Friday, May 19, 2017

எட்டயப் புரத்து வேந்தன் இயற்றிய பாடல் தன்னை...

விளம"தும் "மா "வும் தேமா
முறைப்படி அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
உடனடி யாக உன்னால்
இயற்றிடக் கூடு மாயின்
கவியென ஏற்பேன் " என்றான்
வலதுகை போன்றே நாளும்
என்னுடன் உலவும் நண்பன்

"இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் "
முதல்வரி இதுவாய்க் கொண்டு
முத்தெனத் தொடரும் அந்தச்
சுதந்திரத் தேவிப் பாடல்
சந்தமென் நினைவில் ஊற
பதட்டமே சிறிது மின்றி
பகிர்ந்தேன் இந்தப் பாடல்

"சிந்தனை செய்ய வேணும்
சிலநொடி நேரம் வேண்டும் "
என்றுநான் சொல்வே னென்ற
நினைப்பினில் இருந்த நண்பன்
மந்திரம் சொல்லல் போல
நிமிடமாய்ச் சொல்லக் கேட்டு
வந்தெனைக் கட்டிக் கொண்டு
வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டான்

எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக்  கூடும்

10 comments:

Unknown said...

ங்கொய்யாலே ,மதுரகாரங்கிட்டேயா :)

Yarlpavanan said...

"எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்" என
ஏற்றுப் பாபுனைவோம்!

ராஜி said...

எட்டயக்காரனை பூடிக்குறேன். கவிதை எழுதுறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்//

ஆஹா, அழகோ அழகான வரிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

G.M Balasubramaniam said...

இந்த ரகசியம் தெரியலையே

சென்னை பித்தன் said...

பாரதி என்னும் ஆசான்

Rajeevan Ramalingam said...

பாரதி வழி நின்றால் சந்தமும் பிறக்கும் தமிழும் செழிக்கும்..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

இராய செல்லப்பா said...

சிறுகூடல்பட்டிக்காரரையும் மறந்துவிட வேண்டாமே!

-இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)

Post a Comment