Wednesday, April 27, 2016

நம் சட்ட மன்றத் தேர்தல்...அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்
 மிக மகிழ்வாய் இருந்தோம்

எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது

உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது

அதனால்தான் இரவெல்லாம்
உங்கள் வரவுக்காக   நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவுக்
கணக்கின்றி  நீங்களும் சோராது
எங்களைச் சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

அதனால்
எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் உங்கள்
அழைப்பை எதிர்பார்த்து
அன்புடன் அல்லாது
 அண்டாக்களுடன் காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
வாஞ்சையுடன் அல்லாது
பணத்துடனும்  பொட்டலத்துடனும்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
தேர்தலெனும் பெயரிலே
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

நம் அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பழக்கதோஷ உதாரணம் ஏற்கனவே கேட்டிருந்தாலும், இங்கு மீண்டும் படிக்க ஒரே சிரிப்புத்தான் வருகிறது. :)

அசிங்கமானாலும் அவளுக்குள்ளும் ஓர் நேர்மை இருக்குது பாருங்கோ. தனது வாடிக்கையான ரூபாய் 50 எடுத்துக்கொண்டு, மீதி 50 ரூபாயை நேர்மையாகத் திரும்பக் கொடுத்துவிட்டாளே :)

ஸ்ரீராம். said...

இதைவிட பச்சையாகச் சொல்ல முடியாது!
:))

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//

அசிங்கமானாலும் அவளுக்குள்ளும் ஓர் நேர்மை இருக்குது பாருங்கோ. தனது வாடிக்கையான ரூபாய் 50 எடுத்துக்கொண்டு, மீதி 50 ரூபாயை நேர்மையாகத் திரும்பக் கொடுத்துவிட்டாளே :)


காசு கொடுத்து ஓட்டு வாங்குவது
கேவலமானது என்றால்
காசு வாங்கி ஓட்டுப் போடுவது.......

( காசு வாங்கியவருக்கே போடுகிற
நேர்மை இருந்தாலும் கூட )

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...//
இதைவிட பச்சையாகச் சொல்ல முடியாது!
பச்சை (மிளகாயாக) யாகச்
சொன்னாலாவது பலனிருக்குமா
என்கிற ஆதங்கத்தில்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

காசு கொடுத்து ஓட்டு வாங்குவது
காசு வாங்கி ஓட்டுப் போடுவது.......
இரண்டுமே மிகவும் கேவலமானதுதான்.

இருப்பினும் சிலர் இதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தங்களின் இந்தப்பதிவு ஓர் சாட்டையடிதான்.

ஜீவி said...

சுட்டாது சுட்டும் அழகு கவிதையின் அபரிதமான அழகு.

Bhanumathy Venkateswaran said...

அருமை!

Avargal Unmaigal said...

அசிங்கத்தை இவ்வளவு அழகாக யாரலும் சொல்ல முடியாது பாராட்டுக்கள். இப்படி அழகாக சொல்லுவதன் மூலம் பதிவுலகில் தனித்து நிற்கிறீர்கள்

balu said...

Fine

balu said...

Fine

Unknown said...

பகிர்வு மிக அருமை.

Unknown said...

பகிர்வு மிக அருமை.

”தளிர் சுரேஷ்” said...

பொருத்தமான உவமைகளை கையாள உங்களைத் தவிர யாராலும் முடியாது ஐயா! அவலத்தினை அசிங்கத்தினை இத்தனை நாசூக்காய் சொன்னாலும் நச்சென்று சொல்லி அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

கடைசி வரிகள் சுருக் சுருக்....

Seeni said...

அய்யயோ...

koilpillai said...

சுரேஷ்,

அருமையான பதிவு.

காசுக்காக யார் விலைபோனாலும் , (கொடுப்பவரும் பெறுபவரும்) வி(அ)பச்சாரத்திற்கு சமம்தான் என்பதை அழகிய வார்த்தை கோர்வைகளால் கோர்த்து படைத்திருக்கும் இந்த படைப்பு தொடக்கம் முதல் முத்தைப்பாய் முடித்தது வரை அருமை அருமை.

கோ

Post a Comment