Sunday, January 5, 2014

நட்பெனும் போர்வை

நீ கேட்கக் கூடாது என
மறைக்கிற எல்லாம்
எனக்குத் தெளிவாகத் தெரிந்தும்
நான் கேட்காதே தொடர்கிறேன்

நீ விரும்ப வேண்டிய
ஆயினும் விரும்பாதவைகளை
தவறியும் நான் உனக்கு
தெரிவிக்க விரும்புவதில்லை

நீ கேடு விளைவிக்கிறவைகளை
கண்முன்னே தொடர்கிறபோதும்
தடுக்க சிறிதும் முயலாது
நான் பார்வையாளனாகவே இருக்கிறேன்

பயனுள்ளவைகளைவிட
பயனற்றதாயினும்
சுவாரஸ்யமானவைகளைப் பகிர்வதிலேயே
நாம் கூடுதல் மகிழ்வு கொள்கிறோம்

உடலில்படாது ஓங்கி வீசும்
ஆடிக்காற்றினைப் போல
நம் சம்பந்தப்படாத உலக விஷயங்களை
நாம் பல மணி நேரம் விவாதிக்கிறோம்

என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக்கிற தொடர்பினை
விடாது தொடர்வதற்கு
இந்த மாய்மாலங்களெல்லாம்
இக்காலச் சூழலில்
அவசியத் தேவையாகத்தானிருக்கிறது

32 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நட்பு எனும் போர்வையில் நாம் கொண்டிருக்கிற தொடர்பினை விடாது தொடர்வதற்கு ........//

அருமையான வரிகள். அசத்தலான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நீ கேடு விளைவிக்கிறவைகளை கண்முன்னே தொடர்கிறபோதும் தடுக்க சிறிதும் முயலாது நான் பார்வையாளனாகவே இருக்கிறேன்//

நல்ல நட்பும், நலம் விரும்பிகளும் இவ்வாறு பார்வையாளர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள்.

அதனால் நான் இழந்துவரும் நட்புகள் இன்றும் நிறையவே உள்ளன.

ஸ்ரீராம். said...

ஹா...ஹா...அவசியமாய்த்தான் இருக்கிறது. ஆனால் உண்மை நட்பு என்று சொல்ல மாட்டார்களே...! :))))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. நட்பு எனும் பெயரில் செய்யும் பல உங்கள் கவிதையில்....

த.ம. +1

தி.தமிழ் இளங்கோ said...

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்! அதில் ஆசை யென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்! கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!

அம்பாளடியாள் வலைத்தளம் said...

நட்பைப் பேணும் அகத்திற்கு எந்நாளும் கிட்டும்
பொறுமை தனைச் சுட்டிக் காட்டும் கவி வரிக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா !

Iniya said...

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை யல்லவா
இதில் நட்பும் அடக்கம் தானே.
தொடரத்தானே வேண்டும் பிழை இல்லை தொடருங்கள் வருந்தாது. இதில் தோற்பது என்பது இல்லை அது வெற்றி தான்.

Iniya said...

அருமை அருமை பகிர்வுக்கு நன்றி ....!
தொடர வாழ்த்துக்கள்....!

இளமதி said...

நட்பெனும் நடிப்பு.. நன்றாகச் சொன்னீர்கள்!

கண்ணிருந்தும் குருடாய்க்
காதிருந்தும் செவிடாய்
வாயிருந்தும் ஊமையாய் மேலும்
உணர்விருந்தும் சடலமாய்...

பல நேரங்களில்...

அருமை!
உள்ளத்து உணர்வுதனைச்
சுட்டிக் காட்டிய கவிவரிகள்! மிகச் சிறப்பு!வாழ்த்துக்கள்!

Seeni said...

அருமை அருமை பகிர்வுக்கு நன்றி ....!
தொடர வாழ்த்துக்கள்....!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

சிறப்பான கவிதை... கருத்துமிக்க வரிகள்... அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Avargal Unmaigal said...

உள்குத்து கவிதை போல தெரிகிறதே.....ஹீ.ஹீ

Avargal Unmaigal said...

tha.ma 8

கோவை ஆவி said...

உண்மைதான் சார்..!!

Bagawanjee KA said...

நல்லவேளை நான் தப்பித்தேன் ,வெளிக்குத்துன்னா வலிக்குமே !
+1

Chellappa Yagyaswamy said...

292 வது திருக்குறளைத்தானே நினைவு படுத்தினீர்கள்! உண்மையைச் சொன்னால் உறவுகளும் நட்புகளும் ஓடிப்போய் விடுமே!

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ நட்பு தொடர்ந்தால் சரி...!

Priyamudan Prabu said...

என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக்கிற தொடர்பினை
விடாது தொடர்வதற்கு
இந்த மாய்மாலங்களெல்லாம்
இக்காலச் சூழலில்
அவசியத் தேவையாகத்தானிருக்கிறது

கோமதி அரசு said...

நட்பு மனம் நோகாமல் இருக்க சில சமயம் இப்படி இருக்க வேண்டியதுதான்.
நல்ல கவிதை.

டிபிஆர்.ஜோசப் said...

நட்பும் சிலருக்கு ஒரு பொழுதுபோக்குதான். இவ்வித Time pass நட்பால் ஒரு பயனும் இல்லை. கவிதை யதார்த்தத்தை கூறுகிறது.

நான் கேட்காதே தொடர்கிறேன்..

இந்த வரியின் பொருள் என்ன?

rajalakshmi paramasivam said...

அமாம் ரமணி சார். நிறைய மாய்மாலங்கள் செய்தால் தானே நட்பு நிலைக்கிறது என்கிற யதார்த்தத்தை சொல்லியதற்கு நன்றி.

ADHI VENKAT said...

நட்புக்கு எதெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது...:)
த.ம.14

அப்பாதுரை said...

திருமணம் என்று நினைத்துப் ப்டித்துக் கொண்டு வந்தேன். நட்பா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அப்பாதுரை said...
திருமணம் என்று நினைத்துப் ப்டித்துக் கொண்டு வந்தேன். நட்பா!//

சூப்பர் கமெண்ட் சார். மிகவும் ரஸித்தேன். சிரித்தேன். மகிழ்ச்சி. மிக்க நன்றி.

Jeevalingam Kasirajalingam said...

நட்பும் நடப்பும் அழகாகச் சொன்னீர்கள்

Mythily kasthuri rengan said...

உடலில்படாது ஓங்கி வீசும்
ஆடிக்காற்றினைப் போல
நம் சம்பந்தப்படாத உலக விஷயங்களை
நாம் பல மணி நேரம் விவாதிக்கிறோம்
அழகான ,கருத்துசெறிவான உவமை
அருமை சார் ,

Ramani S said...

டிபிஆர்.ஜோசப் said...
நட்பும் சிலருக்கு ஒரு பொழுதுபோக்குதான். இவ்வித Time pass நட்பால் ஒரு பயனும் இல்லை. கவிதை யதார்த்தத்தை கூறுகிறது.

நான் கேட்காதே தொடர்கிறேன்..

இந்த வரியின் பொருள் என்ன?//

கேட்காமலேயே தொடர்கிறேன்
என்கிற பொருளில் சொல்ல முயன்றிருக்கிறேன்
இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாம் எனத் தங்கள்
பின்னூட்டம் மூலம் அறிந்தேன்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Ramani S said...

அப்பாதுரை said...
திருமணம் என்று நினைத்துப் ப்டித்துக் கொண்டு வந்தேன். நட்பா!//

கொஞ்சம் லேசாகச் சாய்ந்திருந்தால்
அப்படித்தான் இருந்திருக்கும்போல
தங்கள் பின்னூட்டம் படித்ததும்
எனக்கும் புரிந்தது
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Ramani S said...

வை.கோபாலகிருஷ்ணன் said..

.நல்ல நட்பும், நலம் விரும்பிகளும் இவ்வாறு பார்வையாளர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள்.
அதனால் நான் இழந்துவரும் நட்புகள் இன்றும் நிறையவே உள்ளன.

அதைச் சொல்லத்தான் முயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கி. பாரதிதாசன் கவிஞா் said...


வணக்கம்!

தமிழ்மணம் 15

போர்வை இலாமல் பொலிவதே நட்பென்க!
பார்வை ஒளியாய்ப் படா்ந்து!

புலவர் இராமாநுசம் said...

என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக்கிற தொடர்பினை
விடாது தொடர்வதற்கு
இந்த மாய்மாலங்களெல்லாம்
இக்காலச் சூழலில்
அவசியத் தேவையாகத்தானிருக்கிறது

நாடகமே உலகம் என்பது , இதனால்தானே
இரமணி!

Thulasidharan V Thillaiakathu said...

என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக்கிற தொடர்பினை
விடாது தொடர்வதற்கு
இந்த மாய்மாலங்களெல்லாம்
இக்காலச் சூழலில்
அவசியத் தேவையாகத்தானிருக்கிறது

பச்சை உண்மை!! இது நட்பு மட்டுமல்ல உறவுகளும் அப்படித்தான் இருக்கின்றன!!

த.ம. +

Post a Comment