Wednesday, March 2, 2016

சராசரித்தனத்தின் சிறப்பு

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும்  பொதுஜனத்திற்கும்
இடைப்பட்ட தொண்டனைப்போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
சீண்டி விட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கி
வெகுஜனம் தரும் அர்த்தமற்ற  மரியாதைத்
தொல்லையும்  இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணிப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை  

 உண்மை  ஆர்வமோ
அடிப்படை அறிவோ  இல்லையெனினும்
 தொடர்பு கொள்ள முயலும்  வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளைச் சுமக்கும்
அவசியமும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளை அறிய ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
பலவகை யில் கூடுதல்
சந்தோஷமளிப்பதாகத்தான் இருக்கிறது

12 comments:

Pandiaraj Jebarathinam said...

கவிஞர் விக்ரமாதித்யன் கூறுவது போல் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகளை சாடுவதாக உள்ளது. நிதர்சனம் :-)

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” என்று கண்ணதாசன் சொன்னதும் சரிதானே? பல சௌரியங்களை இழந்து மன அமைதியையும் இழந்தவர்களால்தான் இன்றைய சௌரியங்கள் எல்லார்க்கும் கிடைக்கின்றன என்பதால்... நீங்கள் கவிஞர் என்பதால் பல விடயங்கள் இந்தப் பதிவில் விரிகின்றன. நன்றி அய்யா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’சராசரித்தனத்தின் சிறப்பு’
என்ற தலைப்பில்

சராசரிக்கும் மேற்பட்ட எவ்வளவோ விஷயங்களை
சரமாரியாகச் சொல்லியிருக்கும்

பதிவுக்குப் பாராட்டுகள். நன்றிகள்.

Nagendra Bharathi said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

சராசரி என்பதால்
சீண்டி விட்டுச் சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கி
வெகுஜனம் தரும் அர்த்தமற்ற மரியாதைத்
தொல்லையும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணிப் பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை /// அருமை அருமை! உண்மைதான்!

சிவகுமாரன் said...

இது போன்ற வித்தியாசமான எண்ணங்களால், கருத்துக்களால் நீங்கள் சராசரிக்கும் மேற்பட்டவர் தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.

KILLERGEE Devakottai said...

மாறுபட்ட கோணங்கள் அருமை கவிஞரே..
தமிழ் மணம் 3

சிவகுமாரன் said...

இது போன்ற வித்தியாசமான எண்ணங்களால், கருத்துக்களால் நீங்கள் சராசரிக்கும் மேற்பட்டவர் தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.

G.M Balasubramaniam said...

என் நண்பர் ஒருவர் கூறுவார் இருபது சதவீதம் பேர் அறிவு ஜீவிகள் என்றால் இருபது சதவீதம் பேர் மக்குகள். மீதி அறுபது சதவீதம் பேர் சராசரிகளே இவர்களால்தான் எந்த இயக்கமும் உயிர்ப் பெறுகிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சராசரிப் படைப்பாளிக்கு சற்றே சிரமங்களும் இருப்பதை எழுதும்போது உணரமுடிகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைத்தது...,,

வெங்கட் நாகராஜ் said...

சிந்தனைகள் தொடரட்டும்...
த.ம. +1

Post a Comment