Sunday, November 29, 2015

.கசாப்புக் கடை தேடும் வெள்ளாடுகள்..

.பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்

கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுறை  அவனை சந்தித்த போது..
நேர்வழியில்அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்

காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்

காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்

காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.

காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல

உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய

அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்

"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்

"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

"எதற்கு " என்றேன்

"அவரிடம் மனப் பயிற்சி பெற்றால்
எல்லாம் சரியாகி விடுகிறதாமே "
என்றான்
 
நான் பதிலேதும் சொல்லவில்லை

எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்

புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்டு  அலைவது  போலவும் பட்டது

7 comments:

பழனி. கந்தசாமி said...

வெள்ளாடுகள்தான் "கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு கசாப்புக் கடைக்கே வழி கேட்பது"

இது நல்லா இருக்கு.

Avargal Unmaigal said...

படித்து ரசித்து மகிழ்ந்தேன்.. இப்படி அழகாக உண்மையை சொல்ல உங்களால்தான் முடியும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"மாதம் ஐந்துவீதம் ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும் அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா" என பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்//

மொத்தத்தில் அவருக்கு போதாதகாலம்தான்.

ஏழரை நாட்டுச்சனி என்று ஏதேதோ சொல்வார்களே .... அது ஒருவேளை உக்ரகமாகவும், வக்ரகமாகவும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருக்குமோ என்னவோ .... :)

பகிர்வுக்கு நன்றிகள், சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

மனப்பயிற்சி(யும்) தேவை தான்...

வலிப்போக்கன் - said...

புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்டு அலைவது போலவும் பட்டது--உண்தைான்..அய்யா..

KILLERGEE Devakottai said...

யதார்த்த உண்மைகள் கவிஞரே... ரசித்தேன்
தமிழ் மணம் 4

ரூபன் said...

வணக்கம்
ஐயா
வெள்ளாடுகள் நல்ல உருவகம்..பொருள் நிறைந்த கவிதை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment