Tuesday, October 20, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 8 )

கோவில் திருவிழாக்களில்  கூட்டாகப்
பொங்கல் வைக்கையில் நம் அடுப்புச்
சரியாக எரியாமல் பால் பொங்கத்
தாமதமானால்உடன் அடுத்து அடுத்து
இருக்கிறப் பொங்கல்
பானைகளைப் பார்க்கிறமாதிரி...

மரபுக் கவிதைகள் 51 ம் மிகச் சிறப்பாக இருக்க
அதில் மிகச் சிறந்ததை தேர்ந்தெடுக்க
சிரமப்  பட்ட வேளையில் கொஞ்சம்
ஆறுதலுக்காக மற்ற போட்டிப் பதிவுகளைப்
படித்துப் பார்க்கலாம் எனப் பார்த்தால்
உண்மையில் அரண்டுதான் போனேன்

அந்த ஏழு நாட்களில் இறுதிக்காட்சியில்
பாக்கியராஜ் அவர்கள் மாடி ஏறும்  முன் கீழே
ராஜேஷ் அழைக்கட்டும் என அமர்ந்திருப்பார்

அப்போது சும்மா இராமல் முன் மேஜையில்
இருந்த பொம்மை ஒன்றைக்  கையிலெடுப்பார்
பொம்மையின் முன்புறம் ரொம்பச் செக்ஸியாக
இருக்க முகம் சுழித்து பொம்மையைத் திருப்புவார்
பின் புறம் அதைவிட செக்ஸியாக இருக்கும்
அரண்டு போய் பொம்மையைச் சட்டென
இருந்த இடத்தில் வைத்துவிடுவார்

அப்போது தியேட்டரில் எழும்
நமட்டுச் சிர்ப்பொலிஅரங்கம் அதிரும்படி இருக்கும்

அதைப் போலத்தான் நம் மரபுக் கவிதை
போட்டிப் பதிவுகளை விட மற்றபோட்டிப்
படைப்புகள் எளிதாகத் தேர்ந்தெடுக்கும்படி
இருக்கும் எனப் போன எனக்கு படக் காட்சியில்
பாக்கியராஜ் அவர்களுக்கு ஏற்பட்ட
அதிர்ச்சிதான் ஏற்பட்டது

காரணம் மரபுக் கவிதைகளை விட
அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களின்
 படைப்புகள் எல்லாம் மிக  மிக  ஆழமாகச்
 சிந்தித்துப் படைக்கப்பட்ட
அற்புதமானப்    படைப்புகளாக இருந்தன.

சரி நாம் அடுத்தவர் பகுதிக்குள் மூக்கை
 நுழைத்துக்  காலத்தை விரயமாக்காமல்
நம் பணியைப் பார்ப்போம் என கவிதைகளைப்
படிக்கத் துவங்கினேன்

முதலில்  51  கவிதைகளையும் முழுவதுமாகப்
படித்து முடித்து விட்டு ,இரண்டாவது தடவையாக
விழாக் குழுவினர் கொடுத்திருந்த விதிகளின் படி
முதல் 25  கவிதைகளைத் தேர்ந்தெடுத்து...

பின் 25 லிருந்து 10 ஐத் தேர்ந்தெடுத்து
பின்  ஐந்து அதில் மூன்றைத் தேர்ந்தெடுப்பதற்குள்
மூளை குழம்பியதோ இல்லையோ
மூலம் தொந்தரவு செய்யத் துவங்கிவிட்டது

அதனால் தொடர்ந்து உட்கார்ந்து வேலை
செய்ய முடியாததால் முடிவை அனுப்பி
வைப்பதற்கான தேதியும் நெருங்கி விட்டதால்
தொகையைச் சரியாக எழுதி
வகையைச் சொதப்பிய கதையாய்
ஒருவாறு என் முடிவை அனுப்பி இருந்தேன்

மறு நொடியே முத்து நிலவன் ஐயா அவர்கள்
எழுத்தில் கொஞ்சம் காரம் கூட்டி ,தாங்கள்
கடமையை மிகச் சரியாகச் செய்வீர்கள் என
எதிர்பார்க்கிறேன்,இப்போது அனுப்பியது
சரியில்லை என உடன் ஒரு மின்னஞ்சல்
அனுப்பினார்.

இந்தக் கண்டிப்பு எனக்குப் பிடித்திருந்தது
உடன் அவர்கள் கோரிய படிவத்தில் கோரியபடி
என் முடிவுகளை அனுப்பி வைத்துவிட்டுத்தான்
படுத்தேன்

இதைச் சொல்வதற்கான காரணம்,சந்திப்புக்கான
பின்னூட்டப் பதிவில் செலவை குறைக்க
ஆலோசனை சொல்லுகிறபோது
நடுவர்களுக்கான நினைவுப் பரிசினைத்
தவிர்த்திருக்கலாம் என எழுதி இருந்தவர்களுக்கு
நடுவர்களின் சிரமமும் புரியவேண்டும்
என்பதற்காகவே இதனை எழுதுகிறேன்

இதனைப் புரிந்து கொண்டு  நடுவர்களைக்
கௌரவித்த   விழாக் குழுவினருக்கு
நன்றியினைத்  தெரிவிப்பதற்காகவும்
இதனை எழுதுகிறேன்

( தொடரும் )

13 comments:

கரூர்பூபகீதன் said...

வணக்கம் அய்யா! நடுவர்களின் சிரமத்தை புரிந்துகொண்டேன் அய்யா! எனக்கு சில சந்தேகங்கள்! ஒரு படைப்பை எழுதபோது அதில் அனைத்து விசயங்களும் இருக்கவேண்டுமா? இல்லை ஒரு பகுதியை மட்டும் எழுதினால் போதுமா? அதேநேரம் அந்த படைப்பை படிப்பவர்க்கு மேற்கொண்டு சிந்தனையை உருவாக்காமல் மாறாக கேள்விகளை எழவைத்தால் அது சிறந்த படைப்பாகுமா!!! இதில் எனக்கு புரியாமல்தான் கேட்டுள்ளேன் தவறுயிருப்பின் மன்னித்துவிடுங்கள் அய்யா! நன்றி

Yaathoramani.blogspot.com said...

நிறையச் சொல்லவேண்டியதில்லை
நிறைவாகச் சொல்லவேண்டும்
தெரிந்ததையெல்லாம் சொல்லவேண்டியதில்லை
வேண்டியதை மட்டும் சொல்லவேண்டும்
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்தான்
பின்னூட்டப் பதிலுக்கு இதுவே சரி
என்பதைப் போலவும்...

S.P.SENTHIL KUMAR said...

நானும் போட்டி பதிவுகளை படித்தேன். மிகவும் கடுமையான பணிதான். அதை நிறைவாக செய்த நடுவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடுவர்களை கௌரவிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய மரியாதை.
த ம 2

வை.கோபாலகிருஷ்ணன் said...

//’அந்த ஏழு நாட்கள்’ என்ற திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பாக்கியராஜ் அவர்கள் மாடி ஏறும் முன் கீழே ராஜேஷ் அழைக்கட்டும் என அமர்ந்திருப்பார்

அப்போது சும்மா இராமல் முன் மேஜையில் இருந்த பொம்மை ஒன்றைக் கையிலெடுப்பார். பொம்மையின் முன்புறம் ரொம்பச் செக்ஸியாக
இருக்க முகம் சுழித்து பொம்மையைத் திருப்புவார்.
பின் புறம் அதைவிட செக்ஸியாக இருக்கும்
அரண்டு போய் பொம்மையைச் சட்டென
இருந்த இடத்தில் வைத்துவிடுவார்.

அப்போது தியேட்டரில் எழும் நமட்டுச் சிரிப்பொலி அரங்கம் அதிரும்படி இருக்கும்//

எனக்கு மிக மிகப் பிடித்தமானஅந்தப்படத்தை பலமுறை ஏற்கனவே பார்த்து ரஸித்துள்ள நான் இப்போதும் அந்தக்காட்சியினை மனதில் நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

நடுவர் குழுவினில் இருந்த தாங்கள் தங்கள் அனுபவத்தினை மிகச்சிறப்பான உதாரணத்துடன் இங்கு கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

இதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மூலத்தின் மூலத்தையும், அதற்கான மூல காரணங்களையும் அறிய முடிகிறது.

நடுவர் வேலை என்பது மிகவும் கடினமான வேலை மட்டுமே என்பது ஐயமில்லை.

சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட முடியாத சூழ்நிலையில், போட்டியின் முடிவுகள் கொஞ்சம் முன்னே பின்னே அமைந்திருப்பினும், நிச்சயமாக நடுவர்களை கெளரவிக்கப்படத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை என்று வலியுறுத்திச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வெளிப்படையான மிகநல்ல அனுபவப்பகிர்வுக்கு என் நன்றிகள்.

தி.தமிழ் இளங்கோ said...

வலைப்பதிவினில், நின்று நிதானமாக, பொறுமையாக உங்கள் ஆலோசனைகளையும், அனுபவங்களையும் எழுதிவரும் உங்கள் பாங்கிற்கு எனது பாராட்டுக்கள். திருச்சிக்கு வந்து மூத்த வலைப்பதிவர், அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து நடுவர்களுக்கும் மிகவும் சிரமமான பணி தான் ஐயா... அதிலும் வகை 4...

கரந்தை ஜெயக்குமார் said...

போட்டியில் கலந்து கொள்வதை விட
கலந்து கொண்டவர்களின் பதிவினை ஒன்று விடாமல்படித்து, வெற்றியாளர்களைத் தேர்வு செய்வது என்பது சாதாரண பணியல்ல.
நடுவர்களின் பணிச் சுமை அறியாதவர்கள் எழுதியதைப் பொருட்படுத்தத் தேவையில்லை ஐயா
நன்றி
தம +1

Geetha said...

நடுவர் பணி மிகக்கடினமான ஒன்றுதான்...சார்..அதுவும் மரபுக்கவிதையில் அனைவருமே கலக்கி விட்டார்கள்...நன்றி சார்..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நடுவர் பணி சிரமம்தான்... சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

கடினமான பணி தான்....

தொடர்கிறேன்.

அருணா செல்வம் said...

எதற்கும் நடுங்காதவர்களே நடுவர்.
அந்த வகையில் நீங்கள் சிறந்த நடுவர் இரமணி ஐயா.

Unknown said...

நடுவராய் இருப்பது கடினமான பணியே!

அணில் said...

//...போட்டியில் கலந்து கொள்வதை விட
கலந்து கொண்டவர்களின் பதிவினை ஒன்று விடாமல்படித்து.
குறித்துக் கொண்டேன். செயல் படுத்தப் பார்க்கிறேன்.

Post a Comment