Sunday, November 15, 2015

"ததாஸ்து "

வெள்ளிக் கிண்ணத்தில்
அமுதத்தை ஏந்தியபடி
தாயின் தவிப்போடு பிரபஞ்சம்
வெளியே பரிதவித்திருக்க

தாளிடப்பட்ட சிறிய வீட்டினுள்
தாழ்பாள் அகற்றத் தெரியாது
பசியுடன்
தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்

வேண்டும் வேண்டும்
என நேர்மறையாககேட்பதையெல்லாம்
அள்ளிக் கொடுக்கும் ஆர்வத்தில்
பிரபஞ்சம்
வெளியே துடித்துக் கொண்டிருக்க

வேண்டாம் வேண்டாம்
என எதிர்மறையாக வேண்டாதையெல்லாம்
தொடர்ந்து கேட்டபடி
துயரத்தில்
உழன்றுகொண்டிருக்கிறோம் நாம்

நேர்மறையான  வேண்டுதலுக்கு
வாரி வழங்கவும்
"அது அப்படியே ஆகட்டும் " என
ஆசி வழங்கவுமே
அருளப்பட்ட பிரபஞ்சச் சக்தியிடம்

எதிர்மறையானவைகளைக்
கேட்டுக் கேட்டே
எதுவும் கிடைக்காது
நொந்து போகிறோம் நாம்
ஏமாற்றத்தில் வெந்து சாகிறோம் நாம்

ஒளி வேண்டிக் கேளாது
இருள் விலகக் கேட்டும்
வளம் வழங்கக் கேளாது
வறுமை போக்கக் கேட்டும்
சுகம் நிறையக் கேளாது
துயர் நீக்கக் கேட்டும்  

நாமும் வாழ்வில் எதுவும் பெறாது
 பிரபஞ்சத்தையும் கொடுக்க விடாது
வாழ்வில்
"தப்பாட்டம் "ஆடி  நோகும் நாம்

இனியேனும்
பிரபஞ்ச சக்தியை புரிய முயல்வோமாக

இனியேனும்
கேட்கத் தெரிந்து
பெறவேண்டியதைப் பெற முயல்வோமாக

தட்டத் தெரிந்து
 திறவாத வாயில்களைத் திறக்க அறிவோமாக

தேடத் தெரிந்து
அடையாத உச்சங்களை அடைந்து மகிழ்வோமாக

11 comments:

RAMJI said...

உணர்ச்சி பூர்வமான மனிதரின் மன கதவை திறக்கும் ஒரு கவிதை வாழ்த்துக்கள் அரிமா வணக்கத்துடன்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
தம2

Geetha said...

வேண்டாம் வேண்டாம்
என எதிர்மறையாக வேண்டாதையெல்லாம்
தொடர்ந்து கேட்டபடி
துயரத்தில்
உழன்றுகொண்டிருக்கிறோம் நாம்
உண்மைதான் சார்..

நிஷா said...

மிக அருமையான ஆலோசனைகள்.

நம் எண்ணங்களே என் விதைகள். விதைப்பதே விளைகின்றன என புரியாதோராய்...

வேண்டாம் வேண்டாம்
என எதிர்மறையாக வேண்டாதையெல்லாம்
தொடர்ந்து கேட்டபடி
துயரத்தில்
உழன்றுகொண்டிருக்கிறோம் நாம்

நிஜமே!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

மீரா செல்வக்குமார் said...

நேர்மறைக்கவிதை...நிறைமதி வாழ்க...

”தளிர் சுரேஷ்” said...

அருமை ஐயா! நேர்மறை சிந்தனை வேண்டும் என்ற சிறப்பான கருவை கவிதையாக்கிய விதம் சிறப்பு!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகள்! நேர்மறை சிந்தனைகள்தான் நம் மனதில் வேண்டும் ஆம் பிரபஞ்ச சக்தியை நாம் புரிந்துகொண்டோமானால் நிச்சயமாக நாம் நேர்மறை சிந்தனைகளையும் விதைத்துக் கொள்வோம்...

KILLERGEE Devakottai said...

ரசித்தேன் கவிஞரே...
த.ம 5

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அற்புத விளக்கம் ஐயா... த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

Post a Comment