Sunday, November 22, 2015

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

8 comments:

சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

வென்றிடும் வாழ்க்கை நெறிகள்
விதவித மாகச் சொன்னீர்
நன்றென உணர்ந்தே வாழ்வில்
நடைமுறைப் படுத்தல் வேண்டும் !

அத்தனையும் அருமை தொடர வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் !
தம 2

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
வாழ்வியல் தத்துவம் நன்று... புரிந்து கொண்டேன் ஐயா... த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

வாழ்வின் சூட்சும வரிகள் நன்று கவிஞரே...
தமிழ் மணம் 4

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மையே. நாம் அமைத்துக்கொள்வதில்தான் இருக்கிறது. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

கோமதி அரசு said...

சூட்சுமம் புரிந்து கொண்டால் அப்புறம் வேறு என்ன வேண்டும்!

Thulasidharan V Thillaiakathu said...

இது தெரியாமல்தானே பலரும் அவதிப்படுகின்றனர்...தெரிந்துவிட்டால் அப்புறம் என்ன...அருமை..

Post a Comment