Thursday, May 11, 2017

பதிவர் மேடை

இந்த மேடை
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை
சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்
சுமைகளின்றி

போலி முக
 வேஷங்களின்றி

நமது குளியறையில்
பாடுதல் போல்

நமது தோட்டத்தில்
உலாவுதல்   போல

இயல்பாகவே இருக்க  முடிவதாலே

 இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

இருள் உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவருமே
படைப்பாளிகளாகவே இருப்பதாலே

இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

நேரக்கணக்கின்றி
இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்

பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்
வெளிச்சமும் சப்தமும்
ஆரவார ரசிகர்கள் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது

நிலையாக என்னுள்
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது


19 comments:

Jayanthi Jaya said...

அருமை
நான் கூட நினைப்பேன். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பினால் காத்திருக்க வேண்டி இருக்கிறது. பிரசுரிப்பார்களோ மாட்டார்களோ என்று. நம்மை ESTABLISH செய்து கொள்ள சிறிது அல்லது நிறைய காலம் தேவைப் படுகிறது. ஆனால் நம் வலைத்தளம். நமக்கு சௌகரியமான மேடை.

//பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே//

என் வலைத்தளத்திற்கு வந்து உங்கள் பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் பதியுங்கள் ஐயா. ஹி, ஹி, ஹி, நல்லதொரு வாய்ப்பு.

வாழ்த்துக்களுடன்
ஜெயந்தி ரமணி

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவர் மேடை
உயிரோட்டமுள்ள மேடைதான் ஐயா
அருமை
நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

நான் சொல்ல நினைத்தவை பலவற்றை, மேலே முதல் வருகை தந்துள்ள திருமதி. ஜெயந்தி ஜெயா அவர்களே சொல்லிவிட்டார்கள்.

நிலையாக தங்களுக்குள் நங்கூரமிட்டுக்கொண்டுள்ள பதிவர் மேடை இன்றுபோல என்றும் உறுதியாக இருக்கட்டும். வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

உண்மை உடனுக்குடன் தீர்ப்பு
மேடை அழகே..

சென்னை பித்தன் said...

அதே,அதே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்//
5 லட்சம் பக்கப் பார்வையை நெருங்கியுள்ளீர்கள். இது சாதாரணமானதல்ல.
இந்த மேடையே எனக்கும் பிடித்தமானது

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பதிவர் மேடையில்
பல முகங்கள்
தத்தம் அறிவை
அரங்கேற்றுகின்றனர்!

Bagawanjee KA said...

இந்த மேடையில் நானும் ஒரு (காமெடி ஃபீஸ் )நடிகன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் :)

Ramani S said...

Bagawanjee KA //


தொடர்ந்து முதல் ஸ்தானத்திலேயே
இருப்பவர் கதா நாயகன் அல்லவோ

தனிமரம் said...

மிகவும் அருமை ஐயா !இந்த மேடையே சந்தோஷப்பூங்கா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
இது நமக்கு சொந்தமான சொர்க்கா புரி ஐயா .. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Chellappa Yagyaswamy said...

சினிமாவும் நாடகமும் ஒப்பிட்டால் நாடகத்தையே பெரிதும் விரும்புவார்களாம் கலைஞர்கள். ஏனெனில் ரசிகர்களை நேரடியாகப் பார்க்கமுடிவதாலும், அவர்களது ரசனையின் பிரதிபலிப்பை உடனடியாக உணரமுடிவதாலும் நாடகமேடையே மனத்துக்கு நெருக்கமானதாக் இருக்கிறதாம். பதிவர்களாகிய நமக்கும் அதுபோலவே அச்சுப் பத்திரிகைகளைவிட இணையமேடையே இனிய மேடையாக இருக்கிறது. சிலநூறு பேர்களாவது வழக்கமாக நம்மைத் தொடரும்போது நமக்கொரு அடையாளம் உண்டாகிவிடுகிறது. பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால், ஒரு வருடத்தில் விகடனில் ஒரு எழுத்தாளரின் கதைகள் இரண்டுக்குமேல் வருவதில்லை. குமுதத்தில் இரண்டு வருடத்துக்கு ஒருகதை வரும். அதை வைத்துக்கொண்டு வாழமுடியுமா? எதிர்காலம் இணையத்தையே சார்ந்திருக்கும் என்பதால் இப்போதே உரிய பயிற்சியைப் பெற்றுவிட்ட நாம் மேலும் பலமாக ஆதரிக்கபடுவோம் என்றுதான் தோன்றுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

பதிவர் மேடை - நம் அனைவருக்கும் பிடித்த மேடை.

Rajeevan Ramalingam said...

அழகான அன்பான மேடை - எங்கள் பதிவர் மேடை..!

கோமதி அரசு said...

பதிவர் மேடை அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் மிகவும் சரியே.... இம்மேடை தான் அழகு....எங்களுக்கும் மிகவும் பிடித்த மேடை....நட்பான அன்பான மேடையும் கூட.....

Avargal Unmaigal said...

இந்த மேடை மிக அருமையான மேடை... இங்கு எழுதுபவர்களை நாம் யாரோ ஒருவராக நினைப்பத்தில்லை நம் குடும்பத்திற்கு வேண்டியவராகவே கருதுகிறோம். இந்த தளத்தில் உள்ளவர்களை நம்புவது போல பேஸ்புக்கிலோ டிவிட்டர் மற்றும் ஏனைய சமுக தளத்தில் எழுதுபவர்களையோ இப்படி நம்பமுடிவதில்லை....

G.M Balasubramaniam said...

பதிவர் மேடையில் நானும் ஒரு நடிகன் நடிக்கத்
தெரியாதவன்

தி.தமிழ் இளங்கோ said...

அருமை.. அருமை ..இனி வரும் காலங்களில் பதிவர் பயிற்சிப் பட்டறையில் இந்த கவிதையை முன்னுரையாக வைக்கலாம் / வாசிக்கலாம்.

Post a Comment