொஞ்சம்
நிர்வாகத்தில் ஏற்பட்ட  சிறு குழப்பத்தைக் காட்டியது.

ஆயினும் உடன் புரிந்து அதைச் சமாளித்த
முத்து நிலவன் ஐயா அவர்களின் செயல் திறனால்
பலரால் அது கண்டுபிடிக்க முடியாமலே போனது

நினைவுப் பரிசு வழங்கியதில் இருவருக்கு
இல்லாமல் போனது

உடன்  அந்த இருவரிடம் தனிப்பட்ட முறையில்
விடுதலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அல்லாமல்
அதை பெருந்தனமையுடன் அதைத் தவறு என்றும்
அவர்களுக்கு அது அனுப்பிவைக்கப்படும் என
பதிவின் மூலமே தெரிவித்தது அந்தக் குறையையும்
சரி செய்தது போலாகி விட்டது

ஆக மொத்தத்தில் இந்த பதிவர் சந்திப்பில்
மேற்சொன்ன சிறுச் சிறு  குறைகளும் கடலில்
கரைத்த பெருங்காயம் போலத்தான் எனவும்

இந்த சந்திப்பு ஒரு முழுமையான நிறைவான
பதிவர் சந்திப்பு என்பதை எனது எண்ணமாக
முடிவாகப் பதிவு செய்வதில்
மிக்க மகிழ்வு கொள்கிறேன்

( தொடரும் )

Wednesday, October 21, 2015

பதிவர் சந்திப்பு, ( 9 )

"நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கிக்  கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு
இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது "

                      ------------------------------------
சில மாதங்களுக்கு முன்பு
இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்
என  இப்படி ஒரு  கவிதை எழுதி இருந்தேன்

அதன் காரணம் , நான் சார்ந்திருக்கிற
இணைந்திருக்கிற எந்த அமைப்புக்குள்ளும்
முற்றிலுமாக என்னைச் செயல் அளவிலும்
மனத்தளவிலும் முழுமையாக
ஈடுபடுத்திக் கொள்வேன்

அப்படித்தான் பதிவர் சந்திப்பு எனத்
தகவல் வந்ததும்,நானும் ஒரு பதிவர் இது
எனக்கான சந்திப்பு என மனத்தளவில் ஒரு
உத்வேகம் கொண்டதால்தான் என்னால்
சந்திப்புக்கு முன்பு சந்திப்புக் குறித்த 16 பதிவுகள்
தொடர்ந்து எழுத முடிந்தது

சந்திப்புக் குறித்து கருத்துக்களும் ஆலோசனைகளும்
பதிவர் குழுவால் வரவேற்கப் பட்டபோது

1 )ஒத்த உடை  (பதிவர் குழுவிற்கு )

2 )புரவலர் மற்றும் நன்கொடையாளர்கள்
    எனப் பிரித்து நிதி திரட்ட முயற்சிக்க
    ஆலோசனை

என நடைமுறைச் சாத்தியப்பட்ட அவசியமான
ஆலோசனைகளை உரிமையுடன் சொல்ல முடிந்தது

"உங்கள் பாணியில் பதிவர் சந்திப்புக் குறித்த
விமர்சனப் பதிவுகளை  எழுதுங்கள் "
என மரியாதைக்குரிய முத்து நிலவன் ஐயா
உரிமையுடன்  எனக்குக் கோரிக்கை வைக்கவும்
அதன் தொடர்ச்சியாய் நான்  இப்படித் தொடர்ந்து
எழுதவும் முடிகிறது

புதுகையில் இல்லாமல் ,செயல்படுத்துகிற
நிர்வாகக் குழுவிலும் இல்லாமல் இது
எனக்கான சந்திப்புஎன நான் உரிமை எடுத்து
எழுதுவதைப்போலக் களத்தில் இருந்துப்
பணியாற்றியவர்கள் எழுதினார்களேயானால்
நிச்சயம் இதுபோல் ஆயிரம் எழுத முடியும்

அவைகள்  நம்  பதிவர் ஒற்றுமையை

பயனுள்ள அடுத்தத் தளத்திற்குக் கொண்டு
செல்லவும்  நிச்சயம்  உதவும்

அது அப்படி இருக்க ...

நான் இப்படி  தொடர்ந்து விரிவாகப்  பதிவர்
சந்திப்புக் குறித்து எழுதக் காரணம் இல்லாமலும் இல்லை

( தொடரும் )

Tuesday, October 20, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 8 )

கோவில் திருவிழாக்களில்  கூட்டாகப்
பொங்கல் வைக்கையில் நம் அடுப்புச்
சரியாக எரியாமல் பால் பொங்கத்
தாமதமானால்உடன் அடுத்து அடுத்து
இருக்கிறப் பொங்கல்
பானைகளைப் பார்க்கிறமாதிரி...

மரபுக் கவிதைகள் 51 ம் மிகச் சிறப்பாக இருக்க
அதில் மிகச் சிறந்ததை தேர்ந்தெடுக்க
சிரமப்  பட்ட வேளையில் கொஞ்சம்
ஆறுதலுக்காக மற்ற போட்டிப் பதிவுகளைப்
படித்துப் பார்க்கலாம் எனப் பார்த்தால்
உண்மையில் அரண்டுதான் போனேன்

அந்த ஏழு நாட்களில் இறுதிக்காட்சியில்
பாக்கியராஜ் அவர்கள் மாடி ஏறும்  முன் கீழே
ராஜேஷ் அழைக்கட்டும் என அமர்ந்திருப்பார்

