Wednesday, November 11, 2015

கலிகாலத்தில் பிழைக்கும் இராஜ இரகசியம்

மன வயிற்றில்
கொதிகலனாய் எரியும்
தன் முனைப்புப் பசிக்கு
இரைதேடி
வெறிபிடித்தலையும்
மிருகங்களுக்கு
ஞான போதனை செய்து
வெறிகூட்டிவிடாது
கொஞ்சம் உணவிட்டுப் போ
அது தவறென நிச்சயம் தெரிந்தாலும்...

நம்பிக்கைத் துரோகம்
எதிரிக்குச் சாத்தியமில்லை
உடன் ஒட்டித் திரியும்
நண்பானாலேயே
ஆகச் சாத்தியம் எனத் தெரிந்தும்
மனம் சுருக்காது
இருப்பதில் சிலவற்றை
எடுத்தே வைத்திரு
அது  ஏமாளித்தனம் எனத் தெரிந்தாலும்...

பகுத்தறிவின் பகட்டுவேஷமும்
பக்திமானின் பகல்வேஷமும்
ஏமாற்றுக் காரர்களிடம்
சிக்கிவிட்ட சாகச முகமூடி எனச்
சந்தேகமின்றித் தெரிந்தாலும்
ஒருபக்கமும் சாயாதிரு
வீட்டுக்குள் விபூதியும்
வெளியிடத்தில் கருப்புச்சட்டையுமே
பிழைக்கும் வழியெனப் புரிந்து கொள்
இது பச்சோந்தித்தனம் எனத் தெரிந்தாலும்....

சமத்துவமும் சகோதரத்துவமும்
அடிமனதில் இருந்தாலும்
கண் சிவப்பையும்
முறுக்கு மீசையையும்
பார்வையில் இருக்கும்படி
எப்போதும் பராமரி
பிரச்சனைகுரியவன் எனும்படியான
பாவனைப் பராமரிப்பே
கலிகாலத்தில் பிழைக்கும் இராஜரகசியம்
இது மனதிற்கு ஒப்பவில்லை என்றாலும்...

15 comments:

ஸ்ரீராம். said...

வித்தியாசமான பாணியில் கவிதை அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
நன்றி
தம+1

Nagendra Bharathi said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

சில இடங்களில் இந்த நடிப்பு உதவும்...

மீரா செல்வக்குமார் said...

பிரச்சனைகுரியவன் எனும்படியான
பாவனைப் பராமரிப்பே
கலிகாலத்தில் பிழைக்கும் இராஜரகசியம்#என்ன எளிமையா சொல்லீட்டீங்க....

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

சில இல்லை பல

Yaathoramani.blogspot.com said...

நான் ஒன்று சொல்வேன்.....//

ஆம் முரட்டு முகம் என்றால்
விலகிக் செல்வதும்
அப்பிராணி என்றால் கொஞ்சம்
உரசிச் செல்வதும் நடக்கத்தானே செய்கிறது

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நல்ல சிந்தனையோட்டம் மிக்க வரிகள் த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மையே. நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

ராஜ ரகசியத்தை வெளிப்படுத்திவிட்டீர்களே! அருமை ஐயா!

Unknown said...

உள்குத்து கவிதை போலிருக்கே ,அதிலும் அந்த' ராஜ ' ரகசியம் :)

அருணா செல்வம் said...

அட இது தான் ராஜ ரகசியமா?
உண்மைதான். இபபோதெல்லாம் அன்பு பாசம் கருணை என்பதெல்லாம் வெளிவேஷ மாகிவிட்டது.
இனிமேல் நானும் கடுமையாக முகத்தை வைத்துக் கொள்கிறேன்.

KILLERGEE Devakottai said...

கவிதை நன்று கவிஞரே
தமிழ் மணம் 12

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

.உங்கள் எழுத்தைப் படித்தே
உங்களைப் பற்றிய பிம்பம் ஒன்று என்
மனதில் உள்ளது
அதனால் அப்படிச் செய்ய முடியாது

Post a Comment