Tuesday, May 16, 2017

தீதும் நன்றும் பிறர் தர வாரா

விஞ்ஞான வளர்ச்சியின் கருணையால்
நாற்பதாண்டுகளுக்கு முந்தைய
கல்லூரி  நண்பர்களைத்
தேடித் தேடிக் கண்டெடுத்தோம்

உருவ அமைப்பில் பலர்
முற்றிலும் மாறிப் போயிருந்தார்கள்

பலரை அவர்கள்
அறிமுகப் படுத்திக் கொண்டபின்தான்
அறிந்து கொள்ளவே முடிந்தது

அறிந்த பின்தான்
அவர்கள் உருவ அமைப்பில்
முழுமையாக  மாறியிருந்தும்

அவர்கள் குண இயல்பு
துளியும் மாறாதிருந்தது
அப்பட்டமாய்த் தெரிந்தது

எத்தனை நிறைவினுள்ளும்
ஒரு சிறு குறையை
மிகத் தெளிவாய்க் கண்டுவிடும் இராமசாமி

"என்னடா எங்குடா போய்ச்சு
அத்தனை சுருள் முடியும்
இப்படி வழுக்கையாய் நிற்கிறாய் " என்றான்

எத்தனைக் குறைவினுள்ளும்
ஒரு நிறைவினைக் கண்டுவிடும் முருகன்

" எப்படிடா இப்படிக் கலரானே
என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு " என்றான்

முழுதாக விசாரித்து முடிக்கையில்

குறைகண்டுபிடித்து விடும்
"இராமசாமிகள் " எல்லாம்
அனைத்து விதத்திலும்
குறையுடையவர்களாய் இருக்க

நிறைகண்டு மகிழும்
"முருகன்கள் " எல்லாம்
எல்லாவகையிலும்
நிறைவுடைவர்களாய் இருக்க

காலம் எதையும் எவரையும்
மாற்றிப் போவதில்லையென்பதையும்

இருப்பதைத்தான்
 கூட்டிப்  போகிறதென்பதையும்

விதி என்பது கூட மதிக்கு மாறாக
 எதையும்மாற்றித் தருவதில்லையென்பதையும்

பார்ப்பதைத்தான்
பரிசளித்துப் போகிறதென்பதையும்

உறுதி செய்து போனது

ஆம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்பதைமீண்டும்
அழுத்தமாய்ச்   சொல்லிப் போனது

11 comments:

Rajeevan Ramalingam said...

அருமையாகச் சொன்னீர்கள் ரமணி சார். இராமசாமிகளும் முருகன்களும் இன்னமும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த, நான் எப்போதும் நம்புகிற ஒரே வரி 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உருவ அமைப்பில் முழுமையாக மாறியிருந்தும் அவர்கள் குண இயல்பு துளியும் மாறாதிருந்தது அப்பட்டமாய்த் தெரிந்தது//

சூப்பர். உண்மைதான். தொட்டில் பழக்கம் அது
என்றும் மாறவே மாறாதது தான்.

இதற்கு உதாரணங்களாக இராமசாமிகளில் ஒருவரையும், முருகன்களையும் ஒருவரையும் சுட்டிக்காட்டியுள்ளவை சுவைபட உள்ளன.

அருமையான ஆக்கத்திற்கும் பகிர்வுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

ஸ்ரீராம். said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இராய செல்லப்பா said...

அப்படியில்லை நண்பரே, முற்றிலும் மாறிப்போனவர்களும் உண்டு....தேடிப்பாருங்கள். கிடைப்பார்கள்.

-இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உருவம் மாறினாலும் குணம் மாறாதஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

Thulasidharan V Thillaiakathu said...

வெகு அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்றாலும் குணம் மாறும் ஆட்களும் இருக்கிறார்கள் காலச்சக்கரம் போடும் புடத்தினால்...

G.M Balasubramaniam said...

மாற்றம் என்பதும் அவரவர் கண்களிலும் கருத்துகளிலும் தான்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குணத்தை மாற்றமுடியாது. சற்றுச் சிரமமே.

Yarlpavanan said...

ஆள்கள் மாறினாலும்
ஆள்களின் குணங்கள் மாறாது
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஆள ஊறிய அன்பும் அகலாதே!

Unknown said...

காலம் மாறினும் அன்பு மாறாது :)

ராமலக்ஷ்மி said...

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

அருமை!

Post a Comment