Sunday, December 29, 2013

சிரிப்பின் சுகமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்  )

Friday, December 27, 2013

குழந்தைகளோடு இணைந்திருங்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவை  உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

இவை எதற்கும் நேரமில்லையெனில்
கவலை கொள்ளவேண்டாம்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

Wednesday, December 25, 2013

சிகரம் தொட்டு மகிழ்வோம்

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பதும் எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகளை நொறுக்கி
சிகரம் தொட்டு  மகிழ்வோம்

Monday, December 23, 2013

இன்றுபோல் என்றும் வாழ்க

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Saturday, December 21, 2013

ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

செய்யக் கூடாதை செய்து
பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Thursday, December 19, 2013

இணைத்துக் கொள்வதில்உள்ள உண்மையான சுகம்

நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

(வெறுமனே பதிவுகளை  படித்துச் செல்வதை விட
 பதிவர்களை  இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில்  உள்ள சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை   )

Tuesday, December 17, 2013

அனுமார் வால்

"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு  ".....

மனதின் மூலையில் புகையாய்
 கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத்  திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 எப்படியெல்லாம மாறிவிட்டன ?

வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை  மாறுதல்கள் ?

வசதி வாய்ப்புகளே    தேவைகளை முடிவு செய்ய

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...

சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...

செல்வமும் செல்வாக்கும்  நீதியை முடிவு செய்ய ..

உறவுகளைக் கூடப்  பயன் முடிவு செய்ய...

உணவினைக்  கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக்  கிழமை முடிவு செய்ய..

காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..

புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...

சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு   எரியத் துவங்க

 புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
  பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
 அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல்  பரந்து விரியத் துவங்குகிறது

Sunday, December 15, 2013

தலை நகரப் பதிவரே/தலையாயப் பதிவரே

சிறந்ததை மட்டுமே செய்தாலும்
அதனைச் செய்வதற்குரிய
முழுத் திறன்பெற்றுச் செய்தாலும்
செய்வதனைத் தொய்வின்றித்
தொடர்ச்சியாகச் செய்தாலும்
சுவாரஸ்யமாகச் செய்தாலும்
அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும்
தொடர்ந்து முன்னணியில் இருக்கும்படியாகவும்
செய்வதென்பது எத்துறையிலும் எவர்க்கும்
என்றும் நிச்சயம் சாத்தியமில்லை

மிக நிச்சயமாக பதிவுலகில் அது சாத்தியமே இல்லை

அது எப்படியோ  நமது தலைநகரப் பதிவரே
பதிவுலகின் தலையாயப் பதிவரே
உங்களுக்கு மட்டும் அது சாத்தியமாகி இருக்கிறது

செப்டம்பர் 2009 இல் குரங்கு நீர் வீழ்ச்சியில்
நண்பர் நடராஜனுடனான அனுபவத்தை
நகைச்சுவைத் ததும்ப தலைக் காவிரிபோல்
சொல்லத் துவங்கி இன்று அகண்ட காவிரியாய்
சிவப்பு  அனுமாரில் தொடர்ந்து கொண்டிருக்கும்
நேர்த்திஎம்மில் ஏற்படுத்திப் போகும் பிரமிப்பும்

சந்தித்ததும் சிந்தித்ததும் என்கிற தலைப்பிற்கு ஏற்ப
அன்றாட நினைவுகள் குறித்த ஆழமான சிந்தனையை
அழுத்தமாகவும் அதே சமயம எவர் மனமும்
புண்படாமல்  சொல்லிப்போகும் பக்குவமும்

பயணப்படும் இடங்களிலெல்லாம் பதிவர்களை
மனதில் கொண்டு அனைத்துத் தகவல்களையும்
சேகரித்து அருமையாகக்  கொடுப்பதோடு
அற்புதமான புகைப்படங்களையும் பகிர்ந்து
 பதிவர்களுக்கும்உங்களுடன் பயணிப்பதைப் போன்ற
மனத் திருப்தியை ஏற்படுத்திப்போகும் திறனும்

பதிவர்கள் சந்திப்பு எனில் (குடும்பத்தில் அனைவரும்
பதிவர்கள் என்பதால்)குடும்பத்தோடு
கலந்து கொள்வதோடு மட்டுமல்லாது
அதில் குடும்ப விழாவில் கலந்துகொள்வதுபோல்
மனமகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு
அது குறித்தப் பதிவில்அனைவரின்
 புகைப்படங்களையும் பெயரோடு வெளியிட்டுச்
 சிறப்புச் செய்த பாங்கும்---

எம்மில் ஏற்படுத்திப் போகும் மதிப்பு.பிரமிப்பு----

தமிழ்மண தரவரிசைப்பட்டியலில்
 5 ஆவதாகத் தொடர்வதை விட

300 ஐ நெருங்கிய பின்தொடர்பவர்களைக்
கொண்டிருப்பதைவிட

2 இலட்சத்தை நெருங்கும் பக்கப் பார்வையாளர்களைக்
கொண்டதை விட

600 தரமான பதிவுகள் தந்தப்
பிரமிப்பை விட

கூடுதலானது எனச் சொன்னால்
நிச்சயம் அது மிகைப்படுத்தப்பட்டதல்ல

இந்தப் பதிவில் நான் தங்கள் பெயரைக் குறிப்பிடவேண்டிய
அவசியமே இல்லை
(அது சூரியனை லைட் அடித்து காண்பிப்பது போலாகிவிடும் )

ஏனெனில்
இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர்
தமிழ்ப் பதிவுலகில் உங்களையன்றி
வேறு யாருமில்லை என்பதை பதிவர்கள் அனைவரும்
அறிந்ததுதானே ?

தங்கள் சாதனைகள் தொடர பதிவர்கள்
அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள்
                                                                                                                                                                            

Friday, December 13, 2013

வரம்வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Thursday, December 12, 2013

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Tuesday, December 10, 2013

பாரதிக்கு தமிழன்னை பாடும் பாட்டு

தர்பார் மண்டபங்களில்
மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா 

Sunday, December 8, 2013

உலகில் காணும் காட்சி யாவும் கவிதைக் கோலம் தானே

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

Thursday, December 5, 2013

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
திசைத் தெரியா  வெளிதனில்
என்னை விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்

உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை

விழாதிருக்க எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு

குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

Tuesday, December 3, 2013

ஏனில்லை எதிலும் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  


அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Sunday, December 1, 2013

பித்தலாட்டப் போதனைகள்

ஏழையின் எளிமையது
இகழ்ந்துதினம்  தூற்றப்பட
செல்வரவர்  எளிமையதோ
சிறப்பாகப் பேசப்படும்

பலவீனன் பொறுமையது
ஏளனமாய் பார்க்கப்பட
பலசாலி பொறுமையோ
கவனித்துப் போற்றப்படும்

முட்டாளின் அடக்கமது
எரிச்சலூட்டும் உணர்வாக
அறிவாளியின் அடக்கமதோ
சிகரத்தில் வைக்கப்படும்

தொண்டனின் பலவீனம்
தண்டனைக்கு உரியதாக
தலைவனின் பலவீனம்
பல்லக்கில் ஏற்றப்படும்

உழைப்போரின் தெய்வங்கள்
வெட்டவெளியில் காய்ந்திருக்க
கொழுத்தோரின் தெய்வமதோ
தங்கத்திலே தகதகக்கும்

மனிதஜாதி இரண்டென்பது
பாலினத்தில் மட்டுமல்ல
மனிதநீதி  அதுகூட
இரண்டெனவேத் தெளிந்திடுவோம்

அனைத்திலுமே சமத்துவத்தை
அடைகின்ற வரையினிலே
பித்தலாட்ட போதனைகளை
புறந்தள்ளப் பயின்றிடுவோம்

Saturday, November 30, 2013

மரபுக் கவிதையும் ரவை உப்புமாவும்

எப்பொழுதும் எம்வீட்டில் குறைவு இன்றி
எப்பொருளும் எந்நாளும் இருக்கும் அதனால்
முப்பொழுதும் தப்பாது குறைகள் இன்றி
நளபாகம் படைத்திடுவாள் எந்தன் துணைவி

எப்படித்தான் சுதாரித்து இருந்தால் கூட
என்றேனும் ஒர்நாளில் சமையல் செய்ய
எப்படியோ பொருளொன்று குறைந்து போகும்
அப்போது சிலநிமிடம் குழப்பம் சூழும்

மல்யுத்தப் போட்டியிலே கீழே வீழ
மறுகணமே துள்ளியெழும் வீரன் போல
இல்லாத பொருள்குறித்தே எண்ணி இராது
சட்டெனவோர் முடிவெடுப்பாள் இல்லக் கிழத்தி

எதிர்க்கடைக்கு உடனடியாய் என்னை அனுப்பி
வறுத்தரவை அரைக்கிலோவும் அதற்குத் தோதாய்
கிளிநிறத்து மிளகாயும் வாங்கச் சொல்லி
உடனடியாய் செய்திடுவாள் உப்பு மாவே

நினைத்தவுடன் உடனடியாய் செய்யும் உணவு
உப்புமாபோல் உலகினிலே ஏதும் இல்லை
மனைவியர்க்கும் அவசரத்தில் உதவும் பதார்த்தம்
நிச்சயமாய் உப்புமாபோல் எங்கும் இல்லை

அதுபோல

எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்

எப்படித்தான்  ஆர்வமாக இருந்தால் கூட
என்றேனும் ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும்
எரிச்சலிலே எனைநிறுத்தி ஆட்டம் காட்டும்

வள்ளலுக்கு வருகின்ற வறுமை போல
வீரனுக்குள் வளர்கின்ற சோர்வு போல
உள்ளமதில் வெறுமையது சூழ்ந்த போதும்
அறிவதுவோ வேறுவழி ஒன்றைக் காட்டும்

"அச்சதற்குள் களிமண்ணைத் திணித்து எடுக்க
அழகான பொம்மையது வருதல் போல
சட்டத்துள் வார்த்தைகளை அடுக்கி எடுநீ
அழகான கவியொன்று கிடைக்கும்  "என்கும்

அதன்வழியே ஏழெட்டு எதுகை எடுத்து
அதற்கீடாய் மோனையையும் சேர்த்து எடுத்து
உடனடியாய் கவியொன்றைச்  செய்வேன் நானே
ஒருநொடியே ஆகுமதைச்  செய்யத் தானே

அதனால்

நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே

Wednesday, November 27, 2013

" யாதோ"

கவிஞனாக அறிமுகமாயிருந்த
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த
அவன் முகம்திடீரெனக் கறுத்துப் போனது

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதைச் சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" எனப் பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதிக் கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்குப் போதிய பயிற்சியும் இல்லை"என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ
அவர்கள் தான் எதையும்
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா"என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப் பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய்க் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும்
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"என்றான்
எதிரில் வந்தபத்தாம் வகுப்பில்தமிழில்
முப்பது மதிப்பெண்களே எடுத்ததால்
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.

"எழுத்தில் ஆர்வம்
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி எனத் தெரியாமல்
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையைப் பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய்ப் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்

அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்"என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"என்றான்

முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்

திடுமென என் தோளை தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னைப் பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாகப் புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா"என்றான்

அவனை அதிசயமாய்ப் பார்த்து
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிகள் கிடைத்தன
அவைகளைப் புறக்கணித்தா விட்டோம்

எழுதியவரை " யாரோ "எனச் சொல்லி
 சேர்த்துக் கொள்ளவில்லையா"என்றான்

நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்

எனது சிந்தனைகளை இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை

இப்போதெல்லாம்நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை

நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்

Sunday, November 24, 2013

வாழும் வகையறிந்து....

அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

Wednesday, November 20, 2013

தமிழ்மணக் குழப்பம் வந்ததுவே எனக்கும்

சங்கர பாஷ்யத்திற்கு அர்த்தம் அத்துப்படி
பிரம்ம ரகசியம் என்பதெல்லாம் எனக்கு வெறும் ஜுஜுபி
என்பவர்களையெல்லாம் அழைத்து
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியல் எப்படி
தீர்மானிக்கப்படுகிறது எனக் கேட்டால்
நிச்சயம் தலையைப் பிய்த்துக்
கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்

அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்
என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து
கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்

சரி அது எப்படியோ போகட்டும்
அது அவர்கள் விதிப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்

போட்டி என்றால்
தனி நபருக்கும் தனி நபருக்கும்
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
குழுக்களுக்கும் குழுக்களுக்கும்
நடப்பதைப் பார்த்திருக்கிறோம்

தனி நபருக்கும் குழுக்களுக்கும்
குழுக்களுக்கும் தனி நபருக்கும் இருப்பதை
எங்காவது பார்த்திருக்கிறோமா ?

அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர் 
என்றாவது முதலாவதாக வரச்   சாத்தியம் உண்டா ?

தமிழ்மணத் தர வரிசைப் பட்டியலில்
பதிவர்களைப் பொருத்துப் பட்டியலிடுவது சரி

அதற்குள் திரட்டிகளையும் ஒரு பதிவர் கணக்கில்
எடுத்து பட்டியலிடுவது எப்படிச் சரி ?

தமிழ் நியூஸ்,புரட்சி நியூஸ் மற்றும்
வலைச்சரத்தையெல்லாம் ஒரு பதிவாகக் கொண்டு
பட்டியலிடுதல் எந்த வகையில் சரியென எனக்கு
விளங்கவே இல்லை

இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்
 திரட்டிகளைத்  தவிர தனிப்பதிவர்கள்  என்றேனும்
வெற்றிபெற  வாய்ப்பிருக்கிறதா ?
எனக்குப் புரியவில்லை
   
இது குறித்துப் புரிந்தவர்கள் பதிவிட்டால்
மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்

Tuesday, November 19, 2013

கருவும் படைப்பும்

 பதிலை
கேள்வி தீர்மானிப்பதைவிட
கேட்கும் தொனியே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது

"சாப்பிட்டாகிவிட்டதா ? "என்றால்
"ஆகிவிட்டது "என்பதாக

"சாப்பிடுகிறீர்களா ? "என்றால்
"இல்லை மனைவி காத்திருப்பாள் " என்பதாக

"முதலில் சாப்பிடுங்கள்
அப்பத்தான் பேச்சே எப்படி வசதி ?"என்றால்
"சரி "என்பதாக

கேள்வி பதிலைத் தீர்மானித்தலை விட
கேட்பவனின் தொனியே
அதிகம் தீர்மானிக்கிறது

படைப்பை
கரு தீர்மானிப்பதைவிட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாகத் தீர்மானிக்கிறது

"எதையாவது எந்த வடிவிலாவது"எனில்
சொத்தையாகக் குப்பையாக

"இதை எந்த வடிவிலாவது" எனில்
சராசரியாக ஒப்புக்கொள்ளும்படியாக

"இதை இந்த வடிவில் இப்படித்தான் "எனில்
சிறந்த படைப்பாகக் காலம் கடப்பதாக

படைப்பைக் கரு தீர்மானித்தலை விட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது
தொனி  பதிலைத் தீர்மானிப்பது  போலவே

Sunday, November 17, 2013

வெள்ளத்தனைய......

தெளிவடைந்தவர்கள் யாரும்
அலட்டிக்கொள்வதில்லை எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் கொடுப்பதெல்லாம்
இங்கிருந்து எடுத்ததுதான்
முடியுமானால் எடுத்ததை
செழுமைப்படுத்திக் கொடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
எடுத்ததை விட
கூடுதலாக்கிக் கொடுப்பதிலும் மட்டுமே
கூடுதல் கவனம் கொள்கிறார்கள்

முதிர்சியடைந்தவர்கள் எவரும்
அகங்காரம் கொள்வதில்லை  எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் எடுத்ததெல்லாம்
அவர்கள வரும் முன்பே
இங்கிருந்ததுதான்
முடியுமானால் எடுப்பதை
போதுமான அளவில் எடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
குறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே
அதிக ஆர்வம் கொள்கிறார்கள்

ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்களின் இருப்பு  அநித்தியமானது  என்பதும்
அவர்கள் வரும் முன்பே  இருந்தது
அவர்கள் இல்லையெனினும் இருக்குமென்பதுவும்
முடியுமானால் அவர்களின் இருப்பை
பயனுள்ளதாக்கப்  பார்க்கிறார்கள்
இன்னும் முடியுமானால்
நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறை கொள்கிறார்கள்

Friday, November 15, 2013

ஜாலியும் ஜோலியும்

"ஜோலி ஜோலி "என்றே இருந்தால்
வாழ்க்கைப் "போராய்ப்  " போகும் என்று
"ஜோலிக் "குள்ளே ஜாலியைக் கொஞ்சம்-சோற்றில்
உப்பைப் போலச் சேர்த்தார் அன்று

"ஜாலி " ஒன்றே வாழ்க்கை என்று
வாழ்தல் ஒன்றேச் சரியெனக் கொண்டு
வாலிபர் எல்லாம் மாறினார் இன்று-சோற்றை
ஊறு காய்க்குத் தொட்டுக் கொண்டு

பொழுதைப் போக்கத் தேவை இல்லை
போதல் ஒன்றே பொழுதின் தன்மை
உழைத்தக் களைப்பைப் போக்க மட்டும்-பொழுதுப்
போக்குப் போதும் என்றார் அன்று

போகும் வழியது தெரியா தென்று
பொழுது நின்று தவிப்பது போன்று
நாளும் பொழுதும் பொழுதை வீணே-இங்கே
போக்கித் திரிகிறார் பலரும் இன்று

அதனால் தானே தமிழில் இங்கு
"டயம்பாஸ் " என்கிறப் பெயரையேக் கொண்டு
உதவாக் கரையாய்ப்  புத்தகம் ஒன்று-அழகாய்
உலவியும் வருகுது பொழுதையும் விழுங்குது

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்

Wednesday, November 13, 2013

ராஜாவான ரோஜா

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்ததே - அது
நூறு பூவில் அதுவும் ஒன்றாய்
கணக்கில் இருந்ததே

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-உடனே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டதே

பஞ்சம் பசியும் பிணியும் நாட்டில்
விரைந்து பெருகவே-எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்

பஞ்ச சீலக் கொள்கை கண்டு
உலகுக் களித்தாரே-அதனால்
ஐந்து கண்டமும்  புகழும் ஆசிய
ஜோதி ஆனாரே

முதலாய் இருப்பது மட்டும் என்றும்
பெருமை கிடையாது-அதிலே
முதன்மை பெற்று இருத்தல் ஒன்றே
பெருமை என்றுணர்ந்து

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்தாரே-நமது
இந்திய நாடு வளர்ந்து சிறக்க
வழியை வகுத்தாரே

குழந்தை மனதைக் கொண்டே அவரும்
வாழ்ந்து வந்ததனால்-என்றும்
குழந்தை நலமே நாட்டின் வளமென
உறுதி கொண்டதனால்

குழந்தை தினமாய் பிறந்த நாளை
சொல்லி மகிழ்ந்தாரே-என்றும்
உலகே விய ந்து   போற்றும்  உன்னதத்
தலைவர் ஆனாரே   

Monday, November 11, 2013

அந்தநாள் எனக்குப் பொன் நாள்

கவியது படைக்க எண்ணி      
மனமது முயலும் போதே
சதியது செய்தல் போல
சங்கடம் நூறு நேரும்
எதிரியாய் எதுகை மாறி
எடக்கது செய்து போக
புதிரென மோனை மாறிப்
புலம்பிட வைத்துப் போகும்

இனியொரு கவிதை யாரும்
இயற்றுதல் கடினம் என்னும்
கனிநிகர் கவிதை யாக்க
கடிதுநான் முயலும் போதே
அணியது முரண்டு செய்து
மனமதை நோகச் செய்ய
பனியது விலகல் போல
படிமமும் ஒதுங்கி ஓடும்

யுகக்கவி இவனே என்று
உலகிது போற்றும் வண்ணம்
நவகவி ஒன்று நானும்
நவில்ந்திட முயலும் போதே
உவமையும் வெறுப்பை ஊட்டி
ஒழிந்துதன் இருப்பைக் காட்ட
அவதியில் மனமும் மாறிக்
கவிதையை வெறுத்துச் சாடும்

ஆயிரம் முறையே வீழ்ந்தும்
எழுந்திட முயலும் சேயாய்
காவியம் ஒன்றை வாழ்வில்
செய்திட முயல்வேன் ஓர்நாள்
மேவிடும் முயற்சிக் கண்டு
மனதினில் மகிழ்வுக் கொண்டு
காளியே அருள்வாள் ஓர்நாள்
அந்தநாள் எனக்குப்  பொன் நாள்

Thursday, November 7, 2013

பிரசவ வைராக்கியம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்
அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை
'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Saturday, November 2, 2013

போதையும் திருவிழாவும்

முற்றியப்  போதை தெளிந்த பின்
குடிகாரன் பார்வையில் படும்   சூழலாய்
விரிந்து கிடக்கிறது
திரு விழா முடிந்த மறுநாள்

நட்புக்காகத் எனத் துவங்கி
சகமரியாதைக்கு எனத் தொடர்ந்து
போதையின்  பிடியில் நகரும் இரவாய்

சம்பிரதாயம் எனத் துவங்கி
தனக்கானக்   கௌரவம் எனத் தொடர்ந்து
விளம்பரங்களுக்கிடையில்  சிக்கிய  போதையில்
தத்தளித்துக்   கிடந்த நடுத்தரக் குடும்பம்

கட்டுப்பாட்டை  முழுதும் இழக்க 
கடந்து   சென்ற   இரு நாட்கள்
லேசாய்  நினைவுக்கு வர
தலை உலுக்கி
 ஒரு சராசரி நாளை எதிர்கொள்ள
வழக்கம்போல்  தயாராகிறது மீண்டும்

அளவை  மீறியச் செலவு
அலங்கோலமாய்  கிடக்கும் இருக்கைகள்
காலி பாட்டில்கள்அலங்கோலம்போல்

எல்லை மீறியச்  செலவுகளும்
வரும் மாதத் தேவைகளும்
லேசாக  மனத்தைக்  கலக்கிப்போக

அடுத்தமுறையேனும்
தேவையற்றதை தவிர்க்கணும்  
செலவினை  வரவிற்குள் அடக்கணும் எனும்
பிரசவ   சங்கல்பமெடுக்கிறது அது
வழக்கம்போல் எடுக்கும்
பல வருடாந்திரத் தீர்மானங்கள் போலவே

 இனியேனும்
குடிப்பதை   அடியோடு நிறுத்தனும்
குடித்தாலும்  அளவோடு குடிக்கணும் என
நாற்பட்ட குடிகாரன்   எடுக்கும்
அன்றாடத்  தீர்மானம் போலவே
என்றும்   நிறைவேறாது போகும்
அந்த அதிசயத் தீர்மானங்கள் போலவே

Tuesday, October 29, 2013

திருநாள் ஏதும் உண்டோ ?

திருநாள் ஏதும் உண்டோ  ?- தீபத்
திருநாள் எங்கும் உண்டோ ?
வருடம் ஒருநாள் ஆயினும் -திருநாள்
ஒருநாள் இரவே ஆயினும்                          (திருநாள் )

சிறியவர் பெரியவர் பேதமும்- செல்வம்
உடையவர் வறியவர் பேதமும்
துளியது இன்றி மகிழ்வினில் _அனைவரும்
திளைத்திடும் மகிழ்வைப் பெருக்கிடும்    (திருநாள் )

உறவினை எல்லாம்  கூட்டியே _ இனிக்கும்
விருந்தினில் அன்பைக் காட்டியே
துயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்
மகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும்               (திருநாள் )

இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
நெருப்பினை நம்முள் விதைத்திடும்       (திருநாள் )

Saturday, October 26, 2013

இலக்கும் இடைவெளியும்

சட்டென மின்சாரம் அணைந்து போக
ஏற்றப்பட்ட விளக்கில்
எதிர் சுவற்றில் என் உருவம்
பூதாகாரமாய்...

ஏதோ ஒரு காரணமாய்
நான் பின் நகர
அதே சுவற்றில் என்னுருவம்
என்னிலும் பாதியாய்...

பார்த்துக் கொண்டிருந்த என் பேரன்
"எப்படித் தாத்தா
விளக்கும் நகராம நீயும் மாறாம 
உன் நிழல் மட்டும் எப்படி
உயரமாய் குள்ளமாய் " என்கிறான்

"அது இடைவெளி செய்யும் மாயம் "என்கிறேன்

அவன் புரியாது விழிக்கிறான்
எனக்கும்
வேறெப்படி சொல்வதெனப் புரியவில்லை

Wednesday, October 23, 2013

சராசரித்தனத்தின் சிறப்பு

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும் தொண்டனுக்கும்
இடைப்பட்ட அல்லக்கைகள் போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
கீறிவிட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கும்
வெகுஜனம் தரும் மரியாதைக்குப்
பங்கமும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணி ஓரத்துப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை

மௌனங் காத்தலே
அறியாமைக்கு உற்றதிரையென
ஒதுங்கியே  நட்புகொள்ளும் வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளை அறிய ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

Tuesday, October 22, 2013

அரசியல் விளையாட்டு

மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன

விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆகி
பழக்கப்பட்டும் போய்விட்டது

பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

அணிகள் கூட
எதிரிகளாகக் களம் இறங்கி
பரம எதிரிகளாய் வெளியேறுகிறார்கள்

காவலர்களும் மருத்துவர்களும் இன்றி
விளையாட்டுச் சாத்தியமில்லை என்றாகி
அதுவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது

ஆயினும் கூட
விளையாட்டு துவங்கும் முன்பும்
விளையாட்டும் முடிந்த பின்பும்

"விளையாட்டு ஒன்றுதான்
மனித நாகரீகத்தின் உச்சம்
மனிதன் உயர்வுக்கு அச்சாணி "எனப்
பிரச்சாரம் செய்து போகிறார்கள்
விளையாடிச்செல்பவர்கள்

ஊட்டப்பட்ட போதையில்
ஆக்ரோஸ அணிகளாக
ஆட்டம் போட்ட பார்வையாளர்கள்

ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாறி
கடந்து போகிறார்கள்
தத்தம்ம் பிழைப்புத் தேடி
"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி

Sunday, October 20, 2013

சிரிப்பும் திரு நாளும்

என்று வருமோ என்று வருமோ-என்று
ஏங்க வைக்கும் ஒரு நாள்-
இன்று நாளை என்று நாளை-நம்மை
எண்ண வைக்கும் ஒருநாள்
கன்று போல வயதை மீறி-நம்மைத்
துள்ள வைக்கும் ஒரு நாள்
எங்கும் உலகில் இதுபோல் இல்லை-நம்
உவகைப் பெருக்கும் நன்னாள்

வருகை தன்னை உறுதி செய்து-மருமகன்
மகிழ்வை விதைக்கும் ஒருநாள்
புதுவகை வெடிவகை பட்டியல் அனுப்பி-பேரன்
மகிழ்வைப் பெருக்கும் ஒருநாள்
இதுவரை அறியா இனிப்பினைச்செய்து-மனைவி
மகிழ்வை உயர்த்தும் ஒருநாள்
இதுபோல் உலகில் எங்கும் இல்லை-நாம்
உணர்ந்து மகிழும் திருநாள்

விடிய எழுந்து குளித்து முடித்து-கோடி
உடுத்தி மகிழும் ஒருநாள்
புதிது புதிதாய் சுவைத்து மகிழ்ந்து-சுகத்தில்
சொக்கிக் கிடக்கும் ஒருநாள்
முடிந்தால் புதிய சினிமாப் பார்த்து-அதில்
மூழ்கித் திளைக்கும் ஒருநாள்
இதுதான் திருநாள் எனவே நினைத்தால்-நாம்தான்
உலகின் முதல்நிலை முட்டாள்

தெய்வம் நமக்குக் கொடுத்த தெல்லாம்-நாமே
தின்றுத் தீர்க்க இல்லை
பிள்ளைப் பார்க்க உண்டுத் திரிபவன்-நிச்சயம்
மனித இனமே இல்லை
இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
பொதுவென் றாக்கி ரசிப்போம்

Thursday, October 17, 2013

குமுதத்தின் ராஜதந்திரம்

குமுதம் இதழ் இந்த வாரம் தீபாவளி
சிறப்பு மலர்களில் ஒரு மலராக
இணையச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது
அதில் ஒரு கட்டுரை வலைத்தளம் குறித்த
கட்டுரையாக வெளிவந்திருக்கிறது,

அந்த கட்டுரையை வலைத்தளத்தித்தில்
அதிகப் பரிட்சயம் உள்ளவர்தான் எழுதியிருக்கிறார்
 என்பதுநம் வலைத்தளதின் பலம் மற்றும்
 பலவீனங்கள் குறித்து மிக எளிமையாகச்
சொல்லிப் போவதுபோல்அடிஆழம் தொட்டு
இருப்பதில் இருந்து நிச்சயமாக
புரிந்து கொள்ளமுடிகிறது.

சிறந்த முதலாளி என்பவர் எப்போதும்
எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளியை
 பயன்படுத்திக்கொள்வது என்பதிலும்தான் ---

உண்மையில் தொழிலாளிக்கு அதிகம்
பயன்படாமல்பயன்படுவதுபோல் நடிப்பது
எப்படி என்பதிலும்தான்---
மிக கவனமாக இருப்பார்

கெட்டிகார அரசியல்வாதி கூட தான் அதிகம்
 தியாகம்செய்வது போல் நடித்தபடி மக்களை
 எப்படித் தனக்காக அதிக பட்ச தியாகம்
செய்ய வைப்பது என்பதில்
மிகக் குறியாக குறியாக இருப்பார்

இணையத் தளத்தின் வளர்ச்சி நிச்சயம்
 பத்திரிக்கைகளுக்குசாதகமானதில்லையென்பது
 குமுதம் போன்ற வெகு ஜனப்
 பத்திரிக்கைக்காரர்களுக்கு புரியாதிருக்க
வாய்ப்பில்லை,ஆயினும் அவர்கள் ஏன் தனியாக
இணையத் தள சிறப்பிதலும் அதில் வலைத்தளம்
குறித்த கட்டுரையும் வெளியிடுகிறார்கள் எனில்
"அதில்தான் இருக்கிறது ஆச்சாரியரின்
 விபீஷண வேலை "

காலத்தின் போக்கோடு அனுசரித்துப் போகாத எதுவும்
கரையோரம் ஒதுக்கப்படும் என்பதுவும்
அதனோடுஇயைந்து போதலுமே நிலைத்தலுக்கான
சூத்திரம் என்பதுவும்அவர்களுக்குத் தெரியும்

இப்போது வருகிற சினிமாக்களில் எல்லாம்
பத்திரிக்கைகளுக்குநன்றி தெரிவித்து வாசகம்
போடுவதில் நமதுவலைத்தளங்களுக்க்கும்
சேர்த்து நன்றி சொல்வதில்
மிக கவனமாக இருக்கின்றன

காரணம் பத்திரிக்கையில் வருகிற விமர்சனத்தை விட
இணையம் மூலம் வருகிற விமர்சனங்கள் விரைவாக
மட்டுமின்றி மிகவும் கூர்மையாகவும் இருப்பதால் அது
தங்கள்  வசூலை பாதித்துவிடக் கூடாது என்பதில்
ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வே காரணம்.

அதைப்போலவே பத்தாம்பசலித்தனமாக இன்னமும்
சினிமாவுக்கெனவும் பயனற்ற வெறும் பொழுது போக்கு
விசயங்களுக்காக அதிகப் பக்கங்கள் ஒதுக்கியும் தனது
வியாபாரத் தந்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிற
ஒரு பத்திரிக்கை----

மக்கள் கவனம்  கொள்ளவேண்டிய விஷயங்களை
மிகச் சாதுர்யமாய் மறைத்து தேவையற்ற விஷயங்களில்
கவனம் கொள்ளவைப்பதில் மிகக் கவனமாய் இருக்கிற
ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கை---

மிகச் சரியாக தாமும் தற்கால உலகின் போக்கை
புரிந்து கொண்டிருக்கிறோம் என பம்மாத்துக் காட்டி
தன் வியாபார சாம்ராஜ்ஜியத்தை
நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கிற அற்ப
முயற்சியே இது

பிற பத்திரிக்கைகள் போல நல்ல வலைத் தளங்களையும்
நல்ல முக நூல் வாசகங்களையும் அறிமுகம் செய்து
அதன் மூலம் நல்ல கருத்து மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும் என்கிற எண்ணம் இல்லாது----

அதன் மூலம் இணையத் தளம் மற்றும் வலைத்தளம்
ஆகியவற்றின் வீச்சை மக்கள் அறியவிடாது----

வலைத்தளத்தையும் இணையத்தளத்தையும்
மேலோட்டமாக சொல்லிச் செல்வதன் மூலமே--

தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கெட்டிக்காரத்தனமாகச் செய்கிற அற்பத்தனத்தை
 நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்வோம்

அவ்வப்போது இதுபோன்ற அற்பப் பத்திரிக்கைகளுக்கு
நம் வலைத்தளம் மூலம் ஆப்படிப்பதன் மூலம்
அவைகளை மைய நீரோட்டத்திலிருந்து
ஒதுக்கிப் போடுதலே இலக்கியத்திற்கும்
 மக்களுக்கும் நாம் செய்யும்
மகத்தான தொண்டு எனப்புரிந்து
தொடர்ந்து செயல்படுவோம்

Tuesday, October 15, 2013

குட்டி யானைக்கு இரும்புச் சங்கிலி

நம்மை மீறிடும்
சக்திப் பெற்ற யானையைக்
குட்டியாய் இருக்கையில்
கனத்தச் சங்கிலியால்
பிணைத்துப் பழக்குதல்
பின்னாளில் அதனை
மிகச் சரியாய்ப் பயன்படுத்த உதவுதல்போல்

வானம் மறைக்கும்
ஆலமரமாயினும் கூட
செடியாய் இருக்கையில்
விலங்குகளுக்கு இரையாகாது
வேலியிட்டுப் பாதுகாத்தல்
பின்னாளில் அது
விலங்குகளுக்கே கூரையாக பயனாவதுபோல்

அறிவுதான் அனைத்துமாயினும்
அதுவே கூர் ஆயுதமாயினும்
அதுதன் திறமதை முழுதும் அறிதலுக்கு
மடத்தனமான நம்பிக்கைகளே உதவுமாயின்
குஞ்சு வளர்வதற்குத் தேவையான
முட்டை மூடிய ஓடு போல
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ ?

பகுத்தறிவே அனைத்துமாயினும்
அதுவே மனிதனுக்கான அடையாளமாயினும்
பதப்படுத்திய நிலத்தில்தான்
பயிர் வளர்தல் சாத்தியம் என்பதுபோல்
பண்பட்ட மனம் பொருத்தே
அறிவு வளர்ச்சியும் சாத்தியம் என்பதால்
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகம் அவசியமென்பதுவும் சரிதானோ ?

Saturday, October 12, 2013

காடாகிவரும் நாடு

வனத்தொடு வாழும் விலங்குகளாய்
தன்இனத்தோடு வாழுவதே பாதுகாப்பென
மனிதன் நிலையும்
ஆகிப் போகுமாயின்
நாடும் ஒருவகையில் காடுதானே
மனிதனும் நிச்சயம் மிருகம்தானே !

எதிர்படுபவை எல்லாம்
எதிரியெனப் பார்த்துப் பாய்வதும்
மூர்க்கமாய் முதலில் தாக்குதலே
நிலைத்தலுக்கான விதியென்றாயின்
மனிதனும் விலங்குதானே
அவன் மனமும் கொடிய காடுதானே !

உணவும் புணர்தலுமே
வாழ்விற்கான அர்த்தமாயின்
உடல் வலிமை ஒன்றே
அதனை அடையும் வழியென்றாயின்
காட்டின் விதிதானே நாட்டின் விதியும்
நாட்டிற்கெதற்கு தனியாய் சட்டமும் நீதியும் ?

காடுகளை நாடாக்கும்
கொடுமையைத் தடுக்கும்முன்
காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம் !

விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !

Thursday, October 10, 2013

நகத்தோடு போவதற்கு எதற்கு கோடாலி எடுக்கிறார்கள்

தமிழ் நாட்டுக்கென அவ்வப்போது யாரும்
எதிர்பாராதபடி ஏதாவது ஒரு புதுப் பிரச்சனை வந்து
கொண்டே இருக்கும்

வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் என இரண்டு நாள் டி.வி
பத்திரிக்கை யென பயமுறுத்திப் பின் ஒன்றுமில்லாது
ஒரிஸ்ஸா கடற்கரையைக் கடப்பது போல
கடந்த சில நாட்களாக நஸ் ரீன் தொப்புள் பிரச்சனை
பத்திரிக்கைகளையும் நம்மையும் பாடாய்ப்படுத்திவிட்டது

எளிதாகத் தீர்த்து வேண்டிய இந்தப் பிரச்சனையை
ஏன் இப்படிஊதி ஊதிப் பெரிதாக்கினார்கள்
என நினைக்க எரிச்சல் எரிச்சலாக இருக்கிறது

மது குடிக்கிற காட்சி இல்லாமல் இப்போது எந்த
சினிமாவும் வருவதில்லை.
ஆனாலும் அந்தக் காட்சியில் ஓரத்தில்
மதுவின் கெடுதி குறித்து ஒரு வாசகம் போட்டுவிட்டு
அந்த சீனை நாம் அரைமணி நேரம் ஓட்டவில்லையா ?

