Tuesday, January 7, 2014

ஈடு இணையற்ற கவி நீதான் இனி

வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை

வார்த்தைகளை
ஊதி ஊதிப் பெரிதாக்கி உப்பவை
இரத்தசோகைப் பிடித்தவன் முகம் போலது
வாக்கியத்திற்கு பொருந்தாவிடினும்
அது ஒரு பொருட்டில்லை

உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே

புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்

எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
ஈடு இணையற்ற கவி நீதான் இனி

29 comments:

தி.தமிழ் இளங்கோ said...

// எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி //
அரசியல் கவிஞனின் செயல் இது. உண்மையான கவிஞன் இப்படி செய்ய மாட்டான். உங்கள் ஆதங்கமும், போலிகளைச் சாடிய விதமும் நல்ல சாட்டையடி!


Seeni said...

Vali konda varikalaa Ayyaa...!!?

பூங்குழலி said...

சரியான சாடல் வரிகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

//புரிந்த படைப்பை விட புரியாத படைப்பே நிறையச் சொல்லிப் போகும்//

ஏற்கனவே ஒன்றும் புரியாத படைப்புகளாகவே தான் நிறைய வெளியாகி வருகின்றன.

//தற்காலக் கவி உலகில் ஈடு இணையற்ற கவி நீதான் இனி//

நல்லாவே உசுப்பி விட்டுள்ளீர்கள். ;)))))

இனி சுத்தம் !

அம்பாளடியாள் said...

வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை//

ஆஹா அருமையான சொல்லாடல் .கச்சிதமாக நாலே
நாலு வரி

எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
ஈடு இணையற்ற கவி நீதான் இனி//

சொல்லி வேலையில்லை நல்லாவே
வெழுத்து வாங்கியுள்ளீர்கள் ஐயா :))
உங்கள் ஆதங்கம் புரிகிறது இன்பக்
கவிதை தொடர என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .

Anonymous said...

நன்று.

ஸ்ரீராம். said...

கடைசி இரண்டு பாரா! அருமை.

Anonymous said...

வணக்கம்
ஐயா.

புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்

உண்மையன வரிகள்.. ஐயா.. மேலும் பல கவிகள் படைக்க எனது வாழ்த்துக்கள்..த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

மின்மினிகள் வெளிச்ச மேடையில் இடம் பிடித்தாலும் விடிந்ததும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள் !
த.ம 6

MANO நாஞ்சில் மனோ said...

புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்//

ஹா ஹா ஹா ஹா யாருக்கோ செமையா ரவுண்டு கட்டி அடிச்சிருக்கார் குரு, உங்கள் ஆதங்கம் புரிகிறது குரு.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

புத்தாண்டு வாழ்த்துகள் ரமணி ஐயா!
:) கவிதை அருமை!
//புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்// ஹாஹா

Iniya said...

உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே

ஆஹா எவ்வளவு விடயங்களை சிக்கனமாகவும், கச்சிதமாகவும் அனைத்தையும் எடுத்துரைத் திருக்கிறீர்கள்.

சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
ஈடு இணையற்ற கவி நீதான் இனி

பகிர்வுக்கு நன்றி ....! தொடர வாழ்த்துக்கள்.....!

கோமதி அரசு said...

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சாட்டையடி வரிகள் அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை அருமை! அதுவும் நல்ல நெத்தியடிக் கவிதை!

வாழ்த்துக்கள்!!

த.ம.+

Unknown said...

இந்த வம்பே வேண்டாம் என்று தான்...வசனத்தை வரிசையாகவே எழுதி விடுகிறேன் ! கொத்து புரோட்டாவாக பிய்த்து போட்டு...மற்றவர்களை தொல்லை படுத்துவதில்லை...!

G.M Balasubramaniam said...

கருத்தில் மாறுபடுகிறேன். எழுதுவது எழுதியபடியே புரிந்து கொள்ளப்படல் வேண்டும். எதையாவது நினைத்து எழுத எதையாவது புரிந்து கொள்வதில் எழுதுபவன் எண்ணம் ஈடேறுவதில்லை. வாழ்த்துக்கள்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

tamilmanam 11

மாதேவி said...

சாட்டையடி வரிகள்.

”தளிர் சுரேஷ்” said...

ஒவ்வொரு வரிகளும் அருமை! புரிந்த படைப்பை விட புரியாத படைப்பே நிறைய சொல்லிப்போகும்! நிதர்சனமான உண்மை! வாழ்த்துக்கள் ஐயா!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புரிந்த படைப்பை விட புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும் என்ற வரிகள் ஒவ்வொருவரும் தமக்குத்தானோ என நினைக்க வைக்கும் வரிகள். நன்றி.

இராய செல்லப்பா said...

புரியவேண்டிய கருத்தை மறைவாகச் சொல்லுவதும் ஒரு மாகவிதையின் இலக்கணமன்றோ? ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தை ஒரே நேரத்தில் சொல்லவல்லதும் மாகவிதையன்றோ? - எனவே உங்கள் கவிதை, நல்ல கவிதை எழுதுபவனையும் பாராட்டும்விதமாகவே இருக்கிறது. அதே சமயம் போலிக்கவிதைகளின் மீது சாடுவதாகவும் இருக்கிறது. அபாரம் போங்கள்!

Nagendra Bharathi said...

போலிக் கவிகளைப் புரிய வைத்துள்ளீர்கள். நன்றி

Nagendra Bharathi said...

போலிக் கவிகளைப் புரிய வைத்துள்ளீர்கள். நன்றி

Unknown said...

வேடதாரிகளை வெளிப்படித்திய விதம் அருமை!
இப்படி எழுதுவதுதான் உமக்கப் பெருமை!

கவியாழி said...

ஆஹா...........,சரிதான்

Yarlpavanan said...

"வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை" என
புதுக் கவிதை எழுத வைக்கிறியள்...
பிறகு என்ன
நம்மாளுகள் - இனி
நல்ல கவிஞர்களே!

வெங்கட் நாகராஜ் said...

செம அடி!

ரசித்தேன்.

Post a Comment