Monday, August 8, 2016

குளிக்காது பவுடர் அடிக்கிற கதை...

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட்
என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்

 " யார் மாறினாலும்
நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர்ப்  பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர்ப்  பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச்
சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது

இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்

முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாகப்  பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

 அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது

"மொழி  வளர்ச்சிக்கான
அடிப்படை வளர்ச்சிக்  குறித்துச்  சிந்தியாது
வெற்று மொழிமாற்றம் என்பது
குளிக்காது
பவுடர் அடிக்கிற கதைதான்
அது சிலகாலம் மணக்கலாம்
தொடர்ந்துப்   பயன் தராது "என்றேன்

அவனுக்குப் புரிந்தது போல்
மெல்லத் தலையாட்டினான்

வழக்காடும் மொழியாக
ஆங்கிலமே தொடர
பெயர்ப்  பலகை  மாற்றக்  கோரும்
இவர்கள் என்று இதனைப்
புரிந்து கொள்ளப்  போகிறார்கள்  ?

தமிழ் மொழியை
உண்மையாய்  வளர்க்க
ஆவன  செய்யப் போகிறார்கள் ?

   

24 comments:

ஸ்ரீராம். said...

தமிழைப் 'படுத்து'பவர்கள் இவர்கள்! சத்யராஜ் - வடிவேலு நகைச்சுவைக்கு காட்சி நினைவுக்கு வருகிறது!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆங்கிலச் சொற்கள் எல்லாம் தமிழோடு கலந்து,தமிழ்ச் சொற்களாகவே மாறி ஆண்டுகள் பல கடந்து விட்டன ஐயா

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீண்டும் படித்தேன் ... மீண்டும் ரஸித்தேன் ... ஐந்து ஆண்டுகளுக்குப்பின் படிக்கும்போதும், கும்மென்ற பவுடர் மணம் தூக்கல். :)

மீள் பகிர்வுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள், மகிழ்ச்சிகள், நன்றிகள்.

G.M Balasubramaniam said...

ஏற்கனவே படித்தநினைவு. இருந்தால் என்ன செய்தி போய்ச் சேர்ந்தால் சரி வாழ்த்துகள்

ஜீவி said...

மிதிவண்டிக்குப் பதில் கட்டை வண்டி என்று நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் மிதிவண்டி அயல்நாட்டுச் சரக்கு. அதன் உறுப்புகளுக்கான பெயர்கள் வேற்று மொழிக்குச் சொந்தமானவை. அவற்றை அப்படியே சொல்லி பழகி விட்டோம். அதில் தப்புமில்லை. மாற்றம் செய்வது தான் பவுடர் பூச்சாக முடியும்.

ஆனால் கட்டை வண்டி நம் நாட்டினது. படம் வரைந்து பாகங்களைக் குறி என்றால் ஆரம்பப் பள்ளி குழந்தைகளும் செய்து விடுவார்கள்.

ஆனால் கட்டை வண்டியும் வேற்று மொழியில்
நம் குழந்தைகளுக்கு அறிமுகமாகும் பொழுது தான் சிக்கல் எழுகிறது.



kowsy said...

வடமொழி தமிழ் மொழி கலப்பு, ஆங்கிலம் தமிழ் கலப்பு , தமிழ் ஜேர்மன் மொழிக்கலப்பு என மொழிகள் கலந்துவிட்டது. ஏன் ஆங்கிலமே பல மொழிகளின் தொகுப்புத்தானே. சாதாரணமாக கலப்பது ஏற்றுக் கொள்ளக் பட்டாலும் பேசும்போது வலுக்கட்டாயமாக வலிந்து பேசுவதுதான் தாங்கமுடியல்ல

kowsy said...

வடமொழி தமிழ் மொழி கலப்பு, ஆங்கிலம் தமிழ் கலப்பு , தமிழ் ஜேர்மன் மொழிக்கலப்பு என மொழிகள் கலந்துவிட்டது. ஏன் ஆங்கிலமே பல மொழிகளின் தொகுப்புத்தானே. சாதாரணமாக கலப்பது ஏற்றுக் கொள்ளக் பட்டாலும் பேசும்போது வலுக்கட்டாயமாக வலிந்து பேசுவதுதான் தாங்கமுடியல்ல