சிகரெட் குடிக்கும் காட்சியின் போது
அதன்தீங்கு குறித்து ஒரு வாசகம் போட்டுவிட்டு,
அந்தக் காட்சியை அருமையாய்
மனதில் பதியும் வண்ணம் எடுத்து ரசிகர்களைக்
கவரவில்லையா ?

அதைப்போல அது உண்மையில்
 நஸ் ரீன் தொப்புளோ தொடையோ இல்லையோ
அது தேவையற்ற பிரச்சனை
அதுவும் பண்பாடும் பகுத்தறிவும்  மிக்க எம் போன்ற
தமிழ் கலாரசிகர்களுக்கு நிஜமாகவே
இது தேவையில்லாத விஷயம்

 நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம்
அவர் குறிப்பிடுகிற அந்த அற்புதக் காட்சியை
சென்ஸார் செய்யாமல் எடுத்தபடி அருமையாக
ரசிக்கும்படி தெளிவாகக் காட்டிவிட்டு
அது நஸ் ரீன் தொடையல்ல  தொப்புள் அல்ல என
ஒரு வாசகம் போட்டுவிட்டால் நஸ் ரீனின்
 தன்மானமும்காக்கப்பட்டிருக்கும்
 பண்பாடு மிக்க தமிழ் சினிமா
ரசிகர்களின்  பேராவலும் பூர்த்தி
செய்யப்பட்டிருக்கும் இல்லையா?

அதைவிடுத்து நகத்தோடு செய்ய வேண்டியதை
ஏன் இப்படி கொலை வெறியோடு
கோடாலி கொண்டுதாக்க முயல்கிறீர்கள் ?

அவர் குறிப்பிடுகிற காட்சியை  தமிழ் படத்தில் மட்டும்
நீக்குவேன் எனச் சொல்வது உண்மையில்
தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம்
என்பதை இங்கே நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம்

வயதான இலக்கிய மிராசுதார்கள்
நிறைந்த தணிக்கைக் குழுவும் பார்த்துக் களித்து
பண்பாட்டுக்கு இந்தக் காட்சி கூடுதல் பலம் சேர்க்கும்
எனஅறிந்து தெளிந்து அந்தக் காட்சியை
அனுமதித்த பின்பு அந்தக் காட்சியை நீக்குதல் என்பது
எம் போன்ற்தன்மானம் மிக்க பண்பாட்டுக்
காவலர்களுக்குச் செய்யும் துரோகமே
எனப் பதிவு செய்வதோடு
இனியும் இதுபோன்ற கொடுமைகள் தொடருமாயின்
இதுபோன்ற அற்புதக் காட்சியைக் காண்பதற்காக
 நாங்கள் ஆந்திராவோ கேரளாவோ
 செல்லவேண்டி வரும் எனவும்
தெரிவித்துக் கொள்கிறோம்

வாழ்க  நூறாண்டு கண்ட அற்புதத் தமிழ்  சினிமா

தமிழர்களின் பண்பாட்டுத் தளமாய் விளங்கும்
அதிசயத் தமிழ் சினிமா

Tuesday, October 8, 2013

சந்திப்பு குறித்து ஒரு சிறு அறிவிப்பு

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் துவங்கப்படவும்
அது தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட
காரணமாகவும் இருக்கிற மரியாதைக்குரிய
புலவர் இராமானுஜம் ஐயா அவர்கள்
சொந்த பணியின் நிமித்தம் நாளை
குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லுகிற
வழியில் இன்று மதுரையில்  இரயில்வே விருந்தினர்
விடுதியில் தங்கி நாளைக் காலையில்
தன் பயணத்தைத் தொடர்வார் என அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறோம்

சந்தித்து அளவளாவி மகிழ விருப்பமுடையோர்
மாலை ஏழு மணிக்கு மேல் சந்திக்க இயலும்
என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்

மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களும்
நானும் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும்
மதுரைப் பதிவர்கள் சிலரும் புலவர் ஐயா அவர்களை
 மாலையில் சந்திக்க இருக்கிறோம்


Monday, October 7, 2013

கைவிளக்கும் கலங்கரை விளக்கமும்

இவைகள் நிச்சயம்
சொல்லப்படவேண்டும்
இவர்களுக்கு இவைகள்
இந்தத் தொனியில்
சொல்லப்படின் மிகச் சிறப்பு எனத்தெளிந்து
மிக மிக நேர்த்தியாய்
சொல்லிச் செல்பவன்
நல்ல படைப்பை மட்டும் தந்து போகவில்லை
எதிர்மறையாய்
அதிகமாகிப்போன அரை குறைகளின் மனதில்
எழுதத்தான் வேண்டுமா என்கிற
ஐயத்தையும் விதைத்துப் போகிறான்
அவர்களின் படைப்புணர்வை அடியோடு
 நொறுக்கியும்போகிறான்
(நல்ல பதிவர்களைப் போல )

எதைச் சொல்வது
எப்படிச் சொல்வது
என்கிற பக்குவமின்றி
கைதட்ட நான்கு பேரை
தயார் செய்த தைரியத்தில்
எதையெதையோ
எப்படி எப்படியோ சொல்லிச் செல்பவன்
குப்பைகளை மட்டும் பிரசவித்துப் போகவில்லை
எதிர்மறையாய்
அதிகரித்துப் போன அரைவேக்காடுகளின்
மனச் சோர்வையும் அடியோடு நீக்கிப் போகிறான்
அவர்களுக்குள்ளும் ஒரு அசட்டுத் துணிச்சலை
மிகமிக ஆழமாய் வேர்விடச் செய்தும் போகிறான்
(பல சமயங்களில் என்னைப் போல )

என்ன செய்வது
ஆழ் கடலில்
தட்டுத் தடுமாறும் எவருக்கும்
கரை சேரும் மட்டும்
கலங்கரை விளக்கமாய்
முன்னவனும் தேவையாகத்தான் இருக்கு

என்ன சொல்வது
தனிமைத் துயர் துடைக்க
தைரியம் அதைப் பெருக்க
கரை சேரும் மட்டும்
ஒரு சிறு கைவிளக்காய்
பின்னவனும் தேவையாகத்தானே இருக்கு

Friday, October 4, 2013

பறப்பதை எளிதாய்ப் பிடிப்போம்

விளையாட்டில்
இறுதிப்போட்டியினை இலக்காக வைத்து
முன்போட்டிகளைச் சிறப்பாகக் கையாளாதவன்
சிறந்த விளையாட்டு வீரனில்லை

வாழ்க்கையிலும்
நிறைவான நான்காம் இருபதினை
இலட்சியமாகக் கொண்டு
முன் இருபதுகளை கையாளத்தெரியாதவனும்
வாழ்வின் சூட்சுமம் புரிந்தவனில்லை

முதல் இருபதில்
தன்னை அனைத்து வகையிலும்
தயார்ப்படுத்திக் கொள்ள தவறியவனும்

இரண்டாம் இருபதில்
தனது அனைத்துத் திறனையும்
முழுமையாகப் பயன்படுத்த துணியாதவனும்

மூன்றாம் இருபதில்
அனைத்து நிலைகளிலும் தன்னை
ஸ்திரப்படுத்துக் கொள்ளத் தெரியாதவனும்

நான்காம் இருபதில்
தனக்கு மட்டுமன்று அனைவருக்கும் சுமையாகிறான்
தரையில் எறியப்பட்ட மீனாகிப் போகிறான்

மறுமை குறித்த நினைப்பில்
இம்மையை இழக்காதவன் தானே
மறுமையிலும் செம்மை கொள்ளச் சாத்தியம் ?

தடுமாற்றமின்றி கூரையேறிக்
கோழிபிடிக்கத் தெரிந்தவன்தானே
வானமேறி வைகுந்தம் போகவும் சாத்தியம் ?

காலத்தே செய்யும் பயிர்மட்டுமல்ல
நாம் செய்யும் காரியம் கூட
கூடுதல் பலன் கொடுக்கவே செய்யும்

எனவே இன்றே

முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்

Wednesday, October 2, 2013

உவமையும் படிமமும்

உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
அவளது பேரழகை
அணுஅணுவாய் ரசிக்கச் சொல்லியும்

நெற்றிச் சூடி முதல்
பாதக் கொலுசு வரை
அவளது அலங்கார நேர்த்தியை
விதம் விதமாய் புகழ்ந்துப் பேசியும்

குயிலொத்த குரல் சிறப்பை
கடலொத்த விழிச் சிறப்பை
அவளது செயல்பாட்டு நேர்த்தியை
புதுப்புது விதமாய் விவரித்து விளக்கியும்

அவள் மதிவதனத்தில்
சந்தோஷச் சுவடுகளைக் காணோம்
அவள் பேரழகின் பெருமைதனை
சரியாகச் சொன்னதான திருப்தியைக் காணோம்

மனம் கசந்து நான்
அவளே புரிந்து கொள்ளட்டும் என
ஆளுயரக் கண்ணாடியை
அவள் முன்னே வைத்து விட்டு
பின் நகர்ந்து நிற்கிறேன்

பலமுறை பல கோணத்தில்
பார்த்துப் பார்த்துச் சிரித்த அவள்
புதிதாகப் பார்ப்பதுபோல் தன்னைப்
பெருமையாய்ப் பார்த்து ரசித்த அவள்
என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்

உருவகச் சிறப்பில்
உவமை நேர்த்தியில்
அணியின் அலங்காரத்தில்
மயங்கிக் கிடந்த எனக்கு
மெல்ல மெல்லப் புரியத் துவங்குகிறது
படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும்

Tuesday, October 1, 2013

ஜீவாத்மாவும் மகாத்மாவும்

முயன்று அதிகத் திறன்கொண்டவனை
"ஆசீர்வாதிக்கபட்டவன் " என
உயர்த்தி உச்சத்தில் வைப்பதில்
சோம்பித் திரிகிறவர்களுக்கு
ஒரு வசதி இருக்கத்தான் இருக்கிறது

முயன்று அதிகப் பலங்கொண்டவனை
"அசகாய சூரன் " என
வேறுபடுத்தி உயர்த்திச் சொல்வதில்
முயற்சியைத் தவிர்க்கிறவர்களுக்கு
நல்ல பலன் இருக்கத்தான் செய்கிறது

முயன்று அதிக உச்சம் தொடுபவனை
"அதிர்ஷ்டக்காரன் "எனப்
புகழ்ந்து  தனித்து வைப்பதில்
இலக்கற்றுத் திரிபவர்களுக்கு
ஒரு நன்மை இருக்கத்தான் இருக்கிறது

வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவரை
"நல்ல ஆத்மா " எனக் கூறாது
"மகாத்மா "எனப் புகழ்ந்து கொண்டாடுவதில் கூட
மாக்களாக வாழும் ஜீவாத்மாக்களுக்கு
ஒரு சுயநல நோக்கமிருக்கத்தான் இருக்கிறது

Wednesday, September 25, 2013

சினிமா -ஒரு மாய மோகினி- (2)

ஒரு மாறுதலாக புராண நாடகங்களுக்குப் பதிலாக
சமூக நாடகம் போடுகிறோம் என்கிற
மன நிலையைத் தாண்டி ஏதோ  ஒருபெரும் புரட்சி
செய்யப்போகிறோம் என்கிற மனோபாவம்
எங்களில் சிலருக்கு இருந்ததால்....

நிச்சயம் இதற்கு ஊரில் அதிக எதிர்ப்பும்
எதிர்பார்ப்பும் இருக்கும் எனக் கருதியதால்...

எங்கள் நோக்கத்திற்கு உடன்பட்டவர்களைத் தவிர
வேறு  யாரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள
அனுமதிப்பதில்லை என் முடிவு செய்து
முதல் கூட்டத்தை ஒரு ரகசியக் கூட்டம் போலவே
ஏற்பாடு செய்திருந்தோம்.

முதல் கூட்டமே மிகவும் வித்தியாசமாக இருந்தது

பள்ளி செல்லாத மைக் செட் வைத்திருந்த மணி,

சைக்கிளிலில் பால் வியாபாரம் செய்து கொண்டு
இடையிடையே மேடையில் ரிகார்ட் டான்ஸ்
ஆடிக்கொண்டு மேடை அனுபவம் பெற்றிருந்த
மணிக்கு உறவினனான கந்தன்,

கவிதையும் கதையும் எழுதிக் கொண்டு
அது பத்திரிக்கையில் வராது போக
கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்த
என் போன்ற இலக்கிய ஆர்வலர்கள் சிலர்.
,
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர்
,
முற்போக்கு முகாமைச் சேர்ந்த சில தோழர்கள் என

அந்த முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அனைவருமே மன நிலையிலும்,
சிந்திக்கும் நிலையிலும் முற்றிலும்
மாறுபட்டவர்களாயிருந்தோம்.

ஜாதிப் பெயரிலேயே தெருப்பெயரினையும்
ஜாதிப் பெயரைச் சொல்லியே ஒருவரை ஒருவர்
அழைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்த அந்த ஊரில்
ஜாதி கடந்து மதம் கடந்து ஒரு பொது நோக்கத்திற்காக
ஒன்றுபட்ட கூட்டமாக இந்தக் கூட்டம்
இருந்த போதிலும்இதில் கலந்து கொண்ட
 ஒவ்வொருவருக்கும் இந்த நாடகத்தின் மூலம்
 நிறைவேற்றிக் கொள்ளவென
ஒவ்வொரு விதமான அபிலாஷைகளும்
நோக்கங்களும்  இருந்தது என்பது
முதல் கூட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது

தனிமனித சிந்தனையை கூட்டாக
 ஒரு செயல்வடிவம்கொடுக்க முயல்கையில்
 ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும்
மிகச் சரியாகக் கையாளப்படவில்லையெனில்
நம் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடானதாக
அது எப்படி மாறிவிடும் என்பதையும்
அனுபவப் பூர்வமாக உணர என்போன்றோருக்கு
அந்த முதல் கூட்டமும் அதைத் தொடர்ந்த
 நிகழ்வுகளும் பாலபாடமாக அமைந்தது என்றால்
அது மிகையில்லை

(தொடரும் )

Friday, September 20, 2013

சினிமா- ஒரு மாய மோகினி

எப்படி எனக்கு சினிமாவின் மீது அப்படியொரு மோகம்
வந்தது என இப்போது நினைத்துப் பார்த்தாலும்
அனுமானிக்க முடியவில்லை

எங்களூரின் நான் சிறுவனாய் இருக்கையில் அதிகம்
நாடகம் நடக்கும்.குறிப்பாக வள்ளி திருமணமும்
ஹரிச்சந்தரா நாடகமும்.தெரிந்த கதைதான்
என்றாலும் கூட எங்களூர் "பெருசுகள் "
ஒவ்வொரு முறையும் எந்த ஊரில் எந்த நடிகர்
எந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வார்களோ
அவர்களைத் தேர்ந்தெடுத்து எங்களூரில் நடிக்கச்
செய்வார்கள்

அவர்களுக்கு ஓத்திகை கிடையாது
என்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்து நடிகரும்
பாத்திரத்தை மீறித் தான் தான் ஜெயிக்கவேண்டும்
எனச் செய்கிற ஜெகதலப் பிரதாபங்கள் நாடகத்தை
உச்சக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

பல சமயங்களில்  வள்ளி திருமணத்தில்  வள்ளிக்கும்
முருகனுக்குமான  இறுதி தர்க்கம் முடிவடையாது
வள்ளிமாலை வாங்காது போன நிகழ்வுகளும்
அதன் தொடர்சியாய் "பெருசுகள் " அப்படி
மாலை வாங்காமல் போனால் ஊருக்கு
ஆகாமல் போகும்என்று கெஞ்சிக் கூத்தாடி
மேடை பின்புறம் கூட மாலை வாங்கவைத்த
நிகழ்வுகள் இப்போது  கூடஎன்னுள் நிழற்படமாய்
ஓடிக் கொண்டுதான்  இருக்கிறது

அந்த சமயத்தில் "புதுமையும் புரட்சியுமே " எங்கள்
மூச்சு என்கிற நினைப்பில் படித்துக் கொண்டிருந்த
சிலரும்படித்து வேலை கிடைக்காமல்
அலைந்து கொண்டிருந்த சிலரும் நண்பர்களாய்
 இருந்தோம்

.எங்களுகெல்லாம் இந்தப் பெருசுகள்  இப்படியே
விட்டால் நூறு வருஷம் கூட வள்ளி திருமணத்தையும்
ஹரிச்சந்தரா மயான காண்டத்தையும் போட்டுக்
கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு மாற்றாக நாம்
உடனடியாக இன்றைய சமுகப் பிரச்சனைகளை
உள்ளடக்கியதாக சமூக நாடகம் ஒன்று போட்டு
இந்தப் பெருசுகளையும் சமூகத்தையும் உடனடியாக
மாற்றியாக வேண்டும் என முடிவெடுத்தோம்

என்ன காரணத்திலோ பெருசுகளுடன் மன விரோதம்
கொண்ட ஒலி பெருக்கி வைத்திருந்த மணி அண்ணனும்
ஒலி ஒளி அமைப்பும் இலவசமாய் தான்
செய்து தருவதாக ஒப்புக் கொள்ள உடனடியாக
ஒரு கூட்டம் போட்டு ஏபிஎம் நாடக் குழு என
ஒலிபெருக்கி அமைப்பாளரின்
பெயரிலேயே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தோம்

(தொடரும் )

Sunday, September 15, 2013

ஊருக் குள்ளே நல்ல "பாரு"

பாருக் குள்ளே நல்ல நாடு
நம்ம நாடு என்று
வீறு கொண்டு இருந்தோம் அன்று-பகை
வென்று மகிழ்ந்தோம் அன்று

ஊருக் குள்ளே நல்ல "பாரு"
எந்த "பாரு " என்று
தேடி யலைந்துத் திரிகிறோம் இன்று-மதியைக்
தோண்டிப் புதைக்கிறோம் இன்று

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலென
பெருமிதம் கொண்டோம் அன்று
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடென-நெஞ்சம்
பூரித்து நின்றோம் அன்று

விண்ணகம் முட்டும் விலையில் கல்வியை
உயரே கொண்டு வைத்து
வன்முறை வளர்ந்திட நாடது கேடுற-நாமே
வழிகள் வகுக்கிறோம் இன்று

இன்னறு கங்கை எங்கள் ஆறென
உரிமை கொண்டோம் அன்று
மன்னும் இமயம் எல்லைக் கோடென-உள்ளம்
மகிழ்ந்து திரிந்தோம் அன்று

அண்டை மாநில உறவு கூட
ஜென்மப் பகைபோல் மாற
வன்மம் வளர்த்து வன்முறை வளர்த்து-கூண்டில்
ஒடுங்கித் தவிக்கிறோம் இன்று

உலகை மாற்றி ஊரை மாற்றி
நம்மை மாற்ற எண்ணும்
தலையச் சுற்றி மூக்கைத் தொடுகிற-வீண்
வேலை இனியும் வேண்டாம்

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்

Saturday, September 14, 2013

கவிதைக்குச் செய்யும் தொண்டு

பாட்டுக் கூட பேச்சைப் போல
சுலுவா இருக்கணும் மாமா-அதைக்
கேட்கும் போதே மனசுத் தானா
துள்ளிக் குதிக்கணும் மாமா

நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
ஏதும் தவறியும் மாமா-உன்
பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
கவனம் கொள்ளணும் ஆமா

நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
காத்தைப் போலவும் மாமா -ஓடும்
ஆத்து நீரில் மிதந்து போகும்
பூவைப் போலவும் மாமா

ஆத்தா தூக்க பொங்கிச் சிரிக்கும்
பாப்பா போலவும் மாமா-உன்
பாட்டு என்றும் இயல்பா  இருக்கணும்
சொல்லிப் புட்டேன் ஆமா

எதுகை மோனை தேடி அலையும்
நிலமை உனக்குமே வந்தா-பாட்டில்
புதுசா சொல்ல விஷயம் தேடி
அலையும் கஷ்டமும் வந்தா

பொசுக்குனு எழுதும் ஆசைய விட்டு
வெளியே வந்துடு மாமா -அதுகூட
கவிதைத் தாயவ மகிழ நாம
செய்கிற தொண்டுதான் மாமா

Friday, September 13, 2013

ரம்பை அவளே வந்து நின்னாலும்...

போற போக்கில பாக்கும் போதே
போத ஏறுதே-அவளை
நின்னு பாத்தா என்ன ஆகும்
மனசு பதறுதே
தூர நின்னு பாக்கும் போதே
மூச்சு வாங்குதே -ஆனா
ஆற அமரப் பாக்கத் தானே
மனசு ஏங்குதே

ராசா கால வில்லு அம்பு
அவளின் கண்ணிலே -அது
நேரா என்னை ஈட்டிப் போலக்
குத்தித் தள்ளுதே
ரோசாப் பூவின் வாசம் அவளின்
செவத்த உடம்பிலே -என்னை
லூசுப் போல சுத்த வைச்சு
தினமும் கொல்லுதே

ஆத்து ஓரம் நேத்து அவளைப்
பாத்த போதிலே-அழகா
பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்
பூவைப் போலவே
பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று
எனக்குப் போதுமே -அதுவே
சேர்த்து எனக்கு நூறு சேதி
சொல்லிப் போகுமே

கோடிக் கோடி ரூவா எனக்குச்
சேர்த்துத் தந்தாலும்-என்னைத்
தேடி அந்த ரம்பை அவளே
வந்து நின்னாலும்
வேறு பொண்ணை இந்த மனசு
நினைச்சுப் பாக்காதே-அந்த
தேவி யோடு வாழா திந்த
கட்டை வேகாதே

Wednesday, September 11, 2013

பாட்டுக்கொருவனின் பாதம் பணிவோம்

நல்லதோர் வீணையாய் அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

சுடர்மிகும் அறிவுடன் அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

எமக்குத் தொழிலே கவிதை யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

ஊருக்குழைத்தலே தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
 பரிமளிக்க முடிகிறது

Tuesday, September 10, 2013

காக்கை உறவு

கடிகார முட்கள் கூட
தவறான நேரத்தைக் காட்டி விடக்கூடும்
அந்தக் காக்கைகள் மட்டும்
நேரம் தவறி  வந்ததே இல்லை

"அந்தச் சனியன்கள் மிகச் சரியாக வந்துவிடும்
உலை வைக்கணும் " என
கோபப்படுவது போல் பேசினாலும்
காக்கைகளின் மேல் பாட்டிக்கு
வாஞ்சை அதிகம்

முதல் நாள் சாப்பாடு மிஞ்சிய நாட்களில்
எங்களுக்காக சமைக்காவிட்டாலும் கூட
"பிடிச்சபிடி " என காக்கைக்கென
தனியாக உலைவைப்பாள் பாட்டி

பாட்டி மரித்துப்போன அந்த நாளில்
வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை
அவைகளும்  செய்தியறிந்து வந்ததுபோல
எப்போதும் போலக் கூச்சலிடாது
வெகு நேரம் மரத்தின் மேல்
அமர்ந்திருந்து போயின

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து
பாட்டியின் நினைவாக
நாங்களும் காக்கைக்கு உணவு கொடுக்க
எத்தனை முறை முயன்றபோதும்
அந்தக் காக்கைகள் மட்டும் ஏனோ
வீட்டுப் பக்கம் வரவே இல்லை
அன்று அதற்கான காரணமும் புரியவில்லை

சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாடு எனக்குப் புரிகிற இந்த நாளில்
கடனெனச் செய்தலுக்கும் படைப்பதற்குமுள்ள
பெரும் வேறுபாடு பறவைகளுக்கும் புரியும் எனப்
புரிந்து கொள்கிற இந்த வேளையில்

கான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்
கையாளாகாதவர்களுள் ஒருவனாய்  நான்...
மனிதன் மீது நம்பிக்கை முற்றாக இழந்து
கண்காணாது நிம்மதியாய் எங்கோ அவைகள்.

Sunday, September 8, 2013

விளையாட்டுக் களமும் வாழ்க்கைக் களமும்

வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச் சாரங்களே
களத்தில் எவரின் நிலையையும்
முடிவு செய்து ப் போகிறது

மூன்றின் கருணை நிழல்களும்
தன்மீது படியாத வரையில்
பரப்பிரம்மப்  பார்வையாளனாய்
இருக்கையில் விழிப்பவனே

 வலிமையின் ஆதிக்கத்தில்
நுணுக்கமும் தெளிவும் அடங்கிக் கிடக்க
இளைஞனாய் விளையாடுபவனாய்
களத்தில் மிளிர்பவனே

நுணுக்கத்தின் ஆதிக்கத்தில்
வலிமையும் தெளிவும் சாய்ந்து கொள்ள
நடுவயதினனாய் பயிற்சியாளனாய்க்
களத்தில் தொடர்பவனே...

தெளிவின் ஆதிக்கத்தில்
வலிமையும் நுணுக்கமும் ஒடுங்கிவிட
முதியவனாய் நடுவராய்
களத்தில் நிற்பவனே...

மூன்றின் வீரியமும்
முற்றாக குறைந்துவிட
முதிர்ச்சியுற்ற  பார்வையாளனாய்
இருக்கையில் அடங்கிவிடுகிறான்

ஆம்.....
வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
வாழ்க்கைக் களத்தினிலும் கூட

Saturday, September 7, 2013

இலைமறை காய்

ஊட்டிவிடப்பட்ட அமுதினும்
உண்ணும்படி விடப்பட்ட
வெறும் சோற்றின் சுவைதான்
கொஞ்சம் தூக்கலாயிருக்கிறது

வழித்துணையாய் வருதலைவிட
வழிசொல்லி விலகுபவரே
பயணப்பாதையினைத் தெளிவாகச்
சொன்னதுபோலப் படுகிறது

அருமையாக விளக்கப்பட்ட
சுவையான அனுபவத்தினும்
உள்அனுபவமதை கீறிவிடும்  உரையே
அதிக சுகானுபவம்தந்து போகிறது

புரியும்படி மிகத் தெளிவாய்ச்
சொல்லப்பட்டப் படைப்பினும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது

Thursday, September 5, 2013

செயல் வெற்றிக்கு இலகுவான சூத்திரம்

ஒரு செயல் துவங்கப்படும் முன்னரே
அதிலடங்கியுள்ள சிக்கல்களை
பிரதானப்படுத்தி  உன்னை
செயலிழக்கச் செய்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
ஆயிரம்அடி தள்ளி வை
அவர் எத்தனைப் பெரிய அறிஞராயினும்...

ஆலோசனைகள் என்றால் முன்வரிசையிலும்
செயல்படுதல் எனில்
கண்பார்வை விட்டு கடந்து நிற்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
ஐநூறுஅடி விலகி வை
அவர் எந்த அளவு செல்வாக்குள்ளவராயினும்...

நிகழ்வுகளின் போது காணாது போய்
எல்லாம் முடிந்த பின்
தெளிவாக விமர்சிப்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
நூறடி ஒதுங்கி வை
அவர் எத்தனை பெரிய பதவியுடையவராயினும்..

தன்னை முன்னிலைப் படுத்தாத
எந்த நிகழ்வினையும்
சீர்குலைத்து சுகம் காண நினைப்பவரா ?

அவரை உன்னை விட்டு
கண் காணாது ஒதுக்கி வை
அவர் எத்தனை அளவு திறனுடையவராயினும்...

ஆரோக்கியமான உடலுக்கு
சத்தான உணவு வகைகள் அவசியம் என்பது சரியே
ஆயினும் அதற்கு முன்
தீங்குசெய் கிருமிகள் அகற்றுதலே மிக மிகச் சரி

Wednesday, September 4, 2013

அர்த்த உயிரும் வார்த்தைப் பிணமும்

மனப்பேய்க்கு வாக்கப்பட்ட பகுத்தறிவு
கைபிசைந்தபடி தலைகுனிந்தபடி
நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்ற
வாசகங்களைப் படித்தபடி
பேயின் விரல்பிடித்தபடி
"பாருக்குள் "தயங்கித் தயங்கி நுழையும்

உடலுக்கு வாக்கப்பட்ட மனஉணர்வுகள்
தெம்பிருந்தும் ஆசையிருந்தும்
பெட்டிக்குள் அடங்கிய நாகமாய்
இற்றுப்போன உடலுக்கடங்கியபடி
தன்னைத்தானே கழுவிலேற்றியபடி
உடலுக்குத் தக்கபடி
கூனிக் குறுகித் தள்ளாடி நடக்கும்

வார்த்தைக்கு வாக்குப்பட்ட அர்த்தங்கள்
வார்த்தையை மீறிய வலுவிருந்தும்
வார்த்தைகளின் பலவீனமறிந்தும்
ஜாடியில் அடைபட்ட பூதமாய்
ஊமையன் கண்ட பெருங்கனவாய்
தன்னைத் தானே சுருக்கியபடி
கவிதைக்குள் தன்னை ஒடுக்கியபடி
அடுக்கிய பிணத்துள்  அடங்கித் தவிக்கும்

Tuesday, September 3, 2013

ஆழக் கடலும் பதிவர் சந்திப்பும்

களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும் நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

தன் அலங்காரம் கலைந்துவிடுமென்று
கரையோரம் அமர்ந்திருந்து அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும் அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின் ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்
நம் பதிவர் சந்திப்பைப் போலவும் ....

Thursday, August 29, 2013

பதிவர் சந்திப்பு கவுண்ட் டவுன்

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்த சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திட என்றும் சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத் தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

எழுத்தில் அறிந்த பதிவர்களை
எதிரில் காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-

 முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்
உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 சென்னைப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும்
இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன்
 இந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன
உதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக
இந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
 "எப்படையும் " மனத்தினுள் பயம்  கொள்ளட்டும்

நாங்கள்தான் பதிவர்கள் (4 )

எம் படைப்புகள் எல்லாம்...
ஆற்று நீரை எதிர்த்துநிற்கும்  எனும்
அதீத  எண்ணம் ஏதும்
எங்களில் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
மலர்ந்து சிரிக்கும் என்கிற
கற்பனையும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச்  செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லைஎன்பது
எங்களுக்கும் தெரியும்

 சராசரித்  தேவைகளை அடையவே
 திணறும்அல்லல்  கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் துயர் களை
எமக்குத் தெரிந்த மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
உல்லாச அனுபவங்களை
கொஞ்சம் மசாலாக் கலந்து
விருந்தாக்கி   மகிழ்கிறோம்

எமது எல்லைக்கு  எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
இன்றைய  நோக்கில்
ஒரு சிறிய குழுவே

ஆயினும்
உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர  பலமே 

Sunday, August 25, 2013

பதிவர் சந்திப்பு- ( 3 )

பெண் :
வெத்தலைப் பாக்கு வச்சு உன்னை
அழைச்சாங்களா-இல்லை
வீடு வந்து  உனக்குத் தாக்கல்
சொன்னாங்களா
எதுக்கு நீயும் சென்னை போக
இப்படித் துடிக்கிறே-கேள்வி
கேட்டா மட்டும் என்னை எதுக்கு
இப்படி முறைக்கிறே

ஆண் :
காசு கொடுத்து கட்சி கூட்டும்
 கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி
காசு போட்டு நாம நடத்தும்
 நல்ல கூட்டமே-இதில
கலந்துக் காம நாம இருந்தா
நமக்கும் நட்டமே

செய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு
 குழப்பும் பேப்பரும்-தினமும்
தொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு
 பரப்பும் டி. வியும்
நல்ல வழியை நம்மை விட்டு
மறைக்கப் பார்ப்பதை-தினமும்
சொல்லிச் செல்லும் உறுதி இங்கே
யாருக்கி ருக்குது ?

இரத்தச் சூடு இருக்கும் வரையில்
கும்மாளம் போட்டு-பணத்தை
கறுப்பு வெள்ளை யென்று கணக்கில்
 மறைச்சுச் சேத்து
அரசுச் சின்ன மிரட்டல் போட
மக்களைப் பார்க்கும்-நடிகரின்
முகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு
 யாருக்கி ருக்குது ?

விதியைச் சொல்லி மதியை மாற்றி
 பிழைக்கும் மனிதரை-அதையே
மாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்
தெளிந்த எத்தரை
சரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு
மடக்கும் தைரியம்-இங்கு
பதிவர் தவிர உலகில் வேறு
யாருக்கி ருக்குது ?

ஆண்கள் பெண்கள்  பாகுபாடு
ஏதும் இன்றியே-மயக்கும்
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
 தனித்த வழியிலே
ஆண்டு இரண்டைக் கடக்கும் பதிவர்
அமைப்புப் போலவே
நல்ல அமைப்பு உலகில் வேறு
எங்கு இருக்குது ?

பெண்:
சொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க
இனிக்குது மச்சான்-இன்னும்
சொல்லச் சொன்னா நூறு சொல்வே
புரியுது மச்சான்
சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -வரும்போது
வாச  மல்லி நாலு முழமா
வாங்கிவா மச்சான்

Friday, August 23, 2013

சென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)

சிந்தையிலே சென்றஆண்டு
சந்திப்பு கமகமக்க
சென்னைநோக்கி சந்தோஷமா வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே சென்னைநோக்கி வாரோம்

புலவரையா ஏற்றிவைத்த
சுடரொளியின் பரவசத்தில்
உழன்றிடவே சென்னை நோக்கி வாரோம் -எம்மை
உரமேற்றிக் கொள்ளவென்றே வாரோம்

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே சென்னை நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத சூதுவாது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்ல சென்னை நோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய சென்னைநோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்


(தொடரும்

Thursday, August 22, 2013

பதிவர் சந்திப்புக் கவிதை (1)

சித்தம் எல்லாம் சென்னை நோக்கித்
திரும்பிக் கிடக்குதே--இன்னும்
பத்து நாளு இருக்கு தேன்னு
புலம்பித் தவிக்குதே

நித்தம் நித்தம் பதிவில்  பார் த்து
ரசித்த பதிவரை-நேரில்
மொத்த மாகப் பார்ப்ப தெண்ணி
மகிழ்ந்து துடிக்குதே

நட்பைத் தொடர பதிவைத் தொடரும்
மொக்கைப் பதிவரும்-சொல்லும்
வித்தை அறிந்து வியக்க வைக்கும்
கவிதைப் பதிவரும்

சித்த மதனில் பேதங் களின்றி
சேரும் நாளிதே -உலகின்
ஒட்டு மொத்த பதிவர் மனமும்
நாடும் நாளிதே

கடவுள் பெருமை நாளும் எழுதி
கலக்கும் பதிவரும் -அதனை
மடமை என்று பதிவு போடும்
புரட்சிப் பதிவரும்

இடமாய் வலமாய் அமர்ந்து நட்பை
சுகிக்கும் நாளிதே
கடலில் நதியாய் விரும்பிச் சேரும்
இனிய நாளிதே

கடமை முடித்துக் கரையில் இருக்கும்
மூத்த பதிவரும் -மிரட்டும்
கடமை ஆற்றைக் கடக்கத் திணரும்
இளைய பதிவரும்

வயது மறந்து நட்பில் உறைந்து
மகிழும் நாளிதே-வாழ்வுப்
பயண நெறியைப் பகிர்ந்துப் புரிந்து
தெளியும் நாளிதே


(தொடரும் )

திசை மாறிடும் விசைகள்

ஆஸிட்டுகள்
கறையழிக்கிறதோ இல்லையோ
பல பெண்களின் உயிரழிக்கிறது

நிறுத்தங்களில்
பஸ் நிற்கிறதோ இல்லையோ
பல காதலர்கள் நிற்கிறார்கள்

கல்லூரிகளில்
பாடம் நடக்கிறதோ இல்லையோ
காதல் பாடம் நடக்கிறது

காலம்
அறிவை வளர்க்கிறதோ இல்லையோ
உடல் உணர்வை வளர்க்கிறது

இளமை
இலக்கை நினைக்கிறதோ இல்லையோ
நடுவில் குழம்பித் தவிக்கிறது

அரசியல்
நடுநிலை வகுக்கிறதோ இல்லையோ
ஊரினைப் பிரித்து எரிக்கிறது

காதல்
ஜாதியை ஒழிக்கிறதோ இல்லையோ
காதலரை அழித்துச் சிரிக்கிறது

Wednesday, August 21, 2013

பயனுள்ள பொய் உயர்வானதே

திசைகள் என்பதுவும் கற்பனையே
வானம் என்பது வெட்டவெளியே
கதிரவன் உதிப்பது கிழக்கு எனவும்
தினமும் மறைவது மேற்கில் எனவும்
நாமாக வகுத்துக் கொண்டதெல்லாம்
பகுத்தறிவு நோக்கில் உற்றுப் பார்க்க
பட்டப்பகல் பித்தலாட்டமே

ஆயினும் என்ன செய்ய
அந்தப் பித்தலாட்ட திசைக்குறிகளின்றி
பூமியில் வாழ்க்கை நொண்டியாட்டமே

அட்சாம்சம் என்பதும் கற்பனையே
அது நாமாக வரைந்திட்ட கோடுகளே
படுக்கைக் கோடுகள் அட்சரேகையென்றும்
செங்குத்துக் கோடுகள் தீர்க்கரேகையென்றும்
நாமாக வரைந்து கொண்டதெல்லாம்
பாமரனின் நோக்கில் பார்க்க
படித்தவனின் ஏமாற்றுவேலையே

ஆயினும் என்ன சொல்ல
அந்தக் கற்பனைக் கோடுகளின்றி
ஊர்உலகை அறிதல் திண்டாட்டமே

அந்தவகையில்

ஆண்டவன் கூடக் கற்பனையே
நாமாக ஆக்கிவைத்த அற்புதமே
அவன்தான் உலகைப் படைத்தானென்றும்
அவன்தான் அதனைக் காக்கிறானென்றும்
ஆத்திகவாதிகள் சொல்லித் திரிவதெல்லாம்
நாத்திகவாதிகள் நோக்கில் பார்க்க
பகல்வேஷக்காரனின் பொய்ப்புலம்பலே

புலம்பலது பொய்யென க்கொண் டால்கூட
இல்லையென்ற எதிர்மறையைவிட
இருக்குதென்ற நேர்மறை உயர்வானதுதானே
பயனற்ற உண்மைக்கு பயனுள்ள பொய்
பலமடங்கு உயர்வெனில் அது நியாயம்தானே

Monday, August 19, 2013

விஷத்தில் ஏதன்னே உள்ளுர் வெளியூர்

உன்னதமானதை
ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ளதை
நகர் நடுவில் நாற்சந்தி மத்தியில்
ஒளிவு மறைவின்றி
சகாய விலையில் கொடுக்க முயலுகையில்
கண்டு முகம்சுளித்து விலகும் உலகு

பயனற்றதை
மனதிற்கும் உடலுக்கும் நலமற்றதை
அரண்மனையாய் உயர்ந்த மால்களில்
அலங்கார ஆடையிட்டு மறைத்து
கூடுதல் விலைவைத்துக் கொடுக்கையில்
துள்ளி ஓடி வரும் அள்ளிப் பெருமை கொள்ளும்

அமுதம் விற்பதாயினும்
கொஞ்சம் விளம்பரக் கஞ்சா கலக்கி
ஆர்கானிக் உணவாயினும்
கொஞ்சம் அகினோமோட்டோ சுவை கூட்டி
சந்தையும் விலையும் விளம்பரமுமே
நம் தேவைகளை முடிவு செய்ய விட்டபின்
இதில் உள்ளூர் விஷமென்ன
பன்னாட்டு பகாசுர விஷமென்ன ?

Saturday, August 17, 2013

எழுதுவது ஏன் ?

ஒலிகுறிப்பாய்ச்  சொன்னவரையில்
மிக நெருக்கமாய் இருந்த உணர்வுகள்
வார்த்தையானதும் மொழியானதும்
அன்னியப்பட்டுப் போனதால்

அகராதிக்குள் வராத
"அய்யய்யோ "சொல்கிற அவலமாய்
"ஆஹா "சொல்கிற வியப்பாய்
"அச்சச்சோ" சொல்கிற அதிர்ச்சியாய்
"க்க்கும்" சொல்கிற சிணுங்கலாய்

எந்த ஒரு வார்த்தையும்
எத்தனைப் பக்க விவரிப்பும்
மிகச் சரியாய்ச் சொல்லமுடியாது
தட்டுத் தடுமாறித் தத்தளிப்பதால்

அனுபவித்ததும்
உணர்ந்ததும்
சொல்ல நினைத்ததும்
சொன்னதும்
வெவ்வேறாகிப்போவதால்

ஒவ்வொரு படைப்பின் பின்னும்
பிண்டத்தைப் பெற்ற தாயாய்
கதிகலங்கிப் போகிறேன் நான்

ஒவ்வொரு படைப்பும் என்னை
வீழ்த்தி விட்டே போவதால்
காலமெல்லாம்
எழுந்திடவே  எழுதுகிறேன் நான்

Thursday, August 15, 2013

இழந்துபின் தேடுவதைத் தவிர்ப்போம்

சாலை கடக்கும் ஆடுகள்
கடித்துக் குதறிவிடாமல்
மரமாகி அது தன்னைத் தானே
காக்கும் சக்தி பெரும்வரை
அந்தச் செடிகளுக்கு
வேலியாக எப்போதும் இருப்போம்

தத்தித் தவழுதலன்றி
வாது சூது ஏதுமறியா
அந்தப் பச்சிளம் குழந்தை
தடுமாற்றம் ஏதுமின்றி
தன் காலில் தானாக நிற்கும்வரை
சோர்வில்லா பாதுகாவலனாய் இருப்போம்

நெடுந்தொலைவுப் பயணத்தில்
நடுவழித் தெருக்கூத்தில்
மனம் மயங்கித் தங்கிவிடாது
வாகனம் விடுத்து தேங்கிவிடாது
காத்திடும் துணையாக இருப்போம்
வழியறிந்த வழிகாட்டியாய் இருப்போம்

பருவ ஆற்றில் நீந்திக் களிக்கும்
பயமறியா பருவ  வயதினர்
உணர்வுச் சுழியினுள் சிக்கிவிடாது
காத்திடக்   கவனமாய்த் துடிப்போடு
கரையினில் எப்போதும் இருப்போம்
இழந்துபின் தேடுகின்ற வலியதனைத் தவிர்ப்போம்

Wednesday, August 14, 2013

பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை

கலைவண்ணம் மிக்க ஓவியத்தில் அமைந்த
விதம் விதமான வண்ணங்கள்
அழகா இல்லை மருவா ?

உயரிய நோக்கம் கொண்ட உன்னத காவியத்தில்
பலதரப்பட்ட கதைமாந்தர்கள்
சிறப்பா இல்லை இழிவா ?

கதம்ப மாலைக்குள் நேர்த்தியாய் இணைந்த
பல்வேறு வண்ணமலர்கள் மாலைக்கு
எழிலா இல்லை உறுத்தலா  ?

பல்வேறு சுவைகொண்ட நல் உணவென்பது
மகிழ்வான தருணத்து விருந்துக்கு
சுவையா இல்லை சுமையா ?

எதையும் ஏற்கும் பக்குவம் கொண்ட இந்தியனுக்கு
பலவகை இனமும்  மதமும்
படியா இல்லை தடையா ?

பிரிவுகள் என்பது  பிளவுகள் இல்லை
இனியேனும் அறிந்து தெளிவோம்
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
தவறென ஒதுக்கி உயர்வோம்

Monday, August 12, 2013

கவிஞனாகிப் பயனற்றுப்போகாதே நீ

கண்ணில்படும் எப்பொருளையும்
கைவசப்படுத்திச் செம்மைப்படுத்தி
எப்படிக் காசாக்கலாம் என நினைக்கும்
வியாபாரிகளுக்கான உலகில்
வியாபாரத்திற்கான உலகில்....

அன்றாட நிகழ்வுகள் எதையும்
எப்படி ஊதி ஊதிப் பெரிதாக்கலாம்
எப்படி  ஓட்டாக்கலாம் என  நினைக்கும்
அற்பர்களுக்கான பூமியில்
அரசியல்வாதிகளுக்கான  பூமியில்...

சமநிலைதாண்டிப் பெருக்கெடுக்கும்
ஆசைகளை உணர்வுகளை
எப்படி அனுபவிக்கலாம் என எண்ணும்
கயவர்களுக்கு மத்தியில்
சுயநலமிகளுக்கு மத்தியில்...

கையிலகப்பட்ட அரியபொருளையும்
கண்ணிலகப்பட்ட புதிய நிகழ்வையும்
பொங்கிப் பெருகும் மன உணர்வுகளையும்
எப்படி ப் படைப்பாக்கலாம் என மட்டுமே எண்ணும்
அற்பக் கவிஞனாக மட்டும் ஆகிப்போகாதே நீ
உறவுக்கும் உனக்கும் பயனற்றுப் போகாதே நீ

Saturday, August 10, 2013

போதி மரத்துப் புத்தனும் நவீன புத்தனும்

தேவைகள் மூன்றும்
ஒழிந்து ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
குடிசை வாசல்களில்
சாக்கடை ஓரங்களில்
நாளும் பொழுதும்
செத்துச்  செத்து வாழ்ந்துகொண்டிருக்கும்
கோடிக்கணக்கானோருக்கு மத்தியில்

ஆசைகள் மூன்றும்
அடையமுடியாதுபோனதால்
அர்த்தமற்றுப்போனதால்
புண்ணிய ஸ்தலங்களில்
நதியோரக் கரைகளில்
ஒவ்வொரு நாளும்
சாவதற்காகவே  வாழ்ந்து கொண்டிருக்கும்
லட்சக் கணக்கானோருக்கு இடையில்

மூவாசையும் அனுபவித்தும்
அடங்காது திமிருவதால்
மாட மாளிகைகளில்
வஸந்த மண்டபவங்களில்
ஒவ்வொரு கணமும்
உணர்வாலும் உடலாலும்
வாழ்ந்துக்  களித்துக் கொண்டிருக்கும்
ஆயிரக் கணக்கானோருக்கு எதிரில்

முதல் பத்தில்
மாளிகைவாசியாய் உல்லாசமாய்
இரண்டாம் பத்தில்
குடிசை வாசல் பாவியாய்
மூன்றால் பத்தில்
ஞானியாய்ப் பரதேசியாய்
மாதத்திற்குள்ளே மூன்றையும்
அனுபவிக்கும் நடுத்தரவாசிகூட.

இளம் பிராயத்தில்
மன்னனாய் சுகவாசியாய்.
வாலிப வயதில்
தேடித்திரிந்த பரதேசியாய்
முடிவாக போதிமரத்தடியில்
ஞானமடைந்த புத்தனாகத்தான்
ஒருவகையில் தெரிகிறான் எனக்கு

இன்னும் ஆழமாகச் சிந்திக்கையில்
சிகரம் ஏறி உச்சத்தில்
இறங்காது நிலைத்திருத்தல் கூட எளிது
சிகரமும் சமதளமும்
மாறி மாறி ஏறி இறங்கியும்
இந்த நவீன புத்தன்போல்
மனம் சோராது இருத்தலும்
வாழ்வை விடாது நம்பிக்கையுடன் தொடர்தலும்
உச்சத்திலேயே நிலைத்துவிட்ட புத்தனாயினும் கூட
இன்றைய  நிலையில்
நிச்சயம் சாத்தியமில்லை எனவேப்படுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Friday, August 9, 2013

வெத்து வேட்டு

கவர்ந்திழுக்கும்படியான
கவர்ச்சியான தலைப்பு
தொடர்ந்து படிக்கும்படியாக
சுவையாக முதல் வரிகள்
எரிச்சலூட்டாது ரசிக்கும்படியாக
இதமான தொடர்வரிகள்
ஆணித்தரமாய் மறுக்கும்படியாகவோ
முழுமனதாய் ஏற்கும்படியாகவோ
அருமையான  முடிவுரை

இவைகள் ஏதும்
கண்ணுக்கெட்டியவரையில் காணாததால்
நான் இன்றும் படைப்பாளி ஆகி
படிப்பவர்களை பரிதவிக்கவிடாது
படிப்பாளி ஆகிப்போகிறேன்

புத்தகக்காட்டிற்குள் நிச்சயம்
வீரிய விதைகள் சிதறிக் கிடக்கும் எனும்
வழக்கமான நம்பிக்கையிலும்...

சேகரிப்பின்றி கொடுக்க முயலுதல்
செல்வந்தனை வறியவனாக்கிவிடும் எனும்
மாற்ற முடியாத விதிப்படியும்...

Tuesday, August 6, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் ( தொடர்ச்சி ) அவல் 2 ( 3 )

என் நண்பன் வருவதற்கு முன்பாகவே  
மொட்டை மாடியில் தனியாக அமர்ந்து அதுவரை
நண்பன் சொல்லிய விஷயங்களை ஒருமுறை
சொல்லிப்பார்த்துக் கொண்டேன்

நிலவின் தேய்மானம் கிழக்கு நோக்கி இருப்பின் வளர்பிறை
அதுவே மேற்கு நோக்கி இருப்பின் தேய்பிறை
முழு வட்டத்திற்கான கோணம் 360 டிகிரி
நாம் நம் பூமியின் அரை வட்டத்தைத்தான் பார்க்கிறோம்
அதன் டிகிரி 180
சூரியன் ஒரு நாள் 1 டிகிரி வீதம் நகர்ந்து 30 டிகிரியை
ஒரு மாதத்தில் கடக்க
நிலாவோ ஒரு நாள் 12 டிகிரிவீதம் நகர்ந்து 30 நாளில்
360 டிகிரியையும்  கடந்துவிடும்

இதனை நான் முழுவதுமாக மனதில்
ஏற்றிக் கொள்ளவும் என் நண்பன் வரவும்
 மிகச் சரியாக இருந்தது

"நேற்று நான் சொல்லியவரையில்  எந்தக் குழப்பமும்
இல்லையே தொடரலாமா " எனச் சொல்ல
 நான் ஆர்வத்தில் வேகமாகத் தலையாட்டினேன்.
நண்பன் தொடர்ந்தான்

"வட்டத்தின் துவக்கப்புள்ளியும் முடிவுப் புள்ளியும்
ஒன்றுதானே.அப்போதுதானே அது வட்டமாக
 இருக்கமுடியும்

அதன்படி 0 டிகிரியும் 360 டிகிரியும் ஒரு புள்ளிதானே

இந்தப் புள்ளியில் அதாவது சந்திரனும் சூரியனும்
குறிப்பிட்ட இந்த புள்ளியில் அல்லது கோணத்தில்
இருப்பதை நாம் அமாவாசை என்கிறோம்

பின் சந்திரன்  0 லிருந்து ஒரு நாள் நகர்வதை
அதாவது சூரியனை விட்டு12 டிகிரி நகர்வதை
முதல் நாள் என்கிறோம்.இதை சமஸ்கிருதத்தில்
பிரதமை என்கின்றனர்

இப்படியே இரண்டாம் நாளை துவிதியை எனவும்
மூன்றாம் நாளை திரிதியை எனவும்
நாளாம் நாளை சதுர்த்தி எனவும்
ஐந்தாம் நாளை பஞ்சமி எனவும்
ஆறாம் நாளை சஷ்டி  எனவும்
ஏழாம் நாளை சப்தமி எனவும்
எட்டாம் நாளை அட்டமி எனவும்
ஒன்பதாம் நாளை நவமி எனவும்
பத்தாம் நாளை தசமி எனவும்

பதினோராம் நாளை ஏக் பிளஸ் தஸ்
என்பதுவாய் ஏகாதஸி எனவும்
பன்னிரண்டாம் நாளை தோ பிள்ஸ் தஸ்
என்பதுவாய் துவாதஸி எனவும்
பதிமூன்றாம் நாளை திரி பிளஸ் தஸ்
என்பதுவாய் திரியோதஸி எனவும்
பதி நான்காம் நாளை சதுர் பிளஸ் தஸ்
என்பதுவாய் சதுர்தஸி எனவும் குறிப்பிடுகிறார்கள்

பதினைந்தாம் நாள் பௌர்ணமி ஆகிவிடும்
இது வளர்பிறை

பின் இங்கிருந்து மீண்டும் ஒவ்வொரு நாளாக
வந்து பதினைந்தாம்  நாளில் மீண்டும்
அமாவாசை வந்துவிடும்
இது தேய்பிறை

இதை மட்டும் நாம் சரியாகப் புரிந்து கொண்டால்
அன்றைய தின் நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பது
மிக மிக எளிது

மிகச் சுருக்கமாகச் சொன்னால்
சூரியனிடம் இருந்து சந்திரன் இருக்கும் தூரம்
திதி எனச் சொன்னால்
சந்திரன்  மிகச் சரியாக இருக்குமிடம் நட்சத்திரம்
அவ்வளவே

இன்னும் விளக்கமாகச் சொன்னால்
மதுரையிலிருந்து வடக்கே 100 கிலோமீட்டரில் இருக்கிறேன்
எனச் சொல்வதும் நான் திருச்சியில் இருக்கிறேன் எனச்
சொல்வதும் ஒன்றுதானே
அது மாதிரிதான் இது " எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு புரிந்தது போலத்தான் இருந்தது

(தொடரும் )

Saturday, August 3, 2013

இன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (2)

இன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி )
அவல் 2 (2)

நான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்ததைப் பார்த்த
நண்பனின் முகத்திலும் உற்சாகம் படர்ந்தது

"எளிதான விஷயங்களை கடுமையாகச்
சொல்லப் புகுந்தால்அதை கருத்தூன்றிக்
கவனிக்கிறவர்கள் அரிதானவிஷயங்களை
எளிமையாகச் சொன்னால்
அதனை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்,
நல்லவேளை  நீ அப்படியில்லை" என என்னைப்
பாராட்டித் தட்டிக் கொடுத்த நண்பன் தொடர்ந்து
பேசத் துவங்கினான்

"கணக்கில் கூட்டல் கழித்தல் பழகுவதற்கு முன்னால்
மனப்பாடமாக வாய்ப்பாட்டை சொல்லிப்பழகுதல்
எப்படி அதிகப் பயன்தருமோ  அதைப்போல
திதி நட்சத்திரத்தை கணிக்க தெரிந்து கொள்ளும் முன்
நான் சொல்கிற கீழ்க்கண்ட  விஷயங்களை
கவனமாக மனதில் கொள்வது நல்லது

வட்டம் என்பது 360 டிகிரி என்பது நீ அறிந்ததுதான்
நாம் பூமியின் அரைவட்டத்தைத்தான் எப்போதும்
பார்க்கிறோம் என்பதும் நீ அறிந்ததுதான்
அது 180 டிகிரிதான் என நான் சொல்லி நீ
அறியவேண்டியதில்லை

சூரியன் தினமும் அதன் சுற்று வட்டப் பாதையில்
ஒரு டிகிரிமட்டுமே கடந்து ஒரு வருடத்தில்
ஒரு சுற்றை முடிக்கிறது,பூமி தன்னைத்தானே
சுற்றிச் செல்வதால் தினமும் அது 360 டிகிரியையும்
கடந்துவிடுவதுபோல் நமக்குப்படுகிறது

ஆனால் சந்திரன் ஒரு நாளைக்கு மிக விரைவாக
12 டிகிரி கடந்துவிடுகிறது.

இந்தக் கணக்குப்படி சந்திரன் ஒரு மாதத்தில் 360 டிகிரி
கடந்து விட சூரியன் 30 டிகிரி மட்டுமே நகரும் என்பது
எளிதாகப் புரிகிற கணக்குதானே

இதற்கு  உதாரணமாக நாம் தினம் பயன்படுத்தும்
கடிகாரத்தையே எடுத்துக் கொண்டால் இது
எளிதாகப் புரியும்

கடிகாரத்தில் எண்கள் நகராமல் இருக்க
கடிகாரத்தின் பெரிய முள் மிக வேகமாக ஓடி
ஒரு சுற்று சுற்றி வர சின்ன முள் ஒரு எண்ணை விட்டு
நகருதல் போல சந்திரன்  360 டிகிரியையும் கடந்து வர
ஒரு மாதத்தை எடுத்துக் கொள்ள சூரியன் ஒரு வருடம்
எடுத்துக் கொள்கிறான்

ஜாதகக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு கட்டங்கள்
பன்னிரண்டு மாதங்கள்தான்,மேஷம் என்பது சித்திரை
அப்படியே ரிஷபம் என்பது வைகாசி,,,
இப்படியே தொடர்ந்து சொல்லிவந்தால்
மீனம் என்பது பங்குனி என்பது
உனக்கு எளிதாகப் புரியும் தானே

உனது ஜாதக் கட்டத்தில் சூரியன் எந்த மாதத்தில்
குறிக்கப் பட்டிருக்கிறதோ நீ அந்தத் தமிழ் மாதத்தில்
பிறந்திருக்கிறாய் என அர்த்தம்

இன்று இதுமட்டும் போதும் என நினைக்கிறேன்
இதற்கு மேல் சொன்னால் கொஞ்சம் குழப்பும்
இன்று சொன்னது வாய்ப்பாடு போலத்தான்
இதை மட்டும் மிக கவனமாக மனதில் ஏற்றிக் கொள்
அப்போதுதான் காலண்டர் இன்றியே திதி நட்சத்திரம்
கணிப்பது மிக எளிதாக இருக்கும் "என்றான்

Thursday, August 1, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் அவல் 2 ( 1 ) சென்றபதிவின் தொடர்ச்சி


நிலவின் மங்கலான ஒளி லேசான குளிர்ந்த காற்று
மொட்டை மாடிச் சுகத்தைக் மேலும் கூட்டிக் கொண்டிருந்தது

நண்பனும் சுவாரஸ்யமாகத் தன் பேச்சைத் தொடர்ந்தான்

"சந்தியா காலங்கள் என்றாலே இரவும் பகலும்
பகலும் இரவும் சந்திக்கிற பொழுது என்பதுவும்
அந்த காலத்தில் செய்யப்படுகிற சூரியவந்தனம்
சந்தியாவந்தனம் என்பது அனைவருக்கும்
 தெரிந்ததுதானே

(அதனை காயத்திரி ஜெபம் எனச் சொன்னாலும்
அந்த ஜெபத்திற்கும் காயத்திரி தேவிக்கும்
 எந்த விதத்திலும் தொடர்பில்லை
என்பது வேறு விஷயம் )

முன்பின் போகாத ஊருக்குப் போனால் நமக்குத்
திசைக்குழப்பம் வருவது சகஜம்.அந்தக் காலத்தில்
ஒரு பிராமணன் எந்த ஊருக்குப் போனாலும்
காலையும் மாலையும் தவறாமல் சந்தியாவந்தனம்
செய்வதால் அவருக்கு திசைக் குழப்பம் வரச்
சந்தர்ப்பமே இல்லை

எப்படி அத்தனை ஜீவ ராசிகளும் உயிர் வாழ சூரியன்
அவசியமோ அதைப்போலவே அன்றைய
 நட்சத்திரம் திதிமுதலானவைகளைத்
 தெரிந்து கொள்ள முதலில்
கிழக்கு மேற்கு தெரிவது மிக மிக அவசியம்

கிழக்கு மேற்கு அறியும்போதே சூரியன்
 பயணிக்கும் நீள் வட்டப்பாதையும் அதில்தான்
 சந்திரனும் பயணிக்கும் என்பதுவும்
 உனக்கும் தெரிந்ததுதானே

இப்போது கிழக்கு மேற்கு தெரிந்துவிட்டால்
இன்று பிறையாகத் தெரிகிற சந்திரன் வளர்பிறையா
அல்லது தேய்பிறையா எனச் சொல்ல அதிகம்
மெனக்கெடவேண்டாம்

நிலவின் தேய்மானப் பகுதி
கிழக்கு நோக்கி இருந்தால் அது வளர்பிறை
தேய்மானப் பகுதி மேற்கு நோக்கி இருந்தால்
அது தேய்பிறை அவ்வளவுதான் " என்றான்

இப்படி எளிதாக வளர்பிறை தேய்பிறை
குறித்து அறிய முடிகிற நிலையில் அதனை
காலண்டரை  மட்டுமே பார்த்து சொல்லக்
கூடிய நிலையில்இத்தனை காலம் இருந்தது
 கொஞ்சம்அவமானமாகத்தான் இருந்தது

"சரி இப்போது நிலவைப்பார்த்துச் சொல்
இது வளர்பிறையா தேய்பிறையா எனச் சொல் "
என்றான நண்பன்

என் ஊர் ஆனதால் எனக்கு திசைக் குழப்பமில்லை
நிலவின் தேய்மானப் பகுதி கிழக்கு நோக்கி இருந்தது
எனவே சந்தேகமில்லாமல் "வளர்பிறை :என்றேன்

:மிகச் சரி ,இனி உனக்கு வளர்பிறை தேய்பிறை தெரிய
காலண்டர் தேவைப்படாது.அடுத்து திதி நட்சத்திரம்
குறித்தும் காலண்டர் இல்லாமல் அறிதல் எப்படி
எனச் சொல்லவா ? "என்றான் நண்பன்

நான் ஆவலுடன் நிமிர்ந்து அமர்ந்தேன்

(தொடரும் )