Wednesday, April 13, 2011

அவரவர் அளவில்....

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

17 comments:

G.M Balasubramaniam said...

நீங்கள் சொல்ல வந்தது எந்த ஒரு AMBIGUITY யும இல்லாமல் புரிந்தது.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு கவிதையும் மனிதர்களின் பேச்சிற்கும் உண்மைக்கும் இருக்கும் முரண்பாட்டினை அழகாய் சொல்கிறது. நல்ல கவிதைகள் தந்தமைக்கு வாழ்த்துகள்.

நிரூபன் said...

கவிதையின் மூன்று பந்திகளிலும் வெவ்வேறு குணமுடைய மனித மனங்களை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்..

முதல் பந்தி... தண்டிப்பதில் தவறைத் திருத்தலாம் எனும் தந்தை.
இரண்டாம் பந்தி...ஊருக்கடி உபதேசம், உனக்கல்ல எனச் சொல்லும் சாமியார்,

மூன்றாம் பகுதி- சுய நலம் மட்டுமே நோக்காக கொண்ட அரசியல்...


அவரவர் அளவில் மனித மனங்களை அழகாக பாடி நிற்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

//கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்//


ஹா ஹா ஹா அட்டகாசமா விளாசி இருக்கீங்க குரு...

MANO நாஞ்சில் மனோ said...

//பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்//

சரியாக சொல்லிட்டீங்க...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

raji said...

ஆக மொத்தத்தில் தவறுகளின் அளவுகளில்தான் மாற்றங்கள்.
தவற்றில் அல்ல.தவறு என்றான பின் அதில் சிறிதென்ன பெரிதென்ன?
அவரவர்களுக்கேற்ற அளவுகளில்.......

வை.கோபாலகிருஷ்ணன் said...

’அவரவர் அளவில்’ எல்லாமே நியாயம் தானோ?

சிறுதவறோ, சிறுகுற்றமோ செய்பவன் தான் மாட்டிக்கொள்கிறான், அந்த முதல் பகுதியில் அடிவாங்கும் சிறுவன் போல.

பெரிய குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

Yaathoramani.blogspot.com said...

நிருபன் அவர்களுக்கு
தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி
முதல் நபரும் குற்றவாளிதான்
அவர் அலுவலகத்தில் திருடித்தான் வருகிறார்
அது திருடாக அவருக்குப் புரியவில்லை
எடுத்து வருவதாக அவர் கற்பிதம் செய்து கொண்டு
மகனைச் சாடுகிறார்
அறியாமல் செய்தாலும்
அறிந்தே செய்தாலும்
திமிராகவே செய்தாலும்...
என்பதைத்தான் மூன்று நிலைகளாகச்
சொல்ல முயன்றிருக்கிறேன்

நிலாமதி said...

அறியாமல் செய்தாலும்
அறிந்தே செய்தாலும்
திமிராகவே செய்தாலும்.......

....தவறு தவறு தான். அழகாய் சொல்லிருகிரீர்கள்.

பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தொடருங்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கோணங்களும் சந்தர்ப்பங்களும்தான் தவறைத் தீர்மானிக்கின்றன.

ஒருவரின் தவறு மற்றவருக்குச் சரி. மற்றவரின் சரி இன்னொருவருக்குத் தவறு.

எளிமையாய் எல்லாரும் எடுத்துப்போகும் தும்பைப் பூப்போல இக்கவிதை.

Chitra said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !!!

Chitra said...

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்


...Super!

இராஜராஜேஸ்வரி said...

அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்/
எளிமையாய் சொன்ன அருமையான வரிகள்.
இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்.

மாதேவி said...

அவரவர் அளவில்... தவறு தவறு தான்.
சரியாகச் சொன்னீர்கள்.

சித்திரை புதுவருட வாழ்த்துகள்.

vanathy said...

நேர்த்தியான, அழகான வரிகள். அப்பாவின் திருட்டுத் தொழிலை மகனும் செய்கிறார். அப்பா திருந்தினால் மகனும் திருந்துவார். இது நிறைய இடங்களில் நடக்கிறது.

ஹேமா said...

தலைப்புக்கேற்ற கவிதை.தலையில் குட்டிச் சொல்வதாகத் தெரிகிறது !

Post a Comment