Friday, August 19, 2016

நாளொன்று.....

நாளொன்று
மெல்ல நழுவிக்கொண்டிருக்கிறது

கிழக்கில் மெல்ல ஒளிர்ந்து
நண்பகலில் கனன்று
அதற்கு வருந்துவது போல்
மாலை மெல்லத் தலைச்சாய்த்து
பகலென....

மெல்ல இருள் பரப்பி
நடு இரவில் அடர்த்திக் கூட்டி
பின் பலம் இழந்தது போல்
அடங்கி மெல்ல மாயமாய் ஒடுங்கி
இரவென......

நாளொன்று
மெல்ல நழுவிக் கொண்டிருக்கிறது

நம்பிக்கையுடன்
தன்னை எதிர்க்கொள்பவனுக்கு
வாழ் நாளில்
ஒன்றைக் கூட்டியதாய்
நம்பிக்கையூட்டி...

நம்பிக்கையின்றி
தன்னைஎதிர்க்கொள்பவனுக்கு
வாழ் நாளில்
ஒன்றைக் கழித்ததாய்
அவ நம்பிக்கையூட்டி

இரண்டுமற்று
தன் நினைவு அற்றவனுக்கு
அவன் வாழ்வில்
தான் ஒரு பூஜ்ஜியமாய்ப்
போக்குக் காட்டியபடி

மெல்ல மெல்ல
நகர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது
எப்போதும் போலும்
இன்றைய நாளும்

5 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான கவிதை! நம்பிக்கையையும், அவ நம்பிக்கையையும் நகரும் ஒவ்வொரு நாட்களும், நிர்ணயக்கின்றன என்பதை அழகாக உணர்த்தும் உண்மையான வரிகளுடன் கூடிய கவிதை.
ரசித்தேன். நன்றி!

வலைப்பக்கம் அதிக நாட்கள் வரவியலாத சூழ்நிலை.இனி தங்கள் பதிவுகளை தவறாமல் தொடர்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

ஒவ்வோர் நாளும் ஒவ்வொரு புதினம் காட்டும் உலகியல் மாயத்தில் எம் வாழ்க்கை அருமையாக சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்
வாழ்க நலத்துடன் !

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

நாளும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது!

ஜீவி said...

நம்பிக்கையுடன்
தன்னை எதிர்க்கொள்பவனுக்கு
வாழ் நாளில்
ஒன்றைக் கூட்டியதாய்

.............
அடுத்த நாளைக் கூட்ட
அடுத்த நம்பிக்கையை
மனசில் விதைப்பதாய்...

G.M Balasubramaniam said...

நம்பிக்கையுடன் எதிர்கொண்டால் திருப்தி. இல்லாவிட்டாலும் ஒரு மன நிறைவு நாளைக் கழித்ததில்

Post a Comment