Sunday, April 10, 2016

மாய இடைவெளி



தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் ஒன்று
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது

உரையாடலில்
பேசுபவனே கேட்பவனாகவும்
கேட்பவனே பேசுபவனாகவும்
மாறிக்கொள்ளுதலைப் போலவே

இந்நாடகத்தில்
பார்வையாளர்களே நடிகர்களாகவும்
நடிகர்களே பார்வையாளர்களாகவும் மாறி மாறி
நாடகத்தை சுவா ரஸ்யப்படுத்திப்  போகிறார்கள்

ஆயினும்
நாடகம் ஒத்திகையற்றததாய் இருப்பதால்
திடுமெனத் தோன்றும்  திருப்பங்கள்
அதிர்ச்சியூட்டிப் போவதால்
பலர் நிலை குலைந்து போகிறார்கள்

இயக்குநர் யாரெனத் தெரிந்தால்
முடிவினை அறியக் கூடுமோ என
புலம்பத் துவங்குகிறார்கள்

புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்

இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

பலர் இதை ஒப்புக்கொண்டு
உடன்பட்டுப் போகிறார்கள்

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

இவர்கள் கேள்விக்கு பதிலேதும் இல்லை

ஒவ்வொருவருவரும்
தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது

முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்

இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

இந்தக் குழுக்களுக்களுக்கு
சிறிதும் தொடர்பே இல்லாது
ஒரு புதிய குழு உரக்கக் கூச்சலிடுகிறது

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இயக்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் " என்கிறது

இது குழம்பித் திரிபவர்களை
இன்னும் குழப்பிப்  பைத்தியமாகிப் போகிறது

பசியெடுத்த
குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி
கட்ட்ப் பட்ட புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடி ஓய்கிறது

ஓடினாலும்
நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவெளி  மட்டும் குறையாது இருத்தல் போல

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது

4 comments:

Seeni said...

அய்யா..
அரசியல் கவிதையா.,

வை.கோபாலகிருஷ்ணன் said...

’மாய இடைவெளி’யாகச் சொல்லிப்போய் உள்ள வரிகள் அனைத்தும் அருமை.

சற்றும் குழப்பமே இல்லாதவாறு கொண்டுபோய் தாங்கள் முடித்துள்ளது வெகு அழகு.

இந்த நாடகம் அந்த மேடையில் எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

எப்போதாவது சில சமயங்களில் நடிகர்களும் இயக்குனர்களும் மட்டும் மாறிக்கொண்டும் குழப்பிக்கொண்டும்தான் இருப்பார்கள்.

எப்போதும்போல பழக்கப்பட்ட பார்வையாளர்கள் முதலில் குழம்புவதும் பிறகு சற்றே மன சமாதானம் அடைவதும் மிகவும் யதார்த்தம் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது//
உங்கள் கவிதையை படிக்கும் போது எனக்கு ஆட்டுவித்தாலாரொருவ் ராடாதாரே என்ற் பாடல் நினைவுக்கு வருகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்வே மாயம் தானே..புரியாத புதிர்கள் பல இருப்பதுதானே வாழ்வும் உலகும்1!!அருமை..

Post a Comment