அப்போது சும்மா இராமல் முன் மேஜையில்
இருந்த பொம்மை ஒன்றைக்  கையிலெடுப்பார்
பொம்மையின் முன்புறம் ரொம்பச் செக்ஸியாக
இருக்க முகம் சுழித்து பொம்மையைத் திருப்புவார்
பின் புறம் அதைவிட செக்ஸியாக இருக்கும்
அரண்டு போய் பொம்மையைச் சட்டென
இருந்த இடத்தில் வைத்துவிடுவார்

அப்போது தியேட்டரில் எழும்
நமட்டுச் சிர்ப்பொலிஅரங்கம் அதிரும்படி இருக்கும்

அதைப் போலத்தான் நம் மரபுக் கவிதை
போட்டிப் பதிவுகளை விட மற்றபோட்டிப்
படைப்புகள் எளிதாகத் தேர்ந்தெடுக்கும்படி
இருக்கும் எனப் போன எனக்கு படக் காட்சியில்
பாக்கியராஜ் அவர்களுக்கு ஏற்பட்ட
அதிர்ச்சிதான் ஏற்பட்டது

காரணம் மரபுக் கவிதைகளை விட
அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களின்
 படைப்புகள் எல்லாம் மிக  மிக  ஆழமாகச்
 சிந்தித்துப் படைக்கப்பட்ட
அற்புதமானப்    படைப்புகளாக இருந்தன.

சரி நாம் அடுத்தவர் பகுதிக்குள் மூக்கை
 நுழைத்துக்  காலத்தை விரயமாக்காமல்
நம் பணியைப் பார்ப்போம் என கவிதைகளைப்
படிக்கத் துவங்கினேன்

முதலில்  51  கவிதைகளையும் முழுவதுமாகப்
படித்து முடித்து விட்டு ,இரண்டாவது தடவையாக
விழாக் குழுவினர் கொடுத்திருந்த விதிகளின் படி
முதல் 25  கவிதைகளைத் தேர்ந்தெடுத்து...

பின் 25 லிருந்து 10 ஐத் தேர்ந்தெடுத்து
பின்  ஐந்து அதில் மூன்றைத் தேர்ந்தெடுப்பதற்குள்
மூளை குழம்பியதோ இல்லையோ
மூலம் தொந்தரவு செய்யத் துவங்கிவிட்டது

அதனால் தொடர்ந்து உட்கார்ந்து வேலை
செய்ய முடியாததால் முடிவை அனுப்பி
வைப்பதற்கான தேதியும் நெருங்கி விட்டதால்
தொகையைச் சரியாக எழுதி
வகையைச் சொதப்பிய கதையாய்
ஒருவாறு என் முடிவை அனுப்பி இருந்தேன்

மறு நொடியே முத்து நிலவன் ஐயா அவர்கள்
எழுத்தில் கொஞ்சம் காரம் கூட்டி ,தாங்கள்
கடமையை மிகச் சரியாகச் செய்வீர்கள் என
எதிர்பார்க்கிறேன்,இப்போது அனுப்பியது
சரியில்லை என உடன் ஒரு மின்னஞ்சல்
அனுப்பினார்.

இந்தக் கண்டிப்பு எனக்குப் பிடித்திருந்தது
உடன் அவர்கள் கோரிய படிவத்தில் கோரியபடி
என் முடிவுகளை அனுப்பி வைத்துவிட்டுத்தான்
படுத்தேன்

இதைச் சொல்வதற்கான காரணம்,சந்திப்புக்கான
பின்னூட்டப் பதிவில் செலவை குறைக்க
ஆலோசனை சொல்லுகிறபோது
நடுவர்களுக்கான நினைவுப் பரிசினைத்
தவிர்த்திருக்கலாம் என எழுதி இருந்தவர்களுக்கு
நடுவர்களின் சிரமமும் புரியவேண்டும்
என்பதற்காகவே இதனை எழுதுகிறேன்

இதனைப் புரிந்து கொண்டு  நடுவர்களைக்
கௌரவித்த   விழாக் குழுவினருக்கு
நன்றியினைத்  தெரிவிப்பதற்காகவும்
இதனை எழுதுகிறேன்

( தொடரும் )

புதுகைப்பதிவர் சந்திப்பு ( 7 )

எனது கல்லூரி நாட்களில் ஒரு கதையில்
வந்திருந்த "இன்ப அதிர்ச்சி "
என்கிற வார்த்தையைக்  கிண்டலடித்து
ஒரு கூட்டத்தில் கலாய்த்திருக்கிறேன்

இன்பம் என்றால் நிச்சயம் அதிர்ச்சி தருவதாய்
இருக்காது. அதிர்ச்சி என்றால் அது நிச்சயம்
இன்பம் தருவதாக இருக்காது என்கிற ரீதியில்
உதாரணத்துடன் பேசிப் பாராட்டுப்
பெற்றிருக்கிறேன்

உண்மையில் இன்ப அதிர்ச்சி என்பது மிகச் சரியான
வார்த்தைதான் என்று பதிவர் தினத்திற்கு சில
தினங்களுக்கு முன்பு சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் ஐயா முத்து நிலவன்
அவர்களிடம் இருந்து வந்த மின் அஞ்சலைப்
பார்த்துத்தான் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்

சந்திப்பு நிகழ்வினை ஒட்டி பல்வேறு போட்டிகளுக்கு
ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் மரபுக்
கவிதைக்கென ஒரு போட்டி வைத்திருப்பதுக் குறித்தும்
எழுதி  அதில் நடுவராக மூவரைத்
தேர்ந்தெடுத்திருப்பதாகவும் அதில் நானும் ஒருவன்
என்கிற செய்திதான் அந்த  இன்ப அதிர்ச்சி தந்த செய்தி

காரணம் கவிதையில் ஜாம்பவான்கள் பதிவுலகில்
பலர் இருக்க என்னை நடுவராகத் தேர்ந்தெடுத்தது
மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும்
அதனை மிகச் சரியாகச் செய்து முடிக்க முடியுமா
என்பதை நினைக்க அது அதிர்ச்சித்  தருவதாகவும்
இருந்தது. அதற்கு வலிமையான காரணம்
இல்லாமல் இல்லை

ஏனெனில் வசன கவிதை என்றால் யாருக்கும்
எவ்வித அச்ச உணர்வு இல்லாமல் எழுதிவிடுவோம்
என்கிற தன்னம்பிக்கைத் தானாகவே வந்து விடுகிறது

ஆனால் மரபுக் கவிதை எனில் அப்படி இல்லை
இலக்கண அறிவு மற்றும் பயிற்சி இல்லாதவர்கள்
அதற்கு முயல்வதில்லை.முயல்பவர்கள் நிச்சயம்
ஏற்கெனவே எழுதி அனுபவம் பெற்றவர்களாகத்தான்
இருப்பார்கள்

இன்னும் சரியாகச் சொன்னால் மிக நேர்த்தியாக
நித்தமே ஆடை அலங்க்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகுப் போட்டியெனில் எப்படியெல்லாம்
இன்னும் மிகச் சிறப்பாக அலங்காரம்
செய்து கொள்வார்கள் என விளக்கத் தேவையில்லை

அதைப் போலவே மரபுக் கவிதை எழுதுவதில்
தேர்ச்சிப் பெற்றவர்கள் இதுபோல் போட்டிக்கு
எழுதுகிறார்கள் என்றால் நிச்சயம் நான் மேற்குறித்த
உதாரணத்தில் சொன்னது போல
நன்றாக அலங்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகிப் போட்டிக்குத் தயாராவதைப் போல
நிச்சயம் ஒரு மெனக்கெடல் இருக்கும்

அது நிச்சயம் நடுவர்களுக்கு ஒரு சவாலாகத் தான்
இருக்கும் என்கிற முடிவுக்கு நான் வந்தேன்

நிஜமாக அது அப்படித்தான் இருந்தது

( தொடரும் )

Monday, October 19, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 6 )

இந்துக்களின்  சம்பிரதாயப்படி ஒரு விஷயத்திற்கு
ஆண்டவனிடம் வேண்டிக் கொள்பவர்
முகச் சவரம் செய்வதைத் தவிர்த்து
தாடி மீசை வளர்த்துக் கொண்டிருப்பார்

திரு விழா முதலான நாட்களில்
அக்னி சட்டி எடுப்போர் முதலானோர்கள்
கையில் காப்புக் கட்டிக் கொள்வார்கள்

அது எல்லாம் மனதளவில் அவர்
எப்போதும் அந்த வேண்டுதலை
நேர்த்திக் கடனை மறக்காது நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்

அந்த வகையில் பதிவர் சந்திப்புத் தேதியும்
இடமும் முடிவானதும்  தொடர்ந்து பதிவர்களை
பதிவிடச் சொல்லி பதிவர் சந்திப்பை நடத்துவோர்
கேட்டுக் கொள்வதும் ,

பதிவர்களும் கவிதையாக கட்டுரையாக
வித்தியாசம் வித்தியாசமாகப் பதிவிடுவதும்,
சென்னைப் பதிவர் சந்திப்பு மற்றும்
மதுரைச் சந்திப்பு நடைபெறுகையிலும்
நடைபெற்றதுதான்

ஆனாலும் கூட புதுகையில் இருந்து
பதிவர்கள் பதிவிடுங்கள் என வேண்டுகோள்
வந்தவுடன்,மட மட வென நித்தமும்
பதிவர் சந்திப்புக்கு இத்தனைப் பதிவுகள்
வெளியானது இது தான் முதல் முறை

அப்படி மொத்தம் வந்த பதிவர் சந்திப்பு
பதிவுகள் 222 என்பது ஒரு பிரமிப்பூட்டும்
நிகழ்வுதான்

அத்தனைப் பதிவையும் விட்டுவிடாது
ஒரு பதிவின் கீழ் தொடர்ந்து தாமதிக்காது
இணைத்து அவர்களுக்கு இணைத்த தகவலையும்
உடனே தெரிவிப்பது என்பது ஒரு அசுரப்பணிதான்

அந்தப் பணியில் எவ்வித தொய்வுமின்றி
சித்தத்தைச் சிதறவிடாது அதிலேயே நிறுத்தி
அனைவரையும் பிரமிக்க வைத்த திண்டுக்கல்
தனபாலன் அவர்களின் பணியினை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்

வலைவிட்டு  ( மிகக் குறிப்பாகப்  பதிவர்கள் வலைவிட்டு )
 சிதறாத சித்தத்தைக் குறிக்கும்படியாக
வலைச் சித்தர் எனப் பட்டம் வழங்கியதும்
மிக மிகப் பொருத்தமானதே

இப்படி தனிப்பட்ட நபர்கள் பலரின் அதீத
உழைப்பும் , குழுவாக ஒருங்கிணைந்தோரின்
ஒத்த சிந்தனையும் ,உழைப்பும் இல்லையெனில்
இந்தப் பதிவர் சந்திப்பு இத்தனை சிறப்பாக
நடைபெற வாய்ப்பேயில்லை

அதிலும் குறிப்பாக சந்திப்புக்கென உண்டாக்கிய
பக்கத்தில் கவுண்ட் டவுன் டிஜிடல் கடிகாரத்தை
இணைத்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கையில்
பதிவர் சந்திப்புக் குறித்த நினைவில் இருந்த
என்போன்றோருக்கு அது எங்கள்
இதயத் துடிப்பைப் போலத்தான் இருந்தது என்றால்
நிச்சயம் அது மிகைப்படுத்திக் கூறல் இல்லை

( தொடரும் )

Sunday, October 18, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 5 )

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்
"தோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்
வெள்ளாமை விளங்கினமாதிரிதான் " என்று
அது வெள்ளாமைக்கு வேண்டுமானால்
பொருந்தலாம்.

ஒரு பத்திரிக்கை . செய்தித்தாள் அல்லது
நமது சந்திப்பைப் போன்ற நிகழ்வுகளுக்கு
செலவில் பாதி நன்கொடைகள் மூலமாகவோ
ஸ்பான்சார் மூலமாகவோ வந்தால்தான்
மிகச் சிறப்பாகக் கொண்டு செல்லமுடியும்

மாறாக விற்பனை விலையைக் கொண்டு
பத்திரிக்கையோ,பதிவுக் கட்டணத்தைக் கொண்டு
நிகழ்வுகளை நடத்துவதென்பது அதுவும்
நம் பதிவர் சந்திப்பைப் போல ஒரு பெரும்
நிகழ்வை நடத்துவதென்பது நிச்சயம் சாத்தியமே
இல்லை.

பொது வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதனால்
இது குறித்து எனக்கு ஒரு தெளிவான கருத்து
இருந்ததால்,சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் திருமிகு.முத்து நிலவன் ஐயா
அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் ஒன்று
இது விஷயமாய் அனுப்பிவைத்தேன்

நமது பதிவர்களைப் பொருத்தவரையில்
பதிவர் சந்திப்புக்கெனில் தாராளமாக நிதி
உதவி செய்வார்கள்.மிகக் குறிப்பாக வெளி
நாட்டில் வாழ் பதிவர்கள் எனக் குறிப்பிட்டு
அது குறித்து ஒரு வேண்டுகோள் விடுமாறு
அதில் குறைந்த பட்சம் நிதி
ஒரு இலட்சத்திற்கு மேல்சேருவதற்கு
வாய்ப்பிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன்

ஐயா அவர்களும் இது குறித்து  கலந்து பேசி
அறிவிப்பதாகச் சொல்லி, பின் இது குறித்து
புரவலர்களாக விருப்பம் உள்ள பதிவர்களுக்கு
ஒரு அன்பு வேண்டு கோள் விடுத்தார்

அது நாம் எதிபார்த்தபடியே அந்த நிதி
ஒரு இலட்சத்தை தாண்டி வந்தது.
விழா மிகச் சிறப்பாக நடைபெற காரணமாயிருந்த
பலவற்றுள் இந்தப் புரவலர்களின் பங்கும்
( "ம் "மைக் கவனிக்கவும் ) மிக முக்கியமானது
என்றால் அது மிகையில்லை

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலில்
புரவலர்களைக் கௌரவித்தல் என ஒரு குறிப்பு
இருந்தது போல் ஒரு ஞாபகம்

அது விழாவின் சிறப்பு விருந்தினர் வருகையில்
ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிறு சிறு
மாறுதலுகுண்டான காரணத்தால் அது  விடுபட்டுப்
போய்விட்டது என் நினைக்கிறேன்

புரவலர்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு
ஃபிளக்ஸ் வைத்திருந்தாலும் மேடையில் ஒருமுறை
பெயரை வாசித்திருக்கலாமோ என எனக்குப் பட்டது
(அந்த  பிளக்ஸ் படம் ஏதேனும் பதிவில்  
பதியப்பட்டிருக்கிறதா ?  )

ஏனெனில் புரவலர்களில் ஏறக்குறைய எல்லோருமே
வெளி நாட்டில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும்
நேரலையில் விழா நிகழ்வுகளைப் பார்த்துக்
கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

அவர்களில் யாரும் இதை அதிகம்
விரும்ப மாட்டார்கள் என்றாலும் கூட
அடுத்த நிகழ்வுக்கு அல்லது இந்த நிகழ்வுக்கே
நாமும் புரவலர்களாகி இருக்கலாமோ என்கிற
எண்ணத்தை பதிவர்களுக்கு ஏற்படுத்த
வாய்ப்பிருக்கிறது என்பதற்காக இதை எழுதுகிறேன்

இது குறை அல்ல. அதைச் செய்திருந்தால் இன்னும்
சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்

( தொடரும் )

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 4 )

பதிவர் குழு திருமிகு சகாயம் அவர்களைச் சந்தித்து
அவருடைய ஒப்புதல் பெற்று வெளிவந்த பின்தான்
நான் அவர்களைச் சந்திக்க முடிந்தது

சுய அறிமுகங்களுக்குப் பின்  பதிவர் விழா
ஏற்பாடுகள் குறித்து கொஞ்சம் பேசினோம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழு அமைத்திருப்பது
குறித்தும் விழா மண்டபம் முடிவு செய்திருப்பது
 குறித்தும்இன்னும் செய்ய வேண்டிய
பணிகள் குறித்தும்முத்து நிலவன் ஐயா அவர்கள்
விளக்கினார்கள்

அவர்களின் தெளிவான திட்டமிடுதல் குறித்து
அறிய நான் பிரமித்துப் போனது நிஜம்

ஆரம்பச் செலவுக்காக புதுகைப் பதிவர்கள்
பலரும் ஒரு குறிப்பிட்டத் தொகையைப் போட்டு
செலவு செய்து கொண்டிருப்பதாகவும்
நிதி திரட்டுதல் குறித்துதான் ஒரு மிகச் சரியான
ஆலோசனையும் செயல்திட்டமும்
வேண்டி இருக்கிறது எனச் சொன்னார்கள்

பொது விஷயத்திற்காக நிதி திரட்டுவதில்
குறித்து எப்போதும் இரண்டு வித கருத்துக்கள் உண்டு

அது போல எளிதான விஷயம் ஒன்றுமில்லை
என்பது ஒன்று

அதுபோல மிகக் கடினமான விஷயம் வேறேதுமில்லை
என்பது மற்றொன்று

உண்மையில் இந்த இரண்டுமே  சரியான கருத்துதான்
என்பது என் கருத்து

அது நமது நோக்கம் குறித்தும், நாம் நிதிக்காக
தொடர்பு கொள்பவர்களைப் பொறுத்துத்தான்
எது சரி என்பது முடிவாகும்

அந்த வகையில் பதிவர் சந்திப்புக்கு நிதி திரட்டுவது
நிச்சயம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது
என உறுதி சொல்லிவிட்டு,அது விஷயமாக
மதுரைப் பதிவுக்கு நிதி கொடுத்தவர்கள் பட்டியலை
தமிழ்வாசி அவர்களிடம் பெற்றுத் தருகிறேன்
கொடுக்கக் கூடியவர்களை அறிந்து கேட்க அது
உதவும் எனக் கூறினேன்

பின் தொர்ந்து சந்திப்பில் இருப்போம் எனக் கூறி
விடைபெற்றோம்

அந்த அவசரகதியிலும் முத்து நிலவன் ஐயா அவர்கள்
அவருடைய அற்புதமான புத்தகங்கள் இரண்டை
கையொப்பமிட்டு அன்பளிப்பாகக்
கொடுத்துச் சென்றது நெகிழச் செய்தது

மதுரை சந்திப்புக்கான கணக்குகளைக்
கொடுக்கவில்லைஎன்பதால் , வரவு குறித்தாவது
தெரிந்து கொள்வோம் எனத்  தமிழ்வாசி
அவர்களைத் தொடர்பு கொண்ட போது
அது பதிவாகியிருந்த  டிஸ்க் கரப்ட்டாகி
அழிந்து போனதாக சொல்ல  வேறு
என்ன செய்யலாம் என யோசிக்கத் துவங்கினேன்.

( சென்னைப் பதிவர்கள் அவர்கள் பதிவர் சந்திப்பை
முடித்து அதில் மீதமான தொகையென பத்தாயிரம்
ரூபாயை மதுரைப்பதிவர் சந்திப்பில்
கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன்
இங்கு நிச்சயம் குறிப்பிட்டாகவேண்டும் )

தொடரும்....

Saturday, October 17, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 3 )

இப்படியாக அனைத்து விதத்திலும்
புதுகையில் நடக்கிற பதிவர் சந்திப்புதான்
மற்றபடி இந்தப் பதிவர்  சந்திப்பு பதிவர்கள்
அனைவரும் சேர்ந்து நடத்தும்பதிவர்  சந்திப்புத்தான்
என்பதை ஆரம்பம் முதலே அனைத்துப் பதிவர்
மனதிலும் பதியும் படியாக மிகச் சரியாக செய்தது
ஐயா முத்து நிலவன் தலைமையிலான
புதுகைப் பதிவர் அணி

இதற்கு முன் உதாரணமாக ஏற்கெனவே பதிவர்
சந்திப்பை வெற்றிகரமாக நடத்து முடித்த
சென்னை மற்றும் மதுரை பதிவர்களைச் சந்தித்து
அது குறித்து ஒரு தெளிவான ஒரு கருத்தை
உருவாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவு செய்து
சென்னைப் பதிவர்களைச் சந்தித்து முடித்து...

அதைப் போலவே மதுரையிலும் சந்திக்க
சீனா ஐயா அவர்களை பலமுறை முயன்றும்
தொடர்பு கொள்ள முடியாததால் என்னைத்
தொடர்பு கொண்டு அதற்கு ஏற்பாடு செய்யுமாறு
கேட்டுக் கொண்டார்கள்

நானும் அது மிகச் சரியாகப் பட்டதால் என்னிடமிருந்த
மதுரைப் பதிவர்கள் இணைப்பில் அனைவருக்கும்
செய்தி அனுப்பி கலந்து கொள்கிறவர்கள் தங்கள்
விருப்பத்தைத் தெரிவிக்குமாறு பணித்திருந்தேன்

எதனாலோ நால்வரைத் தவிர பிறரிடமிருந்து
பதில் பெற முடியவில்லை

உடன் இது விவரம் முத்து நிலவன் அவர்களுக்குத்
தெரிவித்து விட்டு சந்திப்பு இல்லையென்றாலும்
தனித்தனியாக தொடர்பு கொண்டு கருத்தைத்
தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டேன்

ஆயினும் இன்று வரை அவ்வாறு ஒரு முன் சந்திப்புக்கு
ஏற்பாடு செய்ய முடியாமல் போனது எனக்கு அதிகம்
மன வருத்தம் தரும் நிகழ்வாகத்தான் உள்ளது

இ ந்நிலையில் பதிவர் சந்திப்பிற்கு புதுக் கோட்டையை
சொந்த ஊராகக் கொண்ட சமூகத்தின் பால்
அதிக அக்கறை கொண்ட நேர்மைக்கு
முன் உதாரணமாக விளங்குகிற மாவட்ட ஆட்சியர்
மதிப்பிற்குரிய திருமிகு. சகாயம் அவர்களைச்
சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்
என நினைப்பதாகவும் அது குறித்துஅவரை
 நேரடியாகச்சந்தித்து அழைக்கமுடிவு
செய்திருப்பதாகவும்,
அது சமயம் மதுரையைச் சேர்ந்த பதிவர்கள்
உடன் இருந்தால் சிறப்பாக இருக்கும்
எனத் தகவல் தெரிவித்திருந்தார்கள்