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

ஆம் சிலபோது இவர் சத்தியராஜ்
அவர் வடிவேலு.. சிலபோது இவர் வடிவேலு
அவர் சத்தியராஜ்

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

வலுக்கட்டாயமாக
திணிப்பதும் வேண்டியதில்லை
தகர்ப்பதும் தேவையில்லை

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //
உங்கள் கவனத்தில் எளிதில் தப்ப முடியாது
என்பதைப் புரிந்து கொண்டேன்
பவுடர் பூச்சு மட்டும் புதிதே
இன்றைய சூழலுக்கு ஒத்து வந்ததால்
சிறிது மாற்றத்துடன் பதிவு செய்துள்ளேன்
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பகிர்வுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

பவுடர் பூச்சு மட்டும் புதிதே
இன்றைய சூழலுக்கு ஒத்து வந்ததால்
சிறிது மாற்றத்துடன் பதிவு செய்துள்ளேன்
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பகிர்வுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

ஆத்மா said...

சும்மா சட்டப்படி
நச்ச்ச்ச்

Yaathoramani.blogspot.com said...

ஜீவி said...//
மிதிவண்டிக்குப் பதில் கட்டை வண்டி என்று நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் மிதிவண்டி அயல்நாட்டுச் சரக்கு. அதன் உறுப்புகளுக்கான பெயர்கள் வேற்று மொழிக்குச் சொந்தமானவை. அவற்றை அப்படியே சொல்லி பழகி விட்டோம். அதில் தப்புமில்லை. மாற்றம் செய்வது தான் பவுடர் பூச்சாக முடியும்.

மிக மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்
கட்டை வண்டி உதாரணம் மிக மிக அருமை
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Chandragowry Sivapalan said....//

ஏன் ஆங்கிலமே பல மொழிகளின் தொகுப்புத்தானே. சாதாரணமாக கலப்பது ஏற்றுக் கொள்ளக் பட்டாலும் பேசும்போது வலுக்கட்டாயமாக வலிந்து பேசுவதுதான் தாங்கமுடியல்ல

மிக மிக அருமையாகக் கருத்து

உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஆத்மா //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

மீள் பதிவு மாதிரி இருக்கிறதே என்று ந்னைத்து படித்தால் மீள்பதிவுதான் என்பதை சிலர் சுட்டிகாட்டிய போது என் ஞாபகசக்தியை எண்ணி பெருமைபடுக்கொண்டேன் புதிதாக வலைக்கு வருபவர்கள் ப்டிக்க இது போன்ற மீள் பதிவு உதவுகிறது

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said...
மீள் பதிவு மாதிரி இருக்கிறதே என்று ந்னைத்து படித்தால் மீள்பதிவுதான் என்பதை சிலர் சுட்டிகாட்டிய போது என் ஞாபகசக்தியை எண்ணி பெருமைபடுக்கொண்டேன்//
பவுடர் பூச்சு மட்டும் புதிதே
இன்றைய சூழலுக்கு ஒத்து வந்ததால்
சிறிது மாற்றத்துடன் பதிவு செய்துள்ளேன்
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பகிர்வுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



K. ASOKAN said...

நல்லதொரு பதிவினை பதித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டீர்கள்

Yaathoramani.blogspot.com said...

Asokan Kuppusamy //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

மறு வடிவம் கொண்ட மீள் பதிவு என்று நினைக்கிறேன். எத்தனை முறை படித்தாலும் மனம் சலிக்காது.

வெங்கட் நாகராஜ் said...

குளிக்காது பவுடர் அடிக்கும் கதை!

நல்ல எடுத்துக்காட்டு!

நம்பள்கி said...

வாங்க! அமெரிக்கரே! அமேரிக்கா வந்த தமிழரே!:

தமிழ் நாட்டில் தமிழில் பெயர் பலகை மட்டுமாவது தமிழில் இருக்கட்டும் என்ற ஒரு சிறிய நல்லெண்ணம் அவருக்கு. தமிழ்நாட்டில் இப்படி செய்வது தவறு தான். சில வெகு ஜனப் பத்திர்க்கைகள் இது மொழி வெறி என்றும் சொல்கிறார்கள்."அடி முட்டாள்தனம்" என்றும் சொல்வார்கள்--இது "டாக்டர் ராமதாஸ்" செய்தால் மட்டுமே!

மீதி மாநிலங்களில் அவர்கள் தாய் மொழியில் எழுதினால் மொழியின் மீது அன்பினால்! அது சரி! பேருந்துகளிளில் மலையாளத்தில் மட்டுமே எழுதி இருக்கும். ஆங்கிலம் இருக்காது--இது தன மொழியின் மட்டும் காட்டும் பாசம்! அதே பாசம், தமிழகத்தில் தமிழில் எழுதினாலேயே (மிதிவண்டி!), அல்லது அங்கிலத்தில் எழுதாமல் தமிழில் மட்டுமே பஸ்களில் எழுதினால் தமிழ் வெறியாம். மற்ற மாநிலத்தவ்ர்களுக்கு நாம் ஆங்கிலத்திலும் நம் தமிழ்நாட்டில் எழுதணும்---இது அவர்களும், நம் அறிஞர்களும் வைத்த விதி; அப்ப நாம் இந்தியா நாம் இந்தியர்கள் என்ற பஜனை காது கிளியும்! ஆனால், அவர்கள் ம்ன்லிப்தில் அவர்கள் பஸ்ஸில் ஆங்கிலத்தில் கூ எழுதவேண்டாம்; கேட்டால் எண்டே இது கேரளா என்பான்!

வடையை வடை என்றும், தோசையை தோசை என்றும் சொன்ன மற்ற மாநிலத்தான் ஒட்டல்க்ளில் பார்க்கமுயடியது!அது சரி. அமெரிக்காவில் தமிழ் ஹோட்ல்கலில் வடையை வடை என்றும் தோசையை தோசை என்றும் சொல்ல வைத்து விடுங்கள். Menu-வில் Thosai என்றும் Vadai என்றும் ஆங்கிலத்தில் காட்டுங்கள் பார்க்கலாம் (செய்வது தமிழன் தான்!)! ஏன் அதை மாத்துங்கள் பார்க்கலாம்.

அதை விடுங்க...தமிழ்நாட்டில் சென்னை அடையார் ஆனந்த் பவனில் Thosai , Vadadi என்று எழுத வைத்துவிடுங்களேன்

நம்பள்கி said...

சில மாநிலங்களில் பஸ் நம்பர்கள் கூட அந்த மொழியில் எழுதி இருந்தார்கள். ஒன்னும் புரியவில்லை; இது இப்ப இல்லை. நான் மாணவனாக இருக்கும் போது, inter med college cultural festival-ல் எங்கள் கல்லூரி சார்பில் நாடகத்தில் நடிக்க சென்ற போது, அந்த ஊரை சுற்றிப் பார்க்கும் போது பஸ்ஸை பிடிக்க மிக மிக கஷ்டப்பட்டோம்.

மொழியே தெரியாத போது, மொழியில் நம்பர் என்றால் எப்படி? நாங்கள் அப்ப பட்ட கஷ்டம் எங்களுக்கு இன்றும் நியாபகம் உள்ளது. எந்த மாநிலம் என்று நியாபகம் இல்லை! ஆனால், இந்த ஐந்தில் ஒன்று...டெல்லி, பாம்பே, பங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத், (பாண்டி --can be excluded! அங்கு தமிழ் தான்).

இந்த அழகில் அப்போ சோ ராமாசாமி வகையறாக்கள் அபேட்சகரை மாற்றியதர்க்கும், பஸ்ஸை பேரூந்து என்று மாற்றியதற்கும் நக்கல் நையாண்டி வேற--இதை மொழி வெறி என்று கிண்டல். மற்ற மாநிலங்கள் செய்ததை தட்டிக் கேட்க துப்பில்லை. இதற்கு நம் ஜால்ரா தமிழர்களும் துணை!

பின்குறிப்பு:
அபேட்சகர் என்றால் இந்த இளம் தலை முறைக்கு தெரியுமா? அப்படி என்றால்...வேட்பாளர் என்று அர்த்தம்! ஏன் அவர்களுக்கு இந்த எரிச்சல் நம் தமிழ் மொழி மீது! ஏன் அருவருப்பு--- அதை மாற்றியது மு.க. என்பது கூடுதல் எரிச்சல்.

வேறு ஒரு பதிவில் தவறாக எழுதி விட்டேன்..அதை இங்கு எழுதி இருக்க வேண்டும்! So, again!

Thulasidharan V Thillaiakathu said...

தமிழின் அவசியத்தைச் சொல்லிச் சென்ற விதம் அருமை....ரசித்தோம். நல்ல செய்தி தலைப்பு சிறப்பு

Post a Comment