Wednesday, April 13, 2016

சித்திரை மகளே வாராய்

நற்குண மாந்தர் இந்த
மாநிலம் எங்கும் ஓங்கி
நற்செயல் பெருகி இந்தப்
பூமியே சொர்க்கம் ஆகும்
அற்புதம் நிகழ்த்த வந்த
அதிசய ஆண்டே வாராய்
துர்முக ஆண்டே வாராய்
தீந்தமிழ் ஆண்டே வாராய்

இத்தரை வாழும்  யாரும்
இனிவரும் காலம் யாவும்
எச்சிறு குறையு மின்றி
இனிதென வாழ வென்றே
புத்தொளிப் பரவும் காலை
பிறந்திடும் எழிலே வாராய்
சித்திரை மகளே வாராய்
செந்தமிழ் அழகே வாராய்

மனமது நிறைவு கொள்ள
வாழ்வதும் நிறைவு கொள்ளும்
மனமதில் இந்த உண்மை
நிலைத்திட வேண்டும் என்றே
ஜனகரின் மைந்தன் தந்த
மகிழ்வுறு நாளே வாராய்
புனர்வசு நாளே வாராய்
பைந்தமிழ் நாளே வாராய்

இட்டமாய்ச் செய்யும் எல்லாம்
இனிமையே நல்கும் என்று
திட்டமாய் சொல்லி மாந்தர்
தெளிந்திட வென்றே  கீதைத்
தந்தவன் தன்னை ஈந்த
திருமிகுத்  திதியே  வாராய்
அட்டமித் திதியே வாராய்
அருந்தமிழ்த் திதியே வாராய்

( துர்முக ஆண்டு, சித்திரை மாதம், புனர்பூஷ
நட்சத்திரத்தில்,அஸ்டமி திதியில் பிறக்கிறது
ஞாபகம் வைத்துக் கொள்ள அவசியப்படுவோர்
நினைவில் வைத்துக் கொள்வதற்காக )

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

புனர்பூசம் நான் பிறந்த நட்சத்திரம். அஷ்டமி என் பெயருக்கு உகந்த திதி. நான் பிறந்த ஆங்கிலத்தேதியும் அஷ்டமியைக்குறிக்கும் : 8 மட்டுமே. எட்டாம் எண்ணும் அஷ்டமி நவமியும் எனக்கு எப்போதும் ராசியானவையே.

தகவலுக்கு நன்றிகள், சார்.

ananthako said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய கவிதை.

தி.தமிழ் இளங்கோ said...

சித்திரை மகளுக்கு, வரவேற்பு பாமாலை தந்த கவிஞர் அய்யாவுக்கு, எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு சித்திரை நல்வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

Unknown said...

அருமை!வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

G.M Balasubramaniam said...

புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்கும் கவிதை. எந்நாளும் நன்னாளே . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அழகான தமிழ்ப் புத்தாண்டு வரவேற்புக் கவிதை

சாந்தி மாரியப்பன் said...

அழகான கவிதையுடன் இனிய வரவேற்பளித்த உங்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment