Thursday, November 26, 2015

அதிருப்தி

ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

14 comments:

KILLERGEE Devakottai said...

கவிஞர்களுக்கு எப்பொழுதுமே திருப்தி வராது வந்து விட்டால் படைப்புகள் முற்றுப் பெற்று விடும் இதுவே நன்று கவிிஞரே...
தமிழ் மணம் 1

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

திருப்தியடையாத கவிமனது உள்ளவராகத் தாங்கள் இருப்பதால் மட்டுமே, தங்களால் எங்களுக்கு திருப்தியான ஆக்கங்களைத் தர முடிகிறது.

மிகவும் அடக்கமாக ’யாதோ ரமணி’ என்று கூறிக்கொள்ளும், தாங்களே இப்படிச்சொன்னால், கவிஞர் என்று தனக்குத்தானே பெயரிட்டுக்கொண்டும், மார்தட்டிக்கொண்டும், இன்று, வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து, தமிழ்க்கொலை செய்து வருவோரையெல்லாம் என்ன செய்வது?

yathavan64@gmail.com said...

அதிருப்தி அல்ல அய்யா!
தாயாகி பிரசவிக்கும் நிலையில்....
இனி அடுத்த குழந்தையா?
வேண்டவே வேண்டாம்! என்பவள்
பிரசவித்த அடுத்த மறு கணமே, அந்த கருத்தை கைவிடும் நிலையில்
அடுத்த குழந்தையை பெற நினைப்பது இல்லையா?

அதுபோன்ற ஆனந்த நிலையை அடுத்த பதிவில் இன்பம் காண துடிப்பதுவே!
கவி மனம்!
நன்று!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு

சீராளன் said...

வணக்கம் ரமணி ஐயா !

இந்த மனதுக்கும் எதிலும் திருப்தி இல்லைத்தான்
இதயத்தை உருக்கி எழுதினாலும் !

அருமை தொடர வாழ்த்துக்கள்
தமிழ்மணம் +1

நிஷா said...
This comment has been removed by the author.
நிஷா said...

உங்கள் அன்புக்கு நன்றி.

பயணத்தில் ரெம்ப ஆர்வம் என்றும் இல்லை ஐயா! எதை செய்தாலும் அதை முழுமனதோடு ஈடுபாட்டோடு செய்வேன். நான் படித்தவற்றினை முழுமையான் உள் வாங்கி பின்னூட்டம் இட முயல்வேன். அப்போது பதிவுடன் ஒத்து என் பின்னூட்டங்களில் நான் அறிந்ததை பகிர்வேன் ஐயா. அத்தோடு இங்கே பிள்ளைகளுக்கான வருடாந்த விடுமுறையில் எங்கேனும் சுற்றுலா அழைத்து செல்ல வேண்டியது கட்டாயம் என்பதால் எங்கள் வண்டியில் எல்லாம் தூக்கி போட்டு விட்டு கிளம்புவோம். இது தான் இலக்கு என நிர்ணயிப்பதில்லை. இத்தனை நாட்கள் என மட்டும் திட்டமிடுவோம். தங்குமிடம் அங்கங்கே செல்லும் போது பார்த்துகொள்வோம்.

மனதளவில் நிரம்ப பகிர்ந்திட ஆர்வம் இருக்கின்றது ஆனால் சூழலும் நேரம் இக கடுமையாய் இருக்கின்றது. நான் ஈவண்ட் மனேஜிங்க் செய்வதால் ஒரு பார்ட்டிக்குரிய அனைத்தினையும் முழுமைப்படுத்த என் சிந்தனையை அங்கே முழுமையாக குவிக்க வேண்டி இருக்கின்றது.. இங்கே சென்று பாருங்கள். https://www.facebook.com/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services-152352458258136/

என்னால் இயன்றவரை முயற்சிக்கின்றேன் ஐயா

நிஷா said...

என்னளவில் எதை செய்தாலும் முழு மனதோடு அர்ப்பணித்து செய்வதனால் அதிருப்தி என்பது என்னை அண்டுவதில்லை.

அதற்காக எனக்கு எல்லாம் தெரியும் என சொல்ல மாட்டேன். நான் அறியாதவை தான் அனேகம். அறிந்ததை கொண்டு முழுமையாக திருதிப்படவும் போதும் என நினைக்கவும் கற்றுக்கொண்டேன்.

சமையலானாலும் சரி, எழுதுதலானாலும் சரி எனக்கானது இவ்வளவு தான் என உணர்ந்தே இருப்பதால் இதுக்கு மேலும் வேண்டும் எனும் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் இல்லை.

நம் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகும் போது தானே அதிருப்தி தோன்றுகின்றது. அதனால் ரெம்பவும் எதிர்பார்ப்பது இல்லை.

உங்கள் பதிவு சிந்திக்க வைக்கின்றது. இத்தனை எழுதியும் இன்னும் திறமையாக எழுத வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு என் சல்யூட்!

RAMJI said...

எதிபர்புகள் இல்லை என்றால் ஏமாற்றமும் இல்லை உன்னைவிட கஷ்டபடுகின்றவர்களை பார்த்தாலே உன் கஷ்டம் கஷ்டமாக தெரியாது

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த கவிமனது என்றும் தொடரட்டும் ஐயா...

மீரா செல்வக்குமார் said...

ஒரு கவிஞனின் மனதை துல்லியமாக உணர்த்தும் வரிகள்...

ஸ்ரீமலையப்பன் said...

அருமையான வரிகள் அனுபவ வரிகள்...

Anonymous said...

ஆம் என்றுமே திருப்தியடையாத கவிமனது

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
வெகு சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment