Monday, March 14, 2016

ஒரு ஜென் கதை

ஒரு ஜென் கதை

அந்த நெடுஞ்சாலைச் சந்திப்பில் ஒரு சிறிய கடை
 வைத்தபடி ஒரு ஜென் குரு இருந்தார்

அவர் ஜென் குரு என அறிந்ததால் அவரிடம்
வாழ்வியல் பாடங்களை உடன் இருந்து
அறியலாம் என ஒரு அறிஞரும் அவருடனிருந்தார்

ஒரு நாள் அந்த வழி வந்த ஒரு வழிப்போக்கன்
ஜென் குருவிடம் "ஐயா நான் வெளியூர்.
பஞ்சம் பிழைக்கவென்று ஒரு நல்ல ஊரைத் தேடிப்
பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

தங்களைப் பார்க்க கொஞ்சம் விஷயமானவர் போல்
தெரிகிறது .அதனால் கேட்கிறேன்
அதோ அங்கு தெரிகிற ஊர் நல்ல ஊரா ?
அந்த ஊர் மக்கள் நல்ல மக்களா ?
நான் அங்கு சென்றால் நிம்மதியாகச் சில காலம்
இருக்கலாமா ? " எனக் கேட்கிறார்.

அவர் உற்றுப் பார்த்த ஜென் குரு "
ஐயா தாங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்
அந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்
அதைச் சொன்னால் நான் உங்களுக்கு
இந்த ஊர் சரிப்பட்டு வருமா எனச் சரியாகச்
சொல்லிவிடுவேன் " என்கிறார்

அதைக் கேட்ட அந்த வழிப்போக்கன் "ஐயா
அதை ஏன் கேட்கிறீர்கள் .நான் இருந்த ஊரைப் போல
மோசமான ஊரையோ மோசமான மனிதர்களையோ
உலகில் எங்கும் பார்க்க முடியாது
அடுத்தவன் வாழ்வதை பொறுக்காத
பொறாமைக்காரர்கள்
அதுதான் கிளம்பிவிட்டேன் " என்கிறார்

அதைக் கேட்ட ஜென் குரு " நீங்கள்
சொன்னது நல்லாதாய்ப் போயிற்று. ஏனெனில்
உங்கள் ஊரைப் போலத்தான் இந்த ஊரும்,
இந்த ஊர் மக்களும்.
அடுத்தவன் வாழப் பொறுக்காதவர்கள்
எனவே இந்த ஊர் வேண்டாம் " என்கிறார்

அதைக் கேட்ட வழிப்போக்கனும் " நல்லது ஐயா
வேறு ஊர் பார்க்கிறேன் எனத்
தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அவர் சென்ற சில மணி நேரத்தில் அதைப் போன்றே
வந்த வேறொரு வழிப்போக்கன்
 அதைப் போன்றே தான் பஞ்சம் பிழைக்க
புதிய ஊர் தேடிப் போவதைச் சொல்லி தூரமாகத்
தெரிகிற ஊர் நல்ல ஊரா அந்த ஊர் மக்கள்
நல்ல மக்களா எனக் கேட்கிறார்

முதல் வழிப்போக்கன் கேட்டதைப் போலவே
ஜென் குருவும் அவரது பழைய ஊர் மக்கள்
குறித்தும் ஊர் குறித்தும் கேட்கிறார்

அதற்கு அந்த வழிப்போக்கன் " ஐயா என் ஊர் மக்கள்
மிகவும் நல்லவர்கள். உதவும் குணமுடையவர்கள்
ஊரில் மழை இன்றி பஞ்சம் வந்து விட்டது
அதனால் பஞ்சம் பிழைக்க வேறு ஊர் தேடுகிறேன்
நிச்சயம் சில மாதங்களில் எங்கள்  ஊர்
 திரும்பி விடுவேன்

அதுவரை இருக்கத்தான் இந்த ஊரைப்
பற்றிக் கேட்கிறேன்" என்கிறான்

அதைக் கேட்ட ஜென் குரு " அப்படியா ரொம்ப நல்லது
உன் ஊரைப் போலத்தான் இந்த ஊர் மக்களும்
மிக மிக நல்லவர்கள்.உதவும் குணமுடையவர்கள்
தாராளமாக இந்த ஊருக்குப் போகலாம் " என்கிறார்

பாதசாரியும் குருவை வணங்கி தன் பயணம்
தொடர குருவுடன் இருந்த அறிஞர் குழம்பிப் போகிறார்

ஒரே ஊர் எப்படி இரு தன்மை உடையதாய் இருக்கும்
குரு ஏன் ஒருவருக்கு அப்படியும் ஒரு வருக்கு இப்படியும்
சொல்கிறார் எனக் குழம்பி குருவிடமே
விளக்கம் கேட்கிறார்

ஜென் குரு சிரித்தபடி சுருக்கமாக " ஊருக்கெனத் தென
தனிக் குணமில்லை நாம் எப்படி இருக்கிறோமோ
அப்படித்தான் ஊரும் இருக்கும்

முன்னவன் ஊரின் மோசமான பகுதியை மட்டும்
அறிந்திருக்கிறான்.பின்னவன் ஊரின் நல்ல பகுதியை
அறிந்திருக்கிறான்.
ஊரும் அப்படித்தான் இருந்திருக்கும்
இவர்கள் போகிற ஊரும் அவர்களுக்கு அப்படித்தான்
இருக்கும் " என்கிறார்.

அறிஞரும் ஒரு வாழ்வியல் பாடம்
மிக எளிமையாகப் புரிந்ததில் மகிழ்ந்து
குரு நாதரைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்

 பின் குறிப்பு  :

 இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்
ஆனாலும்  இந்தக் கட்சிச் சரியில்லை என்று
அந்தக்  கட்சிக்கும் அந்தக் கட்சி சரியில்லையென்று
இந்தக் கட்சிக்கும்.....

 இந்தச் சங்கம் சரியில்லையென்று  அந்தச்
 சங்கத்திற்கும்   அந்தச் சங்கம் சரியில்லையென்று
இந்தச் சங்கம்   மாற நினைக்கிறவர்களுக்கு
எதற்கும்  ஒரு படிப்பினையாக  இருக்கட்டுமே
என்றுதான் இது  ...

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை அருமை. பின்குறிப்பு அதைவிட மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

ப.கந்தசாமி said...

நான் அப்படியெல்லாம் ஊர்விட்டு ஊர் போகமாட்டேன். ஒரே இடத்தில் ஸ்திரமாக இருப்பேன். யாராவது போதுமான அளவு பணம் கொடுத்தால் இந்தக் கொள்கைகளை நிச்சயம் கைவிடுவேன்.

My Son said...

நாம் பார்க்கும் விதத்தில் தான் நல்லதும் கெட்டதும். ஒருமுறை Bata Shoe வியாபாரம் செய்வதற்கு Africa -வில் சர்வே எடுத்தார்கள். அப்போது ஒரு விற்பனை பிரதிநிதி அங்கு சென்று பார்த்து விட்டு அங்கு யாருமே செருப்பு கூட போடுவதில்லை. எனவே நாம் அங்கு வியாபாரம் செய்ய முடியாது என்று கூறினார். ஆனால் மற்றொரு பிரதிநிதி அங்கு யாருமே செருப்பு போடாததால் நமக்கு அங்கு நிறைய வியாபார வாய்ப்பு உள்ளதென்று கூறி கடையை ஆரம்பித்து மிக சிறப்பாக வியாபாரம் செய்தார்கள். எனவே நாம் பார்க்கும் கோணத்தில் தான் நல்லதும் கெட்டதும்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கதையும் பின் குறிப்பும்.

Jawahar said...

:)

UmayalGayathri said...

நல்லா சொன்னீங்க ஐயா.

தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

அர்ஜுனன் பார்வையும், துரியோதனன் பார்வையும்...

பின் குறிப்பு அருமை ஐயா...

iK Way said...

வலையகத்தின் பெயருக்கேற்ற பதிவு.
" தீதும் நன்றும் பிறர் தர வாரா "

http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/03/blog-post_8.html

Unknown said...

Resembles MAHABHARAT story. But v nice

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதை....உங்கள் கருத்தும் சேர்ந்து..

”தளிர் சுரேஷ்” said...

நம்முடைய பார்வைதான் அனைத்துக்கும் காரணம் என்ற கருத்தை சொல்லும் சிறப்பான கதை! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள் ஐயா!

வலிப்போக்கன் said...

ஒரு வாழ்வியல் பாடம்..புரிந்தது.

Post a Comment