Saturday, August 20, 2016

நிஜம் உணர வரும் சுகம்

வண்ணமயமான மேடையில்
மழலைப் பள்ளியின்
ஆண்டுவிழா
கோலாகலமாக
நடந்து கொண்டிருக்கிறது

நாங்களும்
இரசித்துக் கொண்டிருக்கிறோம்

ஆங்கிலத்தில் 
ஒரு குழந்தை பேசிமுடித்ததும்
எங்களை விட
கூடுதல் நேரம்
கைதட்டிக் கொண்டிருக்கிறார்
எங்கள் அருகிலிருந்த
ஆங்கிலப் பேராசிரியர்

பின் அவராகவே
காதோரம் மெல்ல

"மிகச் சரியான
உச்சரிப்பை விட
மழலைகளின் உச்சரிப்பே
அழகாகவும் இருக்கிறது
அருமையாகவும் இருக்கிறது" என்கிறார் 

அவர் கண்களில்
லேசான ஈரக் கசிவு

அவர் வார்த்தையைக் கேட்டதும்
என் கண்களும் 
பனிக்கத் துவங்குகிறது

அருகிலிருந்த நண்பன்
"உனக்கென்னடா ஆச்சு " என்கிறான்

நான் உடைந்த குரலில் 
"என் எழுத்தையும் பாராட்டுகிற
சிறந்தப் படைப்பாளிகளின்
நினைவு வந்தது " என்கிறேன்

புரிந்து கொண்டவன்
மெல்லக் கைப்பிடித்து அழுத்துகிறான்

ஆறுதலாய் இருக்கிறது

கற்பனை  தரும்
போலிச்   சுகத்தை   விட
நிஜம் உணரவரும்  சுகம்
கூடுதலாக இருக்கத்தானே சாத்தியம்  ?

9 comments:

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு படைப்பும் சொந்த அனுபவங்களுடன் சம்பந்தப்படும்போதுதான் மதிப்பு மிகுதி ஆகிறது. உணர்வில் பதிகிறது.

ஜீவி said...

அர்த்தம் நிறைந்த உணர்வில் தோய்ந்த வரிகள்..

Geetha said...

உணர்வுபூர்வமான கவிதை..

வெங்கட் நாகராஜ் said...

அர்த்தம் பொதிந்த கவிதை. அருமை ஜி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மையான + உணர்வு பூர்வமான இந்த ஆக்கத்தினைப்படிக்க எனக்கும் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. பாராட்டுகள்.

மனோ சாமிநாதன் said...

அருமை! நிஜம் எப்போதும் அழகானது தான்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உணர்வு மிக்க வரிகள் படித்த போது நானும் ஒரு ஆறுதலாய் இருந்தது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்! நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கருத்து...உண்மையான உணர்வு மிக்க படைப்பு அதுவும் நம் அனுபவங்களும் கலந்து கட்டினால் அது நிறைவுதான்...

Post a Comment