Friday, January 17, 2014

பிரிவும் புரிதலும்

ஒருவாரம் ஊர்போய் வந்து
கதவைத் திறந்ததும்
ஒரு வெறுமை வாடை
முகம் சுளிக்கவைத்தது
"வீடு அடைத்துக் கிடந்தால்
அப்படித்தான் " என்றாள் மனைவி

மொட்டில்லாது பூவில்லாது
செடிகள் வாடிக் கிடந்தன
காவலாளியிடம்
 "நீர் ஊற்றவில்லையா "என்றேன்

"இரண்டு நேரமும் ஊற்றினேன்
மழை கூட நன்றாகப் பெய்தது"என்றான்

ப்ளாக்கி மெலிந்து
நோஞ்சானாகி இருந்தது

"சரியாக வேளாவேளை
சோறு வைக்கவில்லையா "
என்றேன் எரிச்சலுடன்

" முதல் நாள்
சோறு சாப்பிடவில்லையென்று
மறு நாள் ரொட்டி கூட
வாங்கிப் போட்டுப் பார்த்தேன்
மண்ணில் கோபத்துடன் புதைத்ததே தவிர
சாப்பிடவில்லை "என்றான் காவலாளி

நான் பிளாக்கியில் அருகில் நெருங்கி
தடவிக் கொடுத்தபடி
"ஏண்டா சாப்பிடலை "என்றேன்

உடலைச் சுருட்டி
என் மடியில் அமர்ந்தபடி
வித்தியாசமாக குரல் கொடுத்தது

சென்ற முறை எக்ஸாம் காரணமாக
சின்னவனை பாட்டி ஊருக்கு
அழைத்துச் செல்லாமல் விட்டுப் போய்
திரும்ப வந்ததும்
அவன் இரண்டு நாள்
சிணுங்கித் திரிந்ததை ஒத்திருந்தது அது

37 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் ஏக்கம்...!

சொன்ன விதம் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பிரிவின் தாக்கம்..
மிக அருமை ஐயா!
த.ம.3

கவியாழி said...

செடியும் வாடும் செல்லக் குட்டியின் முகமும் மாறும் அதனால் நமது மனமும் மாறும்

Avargal Unmaigal said...

///ஒரு வெறுமை வாடை///
ஒரு வாரமோ ஒரு மாதமோ வீட்டைவிட்டு சென்று மீண்டும் வரும் போது வீட்டில் இருக்கும் வாடையை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் இருந்த எனக்கு இந்த வெறுமை வாடை என்ற புதிய சொல் மிக பல அர்த்தங்களை சொல்லி செல்கிறது

Avargal Unmaigal said...

உங்களுக்கு ப்ளாக்கி எனக்கு சன்னி அதைவிட்டு நான் பிரிந்து இருக்கும் நேரம் நான் வேலைக்கு செல்லும் நேரம் மட்டுமே..தூங்கும் போதும் அது எனது ரூமில்தான் அது தூங்கும் அதைவிட்டு விட்டு இந்தியாவிற்கு வருவது என்பது ஒரு கேள்விகுறியே

ராஜி said...

பிரிவின் வலியை சொல்லிச் செல்லும் கவிதை அருமைப்பா!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

Anonymous said...

வணக்கம்
ஐயா

பிரிவின் வலிகள் சுமந்த கவிதை நல்ல கருத்தாடல் மிக்கவை.வாழ்த்துக்கள் ஐயா
நன்றி
அன்புடன்
ரூபன்

கோமதி அரசு said...

பிரிவின் துயரம் அனைத்து உயிர்களுக்கும்.
செடி, கொடி. வளர்ப்பு பிராணி, வீடு அனைத்துக்கும் தான். என்பதை விளக்கும் அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Iniya said...

மனிதரையும் மிஞ்சிய துயரம் இது. உறவுகளே நன்றாக உண்டு உறங்கிடுவர்.

நன்றி ...! தொடர வாழ்த்துக்கள்....!

Manimaran said...

செம டச்சிங்... த ம 9

Anonymous said...

''...அவன் இரண்டு நாள்
சிணுங்கித் திரிந்ததை ஒத்திருந்தது அது..''
உயிரான சீவன்களெல்லாம் ஒன்று தானே!
மிக நன்று!....நன்று!....
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்

RajalakshmiParamasivam said...

