Tuesday, May 30, 2017

காணும் யாவும் கருவாகிப் போகவும் எழுதும் எல்லாம் கவியாகிப் போகவும்...

தன்னுள் அடைக்கலமான
ஜீவத் துளியினை
உயிரெனக் காக்கும்
தாயென மாறிப் போனால்....

கூட்டில் உயிரைவைத்து
குஞ்சுகளுக்கென
பலகாதம் கடக்கும்
பறவையென மாறிப்போனால்...

இன்னும் இன்னும் என
மிக மிக நெருங்கி
ஓருடலாகத் துடிக்கும்
காதலர்கள் ஆகிப் போனால்..

விட்டு விலகி
விடுதலையாகித்
தாமரை இலைத் துளிநீர்த்
தன்மையடைந்து போனால்..

வேஷம் முற்றும் கலைத்து
ஜனத்திரளில்
இயல்பாய்க்  கலக்கும்
மன்னனாகிப் போனால்..

தானே பிரம்மம்  என்னும்
ஞானமடைந்தும்
செருக்கற்ற
அடியார்களென மாறிப்போனால்...

மொத்தத்தில்
தன்னிலை விடுத்துக்
கூடுவிட்டுக்  கூடுபாயும்
வித்தையறிந்துப்  போனால்..

காணும் யாவும்
கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்
கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான அழகான கவிதை.

காணும் யாவும் கருவாகிப் போகவும்
எழுதும் எல்லாம் கவியாகிப் போகவும்

நிச்சயம்
தங்களுக்கு
மட்டுமே
சாத்தியம் ! :)

K. ASOKAN said...

அருமையான வரிகள்

KILLERGEE Devakottai said...

கவிதை அற்புதம் கவிஞரே மிகவும் இரசித்தேன்.

Rajeevan Ramalingam said...

காணும் யாவும் கருவாகலாம். அது சாத்தியம். ஆனால் எழுதும் யாவையும் எப்படிக் கவியாகிப் போகலாம்? என்று சிந்தித்துக் கொண்டே கவிதையைப் படித்தேன்.

பதில் கிடைத்தது எனக்கு...!!

அற்புதம் ஐயா..!

மனோ சாமிநாதன் said...

கவிதை அழகு! தலைப்பு அதனினும் மிக அழகு!

ராஜி said...

அருமைப்பா. சிறந்த கவிஞராகிட்டீங்க

Unknown said...

உண்மைதான் ,வித்தகன் கை பட்டு விட்டால் விறகு கூட வீணை ஆகிவிடுகிறதே :)

கோமதி அரசு said...

அருமையான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Yarlpavanan said...

கவிஞர்களுக்கு நல்ல வழிகாட்டல்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நிச்சயம் சாத்தியம்தான்.அடியார்கலென மாறிப்போனால்...என்பது அடியார்களென மாறிப்போனால்...என்றுதானே இருக்கவேண்டும் ஐயா?

G.M Balasubramaniam said...

உங்களுக்கு காணும் எல்லாவற்றிலும் கவிதை கிடைக்கிறது பாராட்டுகள்

Post a Comment