Monday, May 15, 2017

நூலினும் வலத்தளமே பலமிக்கதெனும் ....

ஆயிரம்  கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
பத்துக்  கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்

ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
பத்தாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்

கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஒரு இலட்சம்  பேரே
படித்திருக்கச் சாத்தியம்

வலைத்தளம் போல்
ஐந்து  இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை

புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
பத்தாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்

வலைத்தள பின்னூட்டம் போல்
நாற்பதாயிரம்  தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை

எத்த்துனைச் சாதுர்ய
பதிப்பகத்தார் ஆயினும்
குறைந்த பட்சம் ஐந்து நாடுகளில்
விற்றுவிடச் சாத்தியம்

இதுபோல்
நூற்று  இருபத்தைந்து நாடுகள் கடக்க
நிச்சயம் வாய்ப்பே இல்லை

எத்தனைப் பெரிய
எழுத்தாளர்கள் ஆயினும்
நல்ல வாசகர்களை பெற்றிடவே
அதிகச் சாத்தியம்

வலையுலகம் போல்
நூற்றுக்கணக்கான
நல்ல நண்பர்களை பெற்றிட
நிச்சயம் வாய்ப்பே இல்லை       

எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்

நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும்
புதுமொழியைப்  பரப்புவோம்

அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்

(ஒரு உதாரணத்திற்கே என்னுடைய கணக்கு
என்னைவிட ஜாம்பவான்கள்  இங்கே
அதிகம் உண்டு )


தமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.

12 comments:

KILLERGEE Devakottai said...

உண்மை வலைத்தளம் வலியதே
த.ம.

ஸ்ரீராம். said...

வலைப்பதிவர்களுக்கு ஆறுதல், மகிழ்ச்சி, உற்சாகம் தரும் பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//(ஒரு உதாரணத்திற்கே என்னுடைய கணக்கு
என்னைவிட ஜாம்பவான்கள் இங்கே
அதிகம் உண்டு )//

தாங்கள் குத்து மதிப்பாக, ஓர் உத்தேசமாகவே, பொட்டைக்கணக்காகவே சொல்லியிருப்பினும், அவை அனைத்துமே மிகத் துல்லியமான கணக்கு மட்டுமே என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது.

என் வலைத்தளப் பக்கமும் தங்களைப் போலவே அனைத்துப் புள்ளிவிபரங்களும் அப்படி அப்படியே பொருந்தி வருகின்றன என்பதனால் இருக்குமோ என்னவோ.

அனைத்தும் அருமை. சொல்லிச்சென்றுள்ள நடையோ, சொல்லியுள்ள தகவல்களோ, சொல்லியுள்ள விதமோ அழகோ அழகு + நச்.

பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

100% உண்மை ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

உண்மை. புத்தகங்களுக்கும் வலைத்தளத்திற்கும் ஒரு ஒப்பீடு! நன்று.

Kasthuri Rengan said...

அருமை அய்யா

Unknown said...

ஒரு பைசாவுக்கு பிரயோசனமில்லை என்று கூறும் இல்லாளின் சொல்லை மறந்து விட்டால் ,நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் :)

G.M Balasubramaniam said...

சீச்சி இந்தப் பழம் புளிக்கும்

Nagendra Bharathi said...

அருமை

இராய செல்லப்பா said...

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் நானெல்லாம் ஜூஜூபி என்றே தோன்றுகிறது!..ஹும், பூனைக்கும் ஒரு காலம் வராமலா போகும்? ஹூம்..(பெருமூச்சு)

-இராய செல்லப்பா நியூஜெர்சி (மிகவிரைவில் சென்னை)

Rajeevan Ramalingam said...

உண்மைதான் வலைத்தளத்தின் வீச்சு மிக அதிகமே..!! வாசகர்களைவிட நல்ல நண்பர்களைப் பெறுவது உண்மையில் பாக்கியமே

Yarlpavanan said...

எழுத்து
எழுதுவோருக்கும் வாசிப்போருக்கும்
இடையேயான உறவுப்பாலம் என்பேன்!
பொத்தகங்களும் வலைப்பூக்களும்
அவற்றை நாடும் வாசகர் ஒப்பீடும்
ரமணி ஐயா அவர்களின்
தூரநோக்குப் பார்வை என்பேன்!
http://www.ypvnpubs.com/2017/05/blog-post_18.html

Post a Comment