பிரிவுத் துயரம் யாராயிருந்தாலும் வதைக்கும் தானே! நாய்க்கு நம்மைவிட பிரிவுத்துயர் சிறிது அதிகமே!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

நாயின் உணா்வுகளை நல்கும் கவியினிக்கும்
தாயின் உணா்வுகளைத் தந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


தமிழ்மணம் 10

”தளிர் சுரேஷ்” said...

அருமை! பிரிவின் வலி! எல்லோருக்கும் உண்டு என்பதை எளிமையாக சொன்ன கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

ஸ்ரீராம். said...

செடிகள் பற்றித் தெரியவில்லை. நாலுகால் ஜீவன் பற்றி அறிவேன். உருக வைக்கும் பாசம் கொண்டது.

vimalanperali said...

பிரிவின் வலி இங்கு எல்லா ஜீவனிலும்/

vimalanperali said...

tha.ma 12

ezhil said...

பாசத்தில் மனிதனுக்கு எந்த விதத்திலேயும் குறைந்ததில்லை விலங்கின் நேசம்...

மகிழ்நிறை said...

வளர்ப்பு நாய்குட்டி நம்மை எஜமானாக இணைக்கும்,வளர்ப்பு பூனையோ நமக்கு அது எஜமானன் என்று நினைக்குமாம் என்று எங்கோ படித்த ஞாபகம் !நாய் அன்பின் மறுவடிவம் தான்!

இராஜராஜேஸ்வரி said...

ஒரு வெறுமை வாடை
முகம் சுளிக்கவைத்தது
"வீடு அடைத்துக் கிடந்தால்
அப்படித்தான் " என்றாள் மனைவி//

வெறுமை ஏக்கமும்
பிரிவின் தாக்கமும் ...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரிவின் தாக்கமும் ஏக்கமும் மிகவும் கொடுமைதான். சொல்லியுள்ள விதம் நல்லாயிருக்கு.

ஸாதிகா said...

arumai!

Seeni said...

சொன்ன விதம் அருமை ஐயா

அம்பாளடியாள் said...

பிரிவின் துயரை மிக சிறப்பக உணரவைத்த படைப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

MANO நாஞ்சில் மனோ said...

செடிகளுக்கு கூட உணர்வுகள் உண்டு என்று சொல்லி செல்லும் கவிதை சூப்பர் குரு...!

Unknown said...

நம் கவனிப்பு போல வருமா ?
+1

வெங்கட் நாகராஜ் said...

பிரிவு பல சமயங்களில் கஷ்டம் தான்.....

த.ம. +1

கீதமஞ்சரி said...

அன்பு வைத்தபின்னால் குழந்தைகள் என்ன வளர்ப்பு பிராணிகள் என்ன? எல்லாமே ஒன்றுதான் நமக்கு. பிளாக்கியின் ஏக்கத்தை இங்கிருந்தே உணரமுடிகிறது உங்கள் எழுத்தின் மூலம். பிளாக்கிக்கு எங்கள் அன்பும் இணையட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

பிரிவின் வலியை சொல்லிச் செல்லும் கவிதை
அருமை ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.16

ADHI VENKAT said...

பிரிவின் ஏக்கத்தை, அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்..

சசிகலா said...

பிரிவின் துன்பத்தை நன்றாக அனுபவித்து சொன்ன விதம் சிறப்புங்க ஐயா. எனக்கும் தென்றலுக்கும் உண்டான பிரிவைப்போல..

G.M Balasubramaniam said...

என்ன தெரிகிறது? குழந்தைகளையோ செல்லப் பிராணிகளையோ விட்டுப் பிரிந்து செல்லக் கூடாது. அருகில் இருந்து அரவணைப்பது அவசியம்......! moral of the posting.? ( in lighter vein) பாராட்டுக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

விலங்குகளுக்கும், செடிகளுக்கும் கூட பாசமும், நேசமும் உண்டு என்பதை அருமையாகச சொல்லும் கவிதை! டைகர், கைசர் - துளசி, கண்ணழகி, ப்ரௌணி, பெண்கள் -கீதா

வெறுமை வாடை பல அர்த்தங்களைச் சொல்கின்றது !!!!!அருமை !!!!

பிரிதலைத் தாங்கமுடியாதவர்கள்.! ஏங்கி விடுவார்கள்!!!

விமல் ராஜ் said...

ஏக்கமும் ,அன்பும் நிறைந்த பதிவு.....அருமை!!! அருமை!!!

Post a Comment