அது சமயம் தான் முத்து நிலவன் ஐயா அவர்களையும்
உடன் வந்த புதுகைப் பதிவர்களையும் சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது

சரியான அனுமானமா அல்லது தவறான அனுமானமா
எனத் தெரியவில்லை, அன்றைய நிலையில் இந்த
பதிவர் சந்திப்பை நடத்தி முடிப்பது தொடர்பாக
அவர்களிடம் ஒரு மலைப்பு உணர்வு  இருப்பது
போலத்தான்  எனக்குப் பட்டது

( தொடரும் )

( நீரில் மிதக்கிற பனிக்கட்டியின் ஒரு சிறு பகுதியே
வெளியில் தெரியும்.பெரும்பகுதி தெரிய வாய்ப்பில்லை
அந்த வகையில் புதுகைப் பதிவர்கள்
இந்த நிகழ்வுக்காக எடுத்துக் கொண்ட
அக்கறை இதுபோல் அப்போதுதொடர்பில் இருந்த
பலரும் எழுதினால்தான் அவர்கள்
உழைப்பு அனைவருக்கும் புரியும் என்பதால்
இதனை எழுதுகிறேன் )

Thursday, October 15, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 2 )

நான் திருவிழா மற்றும் கோவிலுக்குச்
செல்லுகையில் முண்டியடித்து முன்னேறி
நெருக்கடிமிக்க பகுதிக்கு செல்வதை
விரும்ப மாட்டேன்

விளக்கம் கேட்போருக்கு " சாமியை
நாம் பார்ப்பதை விட சாமி நம்மைப் பார்க்கணும்
அதுதான் முக்கியம் " என்பேன்

சிலர் இதை விதண்டவாதம் எனக் கூட
முகம் சுளித்திருக்கிறார்கள்.அதைப் பற்றி
நான் அதிகம் கவலை கொள்வதில்லை

அதைப் போலவே ஒரு பொது நிகழ்வென்றால்
நிகழ்வை நடத்துபவர்கள் போக்கிலேயே
யோசிப்பேனே ஒழிய எனக்கு அது குறித்த
மிகச் சரியான அனுபவம் இருந்தாலும்
அதில் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை

புதுகைப் பதிவர் சந்திப்பு என்கிற தகவல்
கசியத் துவங்கிய உடனேயே அவர்கள்
மதுரை சந்திப்புக்கு வந்திருந்து கலந்து கொண்ட
முறையைக் கொண்டும்,
புதுகையில் பதிவர்களுக்கென மிகச் சிறப்பாக
ஒருதொழிற் நுட்பக் கருத்தரங்கு
நடத்தியதிலிருந்தும் நிச்சயம்இந்தப்
புதுகைப் பதிவர் சந்திப்பு வித்தியாசமானதாகவும்
மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை
எனக்கு மட்டுமல்ல
எல்லோருக்குமே இருந்தது

அதிலும் குறிப்பாக 10 ஆம் தேதி வைக்கலாம
இல்லை 11ம் தேதி வைக்கலாமா எனத் தேதி நிர்ணயம்
செய்வதில் கூட அனைவரின் ஒருமித்த கருத்தை
அறிந்து செய்ய முயன்றது நம் நம்பிக்கைக்கு
உறுதி சேர்ப்பதாக இருந்தது

என்னுடைய கருத்தைக் கேட்டபோது கூட
இது குறித்து அனைவரிடமும் கேட்பது சரியாக வராது
மண்டபம் அமைவது, உள்ளூர் திருவிழா, சந்தை
இவைகளை உத்தேசித்து புதுகைப்பதிவர்களே
முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்
எனத் தெரிவித்தேன்

(மதுரை பதிவர் சந்திப்பில் தீபாவளி ஒட்டி
இந்த தேதி முடிவு செய்வதில்தான்
 ஆரம்பக் குழப்பம்வந்தது
 என்பதை இங்கு குறிப்பிடுவது தவறாகாது )

இரண்டாவதாக பதிவர்கள் பதிவுக் கூட்டத்தில்
நடந்து கொள்ளவேண்டிய முறைகளெனச் சொல்லி
அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை
பதிவர்கள் அறிமுகம் குறித்து  காலதாமதம்
செய்யாமல் அறிமுகம் செய்து கொண்டால் நல்லது
என்பதைத்தான் அதிகம் வலியுறுத்தினார்கள்

(முதலில் நடத்தியதாலோ என்னவோ
சென்னைப் பதிவர்கள்  சந்திப்புக்கு
பதிவர்கள் பெண் பதிவர்களை அனுமதி இன்றி
புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும்
இன்னபிற வலியுறுத்தல்கள் அதிகம் இருந்தது )

இப்படித் துவக்கமே சிறப்பாக இருந்ததால்
 நிகழ்வும் மிக்ச் சிறப்பாக இருக்கும் என்கிற
 நம்பிக்கையில்தான் அனைவரும் புதுகைச் சந்திப்பை
 மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கினார்கள்

( தொடரும் )

Wednesday, October 7, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு (16 ) பூனைக்கு மணி கட்டலாம்

சென்னையில் நான் ஒவ்வொருமுறை புலவர் ஐயா
இராமானுஜம் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம்
ஒரு பதிவு பெற்ற அமைப்பாக நமது வலைப்பதிவர்
அமைப்பை ஆக்க வேண்டும் என
வலியுறுத்திச் சொல்வார்

இது ஒருவகையில் அது அவரது இலட்சியக் கனவு என்று
கூடச் சொல்லலாம்

எனக்கும் இந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு

இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகளை விட இந்த
புதுகைப் பதிவர் சந்திப்பு அனைத்துத் தரப்பினரையும்
அரவணைத்துச் செல்வதில் ஆகட்டும், மிகத் திட்டமிட்டு
செயல்பாடுகளை பிரித்துப் பரவலாக்கி
செயல்படுத்துவதிலாகட்டும்,
அனைத்து செயல்பாடுகளையும்
ஒரு வெளிப்படைத்தன்மையாகச் செய்வதிலாகட்டும்
ஒரு நிறைவான பதிவர் சந்திப்பாக
இந்தச் சந்திப்பு இருக்கும்
என்பதை பதிவர்கள் அனைவரும் உணரும்படி
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

இந்தச் சந்திப்பில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாக இந்த
அமைப்பை உருவாக்கலாமா என்பது
குறித்த கேள்வியைமுன்வைத்தும்,
பதிவர்களிடமிருந்து  எதிர்பார்க்கின்ற
வேறு பல கருத்துக்கள் குறித்தும் ஒரு மாதிரிப் படிவம்
தயார் செய்து ( கூடுமானவரையில் ஆம் அல்லது இல்லை
என இருக்கும்படியாக) நமது பதிவர் சங்கத்திற்கான
வலைத்தளத்தில் பதிவிடலாம்

பதிவர்களின் பெருவாரியான கருத்தின்
அடிப்படையில் இது குறித்து பரிசீலிக்கலாம்.

பெருவாரியோரின் கருத்து அமைக்கலாம் என்பதாக
இருக்குமாயின் அது குறித்து ஒரு தெளிவான விதிகளை
வகுக்க ஒரு அமைப்புக் குழுவை அனைத்து மாவட்டம்
மற்றும் ஆர்வமுள்ள அயல் நாட்டில் வாழ்
பதிவர்களையும்  உள்ளடக்கிய
குழு ஒன்றைஇந்தச் சந்திப்பில் அமைக்கலாம்.

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  "

என்கிற வள்ளுவன் குரல்
நமக்கெல்லாம் அதிகப் பரிச்சியம் உள்ள குறள் தான்
இல்லையா ?

Monday, October 5, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 14 )

பெண் :
வெத்தலைப் பாக்கு வச்சு உன்னை
அழைச்சாங்களா-இல்லை
வீடு வந்து  உனக்குத் தாக்கல்
சொன்னாங்களா

எதுக்கு நீயும் புதுகை  போக
இப்படித் துடிக்கிறே-கேள்வி
கேட்டா மட்டும் என்னை எதுக்கு
இப்படி முறைக்கிறே

ஆண் :
காசு கொடுத்து கட்சி கூட்டும்
 கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி

காசு போட்டு நாம நடத்தும்
 நல்ல கூட்டமே-இதில
கலந்துக் காம நாம இருந்தா
நமக்கும் நட்டமே

செய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு
 குழப்பும் பேப்பரும்-தினமும்
தொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு
 பரப்பும் டி. வியும்

நல்ல வழியை நம்மை விட்டு
மறைக்கப் பார்ப்பதை-தினமும்
சொல்லிச் செல்லும் உறுதி இங்கே
யாருக்கி ருக்குது ?

இரத்தச் சூடு இருக்கும் வரையில்
கும்மாளம் போட்டு-பணத்தை
கறுப்பு வெள்ளை யென்று கணக்கில்
 மறைச்சுச் சேத்து

அரசுச் சின்ன மிரட்டல் போட
மக்களைப் பார்க்கும்-நடிகரின்
முகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு
 யாருக்கி ருக்குது ?

விதியைச் சொல்லி மதியை மாற்றி
 பிழைக்கும் மனிதரை-அதையே
மாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்
தெளிந்த எத்தரை

சரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு
மடக்கும் தைரியம்-இங்கு
பதிவர் தவிர உலகில் வேறு
யாருக்கி ருக்குது ?

ஆண்கள் பெண்கள்  பாகு பாடு
ஏதும் இன்றியே-மயக்கும்
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
 தனித்த வழியிலே

ஆண்டு மூன்றைக் க் கடக்கும் பதிவர்
அமைப்புப் போலவே
நல்ல அமைப்பு உலகில் வேறு
எங்கு இருக்குது ?

பெண்:
சொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க
இனிக்குது மச்சான்-இன்னும்
சொல்லச் சொன்னா நூறு சொல்வே
புரியுது மச்சான்

சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -சரியா
 பத்து பதிவு போட   விஷயம்
தேத்திவா மச்சான்

புதுகை பதிவர் சந்திப்பு, ( 13 )

சென்றஆண்டு மதுரையிலே
சந்தித்த நினைவோடு
சந்தோஷமா  இந்தஆண்டும் வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே புதுகைநோக்கி வாரோம்

முத்துநிலவன்  முன்னிருந்து
நடத்துகின்ற  சந்திப்பது
கச்சிதமாய் இருக்குமென்று வாரோம் -இதில்
கலந்துகொள்ளல் சிறப்பென்று வாரோம்   

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே புதுகை  நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத பேதமது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்லப புதுகைநோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய புதுகை நோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்

Sunday, October 4, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 12 )

 களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும்
நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

குளிர்ந்த காற்றும்
இரசிப்பவர்களை  இரசிப்பதே போதுமென்று 
கரையோரம் அமர்ந்திருந்து
அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும்
அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின்
ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்

நம்  புதுகைப் பதிவர் சந்திப்பைப் போலவும் ....

Friday, October 2, 2015

புதுகை நகரைக் கலக்க வாரீர் 11

எதுகை மோனைத் தேடித் தேடி
இளைத்துக் கிடந்த பதிவர் எல்லாம்
புதுமை புரட்சி என்று எழுதி
பொங்க வைத்த பதிவர் எல்லாம்
முதுமை வந்தும் இளையோர் போல
இயங்கி வந்தப் பதிவர் எல்லாம்
புதுகை புதுகை என்று நித்தம்
பதிவு போடும் மாயம் என்ன ?

முகநூல் போதும் என்று ஓடி
மூலம் மறந்த பதிவர் எல்லாம்
பகர எளிது டுவிட்டர் என்றே
பறந்து போன பதிவர் எல்லாம்
உடனே பகிர வாட்ஸப் போல
உண்டோ என்ற பதிவர் எல்லாம்
திடமாய்  மாறி பதிவர் அணியில்
திரண்டு விட்ட மாயம் என்ன ?

நான்காம் சங்கம் இதுவே என்று
நாடே வியந்து போற்றும் வண்ணம்
மீண்டும் இதுபோல்  நடத்தல் அரிதே
என்று உலகே வியக்கும் வண்ணம்
மாய்ந்து மாய்ந்து புதுகைப் பதிவர்
ஆற்றும் பணியே காரண மென்பேன்
ஆய்ந்து அறிய  திரண்டு வாரீர்
புதுகை நகரைக் கலக்க வாரீர்

Thursday, October 1, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 10 )

மக்களால் மக்களுக்காக மக்களுடன் என்பதைப்போல்
பதிவர்களால் பதிவர்களுக்காக பதிவர்களுடன்
வருடா வருடம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்
பதிவர்  சந்திப்புத் திரு நாளுக்கான அழைப்பிதல்
இதோ இப்போது தங்கள் பார்வையில்..

முதல் ,இடை ,கடையென தமிழ்சங்கம்
முடிவடையாது கணினி ச் சங்கம் என
 நான்காவது சங்கமாய் தொடர்ந்து கொண்டுதான்
 இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாய்
இதோ இப்போது நம் புதுகையில்...

தங்கள் படைப்பில் சிறந்து எது எனக் கேட்பின்
இதுவரை படைத்ததல்ல இப்போது
படைத்துக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பு
எனச் சொல்லும் துடிப்புமிக்க படைப்பாளியைப் போல்

இதுவரை நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை
மிஞ்சும் வகையில்உங்கள் பங்களிப்புடன்
நடைபெற இருக்கிறது
இந்தப்  புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு

அவசியம்  தவறாது கலந்து கொள்வீர்
நிறைவான மகிழ்வை அள்ளிச் செல்வீர்

 

Saturday, September 26, 2015

புதுகைப்பதிவர் திருவிழா ( 9 )) கால இயந்திரத்தின் தயவில் ( 3 )

நான் பதிவர் திரு விழாவுக்கு வருகிற
போதெல்லாம்நமது பதிவர்களின் நூல்களை
வாங்குவதற்கென்றேஒரு தொகையை
ஒதுக்கி வருவேன்

இம்முறை வெளியிடப்படுகிற நூல்கள் அல்லாது
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதைத் தொகுதிகளும்
கீத மஞ்சரி , கவிஞர் ரூபன் ,
வாத்தியாரின் ஜோதிட நூல்அவசியம் அனைவரின்
வீட்டுலும் இருக்கவேண்டிய  டாலர் தேசம் ,
தென்றல் சசிகலாவின் கவிதைகள்
புலவர் ராமானுஜம் அவர்களின் கவிதை நூல்
மற்றும் பல பதிவர்களின் புத்தகம் இருந்தது
 மகிழ்வளித்தது

கூடுமானவரையில் அனைத்துப் பதிவர்களின்
நூலிலும்ஒவ்வொன்றை வாங்கிக் கொண்டு
அந்த பிரமாண்டமானஅரங்கினுள் நுழைந்தேன்

அரங்கினுள் நுழைந்ததுமே அந்த
மேடை அமைப்பும்மேடையின் பின்புறம்
அமைக்கப்பட்டிருந்த
நமது லோகோ தாங்கிய ஃபிளக்ஸும்
ஒரு பிரமாண்டமான நிகழ்வுக்குத் தான்
வந்திருக்கிறோம் என்கிற உணர்வினை
உறுதி செய்தன

மேடை ஒலி வாங்கியின் முன் அழகாக
தொங்கவிடப்பட்டிருந்த போடியம்
பேனர் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது

ஒலிம்பிக் கொடியை எப்படி அடுத்து
எந்த நாட்டில் நடக்கப் போகிறதோ
அந்த நாட்டினரிடம் ஒப்படைத்தல் போல்
இந்த பேனரையும்அடுத்து பதிவர் சந்திப்பு
நடக்க இருக்கிற மாவட்டத்துக்காரரிடம்
ஒப்படைக்க இருப்பதாக அறிந்து மகிழ்வுற்றேன்

நான் ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்த
நான அறிந்தபதிவர்கள் அனைவரிடமும்
உரையாடிவிட்டு( வயதுக்கு ஏற்றார்ப்போல)
அரங்கின் முன் வரிசையில்அமர்ந்திருந்த
மூத்த பதிவர்களுடன் அமர்ந்து கொண்டேன்

பதிவர்கள் சந்திப்பின் நிர்வாகக் குழு
உறுப்பினர்களுடன் முத்து நிலவன் ஐயா அவர்கள்
மேடைக்கு முக்கியஸ்தர்களை
அழைக்கத் துவங்க விழா அற்புதமாய்த்  துவங்கியது

( தொடரும் )